இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

அவநுதி – மஞ்சுநாத்

சிறுகதை | வாசகசாலை

பைரவஜம்பு பள்ளத்தாக்கு மயான அமைதியாக இருந்தது. பைரவஜம்பு இடமே ஒரு மயானம்தான். மயானங்கள் வெளித்தோற்றத்திற்கு அமைதியாகத் தோன்றலாம் ஆனால் அவை அமைதியின் உள்ளீடு அற்றவை.

பள்ளத்தாக்கின் விளிம்பில் இட வலமாகச் சுழன்று மேலெழும் காற்றில் லட்சக்கணக்கான உயிர்களின் அலறல்கள் மௌனமாக எதிரொலிக்கும்.

வாழ்வதின் வழியாக கர்மாவைக் கரைப்பதற்கு பொறுமையற்றவர்கள் கடும் உபவாசம் இருந்து மஹாபந்த் சிகரமேறி பைரவம்புவில் வீழ்ந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வார்கள்.

திருக்கேதாரத்தையும் பத்ரிகாசிரமத்தையும் இணைக்கும் மஹாபந்த் என்னுடைய காலம்தொட்டே தொன்மையான பாதை. அறுபதாண்டுகளுக்கு முன்பு வரையில் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் அது புழக்கத்தில் இருந்தது. தற்போது என்னைத்தவிர வேறுயாரும் பயன்படுத்த இயலாது… இயலாதவாறு பலவிதமான தடைகளை நான் உருவாக்கி வைத்திருக்கிறேன்.

ஒருமுறை பஞ்ச பாண்டவர்கள் தங்கள் கர்மவினைச் சுமைகளிலிருந்து விடுதலையாவதுடன், விழிப்புடன் கூடிய முக்தி நிலையடைந்து வாழ்வை நிறைவாக்கும் பேராசையுடன் இங்கு வந்து சிலகாலம் தங்கினார்கள். ஆனால், நான் ஒருவன் உயிரோடு திரிந்து கொண்டிருக்கும் போது அது அவர்களுக்கு அவ்வளவு எளிதான வரமாகக் கிடைத்திட அனுமதிப்பேனா என்ன…? அன்று அவர்கள் தங்கியிருந்த அதே இடத்தில் இன்று நீ குப்புற வீழ்ந்து கிடக்கிறாய்.

இன்றைய காலக்கட்டத்தில் முக்தியை நாடி எவனொருவனும் கடினமான மலைச் சிகரங்கள் கடந்து மஹாபந்த் தடத்தைக் கண்டறிந்து பைரவஜம்புவிற்கெல்லாம் வருவதில்லை. சாகசத்தின் பரவசத்தை மலைச்சிகரங்களில் பருகிட விழையும் சில மலையேறிகள் மட்டும் வழிதவறி இங்கு வந்து மரணித்துப் போகிறார்கள். பாவம் அவர்களில் நீயும் ஒருவன். தேடிக் கண்டடைந்து மீட்பதற்கு வழியில்லாது பனியோடு பனியாக உறைந்துப்போன பலரது உயிரற்ற உடல்கள் குப்பைகள்போல் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

மலையேறுதல் என்றால் என்ன?

மலை முகத்திற்கு நேராக ஏறுதல். நெடிதுயர்ந்த மலையின் கண்களைப் பார்த்து அதன் சுவாசத்தை நெஞ்சில் வாங்கி, பெருமிதத்தில் பிரகாசிக்கும் மலைமுகத்திற்கு வடுக்களை வழங்கியபடி அதன் சிரத்தில் கால் பதித்தல்… வடுக்கள் யாவும் ஒருநாள் வரலாற்றுத் தடங்களாக உருமாறி இதைப்பேசும். மலையேறிகள் மாண்டுபோயினும் அவர்களது வெப்பத்தை மாமலைகள் பல்லூழிக் காலம் கடந்தும் மறவாது.

மலையின் பின்புறச் சரிவினூடே ஏறுவது, மலையின் பக்கவாட்டில் புடைத்திருக்கும் அதனுடைய தோள்பற்றி ஏறுவது, குறுக்குச்சரிவைக் கண்டடைந்தோ அல்லது புதியதாய் ஓர் இலகுவான தடத்தை உருவாக்குவது குறித்தோ சிறந்த மலையேறிகள் சிந்திப்பதுகூட கிடையாது. வீரனுக்கு அழகும் அடையாளமும் மலையின் முகத்திற்கு நேர்நின்று முகங்காட்டி சமர்செய்தல்.

மலைக்கு முகம் இருக்கிறதா…? இருக்கிறது. தலையுயர்த்தி சதுர்திசையில் எத்திசையைப் பார்த்தால் மலையின் பேருருவம் உங்களுக்குள் மாபெரும் அச்ச உணர்வின் கொந்தளிப்பையோ அல்லது ஆனந்தத்தின் அலைகளையோ மிகைப்படுத்துகிறதோ அத்திசையே மலைமுகம். நீங்கள் உங்கள் புன்னகையை அதற்கு அர்ப்பணிக்கலாம். உங்கள் புன்னகை பயத்தின் பிரதிபலிப்பா? இல்லை, வெற்றி உவகையின் குறியீடா? என்பதை என்னால் பிரித்தறிய இயலும்.

வேடிக்கை என்னவென்றால் நான் புன்னகைத்து யுகம் ஒன்று கடந்து விட்டது…!

“என்ன யுகம் கடந்து விட்டதா…!?”

நீ வாய்திறந்து கேட்காவிடினும் அசையாது உறைந்திருக்கும் உனது கபில விழிகள் எதிரொலிக்கும் கேள்வியை அறிவேன். உலகின் உயிரோடு இருப்பவர்களில் நானே மூத்தவன்.

உச்சத்தைத் தொடுவதற்கான செயலில் கவனத்தைக் கூட்டுவதற்குப் பதிலாக உச்சத்தைத் தொட்டபின் முகிழும் மகிழ்ச்சியின் கனவில் மூழ்கி விட்டாய். நீ கவனித்திருக்க வேண்டும்… இடதுகால் உறுதியாக வைத்தோமா இல்லையா என்பதையறியாமல் வலது காலை நகர்த்தி விட்டாய், ஒருவேளை சிகரத்தை அடைந்து அது தரும் போதைத் தாளாமல் கீழேவிழுந்திருந்தால் உன்முகத்தில் இவ்வளவு பயமும் அதிர்ச்சியும் படிந்திருக்காது. மஹாபந்த் பாதையில் குப்புறப் பரிதாபமாக வீழ்ந்து கிடக்கிறாய்…

இளைஞனே… நீ சதுர்யுகங்கள் குறித்து அறிவாயா? சரி… நானே கூறுகிறேன்.

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு சேர்ந்தது ஒரு மகாயுகம். பன்னிரண்டு மகாயுகம் சேர்ந்தது ஒரு மன்வந்திரம், பதினான்கு மன்வந்திரம் ஒரு கல்பம். ஆக, நான் தற்போது நிகழும் இருபத்தெட்டாவது கலியுகத்தில் வைவஸ்த மன்வந்திரத்தில் நீலலோகித கல்பத்தில் இதோ மாண்டுபோன உன் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்…

அட… மீண்டும் மீண்டும் புரிபடாமல் நீ மிரண்டு விலகி ஓடாதே… இது அசாதாரணம் அல்ல… அமைதியாக நில்.

உனக்கான விடுதலை என் அனுமதியின்றி நிகழாது. உடலற்ற உயிராக நிற்கும் நீ ஒருவேளை புத்தி விழிப்புற்றவனாகயிருந்தால் என்னைப் பித்தேறிய மூடனாகக் கருதலாம். ஒன்றை மட்டும் சிந்தித்துப் பார்… மனிதர்கள் தொடமுடியாத இந்தக் கொடுமுடியின் விளிம்பிலிருந்து யாராலும் உன் உயிரற்ற உடலைக் கண்டறிந்து மீட்டுச்செல்ல இயலாது… ஆனால், என்னால் உதவ முடியும். முதலில் அமைதியாகு, புரிதல் தானாகவே நிகழும்.

நான் உன்னோடு உரையாட விரும்புகிறேன். நீ இப்படி உனது உடலருகில் அமர்ந்து சமநிலைப்படுத்திக் கொள். நீ செய்வதெல்லாம் ஒன்றேயொன்று, நான் கூறுவதைக்கேட்பது. அதன் பிரதிபலனாக உன் சடலத்தை உன் உற்றார்கள் கைக்கொள்ளும் வகையில் கீழே இறக்குவேன். கவனமாகக் கேள்…

உன் கண்களில் காட்சி பதியவில்லை, நாவில் ருசியில்லை, செவியில் ஒலியொன்றும் கேட்கவில்லை, உனது உடல் ஸ்பரிசத்தைச் சிறிதும் உணரவில்லை. ஆனாலும், நீ நான் இருப்பதை உணர்ந்து கொள்கிறாய் அல்லவா… அதன் பிரதிபலிப்பாகத்தான் இப்படி மிரண்டு பயந்து தடுமாற்றத்துடன் அலைபாய்கிறாய்…

அமைதி…

மரணம் ஓர் அற்புதமான வரம் என்பதை என்னைத்தவிர அறிந்தவர் யாரும் இப்பிரபஞ்சத்தில் கிடையாது. ஏனெனில் நான் சாகாவரம் பெற்றவன்.

சா…கா… வரம்…

வாழ்வு என்பது கனவா? விழிப்பா? என்பதை அறியாவிடினும் மானுட வாழ்வில் எவ்வளவோ நிகழ்கின்றன. உடல் விதவிதமான அனுபவங்களை எதிர்கொள்கிறது. பாதிப்பிலிருந்து அது தப்புவதே இல்லை. அதுபோல மனமும் பல அனுபவங்களை எதிர்கொள்கிறது. ஆனாலும், அவற்றையெல்லாம் கடந்து செல்லும் சிறப்பியல்பை அது பெற்றிருக்கிறது. கணந்தோறும் உடலில் முதிர்ச்சியின் வடுக்கள் உருவாகின்றன. அவை நிரந்தரமானவை. பழையநிலை என்பது சாத்தியமில்லை. ஆனால், மனிதமனம் நதியோட்டம் போன்றது. மாறக்கூடிய இயல்பே அதன் ஜீவாதாரம். மாற்றமடைதல் அதன் உயர் தகுதியாகவும் ஆரோக்கியத்தின் மூலாதாரமாகவும் இருக்கிறது. இருப்பினும் தங்கள் தகுதியை மீறி பலர் முயல்வதில்லை. தகுதி என்கிற எல்லை கட்டிய வாழ்விற்குப் பின்னால் இருப்பது சுயநலம் மட்டுமே. சுயநலம் என்பது அவர்களுடைய பாதுகாப்பாக இருக்கிறது.

மனம் உந்தும் வழியில் உடல் போவது, உடல் உந்தும் வழியே மனம் போவது இயல்பென்றாலும் சிலசமயங்களில் அது ஒட்டுமொத்த வாழ்வையும் பெரும்பிழையாக்கி விடுகிறது. உடல் மீதான ஆளுமையைப் பயிற்சிகள் மூலம் பெற இயலும். மனம் மீதும் பெறமுடியும்… கடும் முயற்சியின்பால் இவையிரண்டையும் நேர்க்கோட்டில் வைத்தாலும் செயலானது எதிர்பார்ப்பது போல் முழுமையாக நிகழ்வதில்லை.

வாழ்வின் போக்கு செயல்களால் தீர்மானிக்கப்படுகின்றது.

உடல் – மனம் – செயல் மூன்றையும் நேர்க்கோட்டில் ஒருசேர நிகழ்த்துவது மாபெரும் சாகசம். சூட்சமம் கடந்த இந்த வரம் எனக்குச் சாபமாகவே அருளப்பட்டுள்ளது. சில சமயங்களில் சுகமாவும் இருக்கிறது. துயரமாகவும் இருக்கிறது. விருப்பத்தையும் ஏற்படுத்துகிறது. வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. என்னை நினைத்து அழவும் செய்கிறேன், சிரிக்கவும் செய்கிறேன். ஆனால், இவை எதிலும் பங்கெடுக்காமல் இருப்பின்மையின் இருப்பாக அடையாளமற்ற வெளியின் அங்கமாகக் கரைந்து விடுவதற்கு இச்சையுடன் தொடர்ந்து காத்திருக்கிறேன்…

அன்றைய தினம் வீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே நீண்டநேரம் நிகழ்ந்த அதிபயங்கரச் சண்டை ஆதவக்கனலின் உக்கிரத்தையும் தோல்வியுறச் செய்தது. அந்தி சாய்வதற்கு முன்பாகவே சண்டை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. உருக்கொண்டு திரண்டிருந்த பகலை மெல்லமெல்ல விழுங்கிக்கொண்டிருக்கும் இரவுப்பொழுது சடலங்களைத் தின்னும் ஓநாய்களின் ஆர்ப்பரிப்புக்கு முன்னால் அடங்கிப்போனது.

‘போர் முடிந்துவிட்டது… போர் முடிந்துவிட்டது… ‘ என்று மிச்சமிருப்பவர்கள் எந்தவொரு உணர்ச்சியுமின்றி உரக்கக் கூறிக்கொண்டார்கள்.

உண்மையில் அங்கு மிச்சமிருந்தவர்கள்…யார்? என்னுடன் கிருபையும், கிருத வர்மரையும் சேர்த்து மூவர் மட்டும். ஆனால், எதிரணியில் ஐவர்.

யுதிஷ்டிரன், வீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். எங்களைவிட எண்ணிக்கையில் கூடுதலாக இருவர் இருப்பதால் வெற்றி முரசு அவர்கள் பக்கம்… இல்லை இல்லை … அது தவறான கணக்கு. உப பாண்டவர்கள்…? அப்பொழுது வரையில் பாண்டவர் அணியில் அவர்களும் உயிருடன் இருந்தார்களே …!

வெற்றிக்கான போராட்டம் விழிப்புக்கான உச்சத்தில் நிகழ்கிறது. ஆனால், வெற்றிக் கொண்டாட்டங்கள் விழிப்புணர்வை இழக்கச்செய்து விடுகின்றன. வெறியூட்டும் களிப்பு திரையிட்டு மறைக்கிறது. அவர்களுக்குப் புரியவில்லை என்பதில் வியப்பென்ன இருகிறது. துரியோதனன் இன்னும் சாகவில்லை… ஆம், மாபெரும் போர் வீரனான சுயோதனன் என்கிற துரியோதனன் உயிருடன் இருந்தான்.

வீமனால் சிதைந்து குற்றுயிரும் குலையுயிருமாக இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த துரியோதனனிடம் காற்றைப்போல் நெருங்கிக் கொண்டிருந்தேன். படுகளத்தின் இறுதியில் அகன்று விரிந்திருக்கும் ஆயிரம் பேர் அமரும் ஆலமரம் துரியோதனனுடன் ஆறுதலாய் பேசிக்கொண்டிருந்தது. துரியோதனன் உடலிலிருந்து உயிர் நீங்கிச் செல்வதற்குப் பயந்து கொண்டிருந்தது. அவனது கண்களில் வலியின் சிறுத்தடயங்கள் கூட தென்படவில்லை. கருவிழியில் நிரம்பிய உயிர்ச்சக்தி முழுவதும் புதுமொழியால் என்னிடம் தொடர்புற முயல்வதற்கு முன்பாக அவனுடைய கண்கள் ஆலமரத்தின் வடக்குக் கிளைகளை வருடியது. ஆம், அது எங்கள் பால்ய காலத்து அபிமானக் குங்கும நிற ஆலமரத்தை ஒத்ததாகயிருந்தது.

அஸ்தினாபுரத்து எல்லையில் இருந்த குங்கும நிற ஆலமரம் கௌரவச் சகோதரர்களுக்குப் பிடித்தமானது. பால்யப் பிராயத்திலிருந்தே கௌரவர்களின் வாழ்வில் அதுவுமொரு அங்கம். குங்கும நிற ஆலமரத்தின் வான் தொடும் உச்சிக்கிளைகளில் அமர்ந்து மனம் மயக்கும் சூர்யோதயத்தை அனுபவிப்பதில் கௌரவர்களுக்கு அலாதிப் பிரியம். சூரியன் மேலெழும் தருணத்தில் யாழும், குழலும், மத்தளமும், கிண்கிணியும் இசைக்கப்படும்.

துரியோதனன் தனது செம்பாட்டு வஸ்திரத்தை அவிழ்த்து அதிலிருந்து

விலைமதிக்க முடியாத அரிய மாணிக்கக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட ‘விதாரக்’ சங்கினை எடுத்து இருளுக்கிடையில் பாந்தமாய் பிடித்து தனது உயிர் மூச்சால் நாதம் எழுப்புவான். அதிகாலையின் மனமகிழ்வையும் ஆரோக்கியத்தையும் நல்கும் வசீகரப்பறவைகளின் சங்கீதக் கலவையைவிட மேலானது மாண்புமிகுந்த விதாரக் சங்கநாதம். அஸ்தினாபுரத்து அரண்மனை சாளரங்களைக் கடந்து சென்றடையும் சங்கொலியின் அதிர்வுகளைப் பிரித்தறியும் வல்லமை இருள்வெளிக்குள் ஆழ்ந்திருக்கும் சக்கவர்த்தி த்ருதராஷ்டிரருக்கு மட்டுமேயானது. கண்கள் வழியே காட்சிகளை உணர்ந்து கொள்ளும் திறனற்று இருந்தாலும் பத்தடி தூரத்தில் நிற்கும்போதே மனிதனின் குணம் என்ன? பலம் என்ன? என்று கணித்து விடுவார். சூழ்ந்திருக்கும் காற்றில் நிகழும் மாறுதல்களை வைத்து அருகில் நெருங்கும் ஆபத்துகளிலிருந்து அவரால் எளிதில் விலகிக்கொள்ளமுடியும்.

அவரது பால்யத்தில் கங்கை நதிக்கரையோரம் அமர்ந்து எதிர்கால வாழ்வு குறித்த சிந்தனையின் முடிச்சில் சிக்கியிருந்த நேரம், அழுத்தமான விபூதி வாசமொன்று அவரைக் கடந்து சென்றது. ஆழ்ந்த சிந்தனைக்கிடையில் தன்னுள் ஊடுருவிய வாசத்திற்குரிய உடைமையாளர் யார் எனக் கண்டறிந்து அவரருகில் தன்னை அழைத்துச் செல்லும்படி வேலைக்காரனிடம் கோரினார்.

மகா யோகி தேவபி தனது ஆன்மீக சாதனாக்களை செய்து முடித்து ஆற்றில் குளித்த ஈரத்துடன் அப்போதுதான் அரசமரத்தடியில் கவிழ்ந்திருந்த இளம் வெயிலடியில் வந்தமர்ந்தார்.

மகா யோகி தேவபி வேறு யாருமல்ல புருவம்ச மூலாதிபதியான மாமன்னர் பிரதீபனின் மூத்த வாரிசு. ஷாந்தனுவின் அண்ணன்.

‘புறத்தோற்றக் குறைபாடு அரசனாகப் பதவியேற்பதற்கு உகந்தது அல்ல’ என்கிற நியதியின்பால் அப்பொழுது சரும வியாதிக்கு ஆட்பட்டிருந்த தேவபிக்கு அரசாட்சி மறுக்கப்பட்டது. மனமுடைந்த தேவபி நாட்டைத் துறந்து இமயம் சென்று துறவறம் ஏற்றார். கஷாய வஸ்திரம் உடுத்தத் துவங்கியதிலிருந்து அவரது தீராத சரும வியாதி முற்றாக நீங்கியது மட்டுமல்ல… அன்றிலிருந்து அவரது மேனி பொன்னின் துலக்கம் கண்டது.

மகா யோகி தேவபி தனக்கு முன்னால் நிற்கும் அந்தகன் த்ருதராஷ்டிரரின் எதிர்காலம் உணர்ந்ததும் அவரது உள்ளம் கருணையினால் ததும்பியது. முன்பு நியதியின்பால் தனக்கு மறுக்கப்பட்ட அரசப்பதவி இன்று இவனுக்கும் நிராகரிக்கப்படுமோ…? பாவம்… இரு கண்களும் இல்லாத இவன் அரச சுகபோகத்தைவிட மேலான துறவறத்தையும் ஏற்க இயலாதே…

மகா யோகி தேவபி தன்னருகில் வருமாறு த்ருதராஷ்டிரரை நோக்கிக் கையசைத்ததும் விபூதியின் அடர்த்தியான வாசம் காற்றில் வியாபித்தது.

தூண்டுதலால் த்ருதராஷ்டிரரின் நாசிகள் புடைத்து வெண்கமலமாய் முகம் மலர்ந்தார். வாசம் வரும் திசைநோக்கி சப்தமில்லாது அடியெடுத்து வைத்தார். அவரது நெற்றி தேவிபியின் நெஞ்சத்தைத் தொட்டு நின்றது. மகா யோகி தேவபி தனது அருட்கரத்தால் த்ருதராஷ்டிரரின் தலைக்கோதி சக்தியூட்டினார்.

கண்களை இழந்திருந்தாலும் பிற்காலத்தில் அபாரமான திறனும் அளவுகடந்த சக்தியும் த்ருதராஷ்டிரர் பெற்றதற்குத் தனது பாட்டனுடன் நிகழ்ந்த இச்சந்திப்பு ஒரு காரணம்.

மூன்று நாழிகை காலம் வரையில் மட்டுமே அங்கிருந்த போதும் தேவிபியிடம் எதையும் கேட்கவும் இல்லை, எதுகுறித்தும் உரையாடவும் இல்லை. தேவபியும் மௌனமாகவே இருந்தார். சூட்சம நிலையில் வழங்க வேண்டியதெல்லாம் வழங்கியதோடு தனது இடுப்பில் கட்டியிருந்த மாணிக்ககற்களால் அலங்கரிக்கப்பட்ட விதாரக் சங்கினை எடுத்துத் த்ருதராஷ்டிரரின் கைகளில் வைத்தார்.

கிருஷ்ணனைப் போலவே பாண்டவச் சகோதரர்கள் ஒவ்வொருவரும் தங்களது அங்கத்தின் அங்கமாகச் சிறப்பு வாய்ந்த சங்கொன்றைத் தங்களது குறுக்கில் தரித்திருந்தார்கள். அவ்விதமாக இல்லாவிட்டாலும் அதைவிடப் பிரமாதமான சங்கைத் தன்னுரிமையாகப் பெறவேண்டும் என்பதில் துரியோதனனுக்கும் இனம்புரியாத ஆர்வம். ஆனால், அப்படியொன்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பஞ்ச பாண்டவர்களின் இடையீட்டால் பலமுறை கைநழுவிப் போனது.

தலைமகனின் வருத்தத்தையறிந்தும் த்ருதராஷ்டிரர் துரியோதனனை அழைத்தார் மகன் கலங்கினால் தந்தையானவர் வேடிக்கை பார்ப்பது இழுக்கல்லவா… விபூதியின் வாசம் கமழும் ஒளிவீசும் மாணிக்கங்கள் பதியப்பட்ட விதாரக் சங்கைக் கையளிக்கும் முன்பாக ஒரேயொரு நிபந்தனையை மட்டும் விதித்தார். துரியோதனன் ஒளியுமிழும் சங்கின் ஒலியைச் சோதித்தறியும் பேரார்வத்தில் கேள்வியின்றி அப்போது அவரிடம் வாக்களித்தான்.

“ஒருபோதும் விதார சங்கநாதத்தை யுத்தக் களத்தில் முழங்க விட்டேன்…”

குங்கும நிற ஆலமரக்கிளையில் கௌரவர்களின் வைகறை சங்கீத ஆலாபனைக்குப் பிறகு துரியோதனன் விதார சங்கநாதத்தைச் சீராகவும் நீண்டதாயும் முழங்குவான். அதுவும் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே. ஆலமரத்தின் இலைகள், பட்சிகள், வண்டுகள் முதற்கொண்டு மனிதர்கள் வரை சலசலப்பில்லாது ஊற்றெடுக்கும் அமைதியின் அமுதத்தைப் பருகியதும் நிச்சலனத்தில் ஆழ்ந்து போவார்கள். கூடவே பிரமாதியும், சதசும், பலவரதனும் தங்கள் குரலிசையைப் பிசிறின்றிப் பொருத்துவதால் எழும் இசை மதுரத்தின் சுவையறிய ஆதவனும் தன் கடமை மறந்து காலம் தாழ்த்துவான்.

கௌரவர்கள் வாழ்வில் பலவிதமான நல்ல விஷயங்கள் இருந்தாலும் வெற்றியாளர்களை விதந்தோதுவதற்காகப் படைக்கப்படும் வரலாற்றுப் பக்கங்கள் எதிரியின் சிறுமைகளை மட்டுமே பெரிதுபடுத்துகின்றன. ஆனால், வெற்றியாளர்கள் செய்த தவறுகள், பாதகங்கள், சூழ்ச்சிகள் யாவும் லீலைகளாகச் சிலாகிக்கப்படுகின்றன.

‘குசுமா வலிகிதா…’

வீமனனை நாங்கள் அப்படித்தான் அழைப்பும். சுருள்முடிக்கொண்ட அர்ஜுனனை ‘குடாகேசா’ என்றழைப்போம். பால்யம் முதலே ஒட்டுமொத்த கௌரவக் கூட்டத்திற்கும் இவ்விருவர்கள்தான் சத்ருக்கணங்கள். யுதிஷ்டிரரும் நகுல தேவனும் சகாதேவனும் கௌரவர்களை இம்சிப்பதில்லை.

குசுமா வலிகிதாவிற்கு விதவிதமான அரண்மனை உணவுகளை அம்பாரமாய் குவித்து வைத்தாலும் நிறையாது. அது அவனது பிறவி சாபம். குங்கும நிற ஆலமரக்கிளையில் அமர்ந்தபடியே கௌரவர்கள் உண்பதற்காக எடுத்துச்செல்லும் விசேஷப் பட்சணங்கள் நிறைந்த நூறு உணவுப் பொதிகளையும் குசுமா ஒருவனே திருடித் தின்றுவிடுவான். ஒவ்வொரு நாளும் இசையின் நிச்சலனத்தில் இயற்கையோடு இணங்கி லயித்திருக்கும் வேளையில் கௌரவர்களின் உணவுப் பொதிகள் எல்லாம் களவாடப்பட்டு குசுமா வலிகிதாவின் பிரசாதமாகி விடும்.

திருடித் தின்பதின் ருசிக்கு அடிமையான குசுமா வலிகிதா அதற்காகக் கௌரவப் பிள்ளைகளை ஆபத்தின் எல்லைவரை அழைத்துச் செல்வதற்கும் தயங்கமாட்டான்.

அன்றைக்கும் அப்படித்தான்…

வழக்கமாக உணவுப் பொதிகள் ஒன்றுமில்லாது பறிபோனதும் கௌரவர்கள் பெரியவர்களிடம் புகாரளிக்கக் கலைந்து விடுவார்கள். ஆனால், அன்றைக்கு “இந்த எழுபத்தெட்டு கௌரவச் சகோதரர்கள் மட்டும் ஏன் கலைந்து போகவில்லை? குங்கும நிற ஆலமரத்தைவிட்டுக் கீழிறங்காமல் அதன் கிளைகளில் அமர்ந்திருப்பதின் நோக்கம் என்ன…?”பதிலறியாத கேள்வியின் எரிச்சலால் குசுமா வலிகிதா அவனது தம்பி குடாகேசனை நாடினான்.

குடாகேசன் கேள்விகள் எழுந்தால் அதற்கான பதில் குறித்தெல்லாம் சிந்திப்பதில்லை. செயலே பதிலுக்கான சமநிலையை வழங்கும் எனும் கொள்கையுடையவன். அம்புகள் செய்தவற்கான தேர்ந்த மூங்கில்களை இனம் காட்டுவதற்காக வேலைக்காரர்களுடன் கானகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தவன் குசுமா வலிகிதாவின் பின்னால் திரும்பினான்.

துரியோதனன் உட்பட வலிமையும் ஆற்றலும் நிறைந்த இருபத்திரண்டு கௌரவர்கள் மரத்திலிருந்து முன்பாகவே கீழிறங்கி அரண்மனை பாதையூடாக நடந்து சென்றதையறிந்த குசுமா வலிகிதா அவனது தம்பியின் ஒத்துழைப்போடு சதித்திட்டத்தைத் தடையில்லாமல் செயல்படுத்தினான். ஒருவேளை இருபத்திரண்டு கௌரவர்களும் அப்பொழுது அங்கிருந்திருந்தால் பீமன் கரத்தை வெட்டி எறிந்திருப்பார்கள்…

எழுபத்தெட்டு இளம் கௌரவர்கள் அறியாவண்ணம் முட்புதர்களைப் பிடுங்கிக் கொண்டு வந்த குசுமா அதைக் குங்கும நிற ஆலமரத்தின் கீழே போட்டான். முறம் போன்ற கைகளால் ஆலமரத்தை அவன் வேகமாக அசைக்கத் துவங்கியதும் சரசனன் தனது அண்ணன் சாருசித்திரனிடம் குசுமா வலிகிதாவின் சதியை அம்பலப்படுத்தினான். கௌரவச் சகோதரர்கள் எச்சரிக்கையடைந்து கிளைகளோடு இறுக்கிக்கொண்டு கீழே விழாமல் போராடினார்கள்.

“ஏய் வெளவால்களே… இதோ உங்கள் உறுதியை இப்பொழுது சோதித்து விடலாம்.” குசுமாவின் உத்தரவிற்கேற்ப சரம் தொடுத்துக் காத்திருந்த குடாகேசன் கிளைகளை இறுகத் தழுவிக் கொண்டிருக்கும் கௌரவ சகோதரர்களின் கரங்கள் மீதும் கால்கள் மீதும் தாக்குதலைத் தொடுத்தான். குங்கும நிற ஆலமரம் முழுவதும் அம்படிப் பட்டது. பழுத்த பழங்கள் போல மரக்கிளைகளில் இருந்த கௌரவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கீழே விழுந்தனர். முட்புதரில் மாட்டிக் கொண்டு முள் குத்திய வேதனைத் தாளாமல் அலறிக் கூச்சலிட்டனர்.

எழுபத்தெட்டு இளம் கௌரவர்களின் அலறல் சத்தம் கேட்டு அரண்மனை சென்றிருந்த இருபத்திரண்டு மூத்த கௌரவர்களும் பதட்டத்துடன் ஓடி வந்தனர். பெரியவர்களும் அவர்களுக்குப் பின்னால் ஓடி வந்தார்கள். அதற்குள் அவ்விடத்திலிருந்து குசுமாவும், குடாகேசனும் மாயமாகினர். துரியோதனன் பழிவாங்கத் துடித்தான்… அன்றைக்கு இளம் கௌரவர்களுக்கு ஏற்பட்ட முள்காயங்கள் விரைவில் ஆறிப்போனாலும் துரியோதனன் மனதில் அந்நிகழ்வு வடுவாக நின்று விட்டது. பாண்டவர்கள் மீதான விரோதத்தின் முதல் விதை அன்றைக்கு ஊன்றப்பட்டதுதான்.

குங்கும நிற ஆலமரமானது கௌரவர் வாழ்வின் அங்கமாக மட்டுமல்லாது எனது வாழ்வின் தேடலுக்கும் உயர்வுக்கும் பலவகையில் உதவியாக இருந்திருக்கிறது.

என் வாழ்வில் என்னோடு மறைந்திருக்கும் அனேக ரகசியங்களில் ஒன்றை மட்டும் உனக்குக் கூறுகிறேன்.

கௌரவக் கூட்டத்திற்கு அஞ்சி பகல் முழுவதும் குங்கும நிற ஆலமரத்திற்கு எந்தவொரு பட்சியும் வராது. ஆனால், இரவில் அது கருங்கழுகுகளின் வாழ்விடம். ஆயிரத்திற்கும் மேலான கருங்கழுகுகள் மரக்கிளைகள் முழுவதும் நிறைந்திருக்கும். இருளில் அவைகளின் கண்கள் நீலநிற வைரக்கற்கள் போல ஜொலிக்கும். காரிருளில் தனித்தொளிரும் அக்காட்சியானது தேவலோகத்தின் மயக்கத்தை அளித்திடும். அதுவரை இரவில் அவ்வழியே யாரும் சென்றதில்லை போலும்… ஏனென்றால் என்னைத்தவிர வேறுயாரும் குங்கும நிற ஆலமரத்தில் இரவில் தஞ்சமடையும் கருங்கழுகுகள் குறித்து அறிந்திருக்கவில்லை. கருங்கழுகுகள் குறித்து நான் எனது தந்தையாரிடம் கூறிய போது அவர் திகைத்து நின்றார். அந்த ஆச்சர்யத்திலிருந்து அவர் விடுபடுவதற்குச் சில கணங்கள் பிடித்தன.

“என்ன கருங்கழுகுகளா…? அதுவும் ஆயிரக்கணக்கில் ஒரே இடத்திலா…!

“ஆம்… தந்தையே அத்தனையும் நன்கு வளர்ச்சியடைந்த கருங்கழுகுகள். சிறுமலையின் மீது அமர்ந்து கொண்டு பார்த்தால் அவை அமர்ந்துள்ள இடம் நீலநிற வைரக்குவியலாய் காட்சியளிக்கும். நான் இரவு முழுவதும் ரகசிய அஸ்திரங்களைக் கையாள்வதற்கான பயிற்சியை மேம்படுத்திக் கொள்வதற்குச் சிறுமலைக்குச் செல்வேன். நீலநிற வைரக்குவியலா? இல்லை ஏதேனும் மாயமந்திரமா? என்கிற சந்தேகத்தால் உந்தப்பட்டு ஒருநாள் குவியல்மீது கனையொன்றை எய்தேன். அடடா… பேரழகை எப்படிச் சொல்வேன்… நீலநிற வைரக்குவியல் உயிர் பெற்று இரண்டிரண்டு இணைகளாக வானவெளி முழுவதும் நிறைந்தன. நகரும் நீலநிற நட்சத்திரங்கள் அசைவற்று மீண்டும் பழைய நிலையை அடைவதற்குச் சில நாழிகைகள் ஆயின.

“ஒளிரும் நீலக்கண்கள் உடைய கருங்கழுகுகள் அஸ்தினாபுரத்தின் எல்லைக்கு வந்திருப்பது நன்நிமித்தமாகத் தோன்றவில்லை…”

“ஏதேனும் ஆபத்து வரப்போகிறதா தந்தையே?”

“இப்போதைக்கு இல்லை… நீ யாரிடமும் இதுபற்றி வாய் திறக்க வேண்டாம்… “

“உங்கள் அன்புக்குரிய சீடன் குடாகேசனிடம் கூட சொல்ல வேண்டாமா?”

‘’உன் விளையாட்டுப் பேச்சுக்கு இப்போது அனுமதியில்லை. நான் சொல்வதை மட்டும் கேள்வியின்றிச் செய். உன் எதிர்காலம் உவப்பாகயிருப்பதில் அதிக அக்கறை மற்றவர்களைவிட ஏன், உன்னைவிடவும் எனக்கு அதிகம் உண்டு.”

“பணிகிறேன்…தொடர்ந்து சொல்லுங்கள் தந்தையே.”

“பகலில் கருங்கழுகுகள் எங்கிருக்கும் என்பதை அறிய முடியாது. அவை மனிதர்களைக் கண்டால் கண்ணில் தெரியாத வண்ணம் பறந்தோடி விடும்… கருங்கழுகுகள் உனது சிறப்பை உயர்த்தப் போகின்றன. நீ ஒன்று செய்… உன்னால் இயன்றளவு கருங்கழுகுகளின் சிறகுகளைச் சேகரித்து வா.”

“ஆனால் தந்தையே, ஆயிரத்திற்கும் அதிகமான கருங்கழுகுகள் இரவில் மட்டுமே தென்படுகின்றன. வைகறை புலர்வதற்குள் அவை அங்கிருந்து ஏதோவொரு கணத்தில் மாயமாகப் பறந்தோடி மறைந்து விடுகின்றன. இதுவரை மரத்தின்கீழ் அவைகளின் ஒரு சிறகைக்கூட நான் கண்டது இல்லை….”

“மகனே… ஞானம் தேடலில் மட்டுமே மலர்கிறது. தேடியலைந்தவன் அமரும் தருணத்தில் ஞானம் உதயமாகிறது என்பதற்காக ஓரே இடத்தில் கல் போன்று சும்மா அமர்ந்திருப்பது சோம்பேறிகளின் மூடத்தனம். அவர்கள் கல்பக்கோடி ஆண்டுகள் அமர்ந்திருந்தாலும் எதுவொன்றும் சித்திக்காது. அதனால் ஒரு பயனும் இல்லை. செயல்மட்டுமே நிச்சலனத்தில் ஆழ்த்தும் உபாயம். நிச்சலனமே ஞானத்தின் திறவுகோல். செயல்படு… காத்திரு… கண்டறி… உனதாக்கிக் கொள். “

கருங்கழுகுளை பதற்றமடையச் செய்ய வேண்டும் என்பதற்காக காகங்கள் சிலவற்றைப் பிடித்து வைத்திருந்தேன். இரவு கவிழ்ந்ததும் சத்தமின்றிக் குங்கும நிற ஆலமரத்தடியைச் சமீபித்து காகங்களை விடுவித்தேன். தங்களைச் சுற்றி ஏராளமான கருங்கழுகுகள் சூழ்ந்திருப்பதை உள்ளூர உணர்ந்துவிட்ட காகங்கள் மனக்கிலேசத்தில் கரைந்து அலறின. ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த இரவின் அமைதி ஷீணமடைந்தது. காகங்களின் பதட்டம் கழுகுகள் மீது எதிரொலித்தது. காகங்களை வேட்டையாடுவதாக நினைத்து கழுகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. பல ஆண்டுகள் கழித்து இத்தகைய இரைச்சலுக்கு ஈடாகக் குருக்ஷேத்திரப் போரில் என் தந்தை துரோணசாரியர் யுத்தம் செய்து கொண்டிருந்த இரவில் அதன் சத்தம் பேரிரைச்சலாகி என் செவிகளைத் தாக்கியது.

கழுகுகள் மற்றும் காகங்களின் பேரிரைச்சலைச் சகியாது இரு கைகளால் என் செவிகளை மூடியபடி குங்கும நிற ஆலமரத்தினடியில் மயங்கிச் சரிந்தேன். மறுநாள் காலை எனக்கு கருங்கழுகுகளின் நாவற்பழ நிறமுடைய நூறு சிறகுகள் கிடைத்தன. ஆதவன் உதயத்திற்கு முன்பாக கருங்கழுகின் நாவற்பழச் சிறகொன்றைக் கண்ணுக்கு நேரே பிடித்துப் பார்த்தேன். வானத்தின் பதினாறு லோகங்கள் தோன்றின.

என் தந்தையிடம் சிறகுகளை வழங்கியபோது ஒரேயொரு நாவற்பழச் சிறகை மட்டும் சகுனிக்கு பரிசளிக்க என்று தனியாக ஒதுக்கிவிட்டு மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது சிறகுகளைப் பசுநெய் விளக்கில் எரித்துக் கருக்கினார். கருக்கிய சாம்பலுடன் ஜவ்வாதையும் புனுகையும் கூட்டியரைத்து தங்கச்சிமிழில் அடைத்து என்னிடம் வழங்கினார். அது எனது உபயோகத்திற்கானது மட்டுமே என்பதையும் அழுத்தமாகக் கூறினார். தினந்தோறும் மந்திரத்தை ஜெபித்துவிட்டு மகாசக்தியையும் சூட்சமத்தையும் பேரருளையும் வழங்கப் போகும் மையைத் திலகமாக வைத்துக்கொண்டேன். அது அற்புதமாக வேலை செய்தது. மூன்றாவது வாரம் முதல் வெகுதூரத்தில் உள்ளவை யாவும் கண்களைச் சுருக்கினால் எனக்கருகில் பெரிதாகவும் தெளிவாகவும் தோன்றின. விரும்பினால் எனது உருவை பிறர் காண இயலாது செய்திடும் சூட்சமம் வாய்த்ததும் அதனால்தான். எனது தந்தையார் கூறிய ஞானம் எனக்கருகில் நெருங்கி வந்ததாக உணர்ந்தேன்.

ஞானம் வழங்கிய குங்கும நிற ஆலமரம் அஞ்ஞானத்தையும் சேர்த்தே வழங்கியது. குருக்ஷேத்திரப் போரின் இறுதியில் குங்கும நிற ஆலமரத்தின் கீழ் துரியோதனன் உயிர் விடைபெறும் தருணத்தில் முற்றுவுறா பகையின் துவக்கம் மீண்டும் தளிர்விட்டது.

துரியோதனனின் கண்கள் பேசும் மொழியை நான் மட்டுமே அறிவேன். அவனது கடைசி செய்தி ஒரு விருப்பமாக முன் வைக்கப்பட்டது. என்னால் மட்டுமே… என்னொருவனால் மட்டுமே அதன் பொருளையும் காரணத்தையும் அறிய இயலும்… நான் சராசரி கிடையாது. நியதி எல்லைக்குள் மேல் கீழ் உலவும் வாழ்க்கையை விரும்பாதவன். சிறைப்படுத்தும் உணர்ச்சிகளுக்கு அனுமதி தராமல் துரியோதனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றச் சம்மதித்தேன். ஒருவர் காட்டும் கருணைக்குப் பின்னால் பெரியதொரு அசிங்கம் மறைந்திருக்கிறது. ஒருவரது மகிழ்ச்சி ஆராவரத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பலரது இழப்பின் கூக்குரலைப் போல.

நிகழ் சூழலுக்கு நேர் எதிராக அதை முற்றிலுமாக புதிய சூழலாக மாற்றும் வல்லமை அவநுதி அஸ்வத்தாமனால் மட்டுமே முடியும் என்பதை அறியாதவனல்ல துரியோதனன்.

பாண்டவர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை உன்னால் நிறுத்த முடியுமா? என்று அவன் என்னிடம் வாய்திறந்து கேட்கவில்லை.

வழிதவறி மாண்டுபோன இளைஞனே… முயன்றாலும் இனி உன்னுடைய உயிர் காத்திருக்கப் போவதில்லை… காலம் கடந்துவிட்டது. ஆகையால் விடையளிக்கிறேன் நீ இங்கிருந்து செல்லலாம். நான் வாக்களித்தபடி உனது உயிரற்ற உடலை மனிதர்கள் கண்ணில்படும்படி கீழிறக்கி விடுகிறேன்.

manjunath.author@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button