
‘BALLAD OF A SOLDIER’
Directed By Grigory Chukhray
போரின் வலியை அற்புதமாகக் கடத்துகின்ற மிகச்சிறந்த படம்.
பாசிசத்தை வீழ்த்தும் இரண்டாம் உலகப்போர்தான் கதைக்களம். போர்க்களத்தில் இருக்கும் அல்யோஷாவுக்கு வயது 19. போர்க்களத்தில் பாசிசப் படைகளின் பீரங்கி ஒன்றை சுட்டு வீழ்த்திய அல்யோஷாவின் வீரத்தைப் பார்த்து மெச்சிய இராணுவ ஜெனரல் அவனை அழைத்து மரியாதை செய்வதாகக் கூறுவார். அவனோ, “மரியாதை வேண்டாம், சில நாட்கள் விடுமுறை மட்டும் போதும். அம்மாவைப் பார்க்க ஊருக்குச் செல்ல வேண்டும்…” என்பான். நெருக்கடியான அந்த போர்ச்சூழலிலும் நான்கு நாட்கள் அவனுக்கு விடுமுறை வழங்கப்படும்.
ஊருக்குச் செல்ல அல்யோஷா ரயில் நிலையத்திற்கு வந்து ஒரு சரக்கு ரயிலில் ஏறுவான். சரக்கு ரயில்களில் இராணுவ வீரர்கள் மட்டும் பயணிக்கலாம். ரயில் இடையில் நிற்கும் போது அல்யோஷாவின் வயதையொத்த இளம்பெண் ஒருத்தி அதே பெட்டியில் ஏறுவாள். அவள் பெயர் ஷீரா. அவளைக் கண்டதும் அல்யோஷா மறைந்துகொள்வான். பிறகு வெளியில் வருவான். அவனைக்கண்டதும் பயந்து போய் ஷீரா ரயிலிலிருந்து குதிக்கப்போவாள். அல்யோஷா தடுத்து நிறுத்துவான். அருகில் வராதே என்று ஷீரா கத்தி கூச்சலிடுவாள். “கீழே விழுந்திருந்தால் உன்னுடைய கைகால்கள் எல்லாம் உடைந்திருக்கும்.. முட்டாள்” என்று கூறிவிட்டு அல்யோஷா ஓரமாக ஒதுங்கி உட்காருவான்.
பயணத்தில் ஷீராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீதிருந்த அச்சம் விலகும். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்வார்கள். ரயில் நிற்கும் ஒரு ஸ்டேஷனில் அல்யோஷா தண்ணீர் பிடிக்கச் செல்வான். ஷீரா உறங்கிக்கொண்டிருப்பாள். அல்யோஷா வருவதற்குள் இரயில் கிளம்பிவிடும். ரயிலைப் பிடிக்க அல்யோஷா அடுத்த நிறுத்தத்திற்கு ஓடுவான். அல்யோஷாவைக் காணாததால் ஷீராவும் அதே ஸ்டேஷனில் இறங்கியிருப்பாள். பிறகு அடுத்த ரயிலை பிடிக்கச் செல்வார்கள். அதுவும் சரக்கு ரயில்தான், எனவே இராணுவ வீர்கள் மட்டும்தான் ஏற வேண்டும் என்று கூறி ஷீராவுக்கு அனுமதி மறுக்கப்படும். உடனே அல்யோஷாவும் இறங்கிவிடுவான். தன்னிடமுள்ள கூடுதலான ஒரு இராணுவ அங்கியையும், தொப்பியையும் ஷீராவுக்கு அணிவித்து மற்றொரு பெட்டியில் ஏறி மீண்டும் பயணிப்பார்கள்.
இந்தப் பயணத்தில் இருவருக்குமிடையிலான நட்பு காதலாக அரும்பி நிற்கும் சூழலில் ஷீரா இறங்க வேண்டிய நிறுத்தம் வரும். அல்யோஷா ஷீராவுக்குப் பின்னால் செல்ல முடியாது. தாயைப் பார்த்துவிட்டு தாய்நாட்டைக் காக்க போர்க்களத்திற்குப் போக வேண்டும். அதேபோல ஷீராவும் அல்யோஷாவுக்குப் பின்னால் போக முடியாது. எனவே இருவரும் பிரியாவிடை கொடுத்து இருவேறு திசைகளில் பிரிந்து செல்வார்கள். கடுமையான போர்ச்சூழலில் ஒரு தொடர்வாண்டியில் அழகாக அரும்பிய அந்தக் காதல் மலராமலேயே மற்றொரு ஸ்டேஷனில் முற்றுப் பெறும். அதன் பிறகு அல்யோஷா தனது தாயைக் காணச்செல்வான்.
1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருகிறது. இந்தப் படம் 1959 ஆம் ஆண்டு வெளியாகிறது. போரைத் தொடர்ந்து ரஷ்யாவில் கடுமையான வறட்சியும், பஞ்சமும், தொற்றுநோய்களும் பரவியிருந்தன. தோழர்கள் லெனின், ஸ்டாலினுடைய வழிகாட்டலில் ரஷ்ய மக்கள் 25 ஆண்டுகளாக கட்டியமைத்திருந்த சோசலிச கட்டுமானம் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. சோவியத் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவர குறைந்தது 10 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்று கணிக்கப்பட்டது.
போர் முடிந்து சோசலிச மறுநிர்மாணம் நடந்துகொண்டிருந்த பத்தாவது ஆண்டில் தோழர் ஸ்டாலின் மறைந்துவிடுகிறார். ஸ்டாலினுடைய மறைவு சோசலிச கட்டுமானத்தின் மீது மற்றொரு உலகப்போரைத் தொடுத்தது போன்ற பின்னடைவை ஏற்படுத்துகிறது. தோழரின் இறப்பை அடுத்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது.
பாசிஸ்டுகளிடமிருந்து தாய் நாட்டைக் காக்க குடும்பங்களைப் பிரிந்து கோடிக்கணக்கில் போர்க்களத்தில் குவிந்திருந்த இராணுவ வீரர்களின் மாதிரிதான் அல்யோஷா. அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பிம்பம்தான் அவன்.
தாயைச் சந்திக்க கிராமத்திற்கு வரும் அல்யோஷா தனது தாயுடன் ஒரு மணி நேரம் கூட செலவிட முடியாமல் உடன் போர்க்களத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறும் போது கதறியழும் தாயிடம், “மீண்டும் வந்துவிடுவேன் அம்மா…” என்று கூறிவிட்டுச் செல்கிறான். அப்படிக் கூறிச் சென்றவர்களில் கோடிக்கணக்காணவர்கள் திரும்பவில்லை என்பதுதான் வரலாறு. அவனும் திரும்பப் போவதில்லை என்பதை உணரும்போது நாமும் அந்தத் தாயின் கண்ணீரோடும், உணர்வுகளோடும் கலந்துவிடுகிறோம்.
மகனை இழந்த கோடிக்கணக்கான ரஷ்ய தாய்மார்களின், கனவனை இழந்த கோடிக்கணக்கான ரஷ்யப் பெண்களின் வலியையும், உணர்வுகளையும் இந்தப் படம் நமக்குள் இறக்குகிறது.
இந்தப் படம் வெளியான 1959 ஆம் ஆண்டு ரஷ்ய மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்திருந்தது. 100 பெண்களுக்கு 50 ஆண்கள் மட்டுமே இருந்தனர். காரணம் இரண்டாம் உலகப்போரில் வேறு எந்த நாட்டையும் விட அதிக இழப்புகளைச் சந்தித்தது சோவியத் ரஷ்யாதான். பாசிசத்தை ஒழித்துக்கட்ட 2 கோடி ரஷ்ய மக்களும், இராணுவ வீரர்களும் தங்களின் உயிரை தியாகம் செய்திருந்தார்கள்.
இந்தப் போர்ச்சூழலின் பின்னணியில்தான் உலகப்புகழ்பெற்ற ரஷ்ய இலக்கியத்தின் முக்கிய படைப்புகளும், சினிமாக்களும் உருவாகின. அவற்றில் ஒன்று தான் *BALLAD OF A SOLDIER*
அனைவரும் அல்யோஷாவை ஒருமுறை அவசியம் சந்திக்க வேண்டும்.