இணைய இதழ்இணைய இதழ் 58கட்டுரைகள்

தேநீர் கடையில் முடிவுறும் நடையும் அத்தர் வாசனையில் தோய்த்த நினைவும் – வேல் கண்ணன் 

கட்டுரை | வாசகசாலை

’காலாற’, ‘மனதார’ நடந்து செல்லும் பழக்கம் சிலருக்கு இருப்பது போல, எனக்கும் உண்டு. இது வாக்கிங் வகையறாவில் அமையாது. பிடித்த இசை, நிறைவான எழுத்து, ஆழ்மன சிந்தனை தரும் கதையோ கட்டுரையோ படித்த பின் இப்படி நடப்பேன். வெகு சமீபமாக பெரு.விஷ்ணுகுமாரின், ‘கலை வடிவங்களுக்டையேயான ஒப்பிடல்’ கட்டுரைக்கு இப்படி நடந்தேன். முரணாக, நீண்ட நடைக்குப் பின் இதில் ஏதேனும் ஒன்றைச் செய்ய முயல்வேன்.  நடக்கும்போது அசையெல்லாம் போட மாட்டேன். அப்படியே நடப்பேன். எது குறித்தும் பட்டும் படாமல்… அதிலிருந்து விடுபட்ட சில நிமிடங்களுக்குப் பின் உணர்வேன். அடுத்த முறை விழிப்பாக இருக்க வேண்டும் என்று. நடை தொடங்குவதற்கு சற்று முன் வரை, ‘முழுச்சுக்கோடா கண்ணா’ என்று அறைகூவல் விடுக்கும் ‘மனம்’, எப்பொழுது உள் மயங்கும் என அறியேன். 

எழுத்தாளர் கே.நல்லதம்பி அவர்களின், ‘அத்தர்’ சிறுகதைத் தொகுப்பில் 2வது கதையில் தொடங்கி 6ம் கதை வரை (5 கதைகள்) மேற்சொன்ன நடை போல வாசித்து முடித்தேன். பின்பு முதல் கதை. எனக்கு இப்படி ஒரு பழக்கம், கலைத்துப் போட்டுப் படிப்பது. கே.நல்லதம்பியின் எழுத்து நடை அல்லது கதையின் போக்கு,  இன்றைய, ‘என் நடை’க்கு காரணம்.  இந்த நடையின் முடிவு, பெரும்பாலும் ஒரு டீ கடையில் முடியும். 

“ஒரு  வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்

மெலிதாக கேட்டுக் கொண்டிருந்தது. பருகிக் கொண்டிருந்த ஸ்ட்ராங் டீ பிடித்திருந்தது.  

“தூரத்தில் ஒலிக்கிற
பழைய பாடலுக்கு
தூரமே புதுப் பின்னணி
இசை சேர்க்கிறது”

             – கவிஞர் கலாப்ரியா

இது அவ்வளவு தூரமில்லை.  என்றாலும் சற்றுத் தள்ளி, இப்படிக் கேட்கும் மெல்லிசை சத்தமாகவும், நாம் அண்மையில் சென்றால் அதன் மென்மை குழையும் அபாயமும் உண்டு என்பதால்…

****

அத்தர்

’சொல்லாத காதல்களுக்கு..’ என்று சமர்ப்பணம் செய்திருக்கிறார் கே.நல்லதம்பி. நான்கு காதல் கதைகள். மூன்று கதைகளில்  50 வயதுக்கு மேல் வரும் காதலைச் சொல்கிறார், ஒன்றில் 40க்கு மேல். தனிமனித ஒழுக்கம்(?), குடும்பப் பொறுப்பு, வயது முதிர்ச்சி, மனப்பக்குவம் போன்றவற்றை மீறி கட்டற்ற காதல், 50 வயதுக்கு மேல் வருகிறதோ? என்ற கேள்வியை எழுப்பும் கதைகள். 

(அ). தொகுப்பின் முதல் கதையான, “தமன் நெகாரா” வில் பட்டாம்பூச்சி அற்ற விடுவித்துக் கொள்ள முடியாத தழுவலின் கதகதப்புடன் இருக்கும் கதையின் முடிவு பிடித்திருந்தாலும் முன்பு எப்போதோ பார்த்த (English subtitle உடன்) ஏதோ ஒரு மொழிப் படத்தை நினைவுப்படுத்தியது. சீரான அலைவரிசையில் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணையலாம்.  

(ஆ) நேர் எதிராக அடுத்த கதையான, ‘பிங்க் அண்ட் ப்ளூ‘ வில் சொன்ன முறையும்  முடிவும் எனக்குப் பிடிக்கவில்லை. அதாவது வாசகர்களின் முடிவுக்கே விடும், 80களின் இறுதியில் 90களின் ஆரம்பத்தில் இப்படியான கதைகளை நிரம்பப் படித்திருக்கிறேன். அப்போதும் இப்போதும் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. கதை சொன்ன முறையும் அரதப்பழசு.  இந்த முறை தவிர்த்து சொல்லியிருந்தால் வாசிக்க சரியாகத்தான் இருந்திருக்கும். இல்லாமை குறித்து நாற்பது வயது மனம் அசை போடுகிறது. அதனைப் போக்குவதற்கு நிதானமாகவும் அதே சமயத்தில் வரைமுறைகளை மீறவும் துணிகிறது.  

(இ) வீட்டில் தனிமையில் (5வது கதை).   கொரானா காலத்தில் வலிந்து திணிக்கப்பட்ட தனிமை, காமம், காதல், வெறுமை ஆகியவற்றைச் சொல்லும் கதை இது. காணொளி வழியாக பல கிலோ மீட்டர்கள் நடந்து செல்லும் மனிதர்களை, இதுவென்று அறியாத நோய்மை, நிர்வாணத்தின் மீது  ஏற்படும் பிடிப்பை உணரும் கதை சொல்லும் நபர், மனவெளியில் ஏற்படப் போகும் பித்துக்குளித்தனத்தைப் போக்குவதற்கு நிர்வாண காமம் ஒன்றை கற்பனையில் நிகழ்த்துகிறார். காமம் உடம்பில் மட்டும் இல்லை என்பதை மெல்லிசையாகச் சொல்லுகிறார். ஊரடங்கு காலகட்டத்தில் வயிற்றுப் பசிக்கு வாய்ப்பு இல்லாத மனிதர் போலும்.  

”இனிக்கின்ற காலம் தொடராதோ
இனி எந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ 
இனி எந்தன் வாழ்வும் உனது, தொடர்கவே, வளர்கவே, இது ஒரு காவியம்” 

(ஜெயச்சந்திரன் – வாணி ஜெயராம் வாய்ஸ்ல அள்ளும்.) 

****

மெல்லிசை மீட்டக் கூடிய இன்னொரு கதை, ‘அத்தர்‘.  கதை முகமறியா காதல் கடிதத்தில் ஆரம்பிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த முகவரியற்ற ஒரு கடிதம் அதன் சரியான நபரை அடையும் நிகழ்வை மல்லிகை அத்தர் வாசனையுடன் சொல்லுகிறார் நல்லதம்பி. ஐம்பதுகளில் காதலின் நினைவு, வாசனையாக கமழக் கூடிய அழகான கதை. தொகுப்பில் எனக்குப் பிடித்த இரண்டு கதைகளில் இது ஒன்று. ஆனால்… அதைப் பின்னால் சொல்லுகிறேன் 

”கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா

ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்…”

பாடல் முடியப்போகிறது. அடுத்த டீ சொல்லிவிடலாம்.

****

பிடித்த இரண்டாம் கதை, ‘கண்ணாடி‘. தனக்கு முன் கண்ணாடியில் நின்றவர்களின் மன ஓட்டத்தை அவ்வண்ணமே கதை சொல்பவருக்குத் தெரிவிக்கிறது. இதில் ஏற்படும் விரிசலை, மனித மன விகாரங்களை, அழுத்தங்களை வெளிப்படுத்துகிறது கதை. வீடு, அலுவலக மனிதர்களை மட்டும் சார்ந்து மாறிவிட்ட நம் சூழலை, சுருங்கிய உலகைச் சொன்னாலும் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. 

நான்காம் கதையான, ‘ஆல்பர்ட் கமூவின் அவுட் சைடர்‘, ‘சுட்ட’ புத்தகத்தை ‘சுட்ட’ இடத்திலிருந்தே பரிசாக வாங்கும் – ஒரே பாடலில் மனைவியை கலெக்டர் ஆக்கி, தானும் பெரிய பணக்காரனாக ஆகும், ’சினிமாடிக்’ வகை மாதிரி –    எனக்கு தொகுப்பில் உறுத்தலான கதையாகத் தெரிகிறது.

இன்னும் இரண்டு உறுத்தல்கள்: 

  1. தொகுப்பில்  பக்கம் 116 ல் வரும் வரிகள் இவை,  ”கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்” நடிகர் ஒருவர் சொல்வது போல – அந்த நடிகர் இந்த வசனத்தின் கிரெடிட்-ஐ மறைந்த தமிழறிஞர் தொ.பரமசிவத்திற்கு கொடுத்த பிறகும் எழுத்தாளர் இப்படி பதிவு செய்து இருக்கத் தேவையில்லை என்று தோன்றியது.  (நான் எழுத்துப்பூர்வமாக சொல்லும் முதல் தடவை)
  2. மதிய வேளையில் நேரம் போகாமல், தூங்க பிடிக்காமல் உலாத்துவதை நீட்டி முழக்கி சொல்லுகிறார். இதைக் குறைத்து இருக்கலாம்.(பக்கம் 53). தொகுப்பு முழுமையும், இப்படி  Short and Sweet ஆகச் சொல்ல வேண்டிய தருணங்கள் இருந்தும் அதை கவனிக்கத் தவறி இருக்கிறார் என்று நினைக்கிறேன். 

கன்னடத்திலிருந்து தமிழுக்கு 15ம், தமிழிலிருந்து கன்னடத்திற்கு 9 புத்தகமும் மொழிபெயர்ப்பு தந்தவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலில் அதிகம் புழங்காத முதிர் பருவத்தில் முதிரா காதல் சொல்லும் கதைகளும் மெல்லிசையை சன்னமாகக் கேட்டது போல் எழுத்து நடையும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது என் எண்ணம்.

****

அடுத்த பாடல் S.ஜானகி குரலில் தொடங்கியது..

”நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை”

இந்தப் பாடல் முடியும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தேன். 

கே. நல்ல தம்பி

—-

அத்தர் – சிறுகதைத் தொகுப்பு
எழுதியவர்: கே. நல்ல தம்பி
எதிர் வெளியீடு
பக்கம்: 120, விலை: 150/-

****

velkannanr@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button