
வெற்று விரல்களின் விசும்பல்கள்
மயக்கும் மாலை பொழுதுக்கு
முன்பே பகலை விரட்டி விடும்
மாயம் எப்போதாவது கதவாகும்.
கனவுள்ள பிள்ளைக்கு
கண் வழியே தூக்கம் வரும்
என்ற கூற்றுக்கு குரல்
மின்விசிறி மட்டும் தான்.
செய்வன எதுவெல்லாமோ
செய்தது தான் என்று
ரசம் போன நிலைக்கண்ணாடியில்
வாசிக்கவும் மனமில்லை.
நேரத்துக்கு சோறு தின்னும்
தட்டில் குளறுபடிகளில்
வெற்று விரல்களின் விசும்பல்கள்
உள்ளங்கை மட்டுமே அறிந்தவை.
மெல்லவும் முடியாத விழுங்கவும்
முடியாத நாவொன்றை ஆட்டியபடி
நகரும் நாட்களை என் அறை
கட்டி வைத்திருக்கிறது .
எங்கிருந்தோ கசிந்து வரும்
நினைவுகளோடு வீட்டுக்குள்
முயங்கி விட்ட தன்முனைப்புக்கு
இப்போதும் நான் என்றே பெயர்.
வறண்ட முகமூடியின் வாசலில்
அழுது விடத் தோன்றும் கண்களின்
ஆழத்தில் இருக்கத்தான் செய்கிறது
இனி ஒரு விதி செய்வோம் என்பதும்
வெறுமை சூழ் உலகில்
ஒரே ஒரு ஜன்னல் தான் இருக்கிறது
எதிலிருந்தாவது எப்போதாவது
எப்படியாவது தப்பிக்க….!
—
அவள் பூக்களின் சிறுகுறிப்பு
நிகழ்கால சாத்தியங்களோடு
புதைக்கப்பட்டவனைப்
பற்றியது தான் இது.
மிக மிக வன்மையான
கேள்விகளோடு மண் தின்ன
மரித்தவனை வேறு எப்படி
நினைவு கூற.
கனிவான முத்தங்களை பற்றி
எந்த சிந்தனையுமற்ற
குவிதலோடு
மீண்டும் வரைந்த
சிறுகுறிப்பு தான் இப்படியும்
முன்பின் அறிமுகமற்ற
கோடுகளின் வழியாக
எறும்பூரும் நிதானத்தில்
கண்டு பிடிக்கப்பட்டவையும்தான்
அவன் மரணம்.
வினையெச்ச அச்சமூட்டும்
குரூரங்களின் கொவ்விதழ்
கூடாரங்களைக் கொன்று விட
வேறு வழி என்ன அவனுக்கு.
எதிர்கால சிந்தைகளின் வழியே
சிதிலமடைந்திருக்கும்
அவன் கல்லறைக்கு வருகிறவர்கள்
பற்றி அக்கறையின்றி
தூங்குபவனை மயானத்துப் பூக்கள்
ஒருபோதும் எழுப்புவதில்லை.
மாறாக மீண்டும் மீண்டும்
உதிர்கின்றன
அவளின் நிகழ்கால மரணங்கள்
அவை…..!
—