
இன்னமும்
புன்னகையோடே இருக்கிறாள்
அந்தப்புன்னகை
தெய்வாம்சத்தின் குறியீடு.
அவள் சுருக்குபையில் கல்போட்டு
எதுகேட்டாலும் கிடைத்துவிடும்
அது சக்திமான் ஸ்டிக்கரோ
நீல கலர் சர்ட்டோ
இனிப்பு-புளிப்பு மிட்டாயோ??
எது கேட்டாலும் கிடைத்துவிடும்.
கல் எதுக்கு பாட்டி என்றால்
மறக்காம இருக்கய்யா என சொல்வாள்
அது பொய்
செல்லும் வழியெல்லாம்
நான் சொன்னதை
ஒப்பித்துக்கொண்டே செல்வாள்
அவள் நினைவுகள்
எப்போதும் எனக்குப் பிடித்த
ஏதோ ஒன்றை
முணுமுணுத்துக்கொண்டிருக்கும்.
கடைசியாய் அவளிடம்
கேரம்போர்டு கேட்டதாய் ஞாபகம்
கல்போட மறந்துவிட்டேன்
நினைவுகளில் கேரம்
விளையாடிக்கொண்டிருந்த எனக்கு
அவள் கீழே விழுந்து
நினைவிழந்த செய்தி வந்தது
சுருக்குபையில் நான்போடும்
கல்லில்தான் அவள்
நினைவுகள் இருந்தது என்பது
எத்தனை உண்மை.
பசுமை மாறாமல் இருக்கிறது
கடைசியாய்
அவள் பிதற்றிய மொழிகள்
“விளையாட்டு போர்டாம்ல..ஒன்னு குடுங்க”
அழகிய கண்ணாடிக் கூட்டினுள்ளே
இன்னுமும்
புன்னகையோடே இருக்கிறாள்
தெய்வாம்சத்தின் குறியீடாய்..!