
தேடித் தேடி
நானும் நாங்களும் கையுடனும் காலுடனும்
வந்தது இந்த நிலம்தான்.
வயிறும் வைத்து அதில் அனலும் வைத்தவன்
தொழிலைப் பாதியில் விட்டுவிட்டான்.
நான் கிழக்கென அவன் வடக்கென
உவன் மேற்கென இவன் தெற்கென
அன்னை இட்ட தீயை அணைக்க அலைந்தோம்
வாலிபம் விழிக்க மற்றும் மற்றுமென வயிறுகள்
பசித்த பெற்றோர்கள் எனக்கெனக் காத்திருக்க
இளைத்த மனைவி அவனை எதிர்பார்த்திருக்க
மண் தின்று திமிர்த்த குடலோடு உவன் மைந்தர்
இவனின் வித்தோ வெளி வரும் நாள் என்றோ, இல்லையோ
ஞானம் தேடியா, நல்லறம் தேடியா
தேசம் தேடியா பாதிப் பாடையில் போகிறோம்
தேகத்தில் இருத்த உயிர் தேடி ஐயா, உயிர் தேடி
ஏழையாய் இருந்து பராரியாய் மாறி ஏதுமிலியாய்
உழைக்கும் கரங்களை ஏந்தி நிற்கையில்,
கால்களில் கொப்புளம் வெடித்துச் சிவக்கையில்
புரிந்தது கையும், காலும் எதற்கென.
**********
அப்புக்குட்டி
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
காணோமாம் அவனை
உள்ளே பார்த்தேன் என்றேன்
ஓடிச் சென்று விட்டு வந்து
வசை பாடினார்கள் பொய்யனென்று.
புரியாது அவர்களுக்கு அனைவரும்
ஒரு அப்புவைத் தேடவில்லையென்று.
**********
மாயம்
மணச் சங்கு ஊதியது
மத்தளமும் கொட்டியது
ஏனோ அன்று மட்டும்
வரும் போது அடுக்காய்த்
தோன்றிய மேகங்கள்
பற்பல வானங்களாய்ப்
பரந்ததைப் எண்ணிக் கொண்டேன்.
இதென்ன நான்
வாழ்த்துமிடத்திலும் அவள்
பெறுமிடத்திலும்.
**********
சிறப்புச் சலுகை
‘இன்றைய எமது அப்பத்துடன்
சிறிது சிரிப்பும்..’
**********