ஒரு சிறு சிமிர்
போதும் அமர்வதற்கு
ஒரு சிறு கிளை
போதும் கூட்டுக்கு
ஒரு சிறு இலை
போதும் குழந்தைக்கு
கிட்டுமா
பறவை வாழ்க்கை?
****
புவி மேல்
கவியும்
வான் கண்ணாடிக்
குடுவையில் படிந்திருக்கிறது
மேகச் சாம்பல்
ஒரு மயில் கொன்றை
சிவந்த பூப்பிழம்புகளால்
மூட்டுகிறது தீயை
மண்ணறை விடுத்து
மொலு மொலுவென
எழும்பும்
ஈசல் விட்டில்கள்
ஒளிப்பூக்களை
அண்டப் பறக்கின்றன
*****
’சிறுக்கி ஒருத்தி
சிங்காரக் குறத்தி…’
அதிகாலைப் பேருந்தில்
ஒலிக்கிற அந்தப் பாடல்
பேருந்தை நிறைக்கிறது.
‘பாட்டை நிறுத்துடா’
ரௌத்திரம் பொங்க
கத்துகிறாள்
குறத்திப் பயணி
பேருந்து ஓட்டுநன்
அதிர்ச்சியில்
சடன் பிரேக் அடிக்கிறான்
மணிக்கு 1000 கிலோ மீட்டர் வேகத்தில்
சுழன்று கொண்டிருக்கும்
பூமியும்
ஒரு கணம் நிற்கிறது.
*****
உக்கிரம் கொள்கிறது
ஊதக்காலம்
பனி நெய்யும் சல்லாத்துணி
மலைத் தொடர்களைப்
போர்த்துகிறது
காட்டோடை சலசலக்கத்
தொடங்கிவிட்டது
இனி கொள்ளுக் கொடிகள் பூப்பெடுக்கும்
ஆடுகளை வேளையோடு
பத்தி
பட்டியில் அடைத்துவிட்டு
கொளுத்த வேண்டும்
குளிர்.
*********