
”போய்த்தான் ஆகணுமாம்மா?” வெற்றுமார்புடன் அக்குளில் பவுடரைத் தேய்த்துக்கொண்டே விருப்பமில்லாமல் கேட்டான் திவாகர்.
“வீடு தேடி பத்திரிக்கை வந்திருக்குல்லப்பா…”
“அவங்களா கொண்டாந்து குடுத்தாங்க? போஸ்ட்மேன் குடுத்தாரும்மா…!” குரல் உயர்ந்து கோபம் வெளிப்பட்டது.
”இந்தளவுக்காவது நமக்கு மரியாதை குடுத்தாங்களேன்னு…” திவாகரின் முறைப்பைப் பார்த்துச் சட்டென்று நிறுத்தினார் செந்தமிழ்ச்செல்வி. அவர் முகத்தில் எதிர்கால பயமும் கெஞ்சலும் தேங்கியிருந்தன.
“உன் பேரைப் போடாம என் பேரைப் போட்டுருக்காங்கம்மா”
“ஆம்பளப் புள்ளைங்கப் பேரைத்தாம்பா போடுவாங்க. என் பேரைப் போடற மாதிரியா நான் இருக்கேன்…” பிசிறடித்த குரலில் கூறியவரின் கண்கள் கலங்கியிருந்தன.
“சரி சரி! அழுவாத… அப்புறம் புலம்ப ஆரம்பிச்சுடுவ” தலைவாரிக் கொண்டே, “நீ சொல்றேன்னுதான் போறேன்” என்றான்.
கண்ணாடிச் சட்டத்துக்குள் அப்பா சிரித்துக்கொண்டிருந்தார். முந்தாநாள் போட்ட கதம்பம் காய்ந்திருந்தது. அவர் எதிரில் கண்மூடிக் கும்பிட்டான்.
”அப்பா செத்ததுக்கப்புறம் மொத மொறையா விசேச வீட்டுக்குப் போற…” செண்டிமென்டாகப் பேசிய செந்தமிழ்ச்செல்வி, தன்னுள் எதையோ அடக்கி வைத்திருப்பவரைப் போலவே தோற்றமளித்தார்.
“அப்பா இருந்திருந்தா பத்திரிக்கை அனுப்பிச்சிருப்பாங்களாம்மா?”
”எங்க காலம் முடிஞ்சு போச்சுப்பா. இனிமே நீதான் எல்லாத்துக்கும் ஆதரவா நடந்துக்கணும். அவங்கள எதுத்துப் பேசிடாதப்பா! என்ன சொன்னாலும் கேட்டுக்க” இன்னும் அவருக்குள் உறைந்திருந்த மர்மம் வெளிப்படவில்லை.
அம்மா இப்படித்தான். அவருக்கு எதுவுமே தெரியாது. தன்னை அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்பதுகூடப் புரியவில்லை.
வெளியே வந்தான். வீட்டை ஒட்டிய சிறிய கடை அறை பூட்டியிருந்தது. உள்ளே அப்பாவின் சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. அதன் கேரியர் எவ்வளவு சுமைகளைச் சுமந்திருக்கிறது… அப்பாவைப் போலவே!
அண்ணாந்துபார்த்தான். குழவியும் குருவியும் கூடுகட்டியிருந்தன. எட்டுக்கால் பூச்சி தன் வலை வீட்டை மிகச் சாமர்த்தியமாகப் பின்னியிருந்தது. ஓட்டடுக்கின் இடுக்கின் வழியே காலை வெயில் பீறிட்டுக் கொண்டிருந்தது.
ஸ்டாண்டை நீக்கிச் சைக்கிளை வெளியே எடுத்தான். அம்மா வாசலில் நின்றிருந்தார்.
திடீரென்று நினைவு வந்தவனாக, “அம்மா… அந்த மஞ்சப்பைய எடுத்துட்டு வாம்மா” என்றான்.
அவருக்கும் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. சட்டென்று உள்ளே சென்று சிலநொடிகளில் பையுடன் திரும்பினார். அதனுள் பிளாஸ்டிக் பையில் சுருட்டப்பட்ட துணி தெரிந்தது. ஹாண்ட் பாரில் தொங்கவிட்டான்.
“தங்கச்சி எங்கேம்மா?”
“அவ இப்பத்தான் குளிச்சுக்கிட்டு இருக்கா. நீ முன்னால போப்பா. நேரமாச்சு. அவ ஸ்கூலுக்கு நடந்து போய்க்குவா”
“வர்றேம்மா”
ஃபேவர் ப்ளாக் கற்கள் சமீபத்தில்தான் பதித்திருந்தார்கள். எட்டடிக்குள் குறுகிய தெருவில் சைக்கிள் பயணம் செய்தது. அய்யனார் வீட்டு வாசலில் புழுக்கைகளோடு ஆடுகள் கட்டிக்கிடந்தன. கோழியை சேவல் துரத்திப் போக்குவரத்தை இடையூறு செய்தது. தெருவில் குறுக்கே கட்டப்பட்டக் கொடிக்கயிற்றில் ஈரத்துடன் காயப்போட்டிருந்த துணிகள் முகத்தில் பட்டு ஜில்லிப்பையும் சலவை சோப் வாசனையையும் இலவசமாகத் தந்தன.
வீட்டு நிழல் தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்த முனியம்மா ஆயா வெற்றிலையை இடித்துக்கொண்டே, “திவாகரூ…” என்று நீட்டி முழக்கி அழைத்தார். காலூன்றிச் சைக்கிளில் அமர்ந்தபடி, “என்னாயா?” என்றான்.
“கடையைத் திறக்க வேண்டியதுதானே… வெத்தல பாக்கு வாங்கறதுக்கு மெயின் ரோட்டுக்குல போக வேண்டியிருக்கு!” உரலில் இடித்த வெற்றிலைக் கலவையை சிவந்த சாற்றுடன் உலக்கில் சுரண்டி வாயில் போட்டுச் சவற்றியபடிக் கேட்டார் முனியம்மா.
வீட்டுக்குள்ளிருந்து வெளியேவந்த திவாகரின் மாமா, “கடையத் தொறந்து வெறும் வெத்தலயா வாங்கி அடுக்கி வைங்க மாப்ளே!” என்றார் கிண்டலாக.
“ஆயா சொல்றதுலயும் என்னப்பா தப்பிருக்கு? எத்தன நாளைக்குத்தான் கடைய பூட்டியே வைக்கிறது?” என்று ஜன்னல் பேசியது. உள்ளே மாமா மகளின் ஓரக்கண்கள் திவாகரை வளைத்தன.
”இவன் அப்பனுக்கு உடம்புக்கு முடியாமப் போனதுலயிருந்தே கடையத் தொறக்கறதில்லயே… அது போவட்டும். இவ்வளவு வெள்ளென எங்க பொறப்புட்டாப்ல? காலேசுக்கா?”
“இல்ல மாமா. தாத்தா வீட்டுக்கு… அவரு பேத்திக்குச் சடங்காம். பத்திரிக்கை வச்சுருக்காங்க. எனக்குப் போகப் பிடிக்கல மாமா. அம்மாதான் போகச் சொல்றாங்க”
”அவங்க யாரும் இந்தத் தெரு வழியா போனமாதிரித் தெரியலயே மாப்ளே”
”போஸ்ட்ல வந்துச்சு மாமா!”
”அதானே பார்த்தேன். அவங்களாவது இந்தத் தெரு வழியா வர்றதாவது! கவுரவக் கொறச்சலாயிடுமே… உங்கப்பன் செத்தப்பக்கூட சுடுகாட்டுக்கு வந்ததோட சரி. அப்புறம் ஆளுங்களையே காணோம். இந்தத் தெரு சுடுகாட்டை விட மோசமாப் போயிடுச்சு மாப்ளே! சடங்கு எந்த மண்டபத்துல?”
“அவங்க வீட்டுலயே!”
“வீட்டை மண்டபம் மாதிரி கட்டி வச்சுருக்காங்க. வைக்க வேண்டியதுதான். என்ன பிரயோஜனம் மனசு விசாலமா இல்லையே!” என்றவரிடம், “வர்றேன் மாமா” என்ற திவாகர், ஜன்னலுக்கும் சைகை செய்தான். பதில் சைகை கிடைத்தது.
“சொல்லப் போனா உனக்கு வெத்தல பாக்கு வச்சுக் கூப்புட்டுருக்கணும். ம்… உங்கம்மா போகச் சொல்றா. அதுல ஏதாவது விவரம் இருக்கும். போயிட்டு வா மாப்ளே” என்ற மாமாவின் குரல் காற்றில் கரைய சைக்கிளை மிதித்தான்.
வள்ளிச் சித்தி வீட்டைக் கடக்கும்போது, “மாடு கன்னு போட்டுருக்குப்பா. சீம்பாலு தர்றேன்… குடிச்சுட்டுப் போ!” குரல் முதலில் வர, சித்தியும் சித்தப்பாவும் வெளியே வந்தார்கள்.
“நேரமாச்சுச் சித்தி. அப்புறம் வர்றேன்”
“இவன் எப்பவுமே இப்படித்தான். சீம்பால வீட்டுக்குக் குடுத்தனுப்பு” என்ற சித்தப்பாவின் குரலும் காற்றடித்துச் செல்ல சைக்கிளை இடப்பக்கம் திருப்பி மெயின் ரோட்டைப் பிடித்தான். அங்கிருந்து வளைந்து மார்க்கெட் ரோட்டுக்குள் நுழைந்து பெரியகடை வீதியைச் சந்தித்தான்.
அப்போதுதான் எல்லாக் கடைகளையும் திறக்க ஆரம்பித்திருந்தார்கள். கடை வாசலைப் பெருக்கிக்கொண்டு, தண்ணீர் தெளித்துக்கொண்டு, தூசியைத் தட்டி விட்டுக்கொண்டு – சில கடைகளில் சாம்பிராணி வாசம் கூட அடித்தது. சங்கரன் மொத்தம் & சில்லறை வியாபாரம் என்று போர்டு போட்டிருந்த கடையின் வாசலில் அதன் உரிமையாளர் சங்கரன் நின்றுகொண்டிருந்தார்.
“தம்பி…” என்று திவாகரை சத்தமாக அழைத்தார். சைக்கிளைத் திருப்பி அவரருகில் ஸ்டாண்டிட்டு நிறுத்தி மரியாதை காண்பித்து நின்றான்.
“மத்தியானம் வந்து என்னைப் பாரு. என்ன…?” என்றார் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல்.
குழம்பிய முகத்துடன், “சரிங்கய்யா” எனக் கூறிக் கிளம்பினான்.
கடை வீதியைக் கடந்து குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தான். லட்சுமி நகருக்குள் நுழையும் போதே வீடுகளின் தோற்றமும் மாறியிருந்தது. சாலைகளின் அகலமும் கூடியிருந்தது. இரண்டாவது கிராஸ் சாலைக்குள் நுழைந்ததும் வீடுகள் பங்களாக்களாக மாறியிருந்தன. அதன் நவீன வடிவமைப்பாலும் வண்ணத் தோற்றங்களாலும் மாயையான உலகுக்குள் நுழைவதுபோல் தோன்றியது. பத்தாம் எண் பங்களாவைத் தேடினான். இரண்டாவது கிராஸ் முடிவடையும் கார்னர் பங்களாவுக்கு எதிரில் நிறைய கார்களும் பைக்குகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அதுவாகத்தான் இருக்கும் என முடிவுசெய்து அருகில் சென்றான்.
கார்களுக்கும் பைக்குகளுக்கும் இடையில் சைக்கிளை நிறுத்துவதற்கு வெட்கப்பட்டான். சுற்றிலும் பார்த்தான். பக்கவாட்டுக் காம்பவுண்டுச் சுவற்றருகில் காலி இடம் தெரிந்தது. சைக்கிளை நிறுத்தினான். கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான்.
சட்டையை இன் செய்யலாமென நினைத்தவன் பெல்ட் கட்டவில்லை என்பது உறுத்தியதும் அதைத் தவிர்த்தான். ரப்பர் செருப்புக்கூட கால்களை ஏழையாக்கியது.
’இவ்வளவு நேரமும் இதைப்பற்றி யோசிக்கவே இல்லையே. முன்னரே யோசித்திருந்தால் கால் மாற்றாகவும் இடுப்பு மாற்றாகவும் இரவல் வாங்கி வந்திருக்கலாமே.’ சுற்றுப்புறச் சூழ்நிலை அவனை அப்படி நினைக்க வைத்தது. ஏழ்மையின் வீரியம் இப்போதுதான் உறைத்தது. பெருமையாகக் கட்டியிருந்த அப்பாவின் பழமையான கடிகாரம்கூடக் கனத்தது!
தயங்கியபடியே உள்ளே செல்லக்கூடாது. தைரியமாகச் செல்லவேண்டும். நிமிர்ந்து நடக்கவேண்டும் என்று மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டாலும் அவனால் அது முடியவில்லை. ஏதோ ஒரு குழப்பம் மனதில் சூழ்கிறது.
வாசலில் வரவேற்பாளர்களாக நின்றிருந்த இரண்டு பெண்கள் இவன் ஆளையும் நடையையும் பார்த்துப் பன்னீர் தெளிக்காமல், “தம்பி… யாருப்பா நீ?” என்று கேட்டனர்.
இவனுக்கு என்ன பதில் சொல்வெதென்றே தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது வெளியே நிற்கிறார்களா என்று பார்த்தான். யாருமில்லை. எல்லோரும் உள்ளே இருக்கிறார்கள். கசகசவென பேச்சுக்குரல்மட்டும் கேட்டது.
‘நான் யாரென்று எப்படி விளங்க வைப்பது? எனக்குத் தெரிந்த பெயர் ஒன்றே ஒன்றுதான்’
“ராஜகோபால்…” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து, “அவனை மேலே வரச் சொல்லுங்க!” என்ற குரல் கேட்டு மூவரும் மேலே பார்த்தனர்.
மொட்டை மாடியில் ராஜகோபால் நின்றிருந்தார். எழுபத்தைந்து வயதில் தலை முழுவதும் நரைத்திருந்தாலும் கம்பீரமாகச் சிவப்பாக இருந்தார். பணச் செழுமையின் மினுமினுப்பு முகத்தில் தெரிந்தது.
மாடிக்குச் செல்லும் வழியைக் கேட்டுப் படியேறினான் திவாகர்.
மொட்டை மாடியில் பந்தி நடந்து கொண்டிருந்தது. பலகாரங்களின் கதம்ப மணம் நாக்கில் நீர் ஊறவைத்தது. ராஜகோபால் பந்தியை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.
“வாப்பா.. இப்படி உக்காரு” என்று பந்தியில் அமர வைத்தார் ராஜகோபால்.
அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இவனையே பார்த்தார்கள். பெரியவர் இவனுக்கு மட்டும் சிறப்பான மரியாதை காண்பிக்கிறாரே. இவன் யாராக இருக்கும்? என்ற கேள்வி அவர்கள் முகத்தில் தெரிந்தது. அது, அவன் உடம்பை ஊடுருவிக் கூசவைத்தது. உடலைக் குறுக்கிக் கொண்டான்.
இலையில் விதவிதமான பலகாரங்கள் பரிமாறப்பட்டன. இது போன்ற விருந்துகளில் அவன் எப்போதும் கலந்து கொண்டதில்லை. அவனுக்குத் தெரிந்த ஒரே விருந்து – குஸ்காவும் கறிப்பொறியலும்தான்! அவனுடைய சுற்றத்தார்களின் விருந்தோம்பல் அது. இந்த விருந்து அவனுக்குப் புதுவிதமான அனுபவமாக இருந்தது.
”சாப்பிடுப்பா…” எனக் கூறிவிட்டு ராஜகோபால் மற்றவர்களை கவனிக்க எதிர்வரிசைக்குச் சென்று விட்டார்.
இலையில் பரப்பிவைத்திருந்த பலகாரங்களை பார்த்ததும் ஆர்வ மிகுதியில் சாப்பிட ஆரம்பித்தான். கேசரியை எடுத்துச் சுவைத்தான். உளுந்து வடையை சட்னியில் தோய்த்து விழுங்கினான். பூரியை பிய்த்து உருளைகிழங்கு மசாலாவில் முக்கி மென்றான். ஒவ்வொரு பலகாரத்திலும் சிறிதளவு எடுத்து சாப்பிட்டுச் சுவை மயக்கம் தீர்ந்ததும் நிமிர்ந்துபார்த்தான்.
எல்லோரும் இவனை கண்களால் சுட்டிக்காட்டி ஏதோ ஒன்றை சன்னக் குரலில் பேசிக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. அது அவனுக்குச் சங்கடமாக இருந்தது. மற்றவர்களெல்லாம் ஒரு குழுவாக இணைந்திருப்பது போலவும் தான் மட்டும் தனிமைப் படுத்தப்பட்டதைப் போலவும் உணர்ந்தான்.
அவனால் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. ஏதோ சாப்பிட்டதாகப் பேர் பண்ணிக்கொண்டு சட்டென்று எழுந்து கை கழுவினான்.
மற்றவர்கள் போல் அவனால் சகஜமாக இருக்கமுடியவில்லை. ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அவன் சங்கடப்படுகிறான்; தாழ்வு மனப்பான்மையில் சிக்கி இருக்கிறான் என்பதை அவன் உடல் மொழியே பறைசாற்றியது.
”கிழே போய் இருப்பா” என்று ராஜகோபால் கூறியதும் படிகளில் இறங்கினான்.
ஹாலுக்குள் நுழைந்ததும் சிலீரென்ற மார்பிள்சின் ஜில்லிப்புதான் கால்பாதங்களுக்குச் சிவப்புக்கம்பளம் விரித்தது. வண்ணப் பெயிண்டிங் சுவர்கள் கண்களுக்கு வெண்சாமரம் வீசியது. இவை மனத்துக்குள் சில நொடிகள் குதூகலத்தை ஏற்படுத்தினாலும் மீண்டும் தாழ்வு மனப்பான்மை சூழ்ந்தது.
வந்திருந்த உறவினர்கள் சோபாக்களை நிறைத்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தார்கள். இவன் உள்ளே நுழைவதைப் பார்த்து சிலநொடிகள் இவனைக் கவனித்தார்கள். மறுபடியும் தொலைக்காட்சிக்குள் நுழைந்து கொண்டார்கள். இன்னும் சிலரோ அகன்ற திரை அலைபேசியைத் தேய்த்துக் கொண்டிருந்தார்கள். இவன் சுற்றும்முற்றும் பார்த்தான்.
எங்கே அமர்வது?
அதோ சாய்வு நாற்காலி ஒன்று காலியாகக் கிடக்கிறது. அதில் உட்காரலாமா?
வேண்டாம்.
எல்லாவற்றிலும் ஆட்கள் நிறைந்திருக்க அதில்மட்டும் ஏன் யாரும் அமரவில்லை? அது யாருக்காகவோ ஸ்பெசலாகக் காத்திருப்பதுபோல் தோன்றுகிறது. அதில் நான் போய் அமர்ந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? நான் அந்தச் சாய்வு நாற்காலிக்குத் தகுதியானவன்தானா?
தயங்கியவனைத் தாண்டி அவன் வயதை ஒத்த இளைஞன் ஒருவன் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அதில் அமர்ந்தான்.
நான் ஏன் சின்ன விசயங்களுக்குக்கூட அதிகப்படியாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இது நாள்வரை நான் எந்த விசேசங்களிலும் கலந்து கொண்டதில்லையா? அங்கெல்லாம் தயங்காத மனம் இங்கு ஏன் தயங்குகிறது? அதோ அங்கே ஒரு ஸ்டூல் யாரும் கவனிப்பாரற்றுக்கிடக்கிறது. அதுதான் எனக்குச் சரியான ஆசனம்!
ஸ்டூலை நெருங்கினான். சுண்ணாம்பும் பெயிண்டும் தெறித்துக் காய்ந்து அலங்கோலமாய் இருந்தது. அதில் அமர்ந்தான்.
சில நிமிடங்களில் ராஜகோபால் அந்த ஹாலுக்குள் நுழைந்து உள்ளே இருந்த மற்றுமொரு பெரிய ஹாலுக்குள் நுழைந்தார். சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார். “எல்லோரும் பேத்திக்குத் துண்ணூறு பூசி விட வாங்க!” என அழைத்தார்.
நானும் போகலாமா? அவர் என்னையும்தான் உள்ளே அழைத்தாரா? இது என்ன திருநீறு பூசி விடும் நிகழ்ச்சி மட்டும்தானா? சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நான் வரும் முன்னே காலையில் வெகு சீக்கிரத்தில் முடிந்து விட்டதா? அல்லது சடங்கு சுற்றிப்போடும் நிகழ்ச்சியை வயதுக்கு வந்த ஐந்தாம் நாளிலேயே முடித்துக் கொண்டு, இன்று சீர் செனத்தி – மொய் வாங்கும் நிகழ்ச்சியாகவும், விருந்து கொடுக்கும் நிகழ்ச்சியாகவும் வைத்திருக்கிறார்களா…?.
சுற்றிலும் பார்த்தான். யாரையும் காணோம். தான் மட்டும் தனியாக அமர்ந்திருப்பதை உணர்ந்தான்.
விசேச வீடுகளில் என்னை மட்டும் தனியாக கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. எல்லோரையும் பொதுவாகத்தான் அழைக்க முடியும். மற்றவர்களெல்லாம் தாத்தா அழைத்தவுடன் எப்படி எழுந்து சென்றார்களோ அது போல் நானும் செல்ல வேண்டியதுதான்.
எழுந்து பெரிய ஹாலுக்குள் சென்றான். முன் அறையை விட இது மூன்று மடங்கு பெரிதாக இருந்தது. பேச்சுக் குரல்கள் கதம்ப ஒலிகளாகச் செவிக்குள் நுழைய, ஆண்களும் பெண்களும் கீழே விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளங்களில் அழகாக அமர்ந்திருந்தார்கள்.
நடுவில், அலங்கரிக்கப்பட்ட அழகான நாற்காலியில் ஒரு சிறு வயதுப் பெண் மிக அமர்க்களமாக அமர்ந்திருந்தாள். அழகு நிலையத்து அலங்கரிப்புகள் அவளை சினிமா நட்சத்திரம் போன்று அழகாகக் காண்பித்தது. போதாக்குறைக்கு கேமிராமேனின் உதவியாளன் பாய்ச்சிய ஃபோகஸ் லைட்டின் ஒளி வெள்ளம் அவள் உடம்பில் பாய்ந்து ஜொலிக்கவைத்தது.
உறவினர்கள் அனைவரும் வரிசையாகச் சென்று அவள் கையில் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையும் ஐநூறு ரூபாய் தாள்களையும் கொடுத்துத் திருநீறு பூசிவிட்டார்கள். சற்றுத் தூரத்திலிருந்து இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த திவாகருக்கு சினிமா சூட்டிங் பார்ப்பதுபோல் தோன்றியது.
யாரோ தன் கையைத் தொடும் உணர்ச்சி ஏற்பட்டுத் திரும்பிப் பார்த்தான். ராஜகோபால் நின்றிருந்தார்.
“வாப்பா… நீயும் வந்து துண்ணூறு பூசி விடு!” என்று அவனை அழைத்துச் சென்றார். அந்தப் பெண் எதிரில் நிற்கவைத்தார். ஏற்கனவே திருநீறு பூசிக்கொண்டிருந்தவர்கள் விலகி வழிவிட்டனர்.
எனக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… அளவுக்கு மீறிய மரியாதை காண்பிக்கிறார்கள்
எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததால் மனத்துக்குள் உருவான படபடப்பை உடல் வெளிப்படுத்தியது. புது இடம்.. புது மனிதர்கள். அத்தனைபேரும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். பொருளாதாரத்தில் மட்டுமல்ல. சமூகம் சார்ந்தும் உயர்நிலையில் இருப்பவர்கள்.
நான் உயர்ந்தவனா, தாழ்ந்தவனா?
பதில் தெரியவில்லை. இரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டவன் போல் உணர்ந்தான். எது தனது பாதை என்ற தெளிவில்லாத இலக்கு நோக்கிப் பயணம் செய்வது போல் திணறினான்.
எல்லோரும் அவனையே பார்த்துச் சிரித்தபடிக் கவனித்துக் கொண்டிருந்தது கூட அவன் மனநிலைக்கேற்ற மாதிரி மாற்றிக் காண்பித்தது.
என்னைக் கேலிப் பொருளாக்கிச் சிரிக்கிறார்களோ?
விசேச வீடுகளில் அனைவரும் முகத்தில் புன்னகையை வழிய விட்டபடியே இருப்பார்கள் என்ற பொதுக்கருத்து இருந்தாலும்கூட அவன் மனநிலை மாற்றிச் சிந்தித்தது.
எப்படியோ தன்னை ஒருவாறு திடப்படுத்திக்கொண்டு திருநீறு பூசிவிட்டான்.
அவள் சிறுவயதுப் பெண்ணாக இருந்தாலும் குண்டாக இருந்தாள். சிவப்பாக இருந்தாள். முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல் திருநீற்றை ஏற்றுக்கொண்டாள்.
கையில் வைத்திருந்த பைக்குள் இருந்த சுடிதார் அடங்கிய பிளாஸ்டிக் பையை எடுத்துப் பரிசுப் பொருளாகக் கொடுத்தான். கேமிரா மின்னலடித்தது.
“சரி… அதோ பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே இருக்கிற ரூமுக்குள்ள போய் இரு. நான் வந்துடறேன்” என்றார் ராஜகோபால்.
அவன் அந்த அறையின் வாயிலை நெருங்கும் வரை துளிச் சப்தம் இல்லை. அனைவரின் கண்களும் தன்னையே பின்தொடர்ந்து வருவதை உடல் உணர்ந்தது. சிலசமயங்களில் மவுனம்கூடப் பல விசயங்களைப் பேசுகிறது.
அது ஒரு படுக்கை அறை. சற்று விசாலமாகவே இருந்தது. இரண்டு பேர் படுக்கக்கூடிய தேக்குக் கட்டில் வேலைபாடுகளுடன் கிடத்தப்பட்டிருந்தது. ஓரமாக வைக்கப்பட்டிருந்த இரண்டு தலையணகள் குட் நைட் என்றது.
இதில் படுத்தால் விடிந்தது கூடத்தெரியாமல் தூங்கியபடி அல்லவா இருப்போம்.
தனக்குள் சிரித்துக்கொண்டான். பக்கவாட்டில் கிடந்த இரண்டுபேர் அமரக்கூடிய சோபாவின் விளிம்பில் அமர்ந்தான்.
நான் ஏன் சோபாவின் விளிம்பில் அமரவேண்டும் இங்கு தான் யாரும் இல்லையே!
நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான். கைகளை விரித்துச் சோபாவின் மேல் பகுதி விளிம்பில் வைத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். இறுக்கமான மனத்தைத் தளர்த்த முயற்சிசெய்தான்.
இன்றைக்கு மட்டும் ஏன் இரண்டு வழிகள் தெரிகின்றன? இத்தனை நாளும் அந்த இன்னொரு வழி எங்கே மறைந்திருந்தது?
எதிரில் கிடந்த சொகுசான கட்டிலைப்பார்த்ததும் சிந்தனை மாறியது.
இந்த மாதிரி உடல் சுகங்களை அனுபவிக்கும் பொருட்களை என்றைக்கு நான் வாங்கப்போகிறேன்? வாங்கும் அளவுக்கு வசதி ஏற்பட்டால் முதலில் அம்மாவுக்குத்தான் சொகுசான கட்டில் வாங்கவேண்டும். பாவம் பணாக்கார வீட்டுப் பையனை கல்யாணம் கட்டியிருந்தாலும் இதையெல்லாம் அனுபவித்ததில்லை. அது சரி… இவ்வளவு பெரிய கட்டிலை வாங்கினால் அதை வைப்பதற்கு வீட்டில் அறை இருக்கிறதா? ஓட்டு வீட்டை இடித்து, பெரிய வீடாகக் கட்டிக் கொள்ள வேண்டியது தான்.
மனத்தில் தொடர் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டான்.
சுவற்றில் ஒரு ஃபோட்டோ தொங்கிக்கொண்டிருந்தது. குரூப் போட்டொ! அதில் யார் யார் இருக்கிறார்கள் என்று இயல்பாகவே ஆர்வம் எழ, எழுந்து அதனருகில் சென்றான்.
நடுத்தர வயதுப் பெண்ணும் ஆணும் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, அவர்களைச்சுற்றி மூன்று இளைஞர்களும் ஒரு சிறு வயதுப் பெண்ணும் நின்றுகொண்டிருந்தனர். அந்தப் பெண், சற்று முன் திவாகர் திருநீறு பூசி விட்ட பெண்ணின் முகச்சாயலைக்கொண்டிருந்தாள். நாற்காலியில் அமர்ந்திருந்த நடுத்தர வயது ஆணின் சாயல் ராஜகோபாலை ஒத்திருந்தது.
“நடுவுல நிற்கிறானே… அவன் தான் உன்னோட அப்பன்!” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தான். ராஜகோபாலும், அவருக்குப் பின்னே நடுத்தர வயதுப் பெண்ணொருத்தியும் நின்றுகொண்டிருந்தனர்.
”வயசுப் பிள்ளைல அப்படியே உன்னமாதிரியே இருப்பான்!” என்றவர் கண்களில் கடந்தகால நினைவுகள் வழிந்தன. திவாகர் இன்னும் சற்று நெருங்கிக் கூர்ந்து பார்த்தான். உண்மைதான். அவனைப் போலவே இருந்தார். மற்ற இருவரும் கூட ஏறத்தாழ அதே ஜாடையில் இருந்தார்கள்.
“பக்கத்துல நிக்கிறவனுங்க உன்னோட சித்தப்பனுங்க. அந்தச் சின்னப்பொண்ணு யாரு தெரியுமா? இவதான்” என்று அருகில் நின்றிருந்த நடுத்தர வயதுப் பெண்ணைக் சுட்டிக்காட்டினார். “உன்னோட அத்தை!”.
சோபாவில் அமர்ந்துகொண்டே, “இப்படிப் பக்கத்துல உக்காரு” என்று திவாகரை அழைத்தார் ராஜகோபால். அவர் பக்கத்தில் அமர்ந்ததும் ஒருவிதப் பாதுகாப்பை உணர்ந்தான். எதிரில் கிடந்த கட்டிலில் அத்தை அமர்ந்தார்.
“சின்ன வயசுல உன்னோட அப்பன் எவ்வளவு சுறுசுறுப்பா இருப்பான் தெரியுமா? கொஞ்சநேரங்கூடச் சும்மா இருக்கமாட்டான். ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டுச் செஞ்சுகிட்டெ இருப்பான். நல்லாப் படிச்சான். ஆனா, டிகிரி முடிக்கல” என்றவர் பெருமூச்சுடன் அமைதியாகச் சிலநொடிகளைக் கடத்தி, “நீ என்னப்பா படிக்கிற?” எனக்கேட்டார்.
“பி பி ஏ”
“முத வருசமா?”
”ஆமாங்கய்யா”
“படிப்பை மட்டும் பாதியல விட்டுடாத. இந்தக் காலத்துல படிச்சவனுக்குத்தான் மரியாதை” என்றவர் திவாகரை கூர்ந்துகவனித்தார்.
படிப்பதற்கு பணம் வேண்டுமே.
“காசு பணம் இல்லைன்னு கவலைப்படாதே. நான் உன்ன படிக்க வக்கிறேன்”
திவாகருக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால், அது எப்படி சரியாக வரும்? சாப்பாட்டுக்கு?
“நீ இங்கேயே தங்கிப் படி. கடல் மாதிரி வீடு இருக்கு. உனக்காக ஒரு அறையை ஒதுக்கித்தர்றேன்!”
இவர் எப்படி என் மனத்தைப் படித்துவிடுகிறார்! அம்மாவும் தங்கையும்?
“உன்னோட அம்மாவும் தங்கச்சியும் அந்த ஓட்டு வீட்டுலயே இருந்துக்கட்டும். மாசாமாசம் பணம் அனுப்பறேன். உன் தங்கச்சி படிச்சு முடிஞ்சதும் நல்ல பையனா பாருங்க. கல்யாணச் செலவை நான் பார்த்துக்கறேன்” என்றார்.
“இங்க வந்ததுக்கப்புறம் படிப்புலதான் கவனமா இருக்கணும். கூடப் படிக்கறவனை பார்க்கப்போறேன், அம்மாவை பார்க்கப்போறேன்னு கிளம்பிடக்கூடாது. படிப்பு கெட்டுப்போயிடும். அதையும் சொல்லிடுங்கப்பா” என்று முதல்முறையாக வாயைத் திறந்தார் அத்தை.
“அதெல்லாம் அவனுக்குத் தெரியும்மா. நல்லாப் படிச்சு ‘உசந்த’ இடத்துல கல்யாணம் பண்ணனும்னா அந்த ஏரியாவுக்குப் போகாம இருக்கறதுதானே நல்லது? பய கெட்டிக்காரன். புரிஞ்சுக்குவான்!” என்று திவாகரின் தோளைத் தட்டிக்கொடுத்தார்.
தாத்தா ’உசந்த’ என்ற வார்த்தையை அதிக அழுத்தம் கொடுத்து உச்சரிக்கிறாரோ?
அப்போது அறைக் கதவைத் திறந்து கொண்டு பதினாறு வயது மதிக்கத்தக்க சிறு பெண்ணொருத்தி உள்ளே நுழைந்தாள்.
“இவ யாரு தெரியுமா? அத்த மக! உன்னோட மொறப்பொண்ணு!” என்று கண் சிமிட்டினார்.
அவளை இன்னும் நன்றாகப்பார்த்தான் திவாகர். அழகாக இருந்தாள். உடலைக் கச்சிதமாக வைத்திருந்தாள். இவன் கூர்மையான பார்வையைக் கண்டு நாணமடைந்து அம்மாவின் பின்னே மறைந்து அமர்ந்துகொண்டாள்.
”இவதான் மூத்த பொண்ணு. ரெண்டாவது பொண்ணுக்குத்தான் நீ துண்ணூறு பூசி விட்ட” என்றவர் சிறிது நேர யோசனைக்குப்பின், “உன்னோட ரெண்டு சித்தப்பனுங்களும் ரொம்ப பிஸியா இருக்கானுங்க. தாய் மாமனுங்களாச்சே. அவங்க ரெண்டு பேத்துக்கும் ஆளுக்கு ரெண்டு பொண்ணுங்க. எல்லோரும் ஹால்லதான் இருக்காங்க” என்றவர் சற்று நிறுத்தி ஏதோ நினைவு வந்தவராக, “சரி திவா! மத்தியானம் கறிவிருந்து… இருந்து சாப்பிட்டுட்டுப் போ. வீட்டுக்குப்போய் யோசிச்சு நல்ல முடிவாச் சொல்லுப்பா” என்று கூறியபடி அத்தையிடம் திரும்பி, “திவா போகும்போது தேங்காய் பழம் குடுத்தனுப்பும்மா!” எனக் கூறி எழுந்தார்.
அறையிலிருந்து வெளியே வரும்போது சித்தப்பாக்கள் இருவரையும் வெகு அருகிலேயே பார்க்கநேர்ந்தது. ஆனாலும் அவனிடம் அவர்கள் பேசவில்லை. புன்னகைகூட இல்லை. சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டார்கள். மனதில் பல கேள்விகளும் குழப்பங்களும் சூழ்ந்தன. மதியச் சாப்பாட்டைக் கோழிக்கறி வறுவலும் ஆட்டுகறிக் குழம்பும் மீன் பொரியலும் மணக்க ருசித்துச் சாப்பிடும்போது கூட அதே சிந்தனைக் குழப்பம்தான். ஆனால், பழைய அவைக்கூச்சம் இப்போது இல்லை.
இரவு நிசப்தமாக இருந்தது. அவ்வப்போது எழுந்த இரவுப் பறவைகளின் அலறல் சத்தம்மட்டுமே அமைதியை குலைத்தது.
திவாகருக்குத் தூக்கம்வரவில்லை. காலைமுதல் மாலைவரை நடந்த சம்பவங்களை மீண்டும் மனத்திரையில் ஓடவிட்டான். மதியம் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிவரும் வழியில் சங்கரனைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வந்திருந்தான்.
“நான் நேரடியாகவே விசயத்துக்கு வந்துடறேன். கடையைத் திறக்கற மாதிரி ஐடியா இருக்கா, இல்ல…”
அதற்கு அவன் பதிலேதும் சொல்லாமல் நிற்பதைப்பார்த்து, “ஏன் கேக்குறேன்னா அந்த ஏரியாவுல உங்க கடை மட்டும்தான் இருக்கு. வியாபாரமும் நல்லா இருந்துச்சு. இன்னொருத்தன் புதுசா கடை திறக்கறதுக்குள்ள நீ முந்திக்கணும். கடையை திறக்கறதா இருந்தா சரக்கு சப்ளைபண்றேன். வாராவாரம் பணத்தைக் கட்டிடு. அப்படியே உங்கப்பாவோட கடனையும் சேர்த்துக் கட்டிடு. இத உங்கப்பாவோட முகத்துக்காகச் செய்றேன் தம்பி. அவர் ரொம்ப நாணயஸ்தன். உடம்புக்கு முடியாமப் படுக்கவும்தான் கடனாகிப் போச்சு. மத்தபடி நல்ல மனுசன்.” என்று கூறிவிட்டுத் திவாகரைப்பார்த்தார்.
அவன் இன்னும் பதில் சொல்லத் தயங்கவே, “நீ காலேஜிக்குப் படிக்கப் போறதாக் கேள்விப்பட்டேன். படிக்கணும்னு முடிவெடுத்துட்டா கடனை கட்டறதுக்கு ஒரு மாசம் டைம் தர்றேன். அதுக்குள்ள பணத்தைக கட்டிடு…” என்றார் தீர்மானமாக.
ஒரு மாதத்துக்குள் பணத்தை எப்படிக் கட்டுவது? இங்கே வாழ்க்கையை ஓட்டுவதற்கே வழியில்லை. பேசாமல் தாத்தா சொல்வதைக் கேட்டு நடக்கலாமா? பிரச்சனை தீர்ந்துவிடும்…
”க்கும்…” அறையில் சற்றுத் தள்ளிப் படுத்திருந்த அம்மா செருமினார். அவரருகில் தங்கை நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். “என்னப்பா… தூக்கம் வரலியா?”
“ம்…”
”தாத்தா வீட்டுக்குப் போயிட்டு வந்ததுலேர்ந்து எதுவும் பேசல?”
மவுனமாக இருந்தான்.
“திட்டுனாங்களா?”
“இல்லம்மா” என்று அவசரமாக மறுத்தான். சில நொடிகள் அமைதி நிலவியது.
“அவங்க வீட்டைப் பாத்தியா… எவ்வளவு பெருசு?!” என்று மீண்டும் பேச்சைத் தொடங்கினார். அவருக்குத் தாத்தா வீட்டில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கான முயற்சி தான் இது.
“நீ போயிருக்கியாம்மா?”
“ஒரு தடவ அப்பாவும் நானும் அந்த ரோட்டு வழியா போறப்ப காண்பிச்சாரு. சும்மாவா… கம்பெனி வச்சு நடத்துறாங்கப்பா. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது!”
”என்ன கம்பெனிம்மா?”
“என்னவோ ரெடிமேடு துணிங்கள்லாம் தச்சு விக்கிறாங்களாம்பா. ஏகப்பட்ட சொத்து. அத ஆளறதுக்குத்தான் ஆண் வாரிசு இல்லாமப் போச்சு. உன் சித்தப்பனுங்களுக்கு பொறந்தது ரெண்டும் பொண்ணுங்க! பார்த்திருப்பியே.”
அவனுக்கு ஏதோ ஒன்று புரிந்ததுபோல் தோன்றியது.
அம்மாவிடம் ஒரு கேள்வி கேட்டால் தாத்தா வீட்டில் என்ன நடந்தது என்பதை அம்மா புரிந்துகொள்வார்.
“உன்னை விட்டுட்டுத் தனியா வான்னு அப்பாவை தாத்தா கூப்பிட்டிருந்தா, போயிருப்பாராம்மா?”
சட்டென்று எழுந்து அமர்ந்த செந்தமிழ்ச்செல்வி, “ஆமாப்பா… அப்படியும் நடந்துச்சு. நீ பொறந்து ரெண்டு வருசம் இருக்கும்.. ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்ப மளிகைக் கடையெல்லாம் வைக்கல. கடலைக் கம்பெனிக்கு வேலைக்குப் போனாரு. கம்பெனி முதலாளிக்கு நஷ்டமாகி இழுத்து மூடிட்டார். அப்ப சோத்துக்கே வழியில்லாம இருந்துச்சு. இதக் கேள்விப்பட்டு உங்க தாத்தா அவரைத் தனியாச் சந்திச்சு என்னை விட்டுட்டு வந்துடுன்னாரு. ஒரு தொகையைக் குடுத்து என்னை வெட்டி விடலாம்னாரு. ஆனா, அவர் போகல. இதப்பத்தி அன்னைக்கு என்கிட்ட சொல்லவே இல்ல. ரொம்ப நாள் கழிச்சுச் சொன்னாரு”
அவர் குரலில் ஒரு விதமான பெருமை கலந்த மகிழ்ச்சி இழையோடியது. கஷ்ட ஜீவனத்தில் கூடத் தன் காதல் கணவர் தனக்கு முழு ஆதரவு அளித்திருக்கிறார் என்ற கர்வம் வழிந்தோடியது.
பிரிக்கும் வேலையை அப்போதே செய்திருக்கிறார் தாத்தா. தன் சுயநலத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் போலும். .
அப்பாவின் அன்றைய மனநிலையில்தான் நானும் இன்று இருக்கிறேன். நான் குழம்புவது போல் அன்று அவர் குழம்பியிருப்பாரா? தாத்தாவிடம் பதிலை உடனே சொல்லி விட்டதாகத்தான் அம்மா சொல்கிறார்.
அவர் சூழ்நிலை வேறு. உன் சூழ்நிலை வேறு. அவர் தன் காதல் மனைவியை விட்டுப் பிரியமுடியாது. ஆனால், உன்னால் அம்மாவை விட்டுப் பிரியமுடியும். தாத்தாவிடம் சென்றால் உன் பொருளாதார நிலைமை சீர்படும். அம்மாவுக்கும் தங்கைக்கும் செலவுக்குப் பணம் கிடைக்கும். உனக்கு டிகிரி கிடைக்கும்.
ஆனால், அவர்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா? சிறிது நாட்கள் கொடுப்பது போல் கொடுத்து விட்டுத் திடீரென்று நிறுத்திவிட்டால்?
மாட்டார்கள். ஏனென்றால் அதன் பிறகு நீயும் விலகி வந்து விடுவாயே.
அங்கே கிடைக்கும் சொகுசான வாழ்க்கைக்கு நான் அடிமையாகிவிட்டால், அம்மாவுக்கும் தங்கைக்கும் பணம் போய் சேர்கிறதா என்று கவனிக்காமல் இருந்துவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறதல்லவா?
அது உன் மன உறுதியைப் பொறுத்தது.
சரி. தாத்தா வீட்டுக்குப் போய் விடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அங்கே சித்தாப்பாக்கள் என்னை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்வார்களா?
………………………..!
தாத்தாவுக்கு மட்டும்தான் நான் அங்கே வருவது பிடித்திருக்கிறது. அத்தையும் உடன்படுகிறார். அதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள்.
கட்டுபாடு என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. நீயும் சில கண்டிஷன்கள் போடு! ஏனென்றால் இது ஒரு வியாபாரம் மாதிரி. நீ ஒரு இணையற்ற பொருள். உனக்கு மாற்று யாரும் கிடையாது. அதனால் அவர்கள் உன் கண்டிஷன்களுக்கு ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
வசதி வாய்ப்பை மட்டும் வைத்து இந்தப் பிரச்சனையை அணுகக் கூடாது. வீட்டில் ஆண் துணை இல்லையென்றால் என் தங்கையின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிடுமே!
………………………………!
நான் அங்கே சென்ற பிறகு நாலு பேர் நாலுவிதமாகப் பேசத்தானே செய்வார்கள். இவன் பணத்துக்காக பெற்ற தாயையே விட்டுப்பிரிந்தவன் என்றுதானே திட்டுவார்கள்.
……………………………….!
அங்கே சென்ற பிறகு அத்தை மகளை திருமணம் செய்து கொண்டாலும் ஏறத்தாழ அடிமை வாழ்க்கை வாழும் சூழ்நிலைதானே ஏற்படும்.
……………………………!
யோசித்து யோசித்து மூளை குழம்பியது. மனம் அதைச்சுற்றியே உழன்று கிறுகிறுத்துச் சோர்வடைந்து ஒரு கட்டத்தில் தூங்கிப்போனான்.
மறுநாள் காலை ஏழு மணி.
அம்மாதான் எழுப்பி விட்டார். இரவு வெகு நேரம் தூங்காததால் கண்கள் எரிந்தன. தாத்தாவின் சொல்படி கேள் என்ற குரல் பலவீனமாகி இருந்தது. இருந்தாலும் அதன் விஸ்தாரமான வீச்சு இன்னும் சரியான முடிவை எடுக்க முடியாமல் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது.
காலைக் கடமைகளை முடித்து, தேநீருக்காகக் காத்திருந்தான். அம்மா பால் கொண்டுவந்து கொடுத்தார்.
“சித்தி சீம்பால் குடுத்து விட்டாப்பா. நாலு நாளைக்கு அந்தப் பால்தானே!”
வாங்கிக் குடித்தான்.
கட்டி கட்டியாகக் கெட்டியாக அதிக மஞ்சள் தன்மையுடன் நாக்கில் ஒட்டியது. குடித்து முடித்ததும் ஏதோ ஒரு உணர்வு அவனைத் தாலாட்டியது. கண்ணுக்குத் தெரியாத ஒரு பிணைப்பு தனக்கும் அம்மாவுக்கும் இடையில் இறுக்கமாகச் சுற்றி இருப்பதுபோல் உணர்ந்தான். இந்தப் பிணைப்பு கடவுளால் கூடப்பிரிக்க முடியாத ஒன்று. மனத்துக்குள் பலவீனமாக ஒலித்துக் கொண்டிருந்த குரல் இப்போது முற்றிலும் காணாமல் போயிருந்தது.
காலை டிபனை முடித்துவிட்டுச் சைக்கிளைத் துடைத்துத் தயார்செய்தான். மத்தியானம் கடையை சுத்தம் செய்யவேண்டும்.
வாசலில் அம்மா நின்றிருந்தார். ”எங்கப்பா பொறப்பட்ட?”
“சங்கரன் மளிகை கடைக்குப் போறேம்மா… நாளைக்கு கடைய தொறக்கணும்ல”