
முன்னும் பின்னும்
ஞானத்தின் கண்கள் திறக்கும் முன் எப்படிப் பார்த்தாய்?
ஊனக்கண்ணால்
முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?
சும்மா இருந்தேன்
இப்போது?
இப்போதும் அப்படியே
பின் ஞானமெதற்கு?
சும்மா
இருக்கத்தான்!
எந்தையும் தாயும்
களைத்த காற்தடங்களின்
நோவு நீங்க நீவி
தீண்டித் தீண்டித் திரும்புகிறது
அலையின் கடைசி விரல்
தன்னை நோக்கித் திரும்பி
தன்னுள் தொலைய நினைத்திருந்த
அப்பாதங்களை மீட்டெடுத்தன
கடலன்னையின் பேரன்பும்
காலத்தகப்பனின் பெருங்கருணையும்.
அற்பமான பெயர்
நடுத்தீர்க்க வருகின்ற நியாயங்களின் முன்
இயலாமைகள் நிறைந்த உடற்பை சுமந்து
கவிழ்ந்த தலையுடன்…
வேறு வழியில்லை…
பொழியும் கவலைகளின் அடைமழையில்
மிதக்கின்ற நம்பிக்கைகள்
பாவங்களை மன்னித்து
ஏற்பின் அடையாளமாய்
அரும்பி அசைகிற புன்னகை விழுதொன்றைப் பற்றியெழ
நீட்டுகிற கைகளை மட்டுமல்லாது
முழு உடலையும் அணைத்திறுக்கி
நெற்றியில் எழுதுகிறாய்
கடவுளின் கையெழுத்து பொறித்த மன்னிப்பை
முத்தமென அதற்கு அற்பமான
பெயரிட்டிருக்கிறீர்கள் நீயும்,
உலகமும்.
சொல் பதனி
சொல்லாத பிரியங்களை
புழங்கு மொழியிலல்லாத
சொற்களுக்குள் ஒளித்து வைக்கிறேன்
என்றாவது ஒருநாள்
தான் சொல்ல வந்ததை
கச்சிதமாய்ச் சொல்ல
அறியும் ஒருவரின்
மனத்துழாவலில் அவை அகப்படும்
அன்று தெரியும்
அவற்றின் ஆகிருதி.
- writervarunan@gmail.com