
இரவு பத்து மணியாகிறது. வழக்கமாக இரன்டு பெக் மது அருந்தத் தொடங்கும் தொடங்கும் நேரத்தை விட சற்று தாமதமாகிவிட்டது. அவர் பிஜூக்காகக் காத்திருந்தார்.
அவன் மாலையிலேயே வந்துவிட்டிருந்தான். ஆனால் ஸ்ரேயாவிடம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்துக்கு குறையாமல் அலைபேசியிலும் வாட்சப்பிலும் உரையாடுகிறார்கள் ஆனாலும் நேரில் பேசிக்கொள்வதற்கு விஷயம் இருந்துகொண்டே இருக்கிறது என்று நினைத்தார். ‘ஒன்னும் அவசரம் இல்லை, மெதுவாக வரட்டும்’ என்று தனக்குள்ளேயே சமாதானம் போல அதைச் சொல்லிக்கொண்டவர், உட்கார்ந்திருந்த கட்டிலின் மீது நிமிர்ந்து இன்னும் தளர்வாக உடம்பை சுவரின் மீது சாய்த்துக் கொண்டார். எதிரே இருந்த நாற்பத்தி ரெண்டு இன்ச் கலர் டிவியில் காரசாரமான அரசியல் விவாதம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதை மாற்றிவிட்டு எண்பதுகளின் இளையராஜா பாடல் தொகுப்பை யூ டியூபில் ஓடவிட்டார்.
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் குளித்துவிட்டு, சிறிது நேரம் வெண்ணிலாவிடம் உரையாடியதும் தனது அறைக்கு வந்துவிட்டார். வாசிப்பதற்கு, டிவி பார்ப்பதற்கு, எப்போதாவது வரும் நிறுவனம் தொடர்பான அலைபேசி விவாதங்களில் ஈடுபட, சாவகாசமாக உட்கார்ந்து மது அருந்த என அந்த அறை வசதியாக இருக்கிறது.
ஸ்ரேயா ஐந்து வயதாக இருக்கும்போது கட்டிய அறை, அப்போது தினேஷுக்கு ஏழு வயது ஆகியிருந்தது. ஒரே கட்டிலில் நெருக்கியடித்துக் கொண்டு படுத்திருந்ததை விலக்கிக் கொண்டு இந்த அறைக்கு வந்திருந்தார்.
வீட்டின் முன்பகுதியில் இருந்த சமையலறையை பின்புறத்துக்கு மாற்றி விட்டு, அந்த இடத்தை முழுவதுமாக மாற்றியமைத்து படுக்கை அறையாக்கியிருந்தார்.
நள்ளிரவில் வந்து ஆலிங்கனத்தில் ஈடுபட்டுவிட்டு, ‘சரி, நான் போறேன். பசங்க முழிச்சா தேடுவாங்க’ என்று கூச்சத்துடன் முனகிக்கொண்டே வெண்ணிலா கிளம்பி விடுவாள்.
ஸ்ரேயா பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் கல்லூரிப் படிப்புக்கு கோவையில்தான் சேருவேன் என்று அடம்பிடித்து அங்கேயே போய் ஹாஸ்டலில் சேர்ந்துவிட, வீட்டில் யாரும் இல்லாமல் போய்விட்டது.
தினேஷ் அதற்கு இரண்டு வருடம் முன்பே பெங்களூருக்குப் படிக்கப் போய்விட்டிருந்தான். குழந்தைகள் இல்லாத வீடு என்றாகிவிட்டது. ஸ்ரேயாவைக் கொண்டு போய் கோவையில் விட்டுவிட்டு வந்த அன்று வெண்ணிலாவுடனேயே படுத்துக்கொள்ள முயன்றார். ஆனால், அந்த அறையில் அவருகு அந்நியத்தன்மை வந்துவிட்டிருந்தது. சில இரவுகள் அதிகாலை வரை தூக்கம் வராமல் புரண்டுகொண்டே கிடந்தார்.
இத்தனைக்கும் நான்கு பெக் விஸ்கி, அப்புறம் இரண்டு கல் தோசை, ஒரு ஆஃபாயில் என்று வயிற்றில் திணித்திருந்தார். கலவிக்கும் குறையில்லை.
அவள் சங்கடப்படுவாள் என்றுதான் அவரும் அங்கேயே படுத்துக்கொள்ள முயன்றார். தூக்கம் வந்தால்தானே?
அடுத்த நாளிரவு, பாதி ராத்திரியில் எழுந்து தனது அறைக்குப் போனவர், மீண்டும் ஒரு பெக் விஸ்கி அருந்திவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டார், அவள் காலையில் வந்து ஏன் என்று கேட்பாள் என்கிற மெல்லிய தயக்கத்தை அப்போதைய போதை இல்லாமலாக்கியது.
காலையில் எழுந்து குளித்துவிட்டு, சமயலறைக்குப் போய், அங்கு அடுப்படியில் சுறுசுறுப்பாக இருப்பவளிடம், “டீ போட்டுட்டியா…” என்று கேட்கையில், “ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க. போட்டுத் தர்றேன்” என்று சொன்னாளேயொழிய, அவர் பாதி ராத்திரியில் எழுந்து போனதைப் பற்றி கேட்கவே இல்லை. அவளும் அதற்குப் பழகியிருக்கிறாள் என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்தது.
ஸ்ரேயா வரும்போது எப்போதும் போல அம்மாவுடன் படுத்துக்கொள்கிறாள். தினேஷ் வந்தால் ஹாலில் தூங்குகிறான்.
மாடியில் இன்னொரு ரூம் கட்டிவிடலாம் என்ற பேச்சு வந்தபோது, இல்லை தாம்பரத்தில் இருக்கும் இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, அண்ணா நகரிலோ அல்லது அடையாரிலோ மூன்று அறைகள் கொண்ட அபார்ட்மெண்ட்டுக்கு வாடகைக்குப் போய்விடலாம் என்று ஸ்ரேயா சொன்னாள். தினேஷுக்கு தாம்பரம் வீட்டை விட்டுப் போவதற்கு இஷ்டமில்லை. “நாங்கள் இல்லாதபோது, நீங்கள் ரெண்டு பெரும் தனியாகத்தான் இருக்கிறீர்கள், அப்பா எப்போதும் வேலை வேலை என்று வெளியில் போய்விடுகிறார், உனக்கு நன்றாகப் பழக்கமான ஏரியா இது, பக்கத்துக்கு வீட்டு அக்காவுடன் எப்போதும் பேசிக்கொண்டிருப்பாய், இப்போது எதற்கு இன்னொரு வீடு…?” என்று அவன் கேட்டதில் வெண்ணிலா சமாதானமாகிவிட்டாள்.
தினகரனுக்கும் அது சரியென்றே பட்டது. ஸ்ரேயா மட்டும் வரும்போதெல்லாம், இந்த வீடு வசதியாக இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். அவளுக்கு பிரைவஸி தேவைப்படுகிறது என்று தினகரன் புரிந்துகொண்டார்.
இப்போதும் அம்மாவுடன் படுத்துக்கொள்வது, அவளுக்கு தொந்தரவாக இருக்கக் கூடும் என்று நினைத்தார். வெண்ணிலாவுக்கும் அது புரிந்தது. ஆனால், நீண்ட நாட்கள் மகளைப் பிரிந்திருக்கும் அவளுக்கு, அவள் வரும் சொற்ப நாட்களில் தன்னுடன் படுத்துக்கொள்ள வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. மகளும் அதை விரும்பவேண்டும் என்று எதிர்பார்த்தாள். அவள் நினைப்பது போலவே ஸ்ரேயாவும் நினைக்க வேண்டுமா என்ன? போதாதற்கு ஸ்ரேயா இப்போது காதலிக்க ஆரம்பித்திருக்கிறாள். மற்ற வீடுகளைப் போல அதுவொன்றும் தினகரனின் வீட்டில் பிரளயத்தைக் கிளப்பவில்லை.
அவள் தினகரனிடம்தான் முதலில் சொன்னாள். அவளுடைய கல்லூரி சீனியர் பிஜூ. மலையாளி. எர்ணாகுளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். எப்படிக் காதல் வந்தது, எத்தனை வருடங்களாகக் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. அப்படியா என்று கேட்டுவிட்டு, அந்தப் பையனின் வீடு அப்பா அம்மா வேலை போன்ற விவரங்களை மட்டும் கேட்டார். சாதியில் நாயர். பிள்ளைமாருக்கு அது குறைந்ததா கூடுதலா என்பதில் அவருக்குக் குழப்பம் இருந்தது. எப்படிப் பார்த்தாலும் எந்த சொந்தக்காரனும் ஒத்துக்கொள்ளமாட்டான். யார் யார் திருமணத்துக்கு வரமாட்டார்கள் என்பது வரைத் துல்லியமான கணக்குஅவர் மனதுக்குள் ஓடியது.
அந்த உரையாடல் இப்போதும் தினகரனுக்கு நினைவில் இருக்கிறது.
“அம்மாகிட்ட சொல்லிட்டியா?”
“இல்லப்பா, கூச்சமா இருந்துச்சு அதான் சொல்லல…!”
“ஏண்டி, லீவ்ல வந்தா எப்பவும் அவ கூட தான் இருக்க, அங்கதான் தூங்குற, அவ எதோ உங்கூட படிச்சவ மாதிரி கதை பேசுற, இதைச் சொல்லுறதுல என்ன தயக்கம் உனக்கு?”
“இல்லப்பா நீயே சொல்லிடு, அது அப்படிதான்… “
மறுநாள் அவள் கிளம்பி கோயம்புத்தூர் போய்விட்டாள். தினகரன் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் அதை வெண்ணிலாவிடம் சொல்லவில்லை. மாலையில் வந்து குளித்துவிட்டு அறையில் வந்து அமர்ந்து டிவியைப் போடும்போது அவளை அழைத்து பொறுமையாக அவளிடம் சொன்னார். அவர் இப்போது உட்கார்ந்திருக்கும் அதே போஸில் உட்கார்ந்துதான் அப்போதும் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த டீப்பாயில் சரக்கு இருந்தது. தண்ணீர் இருந்தது. அதன் மீது கால் பட்டுவிடாமல், அவருக்கு இணையாக வெண்ணிலாவும் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு டிவி பார்க்கத் தொடங்கியிருந்தாள்.
அவர் சொன்னதும் அவளுக்குக் கொஞ்ச நேரம் பேச்சே வரவில்லை. அவள் அதிர்ச்சியடைந்திருப்பது அவளது முகத்தைப் பார்க்காமலேயே அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவள் மூச்சு விடுவது சீரற்று ஒலிப்பது போலத் தோன்றவும், “எதுக்குடி இப்போ ஷாக் ஆவுற, ஏன் இருபத்தஞ்சு வருஷம் முன்ன நீ லவ் பண்ணி கல்யாணம் பண்ணும்போது உன் பொண்ணு லவ் பண்ண மாட்டாளா..?.” என்று கிண்டலாக அவள் தோளில் கைபோட்டுக்கொண்டு சிரித்தார். அவளை சகஜமாக்க முயன்றார்.
அவளது தோள்பட்டை விறைப்பாக இருந்தது. அவளது அதிருப்தி அவளது உடல்மொழியில் அப்பட்டமாக வெளிப்பட்டது. பையன் என்ன செய்கிறான், எந்த ஊர் என்று எதுவும் அவள் கேட்கவில்லை. அது தினகரனுக்கு வியப்பாக இருந்தது. நேற்றுவரை தன்னுடன் இருந்தவள், அதை ஏன் தன்னிடம் சொல்லாமல், அப்பாவிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள் என்று அதிருப்தியடைகிறாளோ என்று தினகரன் நினைத்தார்.
“நீ அம்மாகிட்ட சொல்லிட்டியான்னு கேட்டேன், சொல்றதுக்கு கூச்சமா இருக்கு நீயே சொல்லிடுன்னு சொன்னா…”
“………….”
நீண்ட அமைதி நிலவியது. “அவளை கோயம்புத்தூர் அனுப்ப வேணாம்னு தலை தலையா அடிச்சிகிட்டேன், நீங்க கேக்கல. சரி படிச்சு முடிச்சதும் வேலைக்கு சென்னை வந்துடலாம்ல. எர்ணாகுளத்துல வேலை கிடைச்சிருக்குன்னு அவ சொன்னதுக்கு சரி சொன்னீங்க. இந்த சென்னையில் இல்லாத காலேஜா? ஏன் நீங்களும் நானும் கோவில்பட்டிலதான படிச்சோம். நல்லா படிக்கலையா இல்லை நல்ல வேலைக்குத்தான் போகலையா? அவதான் போவேன்னு ஒத்த கால்ல நிக்கிறான்னா நீங்க எதுக்கும் மறுப்பே சொல்றதில்ல…”
“ஏன் தினேஷ் கூட பெங்களூர்லதான் படிச்சான் அங்கயே வேலை பாக்கலையா…?”
“அவனையும் நான் வேணாம்னுதான் சொன்னேன்…”
“ஆனா, அவன் லவ் பண்ணா, அங்க படிக்க போனதாலதான் லவ் பண்றான்னு சொல்லுவியா?”
“அது வேற இது வேற. ஏட்டிக்கு போட்டியா பேசாதீங்க…”
“சரிடி.. இப்ப அவ லவ் பண்றதுல என்ன பிரச்சினை உனக்கு…?”
“தெரியல. ஆனா, பிடிக்கல, எதோ ஒன்னு அவகிட்ட இருந்து விலக்கி வச்ச மாதிரி இருக்கு’’
தினகரன் அமைதியாக இருந்தார். அவர் மீண்டும் ஒரு பெக் சரக்கு ஊற்றிக் குடித்தார். டிவியில் “ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்…” பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. “இலையுதிர்க் காலம் முழுக்க மகிழ்ந்து உனக்கு வேராவேன்…” என்றுவரி வரும்போது அப்படியே வெண்ணிலாவை அணைத்துக்கொண்டு அவளுக்கு முத்தம் கொடுத்தார். அது எப்போதும் நிகழ்வதுதான். குழந்தைகள் சின்னவயசில் இருந்தபோதும், கல்லூரிக்குச் சென்றபோதும், வேலைக்குப் போன போதும், அந்தப் பாடல் ஒலிக்க நேரும்போதெல்லாம் அந்த முத்த வைபவத்தை அவர் தள்ளிப் போடுவதில்லை. குழந்தைகளுக்கும் அது பழகிவிட்டது. வெண்ணிலாவுக்கு முகம் சிவந்தாலும், அதன் உள்ளே ஆழமாகப் புதைந்துகிடக்கும் காதலை ரசித்தபடி எதாவது கேலியாகப் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவாள். அன்றும் அப்படித்தான் அவள் எழுந்து சமயலறைக்குப் போய்விட்டாள். தினகரன் அவளைத் தடுக்கவில்லை.
அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. தங்களது காதல் திருமணத்தால், உறவினர்களிடம் சந்தித்த அவமானத்தை அவர் எளிதாகக் கடந்துவிட்டார். ஆனால், அவளால் இப்போது வரை அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. காதலிக்கும்போது அவர் தெலுங்கு பேசுபவர் என்பதோ அவள் தமிழ் என்பதோ ஒரு பொருட்டாக இல்லை இருவருக்கும். யாருக்குத்தான் இருக்கும்?
ஆனால், கல்யாணம் செய்துகொண்ட கொஞ்ச நாளிலியே அவள் கண்ணுக்குத் தெரிந்த வேறுபாடுகள் அவளை மலைக்க வைத்தன. இதோ பத்து நிமிட பேருந்து பயண இடைவெளியில் இருக்கும் அவரது ஊருக்கும் நமக்கும் பழக்க வழக்கத்தில் இத்தனை வேறுபாடு இருக்கமுடியுமா என்று ஒடுங்கிப் போனாள். தினகரனுக்கு சென்னையில் வேலை மாற்றலாகி வந்தவுடன்தான் ஓரளவுக்கு அவள் நிதானமடைந்தாள். உறவினர்களின் வரத்து மட்டுப் ட்டிருந்தது. அதிருப்திகள் குறைந்திருந்தன. குழந்தைகள் சென்னையில் பிறந்து சென்னை மக்களாகவே வாழ்த் தொடங்கியிருந்தார்கள்.
விசேஷங்கள், திருவிழாக்கள் என்று ஊருக்குப் போவதோடு சரி. இருவரின் பெற்றோரும் இறந்ந்துவிட்டதால் ஊருக்குப் போகும் கட்டாயத்திலிருந்து இருவரும் வெளியேறியிருந்தார்கள்
தினகரனின் அண்ணனோடும் அக்காள்களோடும் அவருக்கு நல்ல உறவிருக்கிறது. வெண்ணிலாவுக்கு ஒரு அண்ணன் அவரும் பெங்களூரில் இருப்பதால், எப்போதாவது கூடி குசலம் விசாரித்துக் கொள்வதோடு சரி. அவர் எத்தனையோ வற்புறுத்தியும், தினேஷ் அவர் வீட்டில் தங்கிப் படிப்பதற்கு அவள் சம்மதிக்கவில்லை.
எப்போதும் உரசிக்கொண்டிருக்காத, அதே சமயம் விலகியும் போய்விடாத சமநிலையான உறவை இருவரும் பேணிக் கொண்டிருந்தார்கள்.
“நாம ரொம்ப ஐடியலான ஃபேமிலிதானேம்மா” என்று கேட்டான் தினேஷ் ஒருமுறை. அப்போது தொலைக்காட்சியில் குடும்பமாக உட்கார்ந்து ஒரு ஹிந்தி சினிமா பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் வெறுமனே சிரித்து வைத்தாள் வெண்ணிலா.
தினேஷுக்கு ஸ்ரேயாவின் காதல் மீது எந்த அதிருப்தியும் இல்லை. அதற்காக அதை வரவேற்று அப்படியே நாயரோடு அவன் உருகிக்கொண்டிருக்கவும் இல்லை. இருவருக்கும் நல்ல நடபு இருந்தது. அவனும் ஸ்ரேயாவும் ஒன்றாக ஊருக்கு வருகையில், அப்போது தினேஷ் ஊரில் இருந்தால், அவர்கள் இருவரும் ஒன்றாகத்தான் கூடத்தில் படுத்துக் கொண்டார்கள். ஒன்றாக சினிமாவுக்குப் போனார்கள். வீட்டில் சேர்ந்து உட்கார்ந்து படம் பார்த்தார்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் உறவினர்கள் யாரும் வந்து விடாமல் இருந்தது தினகரனுக்கும் வெண்ணிலாவுக்கும் தர்மசங்கடம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டது. அப்படி யாராவது திடீரென வந்துவிட்டால், தினேஷின் நண்பன் என்று அவனை அவர்களிடம் அறிமுகப்படுத்தும் திட்டம் இருந்தது வெண்ணிலாவுக்கு.
“இல்லை, அப்படிச் சொல்வதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்’ என்று மறுத்தான் தினேஷ்.
“ஏன் அப்படிச் சொல்ற, என்னோட பாய்ஃபிரண்டுன்னு சொல்லு, எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை” என்று ஸ்ரேயா சொன்னாள்.
அவன் முடியாது என்று சொன்னது அவளை சீண்டியிருக்கவேண்டும்.
வெண்ணிலாதான் அவர்களது திருமணப் பேச்சை எடுத்தாள். அதுவும் ஒரு மாலை நேரமாக இருந்தது. தினகரன் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். வெண்ணிலாவும் வந்து அவருடன் உட்கார்ந்துகொண்டு டிவி பார்த்தாள். பக்கத்துக்கு வீட்டு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது குறித்து அவரிடம் சொன்னாள். “இன்னும் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருப்பாங்க, அதுக்குள்ளே ஒரு எட்டு போயி பாத்துட்டு வந்துடுவோம்” என்று அவரை அழைத்தாள்.
“அதான் வந்துடுவாங்கல்ல இன்னும் ரெண்டு நாள்ல.. அப்புறம் என்ன?” என்றவரிடம், “ஐயே, அது நல்லாருக்காதுங்க, நாம் போயி பாத்துட்டு வர்றதுதான் முறை” என்றாள்.
சுமித்ராவுக்கு மட்டும் ஸ்ரேயாவின் காதல் தெரியும். சிலவற்றை ஆதங்கமாகவோ அல்லது சந்தோசமாகவோ பகிர்ந்துகொள்வது ஒருத்திக்கு இன்னொரு பெண் ஸ்நேகம் தேவையாயிருக்கும் போல. அப்படித்தான் மகளை விட நான்கு வயது அதிகமுள்ள சுமித்ராவுடன் வெண்ணிலா ஒரு ஸ்னேகிதியைப் போல உறவு பாராட்டிக்கொண்டிருந்தாள்.
“அவ அவன் கூட லிவ் இன்ல இருக்கா, இன்னும் ஒரு வருஷம் என்கிட்ட டைம் கேட்டிருக்கா, இந்த ரிலேஷன்ஷிப் ஓர்க்க்கவுட் ஆச்சுன்னா அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவ சொல்லிருக்கா” என்று சொன்னார்.
“எதே, அவ அவன்கூட லிவ்இன்ல இருக்காளா?”
அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆத்திரம், தினகரனுக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. அவள் சங்கடப்படுவாள் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அவளிடம் அதுகுறித்து அவள் எதுவும் சொல்லியிருக்கவில்லை.
“நீங்க அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்குறீங்க…!”
“இல்லடி, அதை சுதந்திரம்னு வச்சிக்கோ. நாம கொடுக்கலன்னா அவ எடுத்துப்பா. அவ எங்கிட்ட சொல்லும்போது, அதை ஒன்னும் அனுமதி மாதிரி கேக்கல. தகவலாத்தான் சொன்னா. ஆனா, ஒன்னு தெரியுமா, அவ காதலைச் சொன்ன மாதிரி கிளம்பும்போதுதான் இதையும் சொன்னா, ஆனா, அந்த விஷயம் மாதிரி இல்லாம, இதை அம்மாகிட்ட சொல்லாத.. கோவப்படுவாங்கன்னு சொன்னா. “
“சொன்னதோடு மட்டும் இல்லாம உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு பிராமிஸும் வாங்கிட்டு போனா…”
“ஓஹோ…!”
“ஆனா, எனக்கு அப்போவே தெரியும், நான் அந்த சத்தியத்தை மீறிடுவேன்னு. சத்தியமே மீறுறதுக்குத்தானே…. எங்கம்மா கிட்ட அப்படித்தான் நம்ம சாதியில உள்ள தெலுங்குப் பொண்ண கட்டிப்பேன்னு சத்தியம் பண்ணேன். இத்தனைக்கு அம்மா எங்கிட்ட, சாமி முன்னாடி விளக்கேத்தி வச்சி சத்தியம் வாங்கினா, நாம் அன்னைக்குதான் முதல் முறையா கோவிலுக்கு போனோம் ஞாபகம் இருக்கா…?”
“தெரியும், அதை அப்போ வச்சி சொல்லாம, கல்யாணத்துக்கு அப்புறம் உங்கம்மா செத்து போனப்புறம் சொன்னீங்க, எனக்கு குற்றவுணர்ச்சி வர்ற மாதிரி. அதுவும் ஞாபகம் இருக்கு…”
“அதனாலதான் சொல்றேன். எனக்கு இன்னும் சொல்லப்போனா, அவ கல்யாணத்துக்கு முன்னாடி அவன்கூட ஒரு லிவ்வின்ல இருக்கது ஓகேதான். உன்ன விட அதிகமா இன்னைக்கு இருக்க பிள்ளைகளை நான் பாக்குறேன். என்னோட ஆஃபீஸ்ல சம்பத் இருக்கான்ல.. அவன் பொண்ணு அப்படித்தான், ஹைதராபாத்ல இருக்கா. நாம கூட கல்யாணத்துக்கு போனோம், அவ்வளவு பிரச்சினையும், என்கிட்டத்தான் தினமும் வந்து சொல்லுவான்.
பிடிக்கலைன்னா கிளம்பி வந்துடுன்னு சொல்லிட்டேன்டா, ஒரு பொம்பள பிள்ளை இருக்கு ரெண்டு வயசுல அதுதான் தடுக்குதுன்னு சமாளிச்சிட்டிருக்கானு சொல்றான்.”
“எனக்கு தெரியும், அந்தக் குழந்தையை விட்டுட்டோ இல்ல தூக்கிட்டோ சீக்கிரம் அவ சென்னை வந்துடுவா. அவன் சொல்ற கதையெல்லாம் வச்சி எனக்கு அப்படித்தான் தோணுது… “
“எதுக்கு நீங்க இவ்வளவு நெகட்டிவா யோசிக்கிறீங்க எப்பவும்?”
“ச்ச ச்ச இல்லடி… யதார்த்தத்தை சொல்றேன். நம்ம பொண்ணு விஷயத்துல எனக்கு எந்த எதிர்மறையான அபிப்பிராயமும் இல்ல. நான் அவளைப் புரிஞ்சிக்கிறேன். அதே சமயம் எச்சரிக்கையாவும் இருக்கேன்னு நானே என்ன சமாதானப்படுத்திக்கிறேன் அவ்ளோதான்.?” இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“தினேஷ் போன் பண்ணிருந்தான். நாளைக்கு ஸ்ரேயா ஊருக்கு வர்றாளாம், அவளோட பாய்ஃபிரண்டும் வர்றானாம்,,,”
“நீ எப்போ எழுந்த?”
“இப்போதான் கொஞ்சம் முன்ன… ஏன்…?”
“நீ ரொம்ப நேரம் எங்கூட இல்லாத மாதிரி இருந்துச்சு அதான்…”
“ஆமா, நான் உங்ககூட பேசிட்டிருந்தப்ப அப்படியே உங்க கையிலேயே படுத்து தூங்கியிருக்கேன், கொஞ்ச நேரத்துல முழிச்சி பார்த்தேன், நீங்களும் நல்லா தூங்கிட்டிருந்தீங்க, அதான் அப்படியே எழுந்து கதவை மூடிட்டு போய் அந்த ரூம்ல படுத்தேன். இப்போதான் எழுந்து வர்றேன். “
திவாகரனுக்குக் காரணமில்லாமல் ஏமாற்றமாக இருந்தது.
“என்னவாம் ஸ்ரேயா இப்போ வர்றா? போன வாரம் தான வந்தா…”
“தெரியல, அதுவும் எனக்கு தினேஷ் சொல்லித்தான் தெரியுது. அவ கால் பண்ணி சொல்லவும் இல்ல, எனக்கு மெஸேஜ் போடவும் இல்லை. தினேஷ், அப்பாகிட்ட மறக்காம சொல்லிடுனு வேற சொன்னான்.”
“எதும் முக்கியமான விஷயமா இருக்குமோ, கல்யாண விஷயம் பேசலாம்னு முடிவு பண்ணிட்டாங்களோ?” என்று கேட்டுக்கொண்டே அவரை ஏறிட்டுப் பார்த்தாள். அவர் அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தார்.
அவள் அலுவகம் சென்ற பிறகு மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்னால் தினேஷ் அழைத்தான். அவன் பெரும்பாலும் அலுவலக நேரங்களில் தினகரனை அழைப்பதில்லை. அதற்காக அழைக்கவே மாட்டான் என்றும் இல்லை. அதனால் அந்த அழைப்பில் அவருக்கு ஆச்சர்யம் இருக்கவில்லை.
“சொல்லுடா, எப்படி இருக்க…?”
“நல்லாருக்கேம்ப்பா… ஸ்ரேயா வர்றேன்னா நாளைக்கு காலையில வீட்டுக்கு. அவனும் வர்றான் அந்த பிஜு…”
“சரிடா, என்னவாம் திடீர்னு…’
‘இல்லப்பா கொஞ்ச நாளா அவங்களுக்குள்ள கொஞ்சம் ரஃப் பேட்ச் போயிட்டிருக்கு…’
“அப்படின்னா…?”
“ரிலேஷன்ஷிப்ல இருக்கதுதாம்பா…. சமீபமா ரெண்டு பேருக்கும் நிறைய உரசல் வருது போல… உங்க கூட உக்காந்து பேசணும்னு நினைக்கிறாங்க போல ரெண்டு பேரும்…”
தினகரன் அவன் சொல்வதை மவுனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்… குறுக்கே பேசவில்லை. ‘இதில் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று சொல்வதற்காக வாயெடுத்தார். நிறுத்திக்கொண்டார். நான்கு பேரும் உட்கார்ந்து எவ்வளவு நேரம் பல விஷயங்கள் குறித்து உரையாடியிருப்போம் என்பது அவரது நினைவுக்கு வந்தது. வீட்டில் உட்கார்ந்து நால்வரும் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அது குறித்த உரையாடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தனது மகளின் காதல், பிறகு பிரேக்கப் போன்ற சமாச்சாரங்களை உரையாடுவது அவருக்கு ஒவ்வாததாக இருந்தது. ஆனால், அதை அவனிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவனும் இந்த வார இறுதியில் வருகிறானா என்று கேட்டார். அவன் தனக்கு வேலையிருப்பதாகச் சொன்னான். பிறகு பரஸ்பர நலம் விசாரிப்புகளோடு அந்த அழைப்புத் துண்டானது.
இதோ இப்போது தினகரன் காத்திருப்பது பிஜூவின் வருகைக்காகத்தான். அவன் ஒருமுறை தினகரனுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறான். அப்பா, அவன் அவங்க அப்பா கூட சேர்ந்து குடிப்பாம்பா என்று ஸ்ரேயாதான் தினகரனிடம் சொன்னாள். இல்ல அங்கிள் பரவால்ல என்று அவன் தயங்கினான். குடித்த இரண்டு முறையும் இரண்டு பெக்கோடு நிறுத்திக் கொண்டான். தினேஷுக்கு குடிப்பதில் விருப்பம் இருந்ததில்லை. ஸ்ரேயாவுக்கும் அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. அந்த இரண்டு பெக்குக்குப் பிறகு அவன் தினேஷோடு வெளியே போனான்.
“ரெண்டு பெக் சரக்கு போட்டா, பசங்களுக்கு எப்பவும் பசங்க கூட பேசுறதுதான் சுவாரஸ்யமா இருக்கும் போல…” என்று தினகரன் கிண்டலடித்தார்.
“அவனுக ரெண்டு பெரும் சினிமா பத்தி நிறைய பேசுவானுங்கப்பா…”
“ஓ சினிமா இன்ஸ்ட்ரடா அவனுக்கு…”
“ரொம்பலாம் இல்ல, சுரேஷ் கோபி பேசுற இங்கிலீஷ விட மோகன்லால் பேசுற இங்கிலீஷ் பாலீஸா இருக்கும்…. இந்த மாதிரி எதாவது மொக்கையா பேசிட்டிருப்பானுக….”
தினகரன் சிரித்துக் கொண்டார், ஆனால், அவள் சொன்னதை அவர் வேடிக்கையாக மட்டுமே எடுத்துக்கொண்டார்.
காலையில் தினகரன் கிளம்பி அலுவலகம் போகும்போது வெண்ணிலா மட்டும் சமயலறையில் இருந்தாள். ஜிஜு சோஃபாவில் சுருண்டு படுத்துக் கிடந்தான். அப்படியே தினேஷ் படுத்திருப்பது போலவே இருந்தது.
“அவங்க வரும்போது அஞ்சு மணி இருக்கும்…” என்றாள் வெண்ணிலா…
“ஓ…” என்று மட்டும் சொன்னார் தினகரன்.
மாலை அவர் வீடு திரும்பியபோது, வீட்டில் வெண்ணிலாவும் ஸ்ரேயாவும் மட்டும் இருந்தார்கள்.
“அவன் எங்க…?”
“இங்கதாம்பா இருந்தான். இப்போதான் கடைக்கு போயிட்டு வர்றேன்னு வெளில போனான்…”
அவர் குளித்து உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தபோது பிஜூ வந்திருந்தான். சோஃபாவில் இருந்து எழுந்து, “நமஸ்காரம் அங்கிள்” என்று சொல்லி கைகொடுத்துவிட்டு ஸ்நேகமாகச் சிரித்தான்.
“ஊர்ல எல்லாம் எப்படி இருக்காங்க…?”
“சுகம் அங்கிள்…”
மலையாள வாடையுடன் அவன் பேசும் தமிழ் அவருக்கு உவப்பானது. இருவரும் வெறுமனே பேசிக்கொண்டிருந்தார்கள். சினிமா, அரசியல், கால நிலை என்பதாக உரையாடல் போனது. இருவரும் மற்றவரை போரடித்துவிடாமல் இடைவெளி விட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். திட்டமிடல் எதுவும் இல்லை, இயல்பாகவே அந்த உரையாடல் அப்படி அமைந்திருந்தது. வெண்ணிலாவோ அல்லது ஸ்ரேயாவோ வந்து அந்த உரையாடலில் கலந்துகொள்வார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். அவர்கள் இருவரும் வெண்ணிலாவின் அறைக்குள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிஜு வெகு இயல்பாக பேசிக்கொண்டிருந்தான். தாம் வருவதற்கு முன்பு இவ்வளவு நேரம் அவர்கள் மூன்று பேரும்தானே பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டார்.
எட்டு மணியானது. ‘எக்ஸ்யூமி’ என்று சொல்லிவிட்டு அவர் எழுந்து கழிவறைக்குச் சென்றுவிட்டு, திரும்ப வந்தார். அப்போதும் அவன் தனியாகத்தான் உட்கார்ந்திருந்தான். நடந்து போய் கதவைத் தள்ளி உள்ளே தலையை நீட்டினார். வெண்ணிலாவும் ஸ்ரேயாவும் எதிரும் புதிருமாக உட்கார்ந்து தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். தினகரனின் தலையைக் கண்டதும், நேரமாகிவிட்டதை உணர்ந்தவள் போல வெண்ணிலா எழுந்துகொண்டாள். “ஹாய் டாட்…” என்று சொல்லிக்கொண்டே ஸ்ரேயா எழுந்து வெளியே வந்தாள்.
மூன்று பேரும் கூடத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள்.வெண்ணிலா சமயலறைக்குப் போனாள்.
டிவி மெல்லிய ஒலியுடன் ஓடிக்கொண்டிருந்தது. மூவரும் டிவியில் பார்வையைக் குவித்திருந்தார்கள். அசாத்திய அமைதி நிலவியது. தொலைக்காட்சியின் சத்தத்தை மீறி, வெண்ணிலாவின் புடவை சராசரப்பு சமயலறையில் இருந்து கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது சூழல். அப்படி இருப்பது யாருக்கும் அசௌகரியமாக இல்லை என்பது போல மூவரும் உட்கார்ந்திருந்தார்கள். யாருடைய கையிலும் அலைபேசி இல்லை. ஒருவர் மற்றவர் முகத்தைப் பார்த்துக் கொள்ளவில்லை. ஆனால், அந்த சிறிய கூடத்தில் அப்படி குறிப்பாக பார்த்துக் கொள்ளாவிட்டாலும் கூட, ஒவ்வொருவரது முகமும் மற்றவரது பார்வை வரம்பிற்குள்தான் இருந்தது.
வெண்ணிலாவும் வரட்டும் என்று காத்திருக்கிறார்களோ என்று தினகரன் நினைத்தார். பிறகு ஏதோ நினைத்துக்கொண்டவர் போல எழுந்து தெருக்கதவின் அருகே போனார். சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருந்தது. கதவின் ஓரமாக நின்று தெருவை வேடிக்கை பார்த்தார். அந்த சொற்ப நேரத்தில் இரண்டு மூன்று பைக்குகள் அதீத வேகத்தில் பறந்துகொண்டிருந்தன. திரும்பவும் உள்ளே வந்தார். அவர் வெளியில் போனபோது என்ன மாதிரி உட்கார்ந்திருந்தார்களோ அதே தோரணையில் இருவரும் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களது முகத்தில் அதிருப்தியோ ஆத்திரமோ இல்லை. அவர்களது முகத்தில் வேறு எதையாவது தேடுவது அத்துமீறலாகிவிடும் என்று நினைத்து பார்வையைத் தவிர்த்துவிட்டார். முன்பெல்லாம் பிஜூவுடன் இருக்கும்போது ஸ்ரேயாவின் கண்கள் மின்னிக்கொண்டிருக்குமோ என்று தோன்றியதை அவசரமாக அழித்தார். தாம் இதை ரொம்பவும் ஆராய்கிறோம் என்று அவருக்கே அதிருப்தியாக இருந்தது.
குழந்தைகள், இருவரும் வளர்ந்த, சுதந்திரமான குழந்தைகள், அவர்களுக்குத் தெரியும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், தனது அறைக்கதவின் வாசலில் நின்றுகொண்டு, “பிஜூ வர்றியா… ரெண்டு பெக் விஸ்கி…” என்று குடிப்பது போல சைகை காட்டினார்.
“கொஞ்ச நேரம் அங்கிள், நான் வர்றேன்… நீங்க ஆரம்பிங்க…”
தினகரன் கதவை மூடாமல் உள்ளே போய் அலமாரியில் இருந்த சரக்கு போத்தலையும் தண்ணீர் பாட்டிலையும் இரண்டு கிளாஸையும் எடுத்து டீபாயின் மீது வைத்துக்கொண்டு கட்டிலில் காலை நீட்டி சாய்ந்துகொண்டார். அவரது கைக்கு அருகில் தொலைகாட்சி ரிமோட் கிடந்தது. கூடத்தில் இருந்து மெல்லிய ஒலி உள்ளேயும் கசிந்து கொண்டிருந்ததால் அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியை அவர் உயிர்ப்பிக்கவில்லை. முதல் பெக் அருந்திவிட்டு வெறுமனே ஓடாத டிவியைப் பார்த்துக்கொண்டு அப்படியே சாய்ந்திருந்தார். அவர் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பிஜூவின் முகம் தெரிந்தது. ஸ்ரேயாவின் கால்கள் மட்டும் தெரிந்தன. அவன் இன்னும் டிவியில் ஆழ்ந்திருந்தான். வெண்ணிலாவின் சுவடே இல்லை. தினகரன் இரண்டாவது பெக் போனார்.
“டாட்…” என்று மென்மையாக அழைத்துக்கொண்டே ஸ்ரேயா வந்து அவரது கைக்கு எட்டும் தொலைவில் கட்டிலின் மத்தியில் உட்கார்ந்தாள்.
“நானும் பிஜூவும் பிரேக்கப் பண்ணிக்கலாம்னு இருக்கோம்ப்பா…”
அவளது குரல் கமறியது போலவோ அல்லது தடுமாற்றத்துடன் இருப்பது போலவோ அவர் எண்ணிக்கொள்ள விரும்பினார். ஆனால், அவளது குரல் பிரித்தறிய முடியாத தொனியில் இருந்தது.
“ஏன்…?” அவரது பார்வை ஓடாத டிவியின் மீதே இருந்தது.
இப்போது பிஜூ எழுந்து வந்து நிலையின் விளிம்பில் நின்றான்.
“உள்ள வா பிஜூ, உக்காரு…” என்றார்.
அவன் உள்ளே வந்து அலமாரியில் சாய்ந்து நின்றுகொண்டான்.
“ஆமா அங்கிள், நாங்கள் பிரிந்து விட விரும்புகிறோம்…” தெளிவான மலையாள ஆங்கிலத்தில் சொன்னான்.
தினகரன் இருவரது முகத்தையும் மாறி மாறிப் பார்த்தார்.
“ஏன்னு கேட்டேன்…!”
இப்போது கேள்வி இருவருக்கும் பொதுவானதாக இருந்தது.
“நான் விர்ஜின் இல்லன்னு அவன் நினைக்கிறாம்ப்பா… “
தினகரன் நீட்டியிருந்த கால்களை மடக்கி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
“நீங்க ரெண்டு பேரும் லிவ்வின்ல இருக்கீங்க. எதுக்கு இந்த கேள்வி வருது இப்போ…?”
“இல்ல அங்கிள், நான் சொல்றது எங்க ரிலேஷன்ஷிப்புக்கு முன்னாடி…”
சில வினாடிகள் அவனை உற்றுப் பார்த்தவர், “ப்ளீஸ் கெட் அவுட் ..” என்று சொன்னார்
இரண்டு விநாடிகள் தயங்கியவன், மெல்ல நடந்து போய் கூடத்தில் உட்கார்ந்தான்.
“சத்தியமா நான் அவன் நினைக்கிற மாதிரி இல்லப்பா… நீங்க வேணா இப்போ எழுந்து வெளியில வாங்க, நம்ம பூஜை ரூமுல இருக்குற விளக்குல நான் சத்தியம் பண்றேன்… “
தேற்றுவதற்கு இதமான சொற்களை சட்டென்று தேட வேண்டியதாகிற்று. அமைதியாக இருந்தார்.
‘’லிவ் இன்ல இருக்கிறேன்ப்பா அம்மாகிட்ட சொல்லிராத’’ என்று சொன்ன ஸ்ரேயாவின் நேர்மையில் குழந்தமை இருந்ததாக நினைத்தார். ஆனால், ‘’லவ் பண்றதுக்கு முன்னாடி நான் வெர்ஜினா இருந்தேனான்னு கேக்கறான்பா’’’ என்று சொல்லிய ஸ்ரேயாவுக்கும் தனக்கும் இடையே சீர்செய்ய இயலாத அந்நியத்தன்மை வந்துவிட்டதாக உணர்ந்தார்.
அன்று நள்ளிரவு வரை வழக்கத்தை விட அதிகமாக தினகரன் குடித்துக்கொண்டே இருந்தார்.
காலையில் எழுந்து பார்க்கும்போது, பிஜூயைக் காணவில்லை.
“காலையில போகலாம்னு சொன்னேன். அவன் கேக்கல, நைட்டே கிளம்பிட்டான், நீங்க கெட் அவுட்டுன்னு சொன்னதுல சங்கடப்பட்டுட்டான் போல…” என்றாள் வெண்ணிலா.