இணைய இதழ்இணைய இதழ் 68சிறுகதைகள்

பாலாமணி பங்களா – கமலதேவி 

சிறுகதை | வாசகசாலை

காதில் கிடந்த எட்டுக்கல் வைரக் கம்மலை கழற்றி வைத்த அந்த அதிகாலையில் பாலாமணி நீண்ட நாடகத்தை முடித்துவிட்ட மனநிலையில் இருந்தாள். பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பழைய நவாப் காலத்துக் கட்டில். மாசி மாதக் குளிர் அப்போதுதான் திறந்து வைத்த சன்னல் வழியே உள்ளே புகுந்து அறையின் இதமான சூட்டைக் குலைத்தது.

எப்போதும் பங்களாவில் ஐம்பது அறுபது பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டும் சொல்லாமலும் வெளியேறிவிட்டார்கள். இவளே மற்ற நாடகக் கம்பெனிகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தாள்.

நினைக்க நினைக்க அறைக்குள் மூச்சு முட்டியது. வெளியே வந்து பின்பக்கமாக நின்றாள். முதல் மாடியின் பின்பக்க உப்பரிகை அது. கைப்பிடிக் கட்டையில் கையூன்றி குனிந்து நின்று கொண்டாள். எந்த நேரமும் வயிற்றுப்புண்ணின் வலி இருந்து கொண்டிருந்தது. வரிசையாக அத்தனை அறைகளும் ஒழிந்து கிடந்தன. சுவரில் அங்கங்கே திட்டு திட்டாய் சிவந்த சாந்துப்பொட்டு இழுப்பல்கள் மங்கியிருந்தன. காய்ந்த பூச்சரம் ஒன்று காலில் தட்டுப்பட்டதும், பாலாமணி சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு நின்றாள்.

ஏதோஒரு பறவையின் குரலால் கண்களைத் திறந்தாள். இருளிற்குள் கூர்ந்து தோட்டத்தைப் பார்த்தாள். நீச்சல்குளத்தின் வெள்ளை நிறம் கண்களில் தட்டுப்பட்டது. அங்கு அமர்ந்து சடை பின்னிக்கொண்டிருந்த போதுதான் ஜெயக்கா, ‘ஊருக்குப் போகட்டுமா பாலா?’ என்று கேட்டாள்.

முதன்முதலாக ஜெயக்கா பங்காளாவிற்கு வந்து நடுக்கத்துடன் நின்ற கோலம் அவள் கண்முன்னால் வந்தது. 

“பேரன்ன?”

“ஜெயசத்தி,”

“ஊரு,”

“முசிறிக்கிட்ட ஜமூனாபுரம்மா,”

“ஊரை விட்டு எங்கியும் போனதில்லையோ?”

இல்லையென்று தலையாட்டினாள்.

“இவ்வளவு தொலைவு எப்படி வந்த,”

“நாடகம் பாக்க வந்த அய்யாரு தான் உங்களப்பத்தி சொன்னாரு. மாயனூர் முசிறி வரைக்கும் நெல்லுமூட்டை வண்டியில வந்தேன்… அய்யரு சொன்ன மாறியே திருச்சியில நாடகம் பாக்கறதுக்கு ஏறுன கும்பலோட ரயில்ல ஏறிட்டேன்”

பக்கத்தில் இருந்தவள், “அதுக்குப் பேரு பாலாமணி ஸ்பெசல் ரயிலு..” என்று சிரித்தாள். அவளை பார்வையில் அதட்டிவிட்டு முக்காலியில் இருந்து எழுந்து கொண்டாள். மர அலமாரியைத் திறந்து புடவையை எடுத்து இவளிடம் நீட்டினாள்.

“பின்னாடி தோட்டத்துல கெணறு இருக்கு..போய் தலைக்கு தண்ணி ஊத்திக்கிட்டு சேலைய மாத்திக்க. சோறு தின்னுட்டு படு. நாடகம் முடிச்சுட்டு வரேன்,” என்றபடி வெற்றிலை சிவந்த வாயுடன், மூச்சுக்காற்றில் புல்லாக்கு அசைய சிரித்துப் பேசியபடி ஐந்தாறு பெண்கள் சூழ சென்றாள்.

தோட்ட வேலை செய்த ஜெயக்காவை பாலாமணி தினமும் அழைத்து நாடக ஒத்திகைகளை பார்க்கச் சொல்வாள்.

“நடிப்புக்கும் ஆட்டத்துக்கும் மனசு காத்துல பறக்கற பறவையா ஆகனுக்கா..சிட்டுக்குருவிக்கு பெருசா வானமில்ல,” என்று பாலாமணி சொல்லி வருந்திய போது, “நான் தோட்ட வேல செய்யறேன் பாலா..ஊர்ல மண்ணுல கெடந்தவ தானே,” என்று ஜெயாக்கா ஒதுங்கிக்கொண்டாள். பாலாமணி ஓய்வு நேரத்தில் தோட்டத்திலேயே கிடப்பாள். அதனால் உண்டான அன்பு இருவருக்குள்ளும் இருந்தது.

ஜெயக்கா பாலாமணியின் தோளைத் தொட்டு உசுப்பினாள்.

“பேத்திக்கு கல்யாணமாம். கடுதாசு வந்துருக்கு..நீயும் எங்கூட வந்துரு பாலா,”

பாலாமணி புன்னகைத்தாள்.

“மதுரையில நிறைய நாடக கம்பெனி இருக்காம். அங்க போகனும்,”

“அங்க உனக்குன்னு யாரு இருக்கா,”

“இன்னும் மனசுல பாட்டும் வசனமும் மிச்சமிருக்குக்கா..அப்புறம் மீனாட்சி இருக்கா..” என்று சிரித்தபடி கடைசியாக கழுத்தில் எஞ்சிக்கிடந்த உள்கழுத்து சங்கிலியை கழட்டிக்கொடுத்தாள்.

“வேணாம் பாலா,”

“கல்யாணப் பொண்ணு கழுத்துல கெடக்கட்டும்..இங்கருந்தா எப்படியும் கைமாறித்தான் போகும்,” என்று கொடுத்தனுப்பினாள்.

அடுத்து வந்த நாட்களில் விடைபெற யாராவது வருகிறார்கள் என்றால் எதாவது கொடுக்கனுமே என்று பதறி அந்தப் பெரிய அறையின் அலமாரிகளை, நகைப்பெட்டிகளை, பணப்பெட்டிகளை பாலாமணி தேடத் தொடங்கினாள். அதைத் தெரிந்து கொண்ட நடிகைகள், வேலையாட்கள் சொல்லாமலேயே கிளம்பிச் செல்லத் தொடங்கினார்கள்

நினைவுகளில் இருந்து வெளிவந்து பாலாமணி தோட்டத்தைப் பார்த்தாள். உடனே சந்திராவின் நினைவு வந்தது. அவள் ஒரு கிளி பைத்தியம்.

“இந்த கிளிகளுக்கு என்னா ஒரு பச்ச நெறம். பழுத்த பழமா வாயும்..” என்று கண்கொட்டாமல் கிளிக்கூட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பாள். ஒவ்வொரு திரைசீலை எழுதும் போதும் ‘கிளி எழுதினா நல்லாயிருக்கும்’ என்பாள். அவள் ஆசைப்படியே தாரா ஷஷாங்கம் நாடகத்தில் தேவக்கன்னிகை தாரை சாபம் பெற்று மானிடப்பெண்ணாகி பூமிக்கும் வந்து இறங்கும் இடமாக கிளித்தோப்பை திரைச் சீலையாக வரைந்தார்கள். கனி மரங்களும் கிளிகளுமாக பச்சையும் சிவப்புமான திரைச் சீலை. அந்தக்காட்சி சோகமாக ஆவதற்கு பதில் குழந்தைகளின் கைத்தட்டல்களால் குதூகலமான காட்சியாக மாறியது. சிறுமிகள் தங்கள் கைகளில் வைத்திருந்த சில்லறைகளை வசூல் உண்டியல்களில் போடும் காட்சியாகிப் போனது. மையெழுதிய விரிந்த கண்களும், பாவாடை சட்டையும், இறுக்கிப்பின்னி கட்டிய குஞ்சர சடைகளை ஆட்டி அவர்கள் குதூகலிப்பார்கள். அந்த வசூல் உண்டியலை மட்டும் பாலாமணி தனியே வைக்கச்சொல்வாள்.

முதன்முறையாக அந்த காட்சி அத்தனை வெற்றி பெற்றதைக் கண்ட பாலாமணி, சந்திராவை கட்டிப்பிடித்துக் கொண்டாள். “பொண் கொழந்தைகள் என்னைப் பாத்து இம்புட்டு சந்தோசப்படுறத இப்பதாண்டி கண்ணாறப் பாத்தேன்..” என்று சட்டென்று கண்ணாடியைப் பார்த்து தேங்காய் எண்ணெய்யில் நனைத்த இலவம்பஞ்சு உருண்டையில் கண் மையை ஒற்றி எடுத்து துடைத்தாள். 

வானத்தை அண்ணாந்து பார்த்தாள். மரங்களை, செடிகளை, நீச்சல் குளத்தை மாற்றி மாற்றிப் பார்த்தாள். மயில்களையும் மான்களையும் மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்ற நாள் கண்முன்னால் வந்தது. வெளிச்சம் வந்து விடும் என்ற எண்ணம் வந்ததும் திரும்பி நடந்தாள்.

இடதுபுறம் இருந்த நீண்ட பண்டகசாலை தெரிந்தது. சணல் சாக்குகள் ஒன்றிரண்டு கிடந்தன. காலையில் எழுந்து குளித்ததும் முதன்முதலாக வரும் இடம் இதுதான். மரக்கால் நிறைய தானியத்தை அள்ளி பித்தளை போகினியில் போட்டுவிட்டு, ‘ஆளுங்க வர வர சோறு பொங்கிறனும்’ என்று புன்னகையுடன் சொல்வாள். அதற்காகக் காத்திருக்கும் பரிசாரகப் பெண்கள் சிரித்தபடி தலையாட்டுவார்கள். 

அடுத்த சாலையில் நாடக தீரைச் சீலைகள், மூங்கில்கள் கிடந்தன. மாதம் ஒரு முறை சீர் பார்த்து வண்ணம் ஏற்றி ஓரங்கள் சரிசெய்து வைக்கப்பட்டவை. பராமரிப்பு இன்றி நிறம் மங்கிக் கிடந்தன. நின்று கொண்டே இருந்ததால் பாலாமணியின் கால்கள் நடுங்கின.

‘ட்ராமால நடிக்கனும்’ என்று அக்காவிடம் சொல்லியது திரும்பத்திரும்ப நினைவில் வந்து பழைய நினைவுகளுக்குள் இழுத்துச்சென்றது. நினைவுகள் அவள் மனதில் இன்று நடப்பவை என காட்சிகளாக விரிந்தன. நவாப் மாளிகையில் பச்சை நிறப் பட்டுப் பாவாடை சட்டையில் சதிர் ஆட கற்றுக் கொள்கிறாள். நவாப் இறந்தபின் நவாப்புக்குச் சொந்தமான பழைய மச்சு வீட்டில் அக்காவுடன் மாற்றப்படுகிறாள். 

அன்று மச்சில் அமர்ந்து சாம்பிராணி கட்டியை உடைத்து பொடித்து வைக்கும் ராஜாமணி,”பாலா…நாலஞ்சு காவேரிக் கரவேலி பெரிய ஆட்கள் கேக்கறாங்க,” என்று சொல்லித் தயங்கி நிறுத்தினாள்.

ஈரமான கூந்தலை கைகளால் தட்டியபடி எழுந்து மேல் படியில் அமர்ந்த ராஜாமணிக்கு கீழே முதுகை காட்டிக்கொண்டு விரித்த கூந்தலுடன் பாலாமணி சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு சாம்பிராணி கரண்டியில் உள்ள கங்கை ஊதி கனல் துண்டமாக்குகிறாள்.

“ரெண்டாவதா? மூணாவதா? எங்கியாச்சும் ஒதுக்குபுறமா இருக்கனுல்ல.. அந்த ஆளோட மாளிகைக்கு உள்ளாற புலி கரடி தலையெல்லாம் மாட்டி வச்சிருக்கிறது கணக்கா வீட்டுக்கு வெளிய பாலாமணி.. ராஜாமணி… ரங்கநாயகி.. அவ இவனு காட்டிக்கறதுக்காவ..”

ராஜாமணி சாம்பிராணிப் பொடியை அள்ளி கங்குகளின் மீது தூவ புகை அடர்ந்து எழுகிறது. பாலாமணியின் ஈரப்பதமான பின்னங்கழுத்திற்கு கீழே ஒரு கையால் சாம்பிராணிக் கரண்டியை பிடிக்கிறாள். மறு கையால் கூந்தலை கற்றைகளாப் பிரித்து புகைக்குக் காட்டுகிறாள். 

“தாசி குலத்துல பெறந்துட்டு வேறென்ன பண்றது..இன்னும் கொஞ்சநாளுக்கு கை இருப்பு இருக்கு,”

காலை வெயில் ஏறிக் கொண்டிருக்கிறது.

“எனக்கு மட்டும் ஆடினா போறுன்னு ஒரு ஜமீன், மல்லிகாவை கூட்டிட்டுப் போனான்.. வெள்ளக்காரனுன்னு சலாம் போடற அதிகாரி ஒருத்தன் தோட்டத்து வீட்டோட இருக்கனும்னு சௌந்தரத்தை கூட்டிட்டுப் போன்னான். அவளுங்க ரெண்டு பேரும் எவ்வளவு பெரிய ஆட்டக்காரிங்க. இதுக்கா ஐஞ்சு வயசுலருந்து சலங்கைய கட்றோம்,”

ராஜாமணி நெற்றியில் கைவைத்து கிழக்கே கூட்டம் கூட்டமாகப் பறக்கும் பறவைகளைப் பார்த்தபடி சிவனே என்று இருந்தாள். சூரிய ஔி பட்டுஅவளின் அரக்கு நிறப் பட்டின் ஜரிகை மினுமினுப்பு கொண்டது. அவர்கள் அன்று கும்பேச்சுவரர் கோயில் பூஜைக்கு செல்வதாக இருந்தது. அங்கு வரும் ஜமீன்களிடம், மிராசுகளிடம் பாலாமணியை காட்டுவதற்கான மறைமுகமான ஏற்பாடு என்று பாலாமணிக்கும் புரிந்திருந்தது.

“கும்பேச்சுவரனுக்கே நாம இல்லேன்னு ஆயாச்சு…குடிபோதையில இருக்கறவன் பாக்கறதுக்காவ என்னால ஆட முடியாது..”

“பின்ன…”

“நான் மேடையில நிக்கப் பொறந்தவ,”

இவள் அகங்காரம் எங்கு கொண்டு விடுமோ என்ற நினைப்பில் ராஜாமணி தன் தலையை கைகளால் பிடித்தபடி,”யாரு வருவா..சோத்துக்கு என்ன பண்றது..இப்படி லாவணியமா முடி உலத்துறியே..இத்தன அழகான பச்சை பட்டு கட்டியிருக்கியே…இதுக்கெல்லாம் பணத்துக்கு என்ன பண்றது,” என்றாள்.

“ட்ராமா போடுவோம்,”

“ட்ராமாவா.. எந்த ட்ராமா குரூப்ல நம்மள சேத்துப்பாங்க. ஆம்பிளைகளேதான் பொம்பளையாவும் வேஷம் கட்டறாங்க..நீ போய் நின்னா திரும்பிக்கூட பாக்க மாட்டாங்க,”

“நம்மளே சொந்தத்துல ட்ராமா கம்பெனி நடத்தலாம்,”

“நம்மளை ஆதரிக்கவே ஆளில்ல,”

“பொம்பளைகள வச்சு ட்ராமா போடலாம்..”

“எந்த பொம்பள நடிக்க வருவா..?”

“நம்மள மாதிரி நாதியத்த பொம்பளைக எத்தன பேரு..” 

ராஜம்மாள் தாவாயில் கைவைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அரசகுலத்துல தான் அரசி பொறக்கனுன்னு இல்லை’ என்று திவான் மாளிகைக்கு வந்த தாடி வைத்த பெரியவர் ஒருவர் இவளை பார்த்துக் கூறியதை நினைத்துக்கொண்டாள்.

“சாமி முன்னாடி ஆடுன்னு சொல்லி… நம்மள இப்படி தகப்பனில்லாத பிள்ளைகளா ஆக்கிட்டானுகல்ல..”

ராஜாமணி அவள் முகத்தை பார்க்காமல் வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

“நேத்து கோயில்ல ஒருத்தி உன்னப்பாத்து என்ன வார்த்தை சொன்னா.. இந்த கும்போணத்து பொண்ணுகளை என்னப் பாத்து திருப்புறேனா இல்லையான்னு பாரு,”

ராஜாமணி இரும்பு சிக்குவாங்கியால் பாலாமணியின் கூந்தலை பிரித்தெடுக்கத் தொடங்கினாள்.

“ஆட்டத்தைப் பாக்கறவன் சலங்கைக்கு கீழ தான் நிக்கனும்..பணம் தானே..அத நான் சம்பாரிச்சு காட்றேன்,”

ராஜாமணி குனிந்து பின்னால் இருந்து கைகளைச் சுற்றி தங்கையை அணைத்துக்கொண்டாள். 

பாலாமணியின் பரந்த உடல் அவளின் கைக்கு அகப்படாமல் மிஞ்சியது.

“என் தலைமுறை என்னோட அத்துப் போட்டும்..”

ராஜாமணி, பாலாமணியின் உச்சந்தலையில் தன் முகத்தை வைத்தபடி வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாமண்ணாவின் நிழல் அந்த அறையின் வாசலில் விழும் ஒவ்வொரு முறையும் அக்கா இல்லை என்பது பாலாமணியின் நினைவிற்கு வரும். 

“பாலா…” 

“உள்ளாற வாங்கண்ணே,”

வந்தவர் அப்படியே நின்று கொண்டிருந்தார். இருவரும் அமைதியாக இருந்தார்கள். வழக்கமாக அறைக்கு வந்து அங்குள்ள மர முக்காலியில் அமர்ந்து நாடக வசூல் மற்றும் செலவு கணக்கைச் சொல்வார். ஒரு வருஷமாக கடன், வட்டி, விற்கப்பட்ட நகைகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இரண்டு வருஷமாகவே தினமும் கணக்கு வழக்கை முடிக்கும் முன், “ நாடகத்திற்கு கூட்டமில்ல, பழைய வசூலில்ல, செலவ மட்டுப்படுத்து பாலா,” என்று முடிப்பார். உடனே இவள், “தொடக்கத்துல இப்படி வசூல் ஆகுன்னு நெனச்சமா..எதையும் குறைக்கக்கூடாதுண்ணா..வழக்கமா நடக்கறது நடக்கட்டும்..கூட்டம் வரும்,” என்று சொல்வாள். வசூல் இல்லாத நாட்களில் பாலாமணி கேட்டாள் என்று கும்பகோணத்து பணக்காரர்களிடம் சாமண்ணாதான் பணம் வாங்கிவரச் செல்வார். இன்றும் சாமண்ணாதான் கடனிற்கு மாளிகையை கைமாற்றியிருந்தார். 

பாலாமணி கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்.

“விடியறதுக்குள்ள வந்துட்டீங்களே..”

“மத்தியானத்துக்குள்ள பங்களாவை ஒப்படைச்சிட்டா தேவலை..அவாளுக்கு ஏதோ ஜோலி இருக்காம்..சாவி வேணுங்கறா,”

“கால ரயிலுக்கே மதுரைக்கு ஏறிட்டாப் போச்சு,” என்று சிரித்தாள். ஒப்பனை இல்லாத முகம் எண்ணெய் பிசுக்குடன் விசாலத்தின் முகம் போல இருந்தது.

“பாலாமணி சாந்து வாங்கிட்டு வாங்கோ.. அவ கட்றது போல பாலாமணி சேலைன்னு ஊரே கட்டுது. அவப் பக்கத்துலேயே இருக்கேளே.. நேக்கு ஒன்னு வாங்கிட்டு வரப்பிடாதோ..பச்சப்பட்டு ஒன்னு கட்டியிருந்தாளே. பௌர்ணமிக்கு மனோகரா நாடகம் போட்டன்னிக்கி கோவிலுக்கு கட்டிட்டு வந்தா..நீங்கக்கூட கோயில்ல பாலாமணி கல்யாணமண்டம் கட்றதுக்கு கணக்கு பாக்க வந்தேளே அன்னிக்கு..அந்த தொங்கட்டான்ல்லாம் எங்க வாங்கறா..?” என்று விசாலம் எதையாவது கேட்பது அவர் நினைவிற்கு வந்தது.

“ஏண்ணா..நெசம்மாவே தாரா ஷஷாங்கம் நாடகத்துல ஓட்டுதுணி இல்லாம நடிக்கிறாளா…ஜில்லாவே கெளம்பி வருதே..கும்போணம் மகாமகத்துக்கூட இம்பிட்டு கூட்டமில்லைங்கறா..ஒரு பொம்பளை இப்படியும் இருப்பாளோ..”

‘நான் ராஜாமணி நாடக கம்பெனிக்கு கணக்கு வழக்கு பாக்கறவன். கோமாளி வேஷம் கட்டறவன். ராஜபார்ட் நடிக்கறவா நடிப்பு என்னன்னு எனக்குத் தெரியாது’ என்று சொல்வார். ஆனால், விசாலத்துக்கு பாலாமணியை பிடிக்கும். 

“என்ன ஒரு பொம்பளை.. பட்டத்து யானையாட்டம்..பாக்கறவா கண்ணெடுக்க முடியாம. இத்தன ரம்மியம் லோகத்துக்கு கேடுண்ணா,” என்பவளைப் பார்த்து புன்னகைத்துக் கொள்வார்.

“பாலாமணி அழகு குறைஞ்சு போயிட்டா..இனிமே அவ ட்ராமா எடுபடாது…வாங்கின பணத்த வட்டியோட கொண்டாந்து வைக்கனும்,” என்று காவரிக்கரைவேலி நிலக்கிழார் சுந்தரன் சொன்னார். பவுடர் பூசியே பார்த்தவர்களுக்குத் தெரியாத பாலாமணி இவள். ஐம்பது வயது பாலாமணி. கனிந்த கண்களில் உள்ள நேர்ப்பார்வை எதிர் நிற்பவரை பதைக்கச் செய்வது. அது பார்ப்பவரை ஒருஅடி பின்னால் நில் என்று சொல்லும். குனிந்து பழக்கமில்லாத நிமிர்ந்த கழுத்தும், இந்த பார்வையும், நடையும் தான் இவளின் வசீகரம். அழகு குறையும். பேரழகு வயதிற்கு வயது கூடும் போல. 

“என்ன அப்படி பாக்கறீங்கண்ணே..அழகு மங்கிப் போச்சே.மதுரையில நாடக கம்பெனியில இவள சேர்த்துப்பாங்களான்னா..?”

“உங்கிட்ட நடிப்பு இருக்கு பாலா,”

“அத நம்பித்தானே போறேன்,”

“நீ என்னைய வித்தியாசமா நெனச்சிறக்கூடாது,”

“நீங்க என்ன பண்ணுவீங்கண்ணே..யார் யார் முன்னாடி நான் போய் நிக்கக்கூடாதுன்னு நெனச்சனோ அவங்க முன்னாடில்லாம் போய் நில்லுடீன்னு கும்பேச்சுவரன் விதிச்சுப்பிட்டான். எனக்காக போய் நின்னவர் நீங்கதாண்ணே…”

“நான் கணக்கு வழக்கு பாக்கறவன். அம்புட்டுதானே பாலா. முடிச்சாச்சு,”

“இல்லண்ணே..சுடுகாட்டு காரியத்துக்கு எனக்கு ஆளில்ல பாருங்க ,”

பாலாமணி பேச்சை முடிக்காமல் வைரக்கம்மலை எடுத்துக்கொடுத்தாள். பாலாமணி கண்கள் மின்ன புன்னகைத்தபடி, “பணம் தேர்ச்சக்கரன்னு நெனச்சேன்,” என்றாள்.

“அது சகட சக்கரம். சகடைக்கு தேராட நிதானம் கெடையாது பாலா..மொரட்டு வாகனம். லட்சுமி சகடையில இருக்கறவ,” 

“சாவி அங்கன இருக்கு,”என்று கதவின் பின்புறத்தைக் காட்டினாள். எழுந்து அலமாரியைத் திறந்து ‘நாடகப் பேரரசி’ என்றிருந்த பதக்கத்தையும், ‘ட்ராமா குயின்’ என்று எழுதிய பட்டையத்தையும் அவரிடம் கொடுத்தாள். 

“வேணாண்னு சொல்லிறக்கூடாது. விட்டுட்டுப் போனவங்க கணக்கு எனக்குத் தெரியல. நான் நாதியத்து போகலன்னு ஈஸ்வரன் கிட்ட காட்டறதுக்கு பொறந்தவனா நீங்க இருக்கீங்க..”

சாமண்ணா குனிந்தபடி தலையாட்டினார்.

“இந்த பதக்கத்தை வித்துடுங்க. பிள்ளைகளுக்கும் விசாலத்துக்கும் எதாச்சும் வாங்கிக்குடுங்க. இந்த ரெண்டையும் என் கையால வித்துறக்கூடாதுன்னு இருந்தேன். இனிமே அவ்வளவு வைராக்கியமா வச்சிருக்க முடியாதுல்ல,”

“சாவியை தந்துட்டு நேரத்துக்கு வந்துடறேன்..” என்று சொல்லிவிட்டு கதவின் பின்புறம் இருந்த வளையத்தின் பெரிய சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு சென்றார். அவர் நடக்கும் காலடிச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.

கொஞ்சம் பணமும், நாலைந்து புடவைகளுக்கு நடுவில் சலங்கையையும் வைத்து மூட்டையாகக் கட்டினாள். காற்றால் மாளிகை சன்னல்கள் அடித்துக்கொண்டன. எந்த அவசரமும் இல்லை. குதிரை வண்டி வந்து காத்திருக்கவில்லை. மேடை காத்திருக்கவில்லை. ஆள் மாற்றி ஆள் அழைக்க எதுவும் இல்லை. இன்று மதுரைக்கு அவள் நேரத்திற்கு கிளம்பலாம். மாசி மாதத்து வறட்டுப் பனியால் நடுங்கும் உடலை குறுக்கிக்கொண்டாள். தனியாக ரயிலில் மதுரைக்கு செல்ல வேண்டும். அங்கு யாரையும் தெரியாது. வயிறு என்னவோ செய்தது. அடுக்களை பானைத் தண்ணீரை ஒரு சொம்பு குடித்துவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்.

பரந்த முன் அறையில் கண் மை கறைகள் ஒட்டியிருந்த பெரிய சங்குக்கண்ணடி ஒன்று சுவற்றில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. பங்களாவில் இருந்து வெளியே செல்லும் ஒவ்வொருவரும் முகம் பார்த்து திருத்திக் கொண்ட கண்ணாடி அது. பாலமணி தினமும் அதில் முகம் பார்க்காமல் குதிரை வண்டியில் ஏறியதில்லை. அதன் கீழ் லாந்தர் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

பங்களாவின் பெரிய இரும்புக்கதவை திறந்து தெருவில் இறங்கினாள். சிவப்புநிற நூல் சேலை தோளில் கிடக்க, மூட்டையை முன்பக்கமாகப் பிடித்தபடி கும்பகோணத்திலிருந்து பாலாமணி வெளியேறிக் கொண்டிருந்தாள். 

******

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button