
நேற்று மாலை கோழிகள் அடையும்
நேரத்தில் வாசலில் நின்று நாய்
குரைத்துக் கொண்டேயிருந்தது
பல நாள் திட்டமிட்ட அவர்கள்
திடீரென மிகத்தாட்டியமாக
எங்கள் கூரைக்குள் நுழைந்தனர்.
நாய், தாத்தா, அம்மாச்சி,
அம்மா, அப்பா,
அண்ணன், அக்கா என்று
எல்லோரது தோலிலும்
ரசாயனங்களைத் தடவி
உடலின் துவாரங்களில் பெரும்
குழாய்களைக் குத்தி ஆழமாக இறக்கினர்.
அசந்தநேரம் பார்த்து
என்னைக் கவ்விச்சென்று
பஞ்சாரத்துக்குள் போட்டு
பத்திரப்படுத்துவிட்டு
துடிதுடித்து வெடித்தது நாய்
கொஞ்சநேரத்தில் எல்லோரும்
கட்டியான கரும்புகையினைக்
கக்கிக் கொண்டே உயிரை விட்டனர்.
கழிவுக்கசடுகள் வெளியேறிய அந்த விழிகளனைத்தும்
பஞ்சார அடைக்கோழியின்
றெக்கைகளுக்குள் பதுங்கியிருந்த
என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.
அவர்கள் கிளம்பியவுடன்
ஓடிச்சென்று குருணை
அரிசிகளைப் போல
குடும்பத்தினரை வேகமாகக்
கொத்தியெடுத்து இரைப்பைக்குள்
வைத்துக் கொண்டேன்.
குடும்பத்தினரின்
மேனியில் இருந்த
கம்பிகளும் இயந்திரங்களும்
இரைப்பையினைப் புடைத்துக் கொண்டு
வெளியே தெரிந்தன.
அவர்கள் திரும்ப வருவதற்குள்
என்னையும் பஞ்சாரத்தையும்
தூக்கிக் கொண்டு
அடைக்கோழி வேறொரு இடத்திற்கு
பறந்து புலம்பெயர்ந்தது
நாய் தின்ற பச்சிலையை
நானும் தின்று இரைப்பைக்குள்
இருந்தவர்களை
அங்குத் துப்பினேன்
எல்லோரும்
கோழிக்குஞ்சின் விரல்களால்
புதிதாக நடக்கத் தொடங்கினர்.