“சினிமா விமர்சனம் அல்லது ரசித்த ஒரு சினிமாவை சிலாகித்து எழுதுவது என்பது ஒரு தனிக் கலை. எனக்கு அது ஒருபோதும் வாய்க்கப் பெறாது” – இதை ’மேட்னி ஷோ’ வாட்ஸ்ஆப் குழுவில் நான் சொன்ன போது காரணம் கேட்டார்கள்.
உடனே நான் ‘கடந்து செல்லும் ஒரு காட்சி புரியவில்லை என்றால் உடனே ரீவைண்ட் செய்து பார்ப்பது…. குற்றவாளி யார் என்கிற முடிச்சு ஒன்றுக்கு மேலாகும்போது… அந்த இடத்திலிருந்து நேராக கிளைமாக்ஸ் சென்று பார்த்துவிட்டு மீள விட்ட இடத்திலிருந்து தொடர்வது…. காதலைச் சொல்லாமல் டபாய்க்கும் காதலியை பார்வேர்டு செய்து லவ்யூ சொல்ல வைத்துவிடுவது என்பதே எனக்கும் சினிமாவுக்குமான புரிதல்’ என்றேன்.
‘ரசனை கெட்ட ஜென்மம்’ என்று ஆண்கள் என்னிடமிருந்து விலகினார்கள்.
ஒரு ஆணை இன்னொரு ஆண் வலிய வந்து வலிமை இழக்க வைக்கிறார்கள். அவன் வலிமை இழந்ததும் அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படியில்லை, வலிமை இழக்கச் செய்துவிட்டு, பின் அவர்களுக்குள் இருக்கும் தெய்வத்தன்மை கொண்டு, ஆறுதலாக இரண்டு கரங்களை நீட்டி வாரிக்கொள்வார்கள்.
“இலக்கிய வாசிப்பு?” கேட்டவள் தெய்வங்களில் ஒருத்தி.
“குறிப்பாக சிறுகதை வாசிப்பது?” என்றாள் இன்னொரு தெய்வம்.
சமீபத்தில் வாசித்த ‘மன்மதன்’ மற்றும் ‘ஆண்களின் படித்துறை’ சிறுகதைகள் இரண்டின் வாசிப்பனுபவம் பற்றிச் சொன்னதும் இருவரும் சிரித்தார்கள்.
“இரண்டு கதைகளின் மையக் கருவையும் விட்டுவிட்டு சரோஜாதேவி புக்கு மாதிரி நீ வாசிச்சிருக்க” – குரூப் அட்மின். அவனொரு ஆண், அப்படிச் சொன்னதும், அவனிடம் சண்டைக்குப் போனவள் ஆதிதெய்வமாக இருக்கக்கூடும்.
அவள் தன்னுடைய WhatsApp About ல் ‘I’m not perfect, I am original’ என்று வைத்திருந்தாள். இவள் என்னை சரியாக வழிதடந்துவாள் என்று நம்பினேன். அவள் சொல்லித்தான் எனக்கு டிமென்ஷியா குறைபாடு இருப்பது புரிந்தது. அதாவது அறிவாற்றல் குறைவு அல்லது சிந்திக்கும் திறன் குறைவு. குறிப்பாக இலக்கியத்தில் என்று வைத்துக் கொள்ளலாம், அதை நிவர்த்தி செய்யும்விதமாக எனக்கு உதவ அனுமதி கேட்டாள். நானும் அனுமதித்தேன்.
அதற்கான வகுப்பினை அப்போதே தொடங்கினாள். “கடைசியாக தியேட்டரில் பார்த்த சினிமா எது?” என்றாள்.
“மகாராஜா” என்றதும், “அனுராக் காஷ்யபின் மகள்தான் விஜய் சேதுபதியிடம் வளர்ந்தவள் என்பது, படம் பார்க்கையில் உனக்கு எப்போது தெரியும்?” என்று கேட்டாள்.
“படம் முடிந்து ஒலோ ஆட்டோ வரக் காத்திருந்த போது, கூட வந்திருந்த தம்பி சொல்லித் தெரியும்” என்றேன்.
சிரித்தாள். “உனக்கு நான்லீனியரும் புரியல போல… சரி விடு 96 படத்துல த்ரீஷா சிங்கப்பூர் திரும்பும்போது மஞ்சள் குர்தா, ப்ளூ ஜீன்ஸை விட்டுப் போவான்னு உனக்கு எப்ப தோணுச்சி?”
“கடைசியில மடிச்சி வைக்கும் போது” சொன்னதும் மறுபடியும் சிரித்தாள். இந்த முறை சரிப்பு அடங்க வெகுநேரம் பிடித்தது.
”நாம ரெண்டுபேரும் ஒரு சினிமா பார்க்கிறோம். செலவு என்னோடது. படம் பார்க்கும் போது நான் கேட்கிற கேள்விக்கு என்னைத் திரும்பிப் பார்க்காம பதில் சொல்லு போதும்”
”அதென்ன திரும்பிப் பார்க்காம?”
“உனக்குப் பெண்களோட கண்களைப் பார்த்து பேச வராது, அதனால சொல்றேன். கலை இலக்கியம் தொடர்பானவனுக்கு பெண்ணோட கண்ணைப் பார்த்து குழப்பமில்லாம பேசத் தெரியணும்”
அவள் சொன்னது எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. ஆனாலும், அவள் சொன்னபடியே தேடிப்பிடித்து 453 முறையாக ரிலீஸ் ஆகியிருக்கிற டைட்டானிக் சினிமா பார்க்க, சென்னை புறநகரில் இருக்கும் ஒரு தியேட்டருக்குக் கூட்டிச் சென்றாள்.
“இந்தப் படம் வந்தபோது நான் பிறக்கவேயில்லை, நீயும்தானே கார்த்திக்?” ஆர்வமாகக் கேட்டாள்.
“ஆமாம் ரித்து. ஆனாலும் இரண்டு முறை பார்த்துட்டேன்” என்றதும், என்னைப் பார்த்து கமுக்கமாகச் சிரித்துவிட்டு….“இல்லை கார்த்திக். உண்மையில் இன்னைக்குத்தான் முதன்முறையாகப் பார்க்கப் போற. அதுவும் என் கேள்விகளுக்கு நீ பதில் சொன்னால் மட்டுமே இது முதல்முறை. இல்லையென்றால் இன்னொருமுறை நாம வர வேண்டியிருக்கும்”
படம் பார்க்கும் போது இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்டாள், ‘Jack, I want you to draw me like one of your French girls’ டயலாக்கில், பிரெஞ்ச் கேர்ள் வார்த்தை அந்த நேரத்தில் ஏன் வருகிறது?.
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அடுத்து வரவிருக்கிற நிர்வாண ஓவியத்தின் ஆர்வத்தில், அந்தக் காட்சிக்கு முந்தைய வசனங்களின் போக்கினைக் கவனிக்கவில்லை என்றதும், “அதே மயக்கத்தில், அதன்பிறகு வந்த காட்சிகளையும் நீ கவனிக்கவில்லை” என்றவாறே அடுத்த கேள்வியைத் தொடர்ந்தாள்.. “I’ll never let go. I’ll never let go, Jack” என, அவனுடனே சாகத் தயராக இருந்தவளைக் காப்பாற்றி, நினைவுகளோடான ஒரு நீண்ட மரணத்தை, இந்த ஜாக், ரோஸ்க்கு தந்திருக்க வேண்டாம்தானே கார்த்திக்?”
இதற்கும் என்னிடம் பதில் இல்லை. மறுபடியும் மறுபடியும் வந்தோம். எத்தனை முறை பார்த்தாலும் அதன் உட்கரு எனக்குப் புரியப் போவதில்லை என்பதை உணர்ந்தவாறே என் கைகளைப் பற்றினாள்.
“என்னைய மாதிரி இன்னொசென்ட் பையனை பெண்களுக்குப் பிடிக்கும்தானே?” கேட்டேன்..
“மயிரு. ஆண்கள்ல அப்படியொரு வஸ்தாது இல்லவே இல்லை. முத்தக் காட்சிகளின் போதும்… நிர்வாண ஓவியக் காட்சியின் போதும் நடுக்கத்தோடு இருந்த. ஆனாலும் என் கையைப் பற்றிய உன் கையில ஒரு அதீதச் சூட்டினை உணர்ந்தேன். அதனால நீயொரு டேன்சரஸ் இன்னொசென்ட்” என்றாள்.
‘மன்மதன்’ மற்றும் ‘ஆண்களின் படித்துறை’ சிறுகதைகளை மறுபடியும் வாசிக்கச் சொன்னாள்.
மறுபடியும் மறுபடியும் வாசித்தேன். அதில் வருகின்ற ராஜுவும் செல்வமும் வேறு வேறாகத் தெரிந்தார்கள். எனினும் எதோ ஒரு புள்ளியில் இருவரும் இணைந்து பிரிந்தார்கள்.
“அந்த ஏதோ ஒரு புள்ளிதான் இலக்கியம்” என்றாள்.
நான் மௌனமாக இருந்தேன். அவளே இந்த உரையாடலை இப்படி முடித்து வைத்தாள்…
“அந்தப் புள்ளியில் நீ எப்போது ராஜூ, எப்போது செல்வம் என்பது உனக்கே தெரியாது. ஆனால், ராஜூ என்பது இலக்கியமா? செல்வம் என்பது இலக்கியமா? இது புரியும்போது உனக்கு இலக்கியம், சினிமா உட்பட எல்லாக் கலைகளும் புரியும்”.