கவிதைகள்
Trending

கவிதைகள்- ப.தனஞ்செயன்

i)

எதுவுமே இல்லாமல்
என் அருகில்
அமர்ந்தது அந்தப்பறவை
அதற்கு வயதாகிவிட்டது
ஆனாலும் பறந்துதான் ஆகவேண்டும்
பறத்தல் இன்றும் இளமையாகவே இருக்கிறது அந்தப்பறவைக்கு.
காற்றோடு இசைத்த
அதன் இறகில் என் ஒரு துளி
மூச்சுகாற்றை
அனைத்து கனிந்தது
அதன் சிறகு.
சிறகு வரைந்த கடிதத்தில்
முதல் வார்த்தை பறக்க ஆரம்பித்து
உதிர்தலில் முடிந்துவிடுகிறது
இறுதி வார்த்தை.
புதுப்பறவையொன்று தன்கூட்டில்
முட்டைகளை அடைகாத்து
எவ்வாறு பறப்பது என்பதை
அதன் கூடுகளில் எழுதிகொண்டிருக்கிறது.
இன்றும் பெண் பறவை ஒன்று அச்சப்பட்டு
கூடுகளில் இன்னும் முடங்கித்தான்
கிடக்கிறது.

**********

ii)

அடையாளமற்ற வட்டப்பாதையில்
நகர்கின்றன அவளது நாட்கள்
ஒவ்வொரு முறை அவள் அருகில் வரும்பொழுதும்
விலகிச்செல்கிறார்கள்
காற்றால் உடல் முழுவதும்
ஆரத்தழுவுகிறாள்
நீரால் உடல் முழுவதும்
நனைக்கிறாள்
உணவு மேசையில் தினமும்
விருந்தளிக்கிறாள்.

உற்சாகமான பாடலால் அவள் குரல் எங்கும் இனிமையாக ஒலித்தது
முன் போல் அந்தப்பாடலில்
எவ்விதமான லயமில்லை இன்று.

நீளும் நாட்களில்
கல்லறைகளின்
எந்தப் படிமத்தில்
எந்தச் சித்திரத்தை வரைய
இத்தனை வயது தாண்டியும்
சுற்றி வருகிறாள் அவள்.

அடையாளமற்ற புள்ளியில்
அடையாளமுடைய சித்திரத்தை தீட்டிதான் நகர்கிறது வெளி.

**********

iii)

பறவை
மரம்
காற்று
நீர்
பூமி
சூரியன்
நிலவு
அவன்
அவள்
நீ
நான்
இதயம்
இப்படியும்
எப்படியும்
அன்றிலிருந்து
இன்று வரையிலும்
சொல்லிமுடிக்கமுடியாதது தான்
இந்த இயற்கை.

**********

iv)

என்றுமே கண்டிராத ஒருவனை
பார்க்கும் சில நிமிடத்தில்
அவன் மீது அடையாளமுள்ள
சாயல் ஒன்று பொருந்திவிடுகிறது
மதுக்கடைப்பலகை விளம்பரத்தில்
போதையூட்டி அமர்ந்திருப்பவளிடம்
மதுவின் சாயல் பொருந்திவிடுகிறது
அவள் உதடுகளிலும்
கண்களிலும்
போதை வழிகிறது
உன் விளைச்சல் நிலம் குறித்து
பேசவேண்டும் என்கிற
மது அருந்தியவன்
கேள்விக்கு அவள் கண்களிலிருந்து
நீர் வழிந்தது!

அனைவரும் அவள் கண்களையும்
உதடுகளையும் பார்த்திருக்கும் நேரத்தில்
கேள்வி கேட்டவன் மட்டும்
மூடியிருக்கும் அவள் வயிற்றைப் பார்த்து
அவசரமாக மதுவைக்குடித்துவிட்டு
அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

**********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button