
வானம் தன் ஒவ்வொரு
கேள்விகளையும் மழை முடிச்சாக
மண்ணில் அவிழ்க்க
எங்கோ ஓர் தேநீர் வியாபாரி
தெருநாய்களுக்கென
பாலாடைகளைச் சேகரிக்கும்
விவரிக்க இயலா இருட்பொழுதில்..
மின்னல் கம்பிகளை
ஜன்னல் வழி உள்ளிழுத்து
தன் ஹார்மோனியக்
கம்பிகளை இடம்மாற்றுகிறார்
இளையராஜா
வானதேவன் வெடித்துச் சிதறும்
அற்புத ஸ்வரங்களை
மண்ணில் கண்டு
மலைப்புறுகிறார்
முதலாய்
குகையில் தவிக்கும் காதலர்க்கென
கொடுக்கத் தவிக்கிறார் ராஜா…
“உண்டான காயம் எங்கும்
தன்னாலே ஆறிப்போகும்
மாயம் என்ன பொன்மானே
பொன்மானே“
அவ்வளவுதான்…
குகைக்குள் வெள்ளம்
அவர்கள் எப்படியோ தொலைகிறார்கள் ராஜா
இங்கே மலையின் விளிம்பில்
குதிக்கத் தவிக்கும்
இவர்களைக் கொஞ்சம் காப்பாற்றுங்கள்…
“என்ன சத்தம் இந்த நேரம்
குயிலின் ஒலியா“
அங்கே முத்தக்காட்சி ராஜா
வாருங்கள் சத்தம் இன்றி
சென்றிடலாம்
பார்வையற்றோர் காதலில்
வீழ்ந்தால் அதற்கும் பாடலுண்டா?
“தானத் தந்தா தானத் தந்தா
தனனா.. தானத் தந்த தானத் தந்த
தனனா னானா னா“
நீ வாழ்க ராஜா
இரவாகிவிட்டது ராஜா
இந்நேரம் வெள்ளைச்சாமி
வைதேகியை நினைத்து
வாடத் துவங்கியிருப்பான்
அவன் வாட்டத்தைப் போக்கி
ஊரை உறங்க வையுங்கள்…
“கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நீதானம்மா“
போதுமய்யா… அவன் பிழைத்துப்
போகட்டும் விடுங்கள்
“உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி“
ஆம் ராஜா
இன்றும் எல்லா
ரயில் நிலையங்களிலும்
சீனுக்கள் விஜிகளுக்காக
பைத்தியங்களாகிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்
தளபதி தனிமையில் காதலி
போன பாதையை நோக்கி
ஏங்குகிறாரே பாவமில்லையா?
“நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே“
அதே ஸ்வரத்தில்
அதே இசையில்
அப்படியே ஜானுவின் குரலில்
அதைக் கேட்டால்
ராமின் சோகம் குறையக்கூடும்
ராஜா
கொஞ்சம் மனது வையுங்கள்..
“ஆயற்பாடியில் கண்ணன்
இல்லையோ ஆசைவைப்பதே
அன்புத் தொல்லையோ
பாவம் ராதா“
போதும் ராஜா…
என் கண்ணே கலங்குகிறது
எனக்காக ஒரு பாடலை
சமர்ப்பியுங்கள் பார்ப்போம்…
ராஜா
ராஜா
ஓ மௌனராகமா
“தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும்
வாழ்வதென்ன“
தர்மசங்கடங்களை தவிர்ப்பதுதான்
அனைவருக்கும் நல்லது ராஜா
சிரிக்காதீர்கள்
ராஜா அங்கே ஒரு பெண்
வானொலியில் தன்
விருப்பப் பாடலென
எதையோ கேட்பது போலுள்ளது
பாருங்கள்…
“சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில்
தாளலயம்“
அருமை ராஜா
இறுதியாக என்று சொல்லக்கூடாது
இப்போதைக்கு நிறுதிக்கொள்ள
உங்களுக்கென்றே ஒரு பாடலை
பாடுங்கள் ராஜா…
“மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன்
எனைஆண்டாளே
வாழ்க என்றும் வளமுடன்
என்றும் வாழ்கவே“
நீங்கள் ராஜாதான் ராஜா…
வானம் அமைதியானது
உலகம் உறங்கிவிட்டது.
***
“போதை கேடு விளைவிக்கும், மிக்ஸிங் சரியாக இல்லையென்றால்…“
என் பெயர் சச்சிதானந்தம்
இல்லை இல்லை
என் நண்பர் பெயர்தான் சச்சிதானந்தம்
அவர் ஒரு மலையாளக் கவிஞர்
அன்றைக்கு லேப்டாப்பில்
சீதா ராமம் ஓடிக்கொண்டிருந்தது
இறுதிக் காட்சிக்கெல்லாம்
துக்கம் தொண்டையடைக்க
நண்பர் சச்சிதானந்தத்தை
அழைத்து ஒரு பாட்டில்
ரம் கிடைக்குமா என்றேன்
அடுத்த அரைமணிக்குள்
அவரும் அழகிய மௌண்ட் கேய் பிளாக் பேரல் ரம்மும் வந்தாகிவிட்டன.
உலகிலேயே தலைசிறந்த ரம்மென தோழர் பீற்றிக்கொண்டார்
முதல் பெக் அடித்தவுடன்
படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம்
அதற்கு முந்தைய இரவில்
96 பார்த்திருந்ததாக அவரும்
பேச்சைத் தொடர்ந்தார்
முன்னதாக முதல் பெக் பற்றி சொல்லியாக வேண்டும்
எனத் தோன்றுகிறது
ஆனால் அதற்குள் பாட்டில்
காலியாகிவிட்ட வருத்தத்தையும்
தெரிவிக்க வேண்டியிருக்கிறது
என்ன இருந்தாலும் ராம் பாவமில்லையா நண்பர்
என நான் ஆரம்பிக்க
ஜானு மட்டும் சும்மாவா
என்றார் தோழர்.
மாதச் சம்பளம் அறுநூறு வாங்கும் ராமிற்காக அனைத்தையும் விட்டு வந்திருக்கிறாள் நூர்ஜஹான்
அன்று ஒரு இரவு பழகுவதற்க்கே
ஐயாயிரம் கேட்டாள் பெனாஷீர் பேகமென அலுத்துக்கொண்டார் தோழர்
அடியே ஜானு அவ்வளவு அழகாக
அழைப்பான் ராம்
உன் கல்யாணத்துக்கு நான் வந்துருக்கணும் சீதா
அப்படி அழுவான் ராம்
பிளாஷ் பேக் காட்சியில் தன்னைக் காண
ராம் வந்திருப்பதை கேள்விப்பட்டு
ஓடிவரும் கல்லூரி–ஜானு காட்சியில்
பின்புலத்தில் ஒரு பாடல் மிரளவைக்குமென சச்சு கூற
பிரியாதே… என்று நான் பாட ஆரம்பிக்க
லவ் யூ திரிஷா என்று தோழர் என் கன்னங்களில் முத்தமிட்டார்
உனக்காக ஒரு கவிதை வைத்திருக்கிறேனென
சீதாவிடம்
படித்துக் காட்டும் ராமும்
ஜானுவிற்கு கடிதம்
அனுப்பும் ராமும்
அந்தந்தக் காட்சியில் அற்புதம் செய்திருப்பர் என ஆளுக்கு
ஒரு புறம் சென்று ஆம்லேட் போட்டாகிவிட்டது
லைட்டரைக் கண்டுபிடிப்பதற்குள்
பெரும்பாடாகிவிட்டது
அதற்குள் சச்சு
கேஸ் ஸ்டவ்வை பற்றவைத்து
பற்றிக்கொண்டார்
இந்நேரம் ஒரு வாசகம்
வந்திருக்க வேண்டுமே?
“புகை பிடித்தல் உடல்..”
தாமதத்திற்கு வருந்துகிறேன்
ஆம்
ரொம்பத் தாமதந்தான்
மஞ்சள் நிற சுடிதாரில்
நூர்ஜஹானும்
சிவப்பு நிற சாரியில்
ஜானுவும்
வந்தால் எவ்வளவு
நன்றாகயிருக்குமோ
அவ்வளவு நன்றாக இருந்தது
அந்த சிகரெட் போதை
இருவரும் மட்டையாகும் முன்
இதைச் சொல்லிச் சாய்ந்தோம்..
96-போரூற்றி வளர்த்த காதல் கதை
சீதா ராமம்–தனிப்பெருந்துணை.
***
படையல்
அண்டா நெறைய தண்ணீ கொட்டி.,
மஞ்சப் பொடிகள கத்தரிச்சுக்
கலக்க
ததும்பத் ததும்ப வெறியேறுறார்
முனியய்யா
முறுக்கு மீசக்காரர்ரு
மொடாக் குடிகாரர்ரு
ஒசக்க இருந்து தழச்சுப்பாத்தா
ஊரே அவரு அவரே ஊரு
சனமாருங்க கொளத்துத்தண்ணிய
மொண்டு வர
ஊத்துமுன்ன மறுத்துட்டாரு
ஊர் மொத்தமும் ஒதுங்கி நிக்க
எழுந்துவாராரு முனியய்யா
தானே எறங்கி தல முங்கி
தாவி வர்ராரு படித்தொறையில
மங்கி மசமசனு கிடாய்க நிக்க
பொங்கிப் பொசபொசனு
அடுப்பிறக்கி வச்சுட்டு
வரிச கட்டுது
பெருசு பொண்டு
ஊர்க்கிடாயக் கொண்டானு பூசாரி கத்த
கோணங்கி மயன்
வேப்பில சுத்துன கொம்பப் புடிச்சு கூட்டியாரான் கொலுவுக்கு
கண்ண மூடி கருப்பங்கிட்ட அருள்வாங்காரு முனியய்யா
அருவா ஒன்னு ஆளொசரம்
பளபளக்க
மால வெயிலு மனுசர ஒரசுது.
அருவாள ஓங்கி
“ம்ம்…..ம்ம்“
ஒரு சத்தந்தான்
ஆம்பள பொம்பள அத்தனையுங் கொழவபோட
பூசாரி மஞ்சத்தண்ணிய ஊத்தித்
திரும்பல
ஓங்கி ஒரே போடு
தலதனி முண்டந்தனி.
பச்ச ரத்தம் தெறிக்கத் தெறிக்க
ஒதறி ஒதறி
உசுரவிட்டது ஊருக்கிடா
பச்சவெறகு பட்டவெறகு
புடுச்செரிய
அங்காளி பங்காளி கட்டி உருள
கொதிக்கக் கொதிக்க கொழம்பு மனம்
எட்டூர இழுத்தடிக்குது.
மஞ்ச வேட்டிய மாத்திக்கட்டிக்கிட்டு
ஆஃப் அடிச்சு
ஆடி அடங்கி
படப்புல அமந்து
நல்லிய சவக்கிக் கூவுறாரு முனியய்யா
“கருப்பனுட்டு கிடாக்கறி கிடாக்கறி தான்யா“
ம்ம்ம்ம்..
***
ச்சாம்க்கா
ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்
அக்கா பூப்பெய்தியதை அப்பாவும் அண்ணங்களும் ஊரூராய் சொல்லி பெருவிமர்சயாய் விழா எடுக்கிறார்கள்
ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்
பள்ளி செல்லும் வழியில் சோட்டுப்பெண்களின் வற்புறுத்தலால் முந்திரி பறிக்கப் போனவளை
காவக்கார பெருசு வேட்டைநாயை விட்டு விரட்ட
பயந்த பயத்தில் அக்கா
முந்திரிக் காட்டிலேயே பாவாடை சிவக்க
ஆளானாள்
மூனு கொடம் தண்ணி ஊத்தி மூனு பூ பூத்துச்சாம்
பட்டுத்தாவனி உடுத்தி
ஆபரணங்கள் அலங்கரிக்க
கன்னங்களில் சந்தனமிட்டபடியே
சாந்திட்டு குலவையிடுகிறார்கள்
ஊர்க்கிழத்திகள்
நாலு கொடம் தண்ணி ஊத்தி நாலு பூ பூத்துச்சாம்
மார்வரை ஏற்றிக்கட்டிய பூப்பாவாடையில்
அம்மன் சிலைபோல்
முக்காலியில் அக்கா வீற்றிருக்க
மஞ்சள் தண்ணீர் குடம் குடமாய்
உடல் இறங்க
அடிவயிறு குளிர அக்கா களிப்புற்றாள்
அஞ்சு கொடம் தண்ணி ஊத்தி அஞ்சு பூ பூத்துச்சாம்
தென்னங் கீற்றில் பின்னிக் கட்டிய
மறைப்பின் நடுவில்
சிறுமிகள் துணைக்கிருக்க
பள்ளாங்குழியும் சொட்டாங்கல்லுமாய்
அக்கா கைகள் பரபரத்தன
வேறுவழியின்றி யாருமில்லா நேரம் பார்த்து
குச்சுக்கீற்றின் ஓரத்தில் துளையிட்டு
குட்டி உலகம் பார்த்திருந்தாள் அவள்
ஆறு கொடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்துச்சாம்
இரும்புச் சாவிகளையும்
பிடிகழன்ற அரிவாளையும்
எப்போதும் கொல்லைக்கு
மறக்காமல் எடுத்துச் சென்றவள்
உப்பையும் கரியையும்
துணியில் முடிந்து
மடியில் சுமந்தாள்
ஏழு கொடம் தண்ணி ஊத்தி ஏழு பூ பூத்துச்சாம்
அடிக்கடி சிரிக்கிறாள்
ஆட்டுரலைச் சுற்றி வருகிறாள்
பொழுது போய் சீவி முடிகிறாள்
கண்ணாடியே கதியெனக் கிடக்கிறாள்
தனக்குத்தானே என்னவோ முனகுகிறாள்
பாட்டியைக் கொஞ்சுகிறாள்
பூனையோடு பேசுகிறாள்
புதிதாய்த் தோன்றுகிறாள்
ஆம்
அக்கா காதலிக்கிறாள்
எட்டு கொடம் தண்ணி ஊத்தி எட்டு பூ பூத்துச்சாம்
முதலில் வந்தவன் விரலைக் கூடத் தொடப்பயந்தான்
பிறகு வந்தவன் முத்தமிட்டான்
மூன்றாமவன் மாரில் கைவைத்தான்
அடுத்து வந்தவன் அங்கேயே தொட வந்தான்
இறுதியாய் வந்தவனோ கன்னி கழித்தான்
அதற்குப் பின்
அதற்குப் பின்னென
அக்கா அவள் தோழியிடம் சொன்னதை
நான் யாரிடமும் சொல்லவில்லை
ஒன்பது கொடம் தண்ணி ஊத்தி ஒன்பது பூ பூத்துச்சாம்
தொழுவத்தில் பேய்ச்சத்தம்
யாரோ அனத்தும் கோரச் சத்தம்
அம்மா… நான் அழைத்தேன்
“கண்ண மூடித்தூங்கு சாமி விடிஞ்சதும் போய்ப் பாப்போம்“
அவள் குரல் நடுங்கியது.
விடியக்கூட இல்லை
ஊர் விழித்துக்கொண்டது
சாணவாசம் வீசும் தொழுவில் ரத்தக் கவுச்சி.
அங்கங்கே உறைந்தபடி
திட்டுத் திட்டாய்
பச்சை ரத்தம்
அதென்னவோ எனக்கு சர்க்கஸ் அப்பளம்தான் நினைவுக்கு வந்தது
அக்கா பார்த்தாலும் அதைத்தான் சொல்வாள்
நான் தேடினேன் கூட்டத்தில் இல்லை
அவள் அறையிலும் காணோம்
வாசலில் கோலமிடுகிறாளா?
கோலத்தையும் காணவில்லை
நடுவீட்டில் ஊர்ப்பெண்கள் கூடி ஒப்பாரி வைக்க,
தலையில்லாமல் கிடக்கும் உடல் யாருடையது.
நான் கேட்டே விட்டேன்..
அம்மா அக்கா எங்கே?
பத்து கொடம் தண்ணி ஊத்தி பத்து பூ பூத்துச்சாம்
அக்கா வயதுக்கு வருவதற்கு
முதல்நாள் வரைக்கும்
நானும் அவளும் இருட்டும் வரை
மாலையில் ஆடுவோம்
அன்றைக்குக் கூட
அக்காவின் சட்டையைப் பிடித்து ரயிலோட்டினேன்
சிக்கு புக்கு சிக்கு புக்கு
சிக்கு புக்கு சிக்கு புக்கு..
“அக்கா கேட்டுச்சா“
“அக்…”
“…ச்சாம்க்கா“
*******