இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

அயல்வாசி – கே.முகம்மது ரியாஸ்

சிறுகதை | வாசகசாலை

[1]

ப்ளோரஸ் தீவின் கருமையான இரவு அது. வடக்குப் பக்கம் நின்ற கூனன் பாறை கலங்கரை சுழல் விளக்கு நாற்புரமாக சுழன்றுக்கொண்டிருந்தது. அதன் முதல் ஒளிக்கீற்று செங்குத்தாக கடலில்தான் போய் விழுந்தது. பின்பு கூனன் பாறைக்கு கிழக்கே கடலோடு ஒட்டியிருந்த தேவாலய சிலுவையின் மீது, பின்னர் கூனன்பாறைக்கு மேலே பொடிநடையாய் ஏறினால் பவளப்பாறை வந்துவிடும். அதன் டச்சு காலத்தில் கொல்லப்பட்ட ஏராளமான ப்ளோரஸ் தீவு மீனவர்களின் கல்லறைத் தோட்டம் இருக்கிறது. கல்லறைத் தோட்டத்தில் இருந்து கீழே குதித்தால் தீவின் ஆறும் கடலுமாய் சங்கமிக்கும் கழிமுகத்துவாரம் உண்டு. அதன்  தூரத்தில் கடல் அலை புரளும் அலைகளுக்கு மத்தியில் திமிங்கல தோடிகள் கட்டுமரங்களில் அமர்ந்து தன் மூதாதையர்களின் ‘தவ் பட்டா’ பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள். வெற்றியின் களிப்பு கீதங்கள் அவை. தூரத்தில் வேட்டையாடப்பட்ட திமிங்கலத்தின் இரத்த கவுச்சி தெற்கு கரையிலிருந்து அவர்களை நோக்கி வந்தடைந்திருந்தது. இந்த இருளிலும் அவர்கள் வேட்டையாடிய திமிங்கலம் அவர்களுடன் சேர்ந்து நடனமாடுவதாக அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

 அவர்களின் பாடல்களுக்கு தனக்கும் சம்மந்தமில்லாதது போல் கரையில் மிதந்துக்கொண்டிருந்த ஒற்றைப் படகில் அன்னா அமர்ந்திருந்தாள். தோடிகளின் பாடல்கள் கூன்முதுகுடைய திமிங்கலம் ஆழ்கடலுக்குள் எழுப்பும் முனகலைப் போல் அவளுக்கு இருந்தது. அப்பாடல் தன் காதலன் மாப்பசாங்கை அவளுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டிகொண்டிருந்தது. வெற்று மேனியாக மாப்பசாங் இடுப்பில் சாரங்கும், வாயில் சுருட்டும், கழுத்து நிறைய ஆபரணங்களுடன் தோன்றினான். அவன் கையில் திமிங்கலத்தின் இதயத்தை நோக்கி ஏவப்படும் எறி உளி இருந்தது. கருமையான கடலின் தூரத்தில் ஒரு வெள்ளை வாள் சுறா தோன்றியது பின்பு அலைகளாக உருமாறி ஒரு கடல் தேவன் ஒருவன் காட்சியளித்தான். அன்னா படகில் இருந்து குதித்தாள். மாப்பசாங்கை துரத்த ஆரம்பித்தாள். அவளுக்கு முன்பாக மாப்பாசாங் கடலுக்குள் ஓட ஆரம்பித்தான். மாப்பசாங்கிற்கு முன்பாக கடல்தேவன் மீண்டும் வாள் சுறாவாக உருமாறி கடலுக்குள் பாய்ந்தான். கடல் இரண்டாகப் பிளந்தது. மாப்பசாங் தன் உளியை சுறாவின் மீது எறிந்தான். சுறா துடிதுடித்தது. அனபெல்லாவுக்கு கடல் மொத்தமும் உடைந்து மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது போல் இருந்தது. இப்போது கலங்கரை விளக்கின் ஒளிக்கீற்று பவளப்பாறையின் உச்சத்தில் அடக்கப்பட்டிருந்த மாப்பசாங்கின் கல்லறை ஊன்ற சிலுவை மீது போய் விழுந்தது.

 தன்னை போல் ஏமாற்றிய கடல் தேவன் மீது அன்னாவுக்கு ஆத்திரமாக இருந்தது. அன்னா கடல் தேவனின் கைகளைப் பிடித்தவாறு அளவில்லா மீன் மச்சங்களை தங்கள் தீவு வாசிகளுக்கு அருளவேண்டும்  என்று மன்றாடினாள். இப்படி ஒவ்வொரு நாளும் மீன் சந்தையிலிருந்து திரும்பும் வழியில் ஒற்றை படகில் அமர்ந்து கடலை சபிப்பாள். பின்பு கடலை மாப்பசாங்காக உருவகித்து கடலோடு மோகங்கொள்வாள். உடைந்து திரண்டு எழும் வெள்ளிஅலைகளை மாப்பசாங்கின் வலிமிகு புஜங்களாக நினைத்து கட்டிதழுவுவாள். கடலும் தன்னால் இயன்ற அளவு நீண்ட இரு கைகளை திரட்டி அன்னாவை ஒரு நீண்ட சுழலுக்குள் தள்ளி முயன்றவரை அவளோடு புணர்ந்திருக்கிறது. அவளும் முடிந்த வரை ஒரு ஈற்றுக்கு ஆயிரக்கணக்கான திமிங்கில குஞ்சுகளை பிரசவித்திருக்கிறாள். கடல் தேவனின் சபித்த கைகள் தான் அவள் மீது கருணையின் பாலை சுரக்க செய்தது.

   கரைக்கு திரும்பி தன் மீன்கூடையில் இருந்த கைக்குட்டையை எடுத்துப் பார்த்தாள். அதில் வரையப்பட்ட திமிங்கல தோடியின் உருவம் மாப்பாசாங்கை ஒத்திருந்தது. அவள் நினைத்தால் மீண்டும் கடலுக்குள் மூழ்கி தென்சீன கடலின் அடியாழத்தில் வசிக்கும் திமிங்கில கூட்டத்திற்கு நடுவே சஞ்சாரிக்க இயலும். அவளுக்கு நிகழ்காலம் இருக்கிறது. அது அவளுக்கு மாப்பசாங் வழியாகவும் மூன்று குழந்தைகளை தந்திருந்தது. அன்னாவின் புட்டத்தை இருக்கி கட்டியிருந்த ஈர பத்திக் சாரத்தின் ஒட்டியிருந்த கடல் மணலை தட்டி விட்டு தன் குடிசை நோக்கி இருக்கும் திசை பார்த்து நடக்க ஆரம்பித்தாள். கடல் அவளை விட்டும் விலகி நின்றது. காலையில் தேவாலயத்தில் எழுதிய கவிதையை அவள் வாய் முணுமுணுத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

 ‘…எந்த கடற்கரையில்

இரவு குளிரில்

அல்லாடும் ஒற்றை படகு

இல்லை ?

எந்த மரத்தில் தனிமையின்

பறவை அமரவில்லை ?

எந்த வனத்தில் பிரிவுற்ற

புல்லாங்குழலைத் தேடி

மூங்கில் அழவில்லை ?…’

[2]


   அதிகாலை திமிங்கில வேட்டைக்கு மீனவர்களின் படகுகள் கடலுக்குள் சென்றவுடன், தீவின் எல்லா பெண்களையும் போல அன்னா தனது வழக்கமான வேலையைத் தொடங்குவாள். அவளின் வழமையான பணிகள் யாவும் எளிதில் முடிக்க கூடிய ஒன்றுதான். அவள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை விறகு சேகரிப்பதற்காக கண்டல் காடுகளுக்குள் செல்வாள். திரும்பும் வழியில் அவளது குழந்தைகளின் நினைவு வரவே பாதையில் உதிர்ந்து கிடக்கும் நாவல் பழங்களை பொறுக்கி தன் இடுப்பு சாரத்திற்குள் முடிந்துக் கொள்வாள். பாடசாலையிலிருந்து பசியுடன் திரும்பும் தன் குழந்தைகளுக்காக அரிசி சோறு உலை போட்டபின் பாறையின் பக்கத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவலாயத்தின் அமைந்திருக்கும் பாடசாலைக்கு சென்று கற்பித்து தருவாள்.

 இன்னும் நடவு காலமோ அல்லது அறுவடை காலமோ ப்ளோரஸ் தீவுக்கு வந்தடையவில்லை. ஆனால், ஒக்டோபர் மாதத்தின் மாலை கருக்கலில் சாலமன் தீவு வழியாக செந்நாரை கூட்டங்களும் சிறவிகளும் தீவை வட்டம் அடித்து தங்கள் கூடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தன. இந்நாட்களில் அன்னாவுக்கு பெரிதாக வேலை இல்லைதான். எனினும் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நத்தார் திருவிழாவுக்கான வசந்தம் கடலில் மிதக்கும் கட்டுமரங்களைத் தாண்டி தன் வாசலைத் தழுவும் ஈரத்தின் குளிர்ச்சி அவள் நெஞ்சுக்குள் நிழலாடியது.

     தன் மீன் கூடையை எடுத்துக்கொண்டு தென்னந்தட்டில் அடைக்கப்பட்ட குடிலை அடைத்து விட்டு கூனன் பாறை வழியாக தென்னை பாக்கு மற்றும் வாதுமை மரங்கள் நிறைந்த தோட்டத்திற்கு செல்வாள். அவள் வனப்பு மிகுந்த மேற்சட்டை பிதுக்கி நிற்கும் மார்புக்கு நடுவே வரும் வழியில் கொய்த மலர்களை அள்ளி சூடுவாள். மரங்களின் நிழலில் கீழாக ஒரு விரிப்பில் அமர்ந்து அவள் மிகவும் புனிதமாகக் கருதும் நெசவு பணியைத் தொடங்குவாள். நெசவு ப்ளோரஸ் தீவின் தனி அடையாளம். அங்கு ஒரு பெண் குழந்தை நெசவு ஊசியுடனும் ஆண்குழந்தை எறி உளியுடனும் பிறக்கின்றன என்று சுகர்னோ எழுதிய கடிதம் இன்னும் ப்ளோரஸ் தீவு அருங்காட்சியகத்தில் இருக்கின்றது.

  இன்னும் சிலமாதங்களில் வர இருக்கும் நத்தார் தினத்தன்று அணிய வேண்டிய அழகு வேலைப்பாடுகளும் கலைநயமும் கூடிய பத்திக் துணிகளை அவள் நெசவு செய்ய ஆரம்பித்தாள். மரங்களின் இலைகளின் வடிந்து கொண்டிருந்த குளிர்ந்த கடல் காற்றை அவளது வனப்பான மார்பின் நுரையீரல் சுவாசித்த ஒலியை அவளுடைய காதுகள் ஒருபோதும் உணரவில்லை. காற்றின் ஒலி தானாகவே அவளது கைகளை நெசவு சட்டகத்திற்குள் இழுக்கும்போது தானாகவே நகர்த்தியது. அவளது மிருதுவான கைகள் நூலை உள்ளேயும் வெளியேயும் தறிக்குள் இழுத்தன. தறி தன்னிச்சையாக நகர்வதில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியே. அவளுடைய ஆன்மா அலைகளின் இரைச்சலுடன் வடிந்து கொண்டிருந்த அவளது மகிழ்ச்சி கடலுக்குள் ஒரு நதியென மூழ்கிக்கொண்டிருந்தது.

      திமிங்கில வேட்டைக்கு படகுகள் கடலுக்குச் செல்லும் நாட்களில் அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுண்டு. கடலுக்குள் செல்லும் தன் காதலன் மாப்பசாங் புதையலை போல அள்ளி வரும் திமிங்கிலத்தின் மாமிசத்தை துண்டு துண்டாக வெட்டி உலர்த்தி சந்தையில் விற்று வரும் செல்வத்தில் அவளது மகிழ்ச்சியே புதைந்து கிடந்தது. அந்த உணர்வை அவளுக்கு அவன் கொடுத்திருந்தான். பாக்கு மரங்களின் நிழலில் தோழியுடன் தலைவனின் பிரிவை எண்ணி வாடிக்கொண்டிருக்கும் வேளையில் மாப்பசாங் பல நாட்கள் கடலுக்குள் தங்கிவிட்டு அவளது நினைவாக திமிங்கிலங்களையும் சுறாமீன்களையும் வேட்டையாடி ஆரவாரத்துடன் கரை திரும்புவதும் , பின்பு மீனின் மாமிச செதில்களை வெட்டி தனது ஊர் வாசிகளுடன் வாஞ்சையுடன் பங்கிட்டு உண்ணுவதால் மாப்பசாங் ஒரு மகத்தான வீரனாக இன்றளவும் தீவு வாசிகளால் நினைவூட்டப்படுகிறான். அவனது கல்லறை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுபதினங்களில் நினைவுக்கொள்ளப்படுகின்ற காரணம் அவன் தீவின் மீது கொண்ட கருணைதான். கரைக்கு வந்து சேரும் திமிங்கிலத்திற்கு தரகர்கள் விலையைக் குறைத்தபோது அரசாங்கத்துடன் மோதி சிறை சென்று திரும்பியதும் அவன்தான்.

  இச்சிறிய தீவில் அன்னாவின் மூன்று குழந்தைகள் உட்பட சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சிக்குரியவர்களாகவே இருந்தார்கள். தினமும் காலையில் அவர்கள் தேவாலயத்தின் பின்புறம் இருக்கும் பாடசாலை செல்வார்கள். பிற்பகல் வீடு திரும்பி வெண் முற்றத்தில் பாக்கு மற்றும் தேவாலய மெழுகுவர்த்திகளுடன் விளையாடுவார்கள் சில நேரம் கூனன் பாறை மேலே இருக்கும் மலைக்குச் செல்வார்கள். வறண்ட காலத்தில் வெப்பத்தால் மலையின் மரங்களை விழுங்கும். நின்ற நிலையிலேயே எரிந்த கெசாம்பி மரங்களிலிருந்து கரி துண்டுகளை சேகரிப்பார்கள்.

  ப்ளோரஸ் தீவின் வறண்ட மலைகளில் ஏறும் போது அவர்கள் எப்போதும் கடலைப் பார்த்து, தொலைதூர அடிவானத்தில் புள்ளிகளைத் தேடுவார்கள். கண்ணால் பார்க்க முடிந்தவரை அடிவானத்தில் தனியாக மிதக்கும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட புள்ளி இருப்பதைக் கண்டால், அவர்கள் மேலேயும் கீழேயும் குதித்து மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவார்கள்

’..ஆயா.. அது தான் என் தந்தை .. ஓ ஆயா..‘  நம் தந்தை கவனத்துடன் கடலை கண்கானித்து வருகிறார். அவர் தனது இதயத்தை கூர்மையான செவிப்புலன் கொண்ட காதுகளுடன் கடலுக்குள் இறக்கியிருக்கிறார். அவரின் இதயம் சாதரண ஒரு சதைத் துண்டல்ல. அது கடலின் அடியாழம் வரை திமிங்கிலத்தின் அதிர்வை துழாவிப் பார்க்கும் . தந்தையின் வலிமையான புஜங்கள் அவற்றில் சுற்றிக்கட்டப்பட்ட கயிறுகளுடன் ஒரு வேட்டைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அவரின் இதயம் இப்போது தூண்டிலில் கட்டப்பட்ட தக்கையைப் போல் இந்தத் தீவில் இதுவரை யாராலும் பிடிக்கப்படாத வேரொறு திமிங்கிலத்தை வேட்டையாட காத்திருக்கிறது. ‘உர்ரக்ஹூ’ என்று மகிழ்ச்சியுடன் என் தந்தை கடலுக்குள் பாய்கிறார். அவர் கண்களில் குறி தப்பாது வேட்டையாடும் கூர்மையான அம்பின் முனையில் கொளுத்தப்பட்ட நெருப்பின் சுவாலை இருக்கிறது.  

   அவர்களின் தந்தை ஒரு துணிச்சலான திமிங்கில தோடி என்று அவர்களுக்கு தீவுவாசிகளால் சொல்லப்பட்டது. அவர்தான் தனது ஈட்டியை திமிங்கிலத்தின் பக்கவாட்டில் வீசினார். ஈட்டி மீன்செதில்களில் மிகச் சரியாக தைத்துவிட்டது .இனி எங்கும் செல்லமுடியாது. குருதி சிந்திய வண்ணம் தன் உயிர் பிரியும் வரை கடல் பரப்பில் எங்கள் தந்தை போட்ட அடவுக்குள் சுற்ற வேண்டியதுதான். பின்னர் ஈட்டியுடன் இணைக்கப்பட்ட பலகை வழியே நடந்து ஊடாடிக் கொண்டிருக்கும் திமிங்கிலத்தின் திமிலைத் தழுவி தன் உளியால் மீனின் இதயத்திற்குள் ஆழமாக காயப்படுத்தி அவரால் மட்டுமே அதனை வீழ்த்தவும் முடியும். திமிங்கிலம் பயந்து படகை பின்னால் கடலுக்குள் இழுத்து நீந்திச் சென்றது. மீண்டும் திமிங்கலத்தின் மீதேறி  காயப்பட்டு மாண்டுப்போன திமிங்கிலத்தை கரைக்கு நடத்திச் செல்லும் வலிமையும் என் தந்தை மாப்பசாங்கிற்கு மட்டுமே உண்டு. மாப்பசாங் – அன்னா புதல்வர்களின் சம்பாஷனைகள்.. பேரின்பத்தின் ஒரு பகுதி அவை.

   எப்போதும் வேட்டயாடிய திமிங்கிலங்களுடன் கரைக்குத் திரும்பும் மாப்பசாங் – தங்கள் தந்தையின் துணிச்சலைப் பற்றி ஏராளமான கதைகளைக் கேட்டிருந்த நேரம்.. ஒருநாள் மாப்பசாங் கரைக்கு திரும்பியபோது அவன் சடலமாக இருந்தான். திமிங்கலத்தின் வால் நிகழ்த்திய தாக்குதலில் இதுவரை யாரும் பிழைத்தது கூட இல்லை. மாப்பசாங் திமிங்கிலத்திடம் மாண்டுப்போனான். அன்னா பித்துப்பிடித்தவளை போல் தீவுக்குள் திரிய ஆரம்பித்தாள். அவனது பிள்ளைகள் தந்தையை கொன்ற திமிங்கிலத்தை தேடிப் பிடித்து கருவறுப்போம் என்று சூளுரைத்தார்கள். மாப்பாசாங்கின் வண்ணமயமான மலர்களால் மாப்பாசாங்கின் இறுதி ஊர்வலம் தயரானது. தீவின் பல பகுதிகளில் இருந்தும்  அவனுக்காக பல மலர்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. மாப்பசாங் ஒரு மகத்தான வீரன் என்பதால் பவள மலை உச்சி கல்லறைக்கு எடுத்து செல்ல முடிவானது. கூனன் பாறை வழியாக அவனது பிரேதம் எடுத்துச் செல்லும் வழியில் அன்னா புரண்டு அழுதாள். மாப்பசாங் தான் ஒருவேளை கடலுக்குள் இறந்தால் தன் உடலை கல்லைக் கட்டி கடலிலே இறக்கவேண்டும் என்று அன்னாவிடம் முன்பு கூறியதை அவள் மீண்டும் கூறி புலம்பினாள். அவள் எவ்வளவு கூறியும், தீவுவாசிகளோ அல்லது தேவாலய திருச்சபையோ கடலில் கல்லைக் கட்டி இறக்கும் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, கடல் மாவீரன் திமிங்கில தோடியை கடலுக்குள் இறக்காமல் கல்லறைக்குள் புதைத்து விட்டு எல்லோரும் திரும்பினார்கள். அன்றைய இரவு பெரும் சூறாவளி தீவைத் தாக்கியது . படகுகள், தென்னை மரங்கள் பலவற்றை புயல் தீவுக்குள் முறித்துப்போட்டது.

   அன்னா தினமும் இன்று காலையில் உங்கள் தந்தை மாப்பசாங் இன்று கரை திரும்பக்கூடும்; கர்த்தரை போல் அவரும் மீண்டும் எழுந்து வருவார்; கரையில் போய் நில்லுங்கள் என்று கூறுவதை தாங்க முடியாமல் அன்னாவின் புதல்வர்கள் தேவாலய பாதிரியிடம் போய் மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவை தாங்கள்தான் காப்பற்ற வேண்டும் என்று கூறினார்கள். அவரும் வீட்டிற்கு வந்து புனித நீரை ஊற்றி ஆன்மாவை சுத்தப்படுத்தியதாக கூறினார். அன்னா இப்போதெல்லாம் நள்ளிரவில் நெசவுத் தறியுடன் பவளப்பாறை தீவு கல்லறைக்குச் சென்றாள்.விடிய விடிய அவளது விரல்கள் நெசவில் திளைக்க ஆரம்பித்தன. நீண்ட துணிகளுடன் அதிகாலை வீட்டுக்கு திரும்புவாள்.

 இப்போது கலங்கரை விளக்கு ஒரு சுழற்று சுழற்றி பவளப்பாறைக்குள் உச்சியில் விழுந்து, அடுத்ததாக தேவாலய வளாகத்திற்குள் ஒளிக்கீற்று போய் விழுந்தது. உள்வளாக பிரார்த்தனை மேசைகளுக்கு நடுவே போரில் பிழைத்து, பின்பு கடலிலும் பிழைத்த சாவை வென்ற பருவ வயது பொடியன் நித்திலன் நிம்மதியாக படுத்துறங்கிக் கொண்டிருந்தான். அவன் மீது அன்னா நெசவு செய்த ஒரு போர்வை கிடந்தது.

[3]

    நித்திலன் வாரம் ஒருமுறை ப்ளோரஸ் தீவின் உள்ளூர் காவல் நிலையத்தில் அகதிகள் முறைப்பாடுக்காக செல்ல வேண்டியதிருந்தது. அவனுக்காக அன்னா பவளப்பாறையின் பின்னால் இருக்கும் மாந்தோட்டத்தில் தினமும் காத்திருப்பது வழக்கம். இம்முறை மாந்தோட்டத்திற்கு கீழே மஞ்சள் பூ சூடியவளாக அன்னா நின்று கொண்டிருந்தாள். மிகப்பெரிய மலரை குடையாக அவள் பிடித்துக்கொண்டு மரத்தின் நிழலில் நிற்பது போல் நித்திலனுக்கும் தோன்றியது. தீவில் விசித்திரமான மனிதர்கள் உண்டு. இப்போது தான் விசித்திரமான மலர்களை அவன் பார்க்கிறான். தீவு வாசிகளைப் போல நீண்ட கழுத்துடைய பூக்கொன்றைகள் அவளது இடுப்பில் இருந்த கூடையை நிறைத்திருந்தன. அப்போதுதான் அவன் காலை காட்டில் பிடுங்கிய மரவள்ளிக் கிழங்கை சந்தையில் விற்றுவிட்டு கடற்கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.  வாழ்வாதாரத்திற்காக காட்டில் கிழங்குகளை பிடுங்கி வியாபாரம் செய்யவும், கழிதுவாரத்தில் தூண்டிலிட்டு சிறிய மீன்களை பிடித்து சந்தையில் விற்பனை செய்யவும் அவனுக்கு அரசாங்கம் விஷேட அகதி அனுமதி பாரம் தந்திருந்தது.

 நான்கைந்து பயிற்சி முகாம்கள், ஏழு சிறிய போர்கள், ஒரு வங்கி தாக்குதல் என்று சிறிய போராட்ட பிண்ணனி கொண்ட போராளிதான் நித்திலன். அவனை இறுதியாக அவனது அம்மா செட்டிக்குளம் திறந்தவெளி சிறைச்சாலையில் சந்திக்க வந்த நாளை மறந்திருக்க மாட்டான். கடுமையான வருத்தம் கொண்டவளுக்கு பலகட்ட போரட்டத்திற்குப் பிறகு அவளது மகனை பார்க்க ராணுவம் அனுமதி தந்திருந்தது. முழங்கால் வலி தாங்கமுடியாமல் அவளால் நிற்ககூட முடியவில்லை. பல போராட்டங்களை கண்டவன்.. அம்மாவை அப்படி அவனால் பார்க்க்கமுடியவில்லை. அவனது பல கத்தலுக்குப் பிறகு ஒரு ஆமிக்காரன் கதிரையை எடுத்து வந்தான்.

’அம்மா ஏன் இங்கெல்லாம் வருகிறாய்.. ?’

‘மகனே உன்னை நினைக்காத நாள் இல்லை, நாங்கள் இருந்த வரை எங்கள் பேச்சை ஒரு போதும் நீ கேட்டதில்லை. இயக்கம் போராட்டம் என்று வாழ்வு இப்படியே மடிந்து விடும் போல் தெரிகிறது .நம் வம்சம் பிழைக்க வேண்டும். ஏதாவது ஒரு வழியை பார்’ என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தாள். இருவரும் பேசுவதை காவலுக்கு நின்ற ஆர்மிகாரன் கவனமாக கேட்டுக் கொண்டிருந்ததாலன். நித்திலனின் அம்மா கையை பிடித்துக்கொண்டு அழுதாள். ஒருவரை ஒருவர் இன்னொரு முறை பார்ப்பது இனி கடினம்தான் என்பதை அவர்கள் வெளிப்படுத்திய உரையாடலில் சொற்கள் கூழாங்கற்களாக மாறிக்கொண்டிடுந்தன. இறுதியாக அவள் விடை பெறும் நேரம் ‘எப்படியாவது பிழைத்துக்கொள்வாய் பிள்ளாய்..’ அவசர காலத்தில் தங்கள் வீடுகளில் பயன்பாட்டில் இருக்கும் சங்கேத வார்த்தைகளில் ஒன்றான ‘படகு’ என்பதைச் சொல்லிவிட்டுப் போனாள். அதுதான் அவன் கடைசியாக அம்மாவை பார்த்த நாளும் கூட.

 அவள் பிரார்த்தனை வீண்போகவில்லை போலே ‘படகு’ – அகதி முகாமிலிருந்து கைதிகளை மாற்றும்போது ஓட்டம் பிடித்தான். அவனுக்கு முன்பாக அம்மாவின் பிரார்த்தனை அவனை கெட்டியாக பிடித்து ஓடிக்கொண்டிருந்தது. அம்மா ஒரு ஏஜண்ட் மூலமாக காசு அனுப்பினாள். ஆனால், அவன் பயணித்த படகு கிறிஸ்துமஸ் தீவுக்குச் செல்லும் வழியில் பாதை மாறிவிட்டது . உண்மையில் அவன் படகு மட்டும் புயலில் சிக்காமல் இருந்திருந்தால் இந்த தீவை அவன் அடைந்திருக்கப் போவதில்லை. ஏதோ ஒரு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளுக்கான உரிமயை விண்ணப்பிக்க நீண்ட வரிசையில் நின்றிருக்க கூடும். அவன் வாழ்நாளில் செய்த தவறு சமர் புரிந்தது அல்ல. அன்னா போன்ற பெண்களை வாழ்வில் சந்திப்பது. போராளிகள் தவிர்க்க வேண்டிய இடமும் கூட.

   கடலுக்கும் பவள மலைக்கும் நடுவில் வகிடு பிரிந்து நின்ற இடத்தில் இப்போது நித்திலனும் அன்னாவும் நின்று கொண்டிருந்தார்கள். அம்மா கூறிய வம்சவிருட்சம் ஏதோ ஒரு அந்நிய நிலத்தின் பூக்கப்போவதாய் அவனுக்குள் சில்லிடும் காதல் உணர்வு அன்னாவைப் பார்க்கும் போதெல்லாம் மேலிட்டது.

   அன்னா சூடியிருக்கும் மலரைப்போல் ஒரு மலரை இதுவரை நித்திலன் தன் வாழ்நாளில் கண்டதில்லை. இவ்வளவு அழகான மலரை யாருக்குதான் விட்டு வைக்க மனம் இருக்கும் ? அன்னா அவர்களின் பாரம்பரிய உடையான அழகிய பத்திக் கலை வேலைப்பாடு கொண்ட கீழ் இடுப்பு சாரத்தை அணிந்திருந்தாள். அழகிய வெள்ளைப் பூக்களிட்ட மேல்சட்டைக்கும் கீழ் சாரத்திற்கும் நடுவே ஒரு சிவப்பு இடுப்பு பட்டி அணிந்திருந்தாள் . முன்புறமாக முடியை கத்தரித்து சிவப்பு மையால் தன் உதடுகளை திருத்தம் செய்திருந்தாள். அவள் உதடுகள் உதிர்க்கும் ஒவ்வொரு செந்நிற சொற்களுக்கும் அவளது கருமையான கண்கள் உருண்டும் மேலும் கீழும் ஒத்திசைந்தது. அன்னா தேவாலயத்திலும் கண்டல் காடுகளிலும் பவளப் பாறையிலும் தனிமையான நெசவு தறியிலும் மாப்பாசாங்கின் நினைவுகளையே பின்னுபவள்; நித்திலனுக்காக அவள் துணிந்திருப்பது தீவில் யார் அறிந்தாலும் அவர்களுக்கு வியப்பளிக்ககூடும். நித்திலனுக்கு தன் முன்னோர்களின் சமாதியில் பூத்திருந்த மலர்களை எடுத்து வந்திருந்தாள். இருவரின் திருமணத்திற்காக அவர்களின் சம்மதக் குறியீடு மலர்களை தேவாலயத்தில் தர இருப்பதாக நித்திலனிடம் கூறினாள். அவனுக்கு தலை கால் புரியவில்லை. பதினெட்டு வயதுக்கே உரிய காமமும் காதலும் அன்னாவைப் பார்க்கும் நெரமெல்லாம் அவனது அரும்பு மீசைகளில் வியர்வை மொட்டவிழ்ந்தன.

  அன்னாவை நித்திலன் முதன்முதலில் கண்டது ப்ளோரஸ் தீவின் நீண்ட கடற்கரையில் . அதுவும் மயங்கிய நிலையில் இருந்தான். இவன் கடலில் எப்படி பிழைத்தான் என்பதே எல்லோருக்குரிய ஆச்சர்யம். வித்தியாசமான ஒரு ஜந்துவை போல் பார்த்தார்கள். கருநிறமாகவும் ஆஜானுபாகு உயரமாக இருந்த அவனை, ரொட்டி நிறத்திலும் உயரம் குறைவானவர்கள் அப்படிப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ப்ளோரஸ் தீவு மீனவர்களுக்கு தங்கள் நிலத்தைத் தவிர வேறு நிலங்களோ பரிச்சயம் அற்றவர்கள். நித்திலனுக்கு  கண் முன்னே துல்லியமாக அன்னா தெரிந்ததை விட மற்ற எல்லா காட்சிகளும் அவனுக்கு மங்கலாகத் தெரிந்தன. மயங்கிக் கிடந்தவனை அன்னா இன்னும் நால்வர் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் தேவாலயத்தின் மேசையில் போட்டிருந்தர்கள், தேவாலய பாதிரி வந்திருந்தார். பின்பு போலிஸார், அதன் பிறகு குடியுரிமை அதிகாரிகள் அவனைப் பார்க்க வந்திருந்தார்கள். கடல் விபத்து அவனை பைத்தியக்காரனை போல் ஆக்கியிருந்தது. பூமிக்கு அப்பாற்பட்ட ஒரு பிரதேசத்திற்கு வந்தவனைப் போல் அசாதரணமாக நடந்து கொண்டான். அவனால் சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்க முடியவில்லை .

   ப்ளோரஸின் வறண்ட மலைகளைப் போல அன்னாவில் ஆங்கிலம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், அவனை அரசாங்க ஒப்புதலோடு தேவாலயப் பொறுப்பில் அகதி விருந்தாளியாக எடுத்துக்கொண்ட போது அவள்தான் அவனைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள். மாலை நேரங்களில் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு அவனுக்கு அருகில் நின்று ஜெபித்தாள். அவள் குரல்வளையில் ஏறி இறங்கும் ஜெபம் அவனை ஒரு முழுமையான மனிதனாக மாற்றிக்கொண்டிருந்தது.

  பின்னொரு நாள் தேவாலய கடல் பிரார்த்தனை திருவிழாவில் கூட்டத்திற்குள் பாதிரியார் உடன் அன்னாவை நித்திலன் கண்டான். மெழுகுவர்த்தி ஏந்திக்கொண்டு கடலை நோக்கி சென்று கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் சிறுவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். ஊரே கூடி நின்றாலும் அன்னாவை அவனால் எளிதாக அடையாளம் கொள்ளக்கூடிய கலையினை அவனுக்கு காதல் தந்திருந்தது. தேவாலய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இருளிலும் ஒளிரும் அன்னாவின் முகம் மஞ்சள் சுடர் முகம். அவளது தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அவளது கவனம் முழுவதும் அவன் மேலேயே விழுந்து கொண்டிருந்ததை நித்திலன் அறியாமல் இல்லை. எத்தனை முறை தவிர்க்க நினைத்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அத்தனை பிரகாசமானதொரு வதனம். ஆழ்கடலின் இருளில் திமிங்கிலம் எழுப்பும் பாடல் போல். நித்திலனின் உள்ளம் அவளுக்கான சமிக்கையினை அனுப்ப ஆரம்பித்துவிடும். எத்தனை துயரமான ராகம் ஆழ்கடலை துளைத்துக்கொண்டு ஆழிப்பேரலையின் சுருளுக்குள் வடியும் கானம். அன்னாவும் நித்திலனும் இப்போது ஒருவரில் ஒருவரை அடையாளங் கண்டனர்.

     நித்திலன் கடலை பார்த்துக் கொண்டிருந்தான் அகதிகள் முறைப்பாடு சம்பந்தமாக ஒரு பெரிய அறிக்கையை தேவாலய பாதிரி ஒப்பத்துடன் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்து அவனது முறைக்காக காத்திருந்தான். இன்னும் ஒரு வார காலத்திற்குள் நாடு திரும்பலாம்; தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று விசாரணைக்குப் பிறகு தெரிவித்திருந்தார்கள். இந்த ஒரு மாத காலத்திற்குள் அவளது தேவாலய பணிகளுக்கும் சந்தையில் பொருட்களை விற்பதற்கும் உதவும் வகையில் அன்னா உணர்வுபூர்வமாக நெருங்கி இருந்தாள். தயங்கிபடியே ப்ளோரஸ் தீவுக்குள் வலம் வந்துக்கொண்டிருந்த நித்திலன் இப்போது அவர்களுக்கிடையில் ஒரு நம்பிக்கையான வியாபாரி ஆகிவிட்டான். அவனுக்கு கை கால்கள் உடல் மொழி எல்லாம் அத்தீவுக்குள் ஒரு நிரந்தரவாசியை போல் நடமாட ஆரம்பித்தான். ஒரு மெல்லிய ரகசியக் கடலில் இருக்கும் இரண்டு வகையான நீல வர்ணங்களும் சந்திக்கும் மத்திய வேளையில் ஒரு கோட்டிற்கு பின்னால் இருவரும் நின்றிருந்தார்கள்.

   அவள் அப்போதுதான் அந்த உதவியை நித்திலனிடம் கேட்டிருந்தாள். ஆரம்பத்தில் அவனுக்குத் தயக்கம் என்றாலும் அன்னாவுக்காக தன் இதயம் தூரக்கடலில் தெரியும் அடிவானம் வரை செல்லும் சக்தியை அவன் உடல் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. அன்னா அவளது எந்த காதலர்களும் அந்த உதவியைச் செய்ய முன் வந்ததில்லை என்பதை அவனிடம் கூறினாள். அதற்கு பின்பு அவர்களை தான் ஒருமுறை கூட கண்டதில்லை என்று அவள் கூறிக்கொண்டிருந்தாள். நித்திலன் ஏன் அந்த உதவியைச் செய்ய முன் வந்தான் என்பது இன்றுவரைக்கும் அவனே நினைத்துப் பார்க்க நினைத்தாலும் சுத்த பைத்தியக்காரதனமாக தான் இருக்கும். அவள் இந்த உதவியை தீவில் யாரிடம் கேட்டிருந்தாலும் அவளை ஊரை விட்டு தள்ளி வைத்திருப்பது மட்டும் அல்ல; கத்தோலிக்க தேவாலய திருசமூகத்தில் இருந்து அவளுக்கும் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும் சமூக விலக்கு கூட அளித்திருக்கலாம். நித்திலன் எப்படியோ ஒத்துக்கொண்டான். அன்னா நீலக்கடலின் யட்சி.. உதட்டைச் சுழித்துக்கொண்டு உதவி கேட்கும் அழகி முன் பருவ வயதுடைய இன்னும் அரும்பு விட்டுக்கொண்டிருக்கும் விடலை பொடியன் மறுப்பானா? ஒரு பைத்தியக்காரத்தனமான காதலின் முன்பாக ஒரு அழகி எதை கேட்டாலும், கண்ணை மூடிக்கொண்டு எப்பாடு பட்டாவது நிறைவேற்றிக் கொடுக்கும் முட்டாள் காதலர்களில் அவனும் ஒருவன்.

   அன்னா தனது திட்டத்தை விவரித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் நித்திலன் கடலைப் பார்த்து பைத்தியக்காரனைப் போல ஒரு கவிதையை நெசவு செய்தான்.

’கடவுளே, நீ எவ்வளவு மகத்தான உண்மை! போரில் தப்பி பிழைத்தவனை பிடித்து இன்னொரு பெண்ணிடம் ஒப்படைக்கிறாய். இத்தனை மகத்தான அழகியை ஏன் ஆண்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்?’ அன்னாவின் வாழ்க்கையில் மாப்பசாங்கிற்கு பிறகு அவளைத் தேடி எத்தனையோ திமிங்கிலங்களை கடலில் வீழ்த்திய தோடிகள் வந்தார்கள் அதன் பின்பு மறைந்து போனார்கள்..

                       ******


    நள்ளிரவில் ஒரு அழகான பெண்ணுடன் படகு சவாரி என்பது நித்திலனுக்கு புது அனுபவம் தான் என்றாலும் எதிரில் அமர்ந்திருக்கும் அன்னா ஏதும் பேசாமல் அமர்ந்திருப்பது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆழ்கடலின் மையத்திற்குப் போக வேண்டும் என்று முன்பு கூறியிருந்தாள். அன்னா, நித்திலனிடம் கூறியதுபோலே மாப்பசாங்கின் உடலை கல்லறயைத் தோண்டி எடுத்து வந்திருப்பதாக கூறினாள். தன் காதலன் மாப்பசாங்கின் விருப்பம் அது. அமரர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு வழித்துணையாக வருவதற்கு நித்திலன் அன்னாவிடம் ஒத்துக்கொண்டதே பெரிய விடயம்தான். படகு ப்ளோரஸ் தீவை விட்டும் வெகுதூரம் கடலுக்குள் சென்றிருந்தது. எங்கு திரும்பியும் கடல் இருளை நிறைத்திருந்தது. கருமையான வண்ணம். படகில் இருந்த ஒரேயோரு லாம்பு மொத்த கடலையும் வெளிச்சமுற போதுமா என்ன? படகு ஓரிடத்தில் நிறது. இடுப்பில் இருந்த ஒரு டார்ச்சை எடுத்து கடலுக்குள் ஒளிய்யை செலுத்தினாள். நித்திலன் அதனை பார்த்துக் கொண்டிருந்த எதிர்பாராத கணத்தில், திமிங்கில தோடியின் எறி உளியுடன் நித்திலன் மீது அன்னா பாய்ந்தாள். உளி மிகச்சரியாக நித்திலனின் இதயத்தில் சொருகியது. நித்திலன் தன் முன்பு கண்ட அன்னா போல் இல்லை. பற்கள் நீண்டு வாய்க்கு வெளியே நின்றன. நகங்கள் கூர்மையாக இருந்தன. அவளது கண்கள் நெருப்பாக மாறிக்கொண்டிருந்தது. நித்திலனின் கண்கள் அன்னாவைப் பார்த்து மலைத்தவாறே நிலைகுத்தி நின்றன. அவனது கண்களை எத்தனையோ முறை அன்னா மூடுவதற்கு முயன்றும் நித்தில பார்வை நிலைக்குத்தியே நின்றது. அன்னா இப்போது கோணிப்பையில் நித்திலனின் உடலை திணித்தாள். தன் முதுகில் நித்திலனை சுமந்தவாறு கடலுக்குள் குதித்தாள்.

 அன்னா நீந்திக்கொண்டிருந்த ஆழ்கடல் முழுதும் பச்சை ஒளியால் நிரம்பி கடலே ஒரு கண்ணாடி போல் காட்சியளித்தது. கடலின் எல்லா காட்சிகளும் வெகு துலக்கமாக இருந்தது. தூரத்தில் ஒரு துருப்பிடித்த பெரிய நங்கூரம் ஊண்டி அதன் நுனியில் மாப்பசாங்கின் உடல் மாட்டப்பட்டிருந்தது. ஏசுவை போல் இருகைகளையும் விரித்திருந்தான். அதன் அருகில் அன்னாவின் காதலர்களின் சடலங்கள் வரிசையாக கல்லால் கட்டப்பட்டு கிடந்தன. அதற்கு அருகில் நித்திலனின் உடலையும் வைத்திருந்தாள். ப்ளோரஸ் தீவின் கலங்கரை விளக்கு தீவை ஒரு சுழற்றியடித்தது. ஒளிக்கீற்று பவளப்பாறை உச்சியின் மாப்பசாங்கின் கல்லறை மீது போய் விழுந்தது.


ping.riyas@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button