‘சிதம்பர நினைவுகள்’ மொழிபெயர்ப்பு நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – வெங்கடேஷ்

நம் வாழ்வனுபவங்களை ஒரு முறையேனும் பதிவு செய்து விடவேண்டும் என்ற ஆசை, நம்மில் பெரும்பாலானவர்க்கு இருக்கும். அதை ஒரு டைரியிலோ அல்லது பகிர்தல் மூலமாகவோ அதை நாம் செய்ய முயன்று கொண்டே இருக்கிறோம். பாலச்சந்திரன் சுள்ளிகாடு என்ற கவிஞர், தன் நினைவுகளில் தங்கி நிற்கும் சில நிகழ்வுகளை சிறு சிறு கதைகளாக எழுதித் தொகுத்து உருவாக்கியதே இப்புத்தகம். மலையாள மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், வம்சி புக்ஸ் கே.வி.ஷைலஜா அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்தவர்களுக்குத் தெரியும், அதன் மொழியாக்கத்தில் உள்ள சிக்கல்கள், அதை வாசிப்போருக்கு புரிந்து கொள்வதில் எவ்வளவு சிரமத்தை ஏற்படுத்தும் என்று. அதை கொஞ்சமும் வாசகன் உணராதபடி உள்ளது இப்புத்தகம். இயக்குநர் மிஷ்கின் ஒரு மேடையில் பேசும்போது சொல்வார், “ஒரு மொழிபெயர்ப்பாளர் மெழுகாக உருகி இந்த உலகிற்கு வெளிச்சம் தருகிறார்”. அவ்வாறாகவே தமிழில் இப்புத்தகத்தை நமக்கு ஷைலஜா அவர்கள் உருமாற்றிக் கொடுக்கிறார்.
சிதம்பர நினைவுகள், இப்புத்தகத்தில் 21 சம்பவங்களை நினைவிலிருந்து பதிவு செய்துள்ளார். ஒரு கவிஞன் எப்படி இருப்பான் என்று நிறைய இடங்களில் காட்டிக் கொண்டே இருக்கிறார். தன் சுயசரிதையில் தன்னைப் பற்றிய சமூகத்தின் பிம்பம் (மாயையானது) பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் புத்ததகத்தில் பதிவு செய்கிறார். இலக்கியவாதிகள் பெரும்பாலும் அவ்வாறாகவே உள்ளனர்.
இப்பதிவு நெடுக பாலச்சந்திரன் சுள்ளிகாடு, பாலாவாகவும், பாலனாகவும் வெவ்வேறாக காட்சியளிக்கிறார். தான் பின்பற்றும் கொள்கைக்காக எதையும் செய்பவராக, வறுமை ஒரு கலைஞனை எவ்வளவு வாட்டினாலும் அதை எதிர் கொள்பவனாக, வறுமை கற்றுத் தந்த பாடமான, மான அவமானங்களை தூக்கி எரிந்தவராக, அதே நேரத்தில் ‘தீப்பாதி’-யில் (சிறுகதையின் தலைப்பு) பாலச்சந்தரினை crazy man என நினைக்கவும் வைக்கிறார். நான் மிகமுக்கியமாக பதிவு செய்ய நினைத்த ஒன்று ‘மகாநடிகன்’ என்ற கதையில் சிவாஜி என்னும் நடிகன் ஏன் நடிகர் திலகம் என அழைக்கப்படுகிறார் என பதிவு செய்திருப்பார்.
மிக நிச்சயமாக ஒரு சிறந்த அனுபவமாக சிதம்பர நினைவுகள் இருக்கும்.