சிறுகதைகள்
Trending

அவள் வந்து விட்டாள்!- சந்தோஷ் கொளஞ்சி

வீட்டை விட்டு ஓடி வந்து இன்றைய பொழுதையும் சேர்த்தால் மூன்று வருடங்களுக்குமேல் ஆகும் போல தெரிகிறது. ஒட்டுமொத்தமாக நான் அனுபவித்த வாழ்நாள் தனிமையையும் இத்தனை வருடப் பயணத்தின் மூலம் கொரித்துத் தின்று விட்டேன். எங்கும் மனிதர்கள், மரங்கள், வாகனங்கள், சாலைகள். உலகம் மிகப் பெரியது என்று கற்றுக் கொண்டு விட்டேன். மனிதர்களின் மகத்தான அன்பிற்கு முன்பு எப்படிப்பட்ட விசித்திர எண்ணங்களும் செயல்களும் மறையும் அதிசயத்தையும் கண்டு விட்டேன். இப்போது வீடு திரும்ப வேண்டும். திரும்பலாமா? இல்லை, மேலும் ஒரு வருடம் ஏதாவதொரு திசை நோக்கிப் பயணிக்கலாமா என்று தெரியவில்லை. மனம் முழுக்கத் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாத வண்ணம் இயற்கையின் இயல்புக்கு மூளையும் இயங்கக் கற்றுக் கொண்டு விட்டது. இப்படி எந்த வித சிந்தனையும் அற்று எங்கோ எதையோ தேடிப் போய்க் கொண்டே இருக்கிறோம். போதும் முடித்துக் கொள்ளலாம். நமக்கான வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது. வாழ வேண்டிய மிச்ச வாழ்க்கையையும் யாருக்காவது பிரயோஜனமாக வாழலாம். பயணத்தை முடித்துக் கொள்ளலாம்

கண் விழித்துப் பார்த்த போது நட்சத்திரங்கள் வானில் மின்னின. நான் அமைத்திருந்த கூடாரத்தை என் கண்ணிற்குத் தெரியாமல் இருள் மறைத்திருந்தது. வாழ்வின் அதீத சந்தோஷத்திற்கும் அதீத துன்பத்திற்கும் மனம் மட்டுமே காரணம் என்று நான் முழுமையாக அறிந்து கொண்டேன். மனம் ஒரு விசித்திரக் குழந்தை. அதன் அமைதியையும் சமநிலையையும் ஒவ்வொரு மனிதனும் உணராதவரை மனம் பிடி கொடுக்காமல் அனத்திக் கொண்டேதான் இருக்கும். என் மனம் ஒருவித ஆர்ப்பரிப்பில் இருந்து சமநிலை அடைந்ததாக உணருகிறேன். கடவுள் நமக்களித்த இந்த அழகான இரவை நினைத்து இன்புறுகிறேன். எழுந்து நடனம்  ஆடலாம் என்று தோன்றியது. இன்னும் குதூகலித்தல் நிலையைக் கடக்க முடியாமல்தான் இருக்கிறேன் போலும். இருக்கட்டும். நாம் திரும்ப நம் வீட்டுக்குச் சென்றால் யார் நம்மை வரவேற்பார்கள், யாருக்காக நாம் இனி வாழப் போகிறோம். யார் நம் வாழ்வில் இருக்கிறார்கள்? இந்த நிலையற்ற கேள்விகளுக்குப் பதில் இல்லாமல்தானே இத்தனை நாள் பயணமும். பிறகு எந்த விதத்தில் நாம் வீடு திரும்புதல் நியாயமானது. நமக்காக யாராவது இருக்க வேண்டும் அல்லவா? என்று தினம் தினம் தூங்குவதற்கு முன்பு எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் கேள்விகளை நினைத்துக் கொண்டு அன்றும் தூங்கினேன்

இயற்கையின் சுவாசம் மூக்கைத் துளைத்தது. நிறமற்ற சூரியக் கதிர்கள் உலகில் உள்ள சோம்பேறி மக்களை எழுப்பப் புறப்பட்டு விட்டது. மலையின் உச்சியில் படுத்திருந்த என்னை மேகங்கள் தொட்டு எழுப்பியதை என்னால் உணர முடிந்தது. அன்று என்றும் இல்லாதது போல் யாரையாவது நினைத்து ஏங்க வேண்டும் போல மனம் சமிக்ஞை காட்டியது. கூடவே இந்த மரங்களும் பறவைகளும் யாரையோ நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தன. நான் அவளை நினைத்துக் கொண்டேன்

ரத்தினச் சுருக்கமாகச் சொன்னால், அவள் ஒரு அழகி. மற்றபடி அவளை எப்படி உங்களுக்கு அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை. அந்தி கருக்கத் தொடங்கிய வேளையில் பூங்கா ஒன்றில் முதன்முறையாக அவளைச் சந்தித்தேன். அவளும் அவளுடன் வந்த குழந்தையும்  சீசாவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவளது எடைக்கு அவள் கீழேயும் அவளுடன் வந்த குழந்தை மேலேயும் என்று மாறி மாறி  விளையாடுவதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பார்ப்பதை சிறிது நேரத்தில் அறிந்து கொண்ட அவள் என்னையும் என் பார்வையையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் கீழே மேலே என்று போய்க் கொண்டிருந்தாள். என் கண்கள் அவளது கண்களைச் சந்திக்கும் போதெல்லாம் என் கால்கள் கூட கீழே மேலே என்று ஆடிக் கொண்டே இருந்தன. பூங்காவிலிருந்த மரங்களின் மேல் இருட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தாவிக் கொண்டிருந்தது. மங்கிய இருளில் அவள் நிலவு போலப் பிரகாசமாகத் தென்பட்டாள்

அடுத்த நாள், அடுத்த வாரம் என்று நாட்கள் சென்றாலும் அதற்குப் பிறகு அவள் அந்தப் பூங்காவிற்கு வரவே இல்லை. துக்கப்பட்டேன், துயரப்பட்டேன் அவளைக் காண ஏங்கினேன் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘ஏதோ கண்ணுக்கு அழகாக ஒரு பெண்ணைப் பார்த்தோமே அவளைத் திரும்பி பார்க்க மாட்டோமா!’ என்ற ஒரு சிறு ஏக்கம் மட்டும் இருந்தது. இந்த ஏக்கங்கள் நாளடைவில் எப்படிதான் உருமாறுகிறதோ என்று தெரியவில்லை. வாழ்வில் இதற்கு முன்பு சந்தித்த பெண்களில் இருந்து இவள் சற்றே வித்தியாசமானவள் என்று தோன்றியது. ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று என்னுடன் வேலை செய்யும் நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். அப்போது அவளை மீண்டும் பார்த்தேன். வெகு தூரத்தில் இருந்தாள். அவள்தான் அதே நடை

பிறகு எங்களது கம்பெனியில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வேலைக்கு ஆட்கள் எடுப்பார்கள். அப்போது அவள் இண்டர்வியூற்கு  வந்திருந்தாள். அன்று என் மனதிற்குள் என்னென்னவோ கற்பனைகள் ஓடின. கம்பெனியில் நான் இரண்டரை வருடம் சீனியர் என்பதால் அங்கும் இங்கும் அவள் கண்பட நடக்கத் தொடங்கினேன். என்னைப் பார்த்திருப்பாளா? கண்டிப்பாக பார்த்திருப்பாள் என்று திட்டவட்டமாக நம்பினேன். என் வேலையெல்லாம் முடித்துவிட்டு கம்பெனியை விட்டு வெளியே வந்த போது இண்டர்வியூ முடிந்திருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, அந்த இண்டர்வியூவில் யாருமே செல்க்ட் ஆகவில்லை என்று. நாம் வாழ்வில் ஒருமுறை சந்தித்த ஒரு பெண்ணை மீண்டும் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் சந்திக்கிறோம் என்றால் வாழ்க்கை நம்மை அந்தப் பெண்ணுடன் இணைக்கத் திட்டமிடுகிறது என்று மட்டும் தப்பான அப்பிப்ராயங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பிறகு மனம் புண்ணாவதையும் தடுக்க முடியாது.

வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நான் அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லி ஆறு மாத காலம் தள்ளிப் போட்டேன். எங்கே சென்றாலும் அவளைப் போன்ற ஒரு உருவத்தை மனம் தேடத் தொடங்கியது. என் கம்பெனியில் உள்ள அனைத்து ஆண்மகன்களுக்கும் திருமணம் முடிந்து விட்டதைச் சொல்லிக் காண்பித்து, என் அம்மா என்னுடைய திருமணத்தை நடத்த உறவினர்களை வைத்து துரிதப்படுத்தினாள். உறவினர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

நெருங்கிய நண்பனின் திருமணத்திற்காக அன்று திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. பயணம் ரயில் பயணமாக இருந்ததை நினைத்து மனம் சாந்தியடைந்தது. பயணங்களில் அதி அற்புதப் பயணம் ரயில் பயணம்தான் என்று சொல்பவர்களை மட்டும் நம்பி விடாதீர்கள். ஓரளவிற்கு மற்ற பயணங்களைவிட சிறந்தது என்றாலும் அதி அற்புதமெல்லாம் இல்லை. எனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கை ஜன்னல் ஓரமாக இருந்தது. வருங்கால மனைவியின் சம்பளத்தைக் குறித்தும், நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகில் எந்தப் பள்ளியில் என் குழந்தையைச் சேர்க்கலாம் என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன். இடையில் எதோ ஒரு ஜங்கஷனில் ரயில் நின்றது. எதிரே சென்ற ரயிலில் அவள் தென்பட்டாள். நான் அவளைப் பார்த்து சிரித்தேன். அவள் கையை உயர்த்திக் காட்டிஎப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். என்னால் நம்ப முடியவில்லை. “நானா? நலம். நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டேன். சென்னைக்கு என்றாள். ‘அடி பாதகத்தி இத்தனை நாட்கள் நான் சென்னையில்தானே இருந்தேன்‘. உடனே அந்த ரயிலில் தாவிப் போய் விடலாமா என்று நினைத்தேன். இரண்டு ரயிலும் கிளம்பியது. நான் அந்த ரயில் ஒரு புள்ளியாகும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்நேரம் நான் தாவி அந்த ரயிலில் போயிருந்தால், என்னவெல்லாம் நடந்திருக்கும் என்ற எண்ணவோட்டங்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. புதிதாகப் போடப்பட்ட சிமெண்ட் சாலையில் தெரு நாய் ஒன்று நடந்து போனால் அதன் கால் தடம் அந்த சிமெண்ட் தரையில் பதிந்து விடும் அல்லவா? அது போல அவள் என் மனதில் பதிந்து விட்டாள். ஒருவேளை என் மனம் அப்போது ஈரமாக இருந்ததோ என்னவோ? மனமே இல்லாமல் நண்பனின் கல்யாணத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். “உனக்குப் பெண் பார்த்தாகி விட்டது. அடுத்த மாதம் ஊருக்கு வந்து விடு.” என்று அம்மா போனில் அழைத்துச் சொன்னாள். என் வாழ்வில் நான் எடுத்த அதிகபட்ச முயற்சியும் பொய்த்துப் போனது. எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன். சரி இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, திருமணத்தையாவது பார்த்து விட்டுச் செல்லலாம் என்று நண்பர்களுடன் மண்டபத்திற்குச் சென்றேன். மண்டபம் பகட்டாகத் தென்பட்டது. விதவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நுழைவு வாயிலில் மூன்று அழகான பெண்கள் பன்னீர் சந்தனத்துடன் வரவேற்றார்கள். திருமண மண்டபத்தில் உலவும் பெண்களிடம் மட்டும் எப்போதும் ஒரு விசித்திர நறுமணம் வீசிக் கொண்டே இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை. புதிதாக எடுத்த அல்லது துவைத்து அயர்ன் செய்த சேலைகளின் வாசனைகளுக்குள் அவர்களது உடலின் வாசனையும் சேர்ந்ததாலா? இல்லை அவர்கள் சூடியிருக்கும் ஏதாவதொரு பூவின் நறுமணத்தாலா? என்று தெரியவில்லை. ஆனால், ஒரு மனிதனை முழுவதுமாக மயக்கி விடும் வண்ணம் அந்த நறுமணம் நம்மை இழுக்கும். நீங்கள் நினைத்திருக்கலாம் திருமணத்தை அழககாக்குவது மாப்பிள்ளை மணப்பெண், குழந்தைகள், உறவினர்கள்தான் என்று அதையெல்லாம் விட திருமணத்திற்கு வருகை புரியும் அழகான பெண்கள்தான் ஒட்டுமொத்த மண்டபத்தையே அழகாக்குவது

எப்போதும் தூரத்தில் தெரிந்து மறையும் அந்த உருவம் இப்போது என் அருகில் இருப்பது போல் உணர்ந்தேன். என்னால் நம்ப முடியவில்லை அவள்தான். என் அருகில் அமர்ந்திருக்கிறாள். அந்தக் குழந்தையும். அப்போ! ரயிலில் சென்றது யாராக இருக்கும் எனத் தோன்றியது. எந்த எண்ணங்களுக்கு இப்போது இடம் இல்லை. நான் அவளிடம் பேச வேண்டும். அவளை நோக்கிச் சென்றேன். அவள் பட்டென்று எழுந்து மணமான பெண்ணிற்கு கிஃப்ட் கொடுக்கச் சென்று விட்டாள். சொல்ல மறந்துவிட்டேன் அதே நடை. நானும் கிஃப்ட் கொடுப்பதுபோல் மேடை ஏறினேன். நான் ஏறியவுடன் அவள் இறங்கி விட்டாள். விரைவாகக் கீழ் இறங்கி அவள் எங்கே என்று தேடினேன். சாப்பிடும் இடத்தில் இல்லை. வெளியில் இல்லை. எங்குமே இல்லை. எங்கே போனாள். போகட்டும் திரும்பி எங்கயாவது பார்க்க மாட்டோமா என்று நினைத்துக் கொண்டேன்

பின்பு எனக்குத் திருமணமானது. மனைவி அழகிதான், ஆனால் அவள் அழகிற்கு இல்லை. ஒரு குழந்தையும் பிறந்தது. மூன்றாவது வருடம், என்னை விட்டு என் மனைவி ஓடிப் போய் விட்டாள் என்று சொல்வதை விட அவளுக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். நல்லவேளையாக நான் பெற்ற குழந்தையையும் கூட்டிச் சென்று விட்டாள் மகராசி. எனக்கு அழுவதற்கான காரணங்கள் வாழ்நாள் முழுக்க இருந்தன. கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வரவே இல்லை. எனக்கு திருமணம் செய்து வைத்த அதே உறவினர்கள் என்னை ஆற்றுப்படுத்த முயன்றனர். கூடவே இன்னொரு திருமண ஏற்பாடு வேறு, ‘போதும் டா சாமிஎன்று ஊரை விட்டு ஓடினேன்

நான் மேற்கொண்ட பயணங்களின் வழியே ஒரு நாள், சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் என் மனைவி, என் குழந்தை, குழந்தையின் புது அப்பாவைக் கண்டேன். என் குழந்தைக்கு மொட்டை போட்டிருந்தார்கள். அவர்கள் சந்தோஷாமாக இருப்பதுபோல் தெரிந்தது. அப்போது ஏனென்று தெரியவில்லை எனக்குத் திடீரென்று அழுகை வந்தது. நான் அழுதேன். ஆற்றுப்படுத்த முடியாத, நான் அடைக்கி வைத்த அழுகை எல்லாம் பீறிட்டு வெளியேறியது. கண்களில் நீர் வற்றி விடும் அளவிற்கு அழுதேன். என் துன்பங்கள் குறைய நடக்கத் தொடங்கினேன். துன்பத்திற்கு மருந்தாக நடையைப் பழக்கினேன்

இப்போது ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவ்வப்போது ஒரு நினைப்பு வரும். அது அன்று அவள் மணப் பெண்ணிற்குக் கொடுத்த கிஃப்ட்அந்த கிஃப்ட் வித்தியாசமான வடிவத்தில் இருந்தது. அது சதுரமாகவோ, வட்டமாகவோ, முக்கோணமாகவோ இல்லை என்பது மட்டும் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. வாழ்க்கையில் சதுரங்கள் எல்லாம் வட்டங்களாகவும், வட்டங்களெல்லாம் முக்கோணங்களாகவும் முக்கோணங்களெல்லாம் செவ்வகமாகவும் இப்படி மாறி மாறி எந்த வித உருவத்திற்குள்ளும் மனம் நிற்காமல் அலைந்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு குருவியின் சத்தம் ரீங்காராமாக ஒலித்து என் கடந்த கால நினைவுகளைத் தகர்த்தது. இப்போதைக்கு அவள் நினைவுகள் போதும் என்று ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினேன். அதோ அங்கே தூரத்தில் அவள் வருவது போல தெரிகிறது. அவளேதான். அவள் வந்து விட்டாள்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button