இணைய இதழ்இணைய இதழ் 68சிறுகதைகள்

மாசானக் கொள்ளை – பத்மகுமாரி

சிறுகதை | வாசகசாலை

விடியல் மெல்ல இறங்கி இருளை விலக்கிக் கொண்டிருந்தது. ஒரு சில வீடுகளின் முன் வாசலில் ஈரத்தின் மீது கோலம் பதிந்திருந்தது.

‘பறவையெல்லாம் நேரத்துக்கு கிளம்பிடுது. மக்க ஜனத்துக்கு தான் வரவர சோம்பேறித்தனம் ஏறிட்டே போகுது.’ – மேலே ‘வி’ வடிவத்தில் வரிசை பிடித்து பறந்து கொண்டிருந்த பறவைக் கூட்டத்தைப் பார்த்தபடியே தாயாத்தா கிழவி தனக்குத் தானே சொல்லிக் கொண்டே வந்துகொண்டிருந்தாள்.

‘யே, இது யாரு? வீராயி பேத்தி தான..?’ லேசாக கண்களை இடுக்கி எதிரே குடும்பத்தோடு வந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டாள் கிழவி. 

‘ஆமா ஆச்சி.’ லேசான புன்னகையோடு பதில் வந்தது’

‘சாயங்காலம் கொடைக்கு இப்பதான் வாற. இரண்டு நாள் முன்னகூட்டியே வரதுதான?’

‘பையனுக்கு நேத்துதான் ஆச்சி பெரிய பரீட்சை முடிஞ்சது. அதான் இன்னைக்கு புறப்பட்டு வாரோம்.’

‘என்ன பரீட்சையோ படிப்போ. எங்க காலத்துல வாழ்க்கையப் படிச்சதோட சரி. ‘

வீராயி பேத்தி பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே நின்றாள். 

‘கண்ணு திருதிருனு முழிக்குதே. இன்னும் யாருன்னு பிடிபடலியோ? ‘ கிழவி சிரித்துக் கொண்டே கேட்டாள். 

‘தாயத்த ஆச்சி தான….’ தயக்கத்தோடு பதில் வந்தது. அவள் கணவனும் , அவன் கையை பிடித்தபடி நின்று கொண்டிருந்த மகனும் எதற்கும் சம்மந்தம் இல்லாதவர்கள் போல் நின்று கொண்டிருந்தார்கள் .

‘ம்ம்..பரவாயில்லை… தெரிஞ்சிருக்கு. ‘ கிழவி முகத்தில் பூரிப்பு ததும்பியது. 

‘ … ‘ – எதிரில் நின்று கொண்டிருந்தவள் முகத்திலும் பெருமித பூரிப்பு. 

‘சரி மக்கா..வாரேன். ‘ கிழவி கடந்து போனாள். 

பழனி, மணி, சேகர் மூவரும் அரட்டையடித்தபடியே தெருமுக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். 

கிழவிக்கு பின்னால், ஈரம் சொட்டிக் கொண்டிருந்த உள் பாவாடையை மாராப்பு வரை ஏற்றிக் கட்டிக் கொண்டு, மேல் பகுதியை துண்டால் போர்த்தி மறைத்து வைத்து, இடுப்பில் ஈரத்துணிகளால் கனம் ஏறியிருந்த பச்சை வாளியை பிடித்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் பிரேமா. 

‘அவருக்கு வருஷந்தோறும் வயிற நிரப்ப எவனுக்கு சக்தி இருக்கு. அதான் பத்து வருஷத்துக்கு ஒருக்கன்னு கொடை வைக்கிறானுக. ‘

‘பத்து வருஷத்துக்கு ஒருக்கா நாலதான் இப்படி ஊரே கூடுது. வருஷந்தோறும் வச்சா ஒரு பய மதிக்க மாட்டானுக. அவன் அவன் வெளியூருல அவனவன் பொழப்ப பாத்திட்டு, சிவனேனு தின்னுட்டு தூங்கிட்டுக் கிடப்பான். ‘

பேச்சு பேச்சாக இருந்தாலும் எதிரே வந்த பிரேமாவை ஓரக்கண்ணால் இமையெடுக்காமல் பார்த்துக் கொண்டே கடந்தான் மணி. 

இடுப்பில் இருந்து நழுவிய துணி வாளியை பிடி நழுவாமல் மேலிழுத்து நிறுத்தினாள் பிரேமா. அவள் ஈர முடியில் இருந்து சொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் பிருஷ்டத்தில் விழுந்து ஈரப் பாவாடையை கூடுதலாக நனைத்துக் கொண்டிருந்தது. ஒரு சில துளிகள் தரையில் விழுந்து கோடு வரைந்து கொண்டு போனது. 

‘எலே போதும். கழுத்து பின்னுக்கோடி திரும்பிடாம. முன்ன திரும்பு. ‘ பழனி, மணியை வாரினான். 

‘அப்படிலாம் ஒண்ணுமில்லைலே. ‘

‘என்னல ஒண்ணுமில்ல. என்கிட்டே வா. அதான் அவ பின்னாடி சுத்துனதுக்கு நல்ல வாங்கி கெட்டியாச்சுலா. அப்புறமும் என்னல அங்க பார்வை.இவள விட்டா எவளும் இல்லேண்ணா. ‘

‘நீ மூடிட்டு வால. ‘

அதோடு பேச்சு நின்றது. மூவரும் குளத்தை நோக்கி நடந்தார்கள். 

சுடலைமாடன் கோவில் கொடை பத்து வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் மூன்று நாள் கொடை. ஒவ்வொரு வீட்டிற்கும் சம்மந்தப்பட்ட, உயிரோடு இருக்கும் முதல் தலைமுறையில் இருந்து கடைசியில் புதிதாய் பிறந்திருக்கும் தற்போதைய தலைமுறை வரைக்கும் எங்கிருந்தாலும் கொடையில் வந்து கூடிக் கலந்து கொள்ளும். ஊரின் தெற்கு தெரு முழுக்க கடைவீதியாய் மாறியிருக்கும். 

முதல் நாள் கொடை துவங்கியிருந்தது. கோவில் முற்றம் முழுக்கவும் ஊர் மக்களால் நிரம்பியிருந்தது. கைலாயத்தில் இருந்து புறப்பட்ட மாடன் ஊர் ஊராக நடந்து வந்து கடைசியாக தங்களுடைய ஊரில் வந்து குடியேறி வசிக்கிறார் என்று அந்த ஊர் மக்கள் உறுதியாக நம்பினார்கள். சுடலை கைலாயத்தில் இருந்து கிளம்பி அந்த ஊருக்கு வந்து சேர்ந்ததாக நம்பப்படும் பயணக் குறிப்பை வில்லுப்பாட்டுகாரார் வரத்தாக பாடிக் கொண்டிருந்தார். ஒத்துபாட்டு பாடும் பெண் அவளது துடுக்கு குரலில் ‘ஆமா’ போட்டு ஒத்து ஊதிக் கொண்டிருந்தாள். 

தாயாத்தா கிழவி அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் கண்களுக்குள் ஏற்கனவே சுடலை ஆட்டம் தொடங்கியிருந்தது. அவள் வாக்கப்பட்டு வந்திருந்த அடுத்த வருடம் சுடலைமாடன் கொடை வந்தபொழுது, முதல் முறையாக சாமி வந்து நடராஜன் தாத்தா ஊளை விட்டுக் கொண்டு தெருவில் இறங்கி ஓடிய காட்சி அவள் கண்களுக்குள் நடந்தேறிக் கொண்டிருந்தது. அவள் தனது வயது பிராயத்தில் ஆசைப்பட்டதெல்லாம் தனக்கு வரும் கணவன் சாமியா டியாக இருக்கக் கூடாது என்பது மட்டுந்தான். அவள் அண்ணன் சாமியாடுவதையும், சதா கோவிலே கதி என்று கிடந்ததையும் பார்த்ததில் ஏற்பட்டிருந்த சலிப்பு அது. எதை வேண்டாம் என்று பிடிவாதமாய் மனது எதிர்பார்க்கிறதோ, அதுவே சில நேரங்களில் வாழ்க்கையாய் மாறிப் போய்விடுகிறது. 

பத்து வருடத்திற்கு முந்தைய கொடையில் நடராஜன் தாத்தா துள்ளிக் குதித்து சலங்கை குலுங்க சுடலை ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, ‘அடுத்த கொடைக்கு இந்த மனுசன் இருப்பாரா’ என்ற ஓர் உள்ளுணர்வு அவளுக்குள் கேட்டது. அவள் நினைத்தது போலவே நடந்தும் விட்டது. 

‘வாராரு வாராரு. வாதைகளோட நடு நடுங்க வாராரு’ 

‘ஆமா… ‘ என்று கழுத்தை வெட்டி வெட்டி ஆமாப் போட்டாள் ஒத்து போடுபவள்.

‘தயாளன் வாராரு….’

அடுத்த ஆமா வருவதற்குள் சுடலையின் சலங்கை சத்தம் வாசல் பக்கம் கேட்டது. கோவிலுள்ள தலைகள் வாசல் பக்கம் திரும்ப, மந்திரமூர்த்திக்கு சாமி ஆடும் ஐயப்பன் நாக்கைக் கடித்துக் கொண்டு, சுடலையை முந்திக் கொண்டு வாசலில் வந்து துள்ளி ஏறினார். 

வரத்து பாட்டு முடியவும் ஒவ்வொரு வாதைகளாக வந்து சேர்ந்து, இருபத்தியோரு வாதைகளுமாக உச்ச ஆட்டத்தை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. 

தாயாத்தா கிழவியின் கண்களின் இடுக்குகள் லேசாக நனைந்திருந்தது.

*** 

உச்சி வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. தெருவில் பெரும்பாலான வீடுகளில் ஏதோ ஒரு புதுக் குரலின் பேச்சு சத்தமே மேலெழும்பி நின்றது. முந்தைய நாள் முடிந்திருந்த வரத்து பாட்டை பற்றிய பேச்சுகள். பத்து வருடத்திற்கு முந்தைய கொடையில் வரத்து பாட்டு பாடியவரின் குரலில் இருந்த கணீர் இந்த முறை பாடியவரின் குரலில் இல்லை என்ற அங்கலாய்ப்புகள். நடராஜன் தாத்தாவின் சுடலை ஆட்டத்திற்கும் , இந்த முறை புது மாடனாக களம் இறங்கியிருக்கிற கணேசனின் ஆட்டத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளைப் பற்றிய பேச்சுகள் என்று ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒவ்வொன்று. 

எங்கு திருவிழா, கொடை நடக்கும் என்பதை மனக்கண்ணில் அறிந்து ஊர் ஊராய் போய் கடை போடும் கடைக்காரர்கள் ஊரையே வளையல்கள், சவ்வு மிட்டாய்கள், பலூன்கள் கொண்டு நிரப்பியிருந்தார்கள். தன் செல்லம் கொஞ்சலுக்கு தோதுபடுகிற குடும்பத்து ஆளை சரியாகத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு கைகோர்த்து குழந்தைகள் கடைகளுக்கு மத்தியில் திரிந்துக் கொண்டிருந்தார்கள். 

‘எம்மா…எம்மா… ‘

‘… .. ‘

‘எம்மா… . ‘ – இன்னும் உரத்த குரலில் கத்திக் கூப்பிட்டாள் பிரேமா. 

‘ஏட்டி வாரேன்ட்டி. எதுக்கு இப்ப கூவிட்டு கிடக்க.’ அம்சவள்ளி புறவாசல் நடையில் இறங்கி வந்தாள்.

‘எம்மா.. ‘ கழிவறை கதவிற்கு வெளியாகத் தலையை நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பிரேமாவின் முகத்தில் இருள் படர்ந்திருந்தது.

‘என்னட்டி பம்முக? வந்துட்டா? ‘

‘ம்ம்.. ‘ – அம்சவள்ளியின் முகத்தை நேராகப் பார்க்காமல் தரையை பார்த்தபடியே, ‘ஆமாம்’ என்று தலையசைத்தாள் பிரேமா. 

‘அதான் அன்னைக்கே மாத்திரை போடுன்னு சொன்னேன். கேட்டா தான. அதுலாம் போடக் கூடாதுன்னு மெத்த மேதாவியாட்டம் பேசுனேல. இப்ப கொடை பார்க்க முடியாதுலா. கிட. ‘ பொறிந்து கொண்டே புறவாசல் நடையில் ஏறி வீட்டுக்குள் போனாள் அம்சவள்ளி. 

பிரேமாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. 

‘இந்தா.. ஆகவேண்டியத முடிச்சிட்டு அப்படியே கொட்டைகைல போய் படுத்துக்கோ. எது வேணுனாலும் சத்தம் குடு. வீட்டுக்குள் வந்திராத. பொறவு ஒருத்தரும் கொடை பார்க்க போக முடியாது. ‘ 

‘ … . ‘ 

பதில் சொல்லாமல் அம்சவள்ளி நீட்டியதை கையில் வாங்கிக் கொண்டு தலையை உள்ளிழுத்து கதவைச் சாத்திக் கொண்டாள் பிரேமா. 

கொடைக்காக வீடு நிறைய கூடி இருந்தவர்களின் இரவுப் பசியை தீர்ப்பதற்காக அம்சவள்ளி சமையலில் இறங்கி இருந்தாள். மனக்குழப்பம் வேலையின் வேகத்தை பின்னிழுத்துக் கொண்டிருந்தது. 

‘எங்க சொன்ன பேச்ச கேட்டாதான. நாள் தள்ளிப்போக மாத்திரைய போடச் சொன்னா, அதுலாம் அறிவியல் படி நல்லதில்ல அது இதுன்னு தட்டி கழிச்சிட்டு இப்படி கொட்டகையில கிடக்காளே பாவி. காலம் கெட்டு கிடக்கு. நாளைக்கு பொம்பள பிள்ளைய பெத்தாதான் என் பயம் புரியும் இந்த பிள்ளைக்கு. ‘ – தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் அம்சவள்ளி. 

‘என்னக்கா எதுவும் வேலை கிடக்கா… ‘ வெளியூரில் இருந்து வந்திருந்த அம்சவள்ளியின் கொழுந்தன் பொண்டாட்டி அடுக்களைக்குள் வந்தாள். 

‘அதுலாம் ஒண்ணுமில்ல வசந்தி.’

‘அட நம்ம வீடுதான. சொல்லு. ‘

‘அதுலாம் ஒண்ணுமில்ல பிள்ள. எல்லாம் முடிஞ்சு. நீ போய் திண்ணையில உட்காரு’ அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை லேசாக ஊதி உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்த்து முடிந்திருந்தாள் அம்சவள்ளி. 

****

எல்லா வீடுகளில் இருந்தும் ஆணும் பெண்ணுமாக இரவு கொடைக்காக இறங்கிக் கொண்டிருந்தார்கள். மல்லிகைப்பூ வாசனையும், கண்ணாடி வளையல்களின் உரசல் சத்தங்களும் தெருவை நிரப்பியது. மஞ்சள் தெரு விளக்கின் ஒளியில் பெண்களின் கழுத்து நகைகள் இன்னும் கூடுதல் மஞ்சளாக வெட்டியது. 

பிரேமா வயிற்றை இறுக்கப் பிடித்துக் கொண்டு, தொடுதலுக்கு சுருங்கிய அட்டையைப் போல கொட்டகைக்குள் படுத்துக் கிடந்தாள். 

‘ஏட்டி கொட்டகைய பூட்டீட்டு பத்திரமா இரி. கதவ மலத்தி போட்டு வைக்காத. வீட்ட பூட்டிகிட்டு கிளம்புறேன். புறவாசல் கதவையும் பூட்டிருவேன். ‘ அம்சவள்ளி புறவாசல் படியில் நின்றுகொண்டே கொட்டகை இருந்த திசையை பார்த்துச் சத்தம் கொடுத்தாள். 

‘சரிம்மா, நான் பாத்துகிடுவேன். நீ புறப்புடு. ‘ பிரேமா வெளியே வரவில்லை. கொட்டகைக்குள் இருந்து சத்தம் வந்தது. 

‘மேல கூரையில சொருகி வச்சிருக்க இரும்பு அரிவாள தலைமாட்டுக்கு வச்சுக்கோ. காத்து கருப்பு சுத்திட்டு கிடக்கும். ‘

‘சரிம்மா. ‘

‘சரி வாரேன். ‘

‘பத்திரம்டி’ – அம்சவள்ளியின் குரலோடு புறவாசல் கதவு அடைபடும் சத்தமும் கேட்டது. 

பிரேமா வரவில்லையா என்பதை விசாரித்த செண்பகத்தின் காதுகளில் அம்சவள்ளி குசுகுசுக்க, இரண்டு பேரும் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். செண்பகத்தின் பேத்தி வாணியும் அவர்களோடு நடந்தாள். 

அவர்களின் பின்னால் மணி, பழனி, சேகர் மூவரும் கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். பழனியும் சேகரும் அவர்களுக்குள் வாயாடித்துக் கொண்டே நடக்க, மணி மட்டும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். 

ஊரே அரவம் அடங்கியிருந்தது. கோவில் கூரை ஓட்டின் மீது உரசிக் கொண்டிருந்த இலைகளின் சத்தம் மட்டும் இடைஇடையே மெல்லிசாகக் கேட்டது. கூடவே இரவுப் பூச்சிகளின் சத்தமும். உறங்கிப் போன குழந்தைகள் அப்பாவின் தோள்களிலும் அம்மாவின் மடியிலுமாக இடம் பிடித்திருந்தார்கள். விழித்திருந்த எல்லா கண்களிலும் லேசான உறக்க கலக்கத்தின் ரேகை ஓடிக்கொண்டிருந்தது. வெளிமுற்றத்தில் உட்கார்ந்திருந்த ஆண்கள் தொங்கப் போட்டிருந்த கால்களை மடக்கி சம்மணமிட்டு மயானம் இருந்த திசையை வெறித்துக் கொண்டிருந்தார்கள். 

‘ஏட்டி எங்க போற? ‘ – மடியிலிருந்து எழுந்த வாணியைப் பிடித்திழுத்தாள் செண்பகம். 

‘ஒன்னுக்கு போணும்.’ 

‘இரிட்டி கீழ. நல்ல நேரம் பார்த்தா இவா. ‘ செண்பகம் அதட்டினாள். 

வாணி உட்காராமல் பிடிவாதமாக நின்று கொண்டிருந்தாள். 

‘இப்ப உள்ள குட்டிகளுக்கே அடம் கூடுதலாக்கும். இரினா கேட்காளா பாரேன். ‘ 

‘இரிட்டி ‘ மீண்டும் அதட்டினாள். 

‘சரிக்கா சின்ன பிள்ள தான விடு. வா மக்கா, இரி. நல்ல பிள்ளேலா. அதுலாம் அவ சொன்னா கேட்பா. அப்படிதானே மக்ளே. ‘ வாணியைப் பொத்தி அணைத்து மடியில் அமர்த்தினாள் அம்சவள்ளி. 

உட்காரவும் மனமில்லாமல் அம்சவள்ளியின் அணைப்பிற்கு நழுவவும் முடியாமல் அரைகுறை மனதோடு வாணி, அம்சவள்ளி மடியில் அமர்ந்து கொண்டாள். 

‘ஒன்னுக்கு போற நேரம்லா நேரம். மாசான கொள்ளைக்கு போயிட்டு வார சாமிக்கு எயித்தால போயிட்டு… எம்மா.. ‘ செண்பகம் உடலை சிலிர்த்துக் கொண்டாள். 

‘சின்னப் பிள்ளைக்கு சொல்லி கொடுத்தாதான தெரியும். நீ இப்படி சும்மா அதட்டினா பிள்ளைக்கு என்னத்த மனசிலாகும். ‘

‘சாமி மாசான கொள்ளைக்கு போயிருக்குலா. அதனால இப்ப வெளிய போ கூடாது சரியா. ‘

‘மாசான கொள்ளைனா?.’ வாணி ஆர்வமாகக் கேட்டாள். 

‘சாமி தீப்பந்தம் எடுத்திட்டு ஓடிச்சுல. நீ பாத்தேல’

‘.. ம்ம்… ‘ வாணி ஆமாம் என்பதாகத் தலையசைத்தாள். 

‘தீப்பந்தத்த கொண்டுட்டு ஊர்பூரா சுத்திட்டு , கடைசியா சாமி மயானத்துக்குப் போகும். அங்க சாமிக்கு பழம், காய், தாளம் பூ , ஆடு எல்லாம் வச்சு வச்சிருக்கும்.. ‘

‘அதெல்லாம் யாரு அங்க கொண்டு வைப்பாங்க. ‘ அம்சவள்ளி முடிப்பதற்குள் வாணியிடம் இருந்து கேள்வி வந்தது. 

‘பாரு துடுக்க. முடிக்க மிந்தி கேள்விய. ‘ இது செண்பகம். 

‘நீ கொஞ்ச நேரம் சும்மா இரியேன்க்கா. ‘

‘ இங்க நிறைய மாமா இருக்காங்கல்லா. இங்க சாமி ஆடிட்டு இருந்திச்சிலா, அப்பவே அந்த மாமால இருந்து ஒரு மாமா, மயானத்தில எல்லாத்தையும் கொண்டு போய் வச்சிட்டு வந்திருவாங்க.’

‘ஓ.. ‘

‘மயானத்துக்கு போயிருக்க சாமி அங்க நின்னு சாமி ஆடும். அப்புறம் அங்க இருக்க ஆட்ட பலி கொடுத்திட்டு, தாழம்பூ, பழம் எல்லாத்தையும் கொள்ளை அடிச்சிட்டு கோவிலுக்கு ஓடி வரும். அப்படி சாமி வரும்போது நம்ம ஒருத்தரும் எதுத்தாப்ல போகக் கூடாது. சாமிக்கு கோபம் வந்திரும்.’

‘அப்ப சாமி ஆட்ட கொன்னுருமா. ‘ வாணி வருத்தத்தோடு கேட்டாள். 

‘அப்டிலாம் சொல்லக் கூடாது. சாமி ஆட்ட அது கூடவே கூப்பிட்டுக்கிது. ‘

‘ … ‘ 

வாணியின் முகம் மூடிய தாமரை மொட்டு மாதிரி சுருங்கிப் போயிருந்தது. அவளும் சன்னல் வழியாக வெளியே சாமி வரப்போவதற்கான எதிர்பார்ப்போடு கண்களால் துளாவ ஆரம்பித்திருந்தாள்.

******

தொப்பென்று வந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் பிரேமா. எப்பொழுது உறங்கிப் போனாள் என்று அவளுக்கே தெரியவில்லை. கொட்டகை வாசல் திறந்து கிடந்தது. வெளியே வைக்கற்போரில் ஏதோ சலசலப்பு கேட்டது. வேகமாக எழுந்து தாவணியைச் சரி செய்து கொண்டு, கொட்டகை வாசலை அடைக்க அவசரமாக அவள் வாசலுக்கு வருவதற்கும், மணி அவளை பலத்துடன் உள்ளே தள்ளி கதவை அடைத்து தாழிடுவதற்கும் சரியாக இருந்தது. 

‘வெளிய போ நாய. ‘ பிரேமா ஆவேசத்தில் கத்தினாள்.

‘போகவா வந்தேன்.’ எகத்தாள சிரிப்போடு இன்னும் கூடுதலாக பிரேமாவை நெருங்கி வந்தான் மணி. 

பிரேமா எழுந்து அவனைக் கடந்து வாசலை நோக்கி ஓட முயற்சித்தாள்.கோழி பிடிப்பதைப் போல கையை காற்றில் அங்குமிங்குமாக நீட்டி அணைக்கட்டினான் அவன். அவள் அதையும் மீறிப் போக அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். அவள் முயற்சிகள் கைகொடுப்பதாக இல்லை. எங்கும் தப்பிக்க முடியாமல் மணியின் பிடிக்குள் மொத்தமாய் மாட்டிக்கொண்டிருந்தாள் . 

தீப்பந்த ஒளியில் சுடலையின் இறுகிப் போன முகம் பாதி கிரகணம் ஏறியிருந்த சூரியனைப் போல இருந்தது. சுடலையின் குதிகால் ஆட்டத்திற்கு வந்த சலங்கை சத்தம் யாரோ சிறு சிறு மணிகளை காற்றில் சுண்டி விடுவது போல தனித்தனியாக தெறித்தது. 

சாம்பல் அப்பியிருந்த முகத்தோடு உறுமியபடி துள்ளிக் குதித்துக் கொண்டே , குனிந்து தாழம்பூவை கையில் உருவி எடுத்த சுடலை ‘ஓ’வென உடல் துடிக்க உறுமியது.தாழம்பூ கொத்தை நெஞ்சோடு அரவணைத்துப் பிடித்தபடி கோயிலை நோக்கித் தாவி ஓட ஆரம்பித்தது. 

நடுங்கிக் கொண்டிருந்த பிரேமாவின் கால் விரல்களுக்கு அருகில் மணியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. பிரேமா ரத்தக் கரையேறியிருந்த உள்ளங்கையை மேல் நோக்கி விரித்தபடி காலை குத்திட்டு அமர்ந்திருந்தாள்.உடல் சன்னதம் வந்திருந்தது போல முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தது. கருவிழிகள் வெளியே வரவா என்று கேட்பதாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவளது கூந்தல் அலங்கோலமாக தோள்பட்டையிலும் முதுகிலுமாக சிதறி விரிந்து கிடந்தது. 

மேளச் சத்தத்தில் ஊரின் மொத்தக் காற்றும் அதிரத் தொடங்கியிருந்தது. 

******

npadmakumari1993@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button