சோ.தர்மனின் ‘கூகை’ நாவல் வாசிப்பு அனுபவம் -சோ. விஜயகுமார்

பொதுவாக நம் வீட்டில் நாம் இரவில் உறங்காமல் முழிக்கும் போது, “ஏன்டா இப்டி ஆந்த மாதிரி முழிச்சுகிட்டு உட்காந்து இருக்க?” என்று கோபிப்பார்கள். ஏறத்தாழ நம் அனைவருக்கும் ஆந்தை முதலும் கடைசியுமாய் அறிமுகமாவது அப்படி தாம். அதைத் தாண்டி நமக்கு ஆந்தையை அபசகுணத்தின் அடையாளமாகத் தெரியுமே அன்றி வேறில்லை.
இயற்கையின் படைப்பில் கோரமானது என்று எதுவுமே இல்லை.
உண்மையில் சொல்லப் போனால் ஆந்தையை ரசிக்க இன்னும் நாம் பக்குவப்படவில்லை என்பதே உண்மை.
சோ.தர்மனின் கூகை நாவல், ஆந்தையை தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குறியீடாக அமைத்து படைக்கப்பட்ட படைப்பு.
இரவில் கூகையைப் போல் பலம் கொண்ட பறவை இல்லை. ஆனால், பகலில் அதைப் போன்ற பலவீனமான பறவை இல்லை.
அதைப் போலவே தான் கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனிதர்கள் அறியாமை எனும் இருளில் உடல் உழைப்பில் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால், பொதுச்சமூகம் எனும் பகல் பொழுதில் அவர்களைப் போல் நீதி மறுக்கப்பட்டவர்கள் யாருமில்லை.
- ஆசையாய் சகமனிதரோடு நீங்கள் அமர்ந்து உண்டதற்காக உங்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
- சம்மதம் இல்லாமல் நீங்கள் கூட உங்கள் மனைவியை தீண்டாத போது, சம்பந்தமே இல்லா மாற்றான் ஒருவன் தோன்றும்போதெல்லாம் உங்கள் மனைவியை வன்புணர்ந்தால் என்ன செய்வீர்கள்?
- மனைவியோடாவது ஒழிந்தது என பார்த்தால் பெற்ற மகளின் திருமணத்திற்காக வரன் தேடி அலையும் போது அவளையும் வன்புணர ஒருவன் முயன்றால் என்ன செய்வீர்கள்?
மூன்றில் ஏதேனும் ஒன்றைக்கூட உங்களால் நினைத்துப் பார்க்க இயலவில்லை தானே!
ஆனால், இம்மூன்றும் இதை விட மேலும் பல கொடுமைகளையும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஒருவன் அனுபவிக்கிறான் என்றால் பிழை யாருடையது!
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் ஓர் நாள் பொங்கி எழுந்தால்!

அவன் நிலையில் இருந்து பார்த்தால் அது போராட்டம். பொதுப்புத்தியிருந்து பார்த்தால் அது கலவரம்.
வீரமிக்க ஒரு சமூகம் எப்போதும் துரோகத்தால் தான் வீழ்ந்திருக்கிறது.
இந்நாவலும் அந்த உண்மையையே பறை சாற்றுகிறது.
கூலிக்குத் தவிக்கும் ஏழை மக்களுக்கு நிலம் தானமாகக் கிடைத்த பின்பும் தன் அதிகார பலத்திற்காகவும் பலனிக்காகவும் அந்நிலத்தை அவர்கள் அனுபவிக்க விடாமல் தடுக்கிறது ஆளும் வர்க்கம்.
எதிர்த்து கிளம்பும் கிளர்ச்சிக்கூட்டம் கூண்டோடு அழிக்கப்படுகிறது.நல்ல நிலங்களில் எல்லாம் கள்ளி விதை பரப்பப்படுகிறது. வேறு வழியின்றி மீண்டும் அந்தக் கூட்டம் ஆளும் வர்க்கத்திடமே கையேந்தும் நிலைமை அமைகிறது.
ஒடுக்கப்பட்டவர்களே ஜாதி எனும் அலகீட்டால் பல்வேறு குழுக்களாய் பிரிந்து இருப்பதும் அதையே தன் ஆயுதமாக ஆளும் வர்க்கம் பயன்படுத்துவதும் வரலாற்றின் சிறு தெளிப்பு எனலாம்.
கூகையைக் கடவுளாக வழிபட்டு, ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக அனைத்தையும் செய்யும் சீனிக்கிழவன் அவரின் சொந்தக் கூட்டத்தினராலேயே விரட்டப்படுவதும் ஒதுக்கப்படுவதும் வீழ்த்தப்பட்ட குழுக்களில் பொதுவாக நடக்கும் ஒன்று.
இயற்கையில் அழகான கூகையைக் கண்டு வெறுப்பதும். மனிதனாகப் பிறந்தவனை ஏதோ மிருகம் போல் நடத்துவதும் திட்டமிட்டே ஓர் குறுகிய மனம் படைத்த கூட்டம் செய்த செயல்.
சோ.தர்மனின் நாவலை வாசித்த பிறகாவது கற்றுக் கொள்ளுங்கள் கூகையை மதிக்கவும்…மனிதனை மனிதனாக நடத்தவும்.
கூகை- அபசகுணம் தான். சமூக துரோகிகளுக்கு