நாம் அனைவருமே பாலுத்தேவரின் கன்னங்கள்! – ஸ்டாலின் சரவணன்
கட்டுரை | வாசகசாலை

“எலிகளுக்கான சுதந்திரத்தைப் பூனைகள் தருமென்று நம்புவதைப் போன்றதுதான் பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் போராடிப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதும்” என்றார் பெரியார்.
யாரேனும் ஒரு மீட்பர் வந்து விடுதலை பெற்றுத் தருவார் என்று காத்திருக்காமல், பெண்களுக்கான உரிமைகளைப் பெண்களே போராடி பெற்றுத் தருவதாக, ’அயலி’ இணையத் தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் முத்துக்குமார் பெரியார் மற்றும் அம்பேத்கரின் சிந்தனைப்பள்ளியில் இருந்து வந்திருக்கிறார். அந்த மனநிலையே பெண்களின் பிரச்சனையைப் பெண்களின் கண்கொண்டு பழுதின்றி நோக்க வைத்துள்ளது. “நீ புடுங்குறது பூராமே தேவையில்லாத ஆணிதான்” என்பது போல் ஆண்மைய அதிகாரங்களையும் அது முன்வைக்கும் கட்டுப்பாடுகளையும் இந்தத் தொடரின் பெண் கதாபாத்திரங்கள் அடித்து நொறுக்குகிறார்கள். ஒரு வகையில் பார்த்தால், இந்தத் தொடரை, ’பெண் கல்வியின் முக்கியத்துவம்’ என்ற சட்டகத்துக்குள் அடைக்கப் பார்ப்பதும் கூட ஆதிக்க மனநிலையே.
ஒரு ஊர். அதில் ஒரு வழக்கம். வயது வந்த பெண்பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் போகக்கூடாது. அயலி கோவிலுக்குள் நுழையக்கூடாது. மீறிப் போனால் ரத்தம் கக்கி சாவாள், ஊரார் கண்டுபிடித்தால் அவள் தலை மொட்டையடிக்கப்பட்டு அவள் விலக்கி வைக்கப்படுவாள். அயலிக்குக் கோபம் வந்தால் வயல்கள் பற்றி எரியும்… ஊரே பாழ்படும். இதனை ஒரு பெண் மீறுகிறாள். மீறல் அநாயாசமாக இருப்பதில்லை, தண்டனை மீதான பயம் இருக்கிறது, அதை மீறுகிறது விடுதலைக்கான வேட்கை.
பெண்களை மையமாக வைத்து நடத்தப்படும் உடல் அரசியல், பாலின அரசியல், பெண் உடலின் மீது ஏற்றி வைக்கப்படும் சாதித் தூய்மைவாதம் ஆகிய எல்லாவற்றையும் ஆண்மைய நோக்கு – மதம் – சாதி ஆகிய மூன்றும் இணையும் புள்ளியிலிருந்து கதையில் பேசியிருக்கிறார்கள். காட்சியும் வசனமும் மாறி மாறி சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்குகின்றன. முதல் அத்தியாயத்தில் இருந்து எட்டாவது அத்தியாயம் வரை நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறாள் தமிழ்ச்செல்வி எனும் சிறு பெண். உடல்மொழி, கண்கள், புருவங்களால் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறாள். ’வேதம் புதிது’ திரைப்படத்தின் ’பாலுத்தேவர்’ கதாபாத்திரமாக நாம் கன்னத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறோம். இருக்கவேண்டும்.
அம்மா கதாபாத்திரத்தில் வரும் அனுமோள், இக்கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போவதற்கான காரணத்தைக் கூறி இருக்கிறார். ஏழாவது படிக்கும்போதே தனக்குத் திருமணம் செய்துவைக்க முயன்றதாகவும் அதனைக் கடந்து வந்திருப்பதாகவும் கூறினார். இப்போது வரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தமிழ்ச்செல்வியின் அம்மா பாத்திரமும் அவரும் வேறு வேறல்ல. “நீதாம்மா எனக்கு அயலி” என்று தமிழ்ச்செல்வி சொல்லும்போது ஆமோதித்து நாமும் வேகமாகத் தலையாட்டுகிறோம்.
அம்மாவும் பெண்ணும் கயிற்றுக்கட்டிலில் நிலவொளியில் படுத்துக்கொண்டு உரையாடும் இடமெல்லாம் உச்சம். “வயதுக்கு வந்ததும் யாரிடமும் கூறாமல் அம்மாவிடம் ஓடி வந்துவிடவேண்டும்” என்கிறாள். அதைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வி தனது மனதில் இருக்கும் கேள்விகளை முன்வைக்கிறாள். கயிற்றுக்கட்டில், நிலா என்றால் தமிழ் சினிமாக்களில் வழக்கமாக வரும் கவர்ச்சி நடனம் என்பது இனி மறந்துபோகும். இயக்குநர் முத்துக்குமாரின் படைப்பும் வசனகர்த்தா சச்சினின் உரையாடல்களுமே நினைவுக்கு வரும்.
இந்தத் தொடரில் கல்வி மறுக்கப்படும் பெண்களுக்கு பள்ளியே தலைவைக்கும் தாய்மடியாக இருக்கிறது. அதனால்தான் பள்ளித் தலைமையாசிரியர் சாவித்திரி கதாபாத்திரம் அனுமதி அளித்ததும் முன்னாள் மாணவிகள் சிறகை விரித்து துள்ளி ஓடுகின்றனர். தாங்கள் தொலைத்த கனவுகளைப் பள்ளிச் சுவரில் எழுதி ஆசுவாசம் அடைகின்றனர்.
“வாடி, போடி” என்று அம்மாவை அழைப்பது, அம்மாவுடன் பிணங்கிக்கொண்டு மீண்டும் ஒட்டி உறவாடுவது, ஆசைகளையும் அச்சங்களையும் பகிர்ந்துகொள்வது என்று தாய்–மகள் உறவின் எல்லா பாரதூர நுணுக்கங்களையும் அட்டகாசமாக அருகில் இருந்து பார்த்தது போலவே காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். “சும்மா இரும்மா” என்று அம்மாவை அதட்டிவிட்டு மகள் பேசும் காட்சிகள் அவ்வளவு அழகானவை. பெண்களின் பிரச்சனையைப் புரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர்களின் மன உணர்வுகளை அப்படியே காட்சிக்குக் காட்சி கொண்டு சேர்க்கும் படைப்பாக மலர்ந்திருக்கிறது.
கொஞ்சம் பிசகினாலும் நாடகமாகிவிடும் ஆபத்து, கருத்துகளும் நாம் மேடைகளில் கேட்டுப் பழகியவைதான். ஆனாலும் துளி கூட மிகையில்லாத கச்சிதம். வசனங்கள் படத்தை வழிநடத்துகின்றன. “நாமாக சொல்லாவிட்டால் யாருக்கும் தெரியாது” என்று தமிழ்ச்செல்வி அதட்டும் இடங்களில் அற்புதங்கள் கைகோர்க்கின்றன. பிள்ளைக்கு உணவூட்டும்போதே சாதிப்பெருமை பேசும் ஒரு தகப்பனைப் பார்த்து, “ஏன்யா பிள்ளைக்குப் பீய ஊட்டுற” என்று கேட்கும் இடத்தில் சாட்டையாக சொடுக்குகிறது வசனம்.
ஆணாதிகம், சாதி, மதம் ஆகியவற்றைக் கொண்டு திட்டமிட்டு கட்டமைக்கப்படும் வளையத்துக்குள் தானே விழுந்து மாட்டிக்கொள்ளும்படி பெண் தயார்படுத்தப்படுகிறாள். பழக்க வழக்கம், பாரம்பரியம், கட்டுப்பாடு என்ற போர்வையில் இவை ஊட்டி வளர்க்கப்படுகின்றன. பெண்களை நேரிடையாக ஒடுக்கினால் அவர்கள் கிளர்ந்தெழுவார்கள் என்பதால் பொருளாதார சுதந்திரத்தைப் பறிப்பது, மறைமுகமான கயிறுகளால் அவளைப் பிணைப்பது, சாமி மீது எல்லாவற்றையும் ஏற்றிவைப்பது ஆகியவற்றைக் கதையில் வரும் ஆண்கள் செயல்படுத்துகின்றனர். அந்த ஊரில் வயதுக்கு வந்தவுடன் பெண்ணைச் சுற்றி திடீர் சுவர்கள் எழும்புகின்றன. அதை வார்த்தைகளாலும் செயல்பாடுகளாலும் தமிழ்ச்செல்வி உடைக்க நினைக்கிறாள். கல்வி மூலம் விடுதலை பெற்று அனைத்து பெண்களுக்குமான வெளியை உருவாக்க நினைக்கிறாள். இங்கு மாதவிடாயே மையக்களமாக இருக்கிறது.
மீசை முளைக்கும் பருவத்தில் இருக்கும் ஆண், எண்ணெயால் அதை நீவி வளர்ப்பது குறித்து மட்டுமே கவலைப்படுகிறான். வயதுக்கு வருவது குறித்து பெண்களிடம் அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் அள்ளித் தெளிக்கப்படுகின்றன. வயதுக்கு வருவதைக் காரணம் காட்டி பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்படுகிறது.
வயதுக்கு வருவது கூட எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, தமிழ்ச்செல்வியின் தோழிக்கு அது ஜாங்கிரி சாப்பிடும் வாய்ப்பாகத் தெரிகிறது. தமிழ்ச்செல்வி முதலில் அதை வைத்து ஜிகினாப் பொட்டும் பட்டுப்பாவாடையும் வாங்கத்தான் ஆசைப்படுகிறாள். அம்மாக்களுக்கோ அது ஒரு பயமாகவும் ஏக்கமாகவும் பொறுப்பாகவும் மாறி மாறி இருக்கிறது. வயதுக்கு வந்தால் பள்ளிக்குப் போக முடியாது என்பது உறுதியாகத் தெரிந்ததும்தான் அந்த நிகழ்வை நினைத்து தமிழ்ச்செல்வி பயப்படத் தொடங்குகிறாள். வாழ்வின் அடுத்த கட்ட பயணத்துக்கான முதல் படி ஒன்று இளம்பெண்ணுக்கு திகிலூட்டும்படியாக மாறும் அவலம் பார்வையாளர்களையும் பற்றி இழுக்கிறது. சுருக்கும் வயிற்று வலியில் தமிழ்ச்செல்வி முழங்கால் மடக்கி அமரும்போது நாமும் பதறுகிறோம். கதையைத் தயார் செய்தபிறகு கீதா இளங்கோவனின், ’மாதவிடாய்’ ஆவணப்படத்தைப் பார்த்ததாகவும் மாதவிடாய் தொடர்பான பல்வேறு அம்சங்களைக் கதைக்களத்தில் சேர்க்க அது உதவி செய்ததாகவும் இயக்குநர் முத்துக்குமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவரது நுணுக்கமான தேடல் காட்சிகளில் தெரிகிறது.
நாயகியின் அப்பா கதாபாத்திரமாக வரும், ’அருவி’ மதன் நேர்த்தியான நடிப்பை கவனமாக வழங்கி இருக்கிறார். பாசத்தை முன்வைத்து அடக்க நினைக்கும் தந்தையிடம் தமிழ்ச்செல்வி கேட்கும் கேள்வி சமூகத்தில் தொடர்ந்து எதிரொலிக்கவேண்டும்: “பாசம் வைத்திருக்கிறாய் எண்றால், அம்மாவைப் போல நீயும் என்னோடு அல்லவா கைகோர்த்து கூடவே நிற்க வேண்டும்?”
தமிழ்ச்செல்வியின் தெளிவு அவளை சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது. புத்தகப்பைக்குள் துணிவை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். அவளது கேள்விக்கணைக்கு பெண் தெய்வமான அயலியும் தப்பவில்லை. ஒருகட்டத்தில் அயலிக்காகவும் அவளே குரல் கொடுக்கிறாள். அயலி கூட யாரோ பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கலாம் என்றும் ஒரு வசனம் வருகிறது.
பள்ளிக்குப் போகக் கூடாது, கோவிலுக்குள் நுழையக்கூடாது, வெளியூர் போகக்கூடாது… இவை எல்லாம் வந்து நிற்கும் ஒரே இடம் சாதித் தூய்மைவாதமே. தெய்வமே பெண்தான், அந்தப் பெண் தெய்வத்தின் கோயிலுக்குள் நுழையக்கூட ஆண்களுக்கு அனுமதியில்லை, ஆனாலும் அதை வைத்தே நிழல் கரங்களால் பெண்களை ஒடுக்கி ஆட்டிப் படைக்கிறார்கள் அந்த ஊரின் ஆண்கள்.
தலைமையாசிரியை கதாபாத்திரம் தன்னம்பிக்கை தருவதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆண் ஆசிரியர்களை வார்த்தைகளால் அடக்குவது, ஊர்ப் பெண்களைப் பள்ளியை சுற்றிப்பார்க்க அனுமதிப்பது என, அவரவர் எல்லைக்குள் இருந்தபடியே கொண்டு வரக்கூடிய மாற்றங்களைக் கண்முன் நிறுத்துகிறது தலைமையாசியர் பாத்திரப்படைப்பு.
தமிழ்ச்செல்வியின் விடுதலைக்கு சகோதரித்துவத்துடன் ஊர்ப்பெண்கள் ஒத்துழைக்கின்றனர். ஆண்கள் முன்வைக்கும் வழமைகளை ஆண்மைய சிந்தனையுடன் அப்படியே ஏற்பது என்ற இடத்தில் தொடங்கும் பல பெண்கள் எது முன்னேற்றம் என்று உணரும் இடத்துக்கு வரும் பயணம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் சரி என்று ஏற்பது, அவற்றால் வரும் வேதனைகளை நினைத்து மருகுவது, அயலியின் கோபத்துக்கு பயப்படுவது, ஆண்களால் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்துக் கோபப்படுவது, உரக்கக் கேள்வி கேட்பது, தங்களால் இயன்ற சிறு மீறல்களைச் செய்வது, தமிழ்ச்செல்விக்குத் துணை நிற்பது என ஒரு உளவியல் எழுச்சிக்கு உள்ளாகிறார்கள். பெண்ணுக்குப் பெண்ணே எதிரி, சமூக அடக்குமுறைகளைப் பெண்தான் போற்றிப் பாதுகாக்கிறாள் என்ற கட்டுக்கதைகளை எல்லாம் சுக்குநூறாக்கி இருக்கிறது அயலி.
அயலியின் பூசாரியாக வரும் முதிர்ந்த பெண் கதாபாத்திரம், “திருமணம் நடக்காதது, வயதுக்கு வராதது குறித்துக் கவலையுற்றேன். திருமணம் செய்துகொண்ட நம் ஊர் பெண்கள் படும் பாட்டைப் பார்த்து அயலி தெய்வம் என்னைக் காப்பாற்றியதாகவே உணர்கிறேன்” என்று பேசும் வசனம் எல்லாப் பெண்களையும் உணர்வுபூர்வமாகத் தொடக்கூடியது. இவரது கதாபாத்திரம் அம்பையின், ’காட்டில் ஒரு மான்’ சிறுகதையை நினைவுபடுத்தியது.
எதிர்மறை கதாபாத்திரங்களும் பிரமாதப்படுத்தியுள்ளனர். ரேவாவின் இசை தேவைக்கேற்ப வெளிப்பட்டு கதையின் ஓட்டத்துக்குத் துணை செய்கிறது. வசனங்களும் ஒளிப்பதிவும் கதையின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு நேர்த்தியாகப் பயணிக்கின்றன. தொ.பரமசிவன் கட்டுரைகளில் காணப்படும் நாட்டார் வழக்கங்களையும் இக்கதைக்குள் கொண்டு வந்திருப்பது கூடுதல் பலம். ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பமே கல்விபெறும் என்பார்கள். அயலி இணையத் தொடர் ஒரு படி மேலே போய், “ஒரு பெண் படித்தால் ஊரே படித்ததுபோல” என்கிறது.
பாலின சமத்துவத்துக்காக இதுவரை பல படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் முதல் முறையாக சக பெண் கதாபாத்திரங்களின் புரிந்துணர்வே தளைகளை விடுவித்துக்கொள்ள ஒரு கருவியாக மாறுவதைப் பார்க்க முடிகிறது. அயலியின் மனித வடிவமாக வரும் தமிழ்ச்செல்வி ஊரைக் காக்கும் தெய்வமாக பெண்களின் விடுதலைக்கு வழிவகுக்கிறாள்.
*****
//சகோதரித்துவத்துடன்// சிறந்த புதிய வார்த்தை!
படத்தைப் பார்க்கவும், அதன் நுணுக்கங்களைத் தொடர்ந்துசென்று அவ்வழியில் சிந்திக்கவும் தூண்டுகிறார் கட்டுரையாசிரியர். நன்றியும் வாழ்த்தும்!