இணைய இதழ்இணைய இதழ் 90கட்டுரைகள்

பத்மகுமாரியின் ‘நட்சத்திரம்’ சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம் – மன்னர்மன்னன் குமரன்

கட்டுரை | வாசகசாலை

தைகள் முழுக்கப் பெண்கள்; அதிலும் அம்மாக்கள். மனிதர்களின் இருப்பு, பறந்துவிடாமல் இருக்க லேசான கனத்தை தாள்களின் மீது கொடுக்கிறது. முழுவதும் வாசித்து முடித்து நிறைய மனிதர்களைச் சந்தித்த பின் என் மனம் பற்றிக் கொண்டதென்னவோ இதைத்தான்; ‘தரிசனம்’ கதையில், ‘சந்தோசத்தைக் கொண்டு தர உயிரென்ன வேண்டிக் கிடக்கிறது?’. என் மூளைக்குள் ஒரு யோசனை; மூளைக்கு அந்த ஒரு வேலைதானே. முந்தின வரியை மீண்டும் வாசித்தேன். காலியான ராட்டினத்தை மனதில் நிறுத்தி, மனிதர்களை அதில் ஏற்றிவிடும் ராட்டினக் காரனாக நின்று பார்த்தேன். உண்மையில் மனிதர்கள்தான் ராட்டினத்தின் மீது சந்தோசத்தை வண்ணமாகப் பூசியிருக்கிறார்கள் என்று தோன்றியது. இந்தக் கதையிலும் அம்மாவுக்கு சந்தோசத்தைக் கொண்டுவந்து தந்தது ஆச்சியின் வார்த்தைகள்தான். மீண்டும் அதே வரிக்கு மனதை தொற்ற வைத்துவிட்டது அடுத்த கதை ‘நட்சத்திரம்’. கதவில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்திற்கு உயிர் உண்டா என்ன? இருந்தாலும் இந்த மூளை சும்மா இருக்காதுதானே; ‘எல்லாம் சரி ஆயிரும்’ என்று சொன்ன அம்மாவின் சிரிப்பு தானே அது.

அநேக கதைகளில் திடீர் திருப்பங்கள். துப்பறியும் கதைகளில் வருவது போல அல்ல. இவை தலைப்பை பூவாக்கி பரிசுப் பெட்டியைச் சுற்றி கட்டியது போன்றவை. பிரித்துப் பார்த்தால் ஏமாற்றமென்பதே இல்லை. அப்புறம் என்ன கன்னத்தில் சதைப் பிடிப்பு, முகத்தில் பொழிவு; தரிசனம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில். கதையின் இறுதியில் வரும் அந்த வரிகளுக்கும் தலைப்பிற்கும் தான் என்ன… மாதிரியான பிணைப்பு. ‘நிமிர்ந்தவாக்கில்  மிதப்பவள்’ கதையின் இறுதியில் ‘திமிரு வேணான்த்தா… துணிச்சல் இருக்கணும்’ சாரதா ஆச்சியின் வார்த்தைகள், ‘எனக்குத் தேவையில்லை’ கதையின் இறுதியில் துணியை உதறிவிட்டுப் போகும் பூனை; இது போல பல கதைகளில். ‘பூனைகளின் வரிசை’ கதையை ஏற்கெனவே மின்னிதழில் வாசித்திருக்கிறேன். இரண்டாவது முறையாக இப்போது வாசிக்கும் போது தான் இது புத்திக்குத் தட்டுப்பட்டது. “எங்கேயோ உள்ள ஆளுங்க போல. மெயின் ரோடு வழியா கொண்டு போக முடியாதுலா… அதான் இப்படி எடுத்துக்கிட்டு போறாங்க போல…” உண்மையில் இதை வாசிக்கும் போது சாதாரணமாகத் தானே இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் கதையில் ஊன்றியிருந்தால் அப்படித் தோன்றாது. பிரிவினை என்னும் இதய அடைப்பை இதைவிட வலிக்காமல் எடுக்க முடியாது. கதை பேசிக்கொண்டே கட்டியை அகற்றும் மருத்துவர் போல இந்தக் கதை பூனைகளின் கதைகளைப் பேசி அதைச் செய்திருக்கிறது. சுபாசினி, Blacky, இல்லை தெருவில் செல்லும் பூனைகளின் வரிசையாய் இருக்கட்டும் நேசித்த பிறகு பிரிவென்பது துக்கம் தானே.

முட்களுக்கு நடுவே இரண்டு விரல்களால் தண்டைப் பிடித்து, கொப்பைத் தாழ்த்தி, ரோசாவின் வாசத்தை முகர்ந்து விட்டு, சாமிக்கென்ன! தலைக்கே கொய்யாமல் விட்டு விட்டுப் போனது போல கதைகள் தொடங்கி முடிகிறது. மனித மனதை சாமிக்கு இட்ட மாலை போல எட்டி வைக்கவும், கொய்து தரையிலிட்டு சீக்கிரம் வாட வைக்கவும், கூந்தல் மலராக கிட்டவே வைத்துக் கொள்ளவும் எத்தனிக்காத எழுத்து. எல்லார் மனமும் ஏமாந்த கோழியென்று புரிந்துவிட்ட பிறகு இன்னொருவரை ‘ஏமாந்த கோழி’ என்று கூற வாய் வருவதில்லை. எட்டி நின்றுப் பார்க்கலாம்; நம்மையோ இன்னொருவரையோ ஏமாந்த கோழி என்று சொல்வதை.

‘வழக்கம் போல் ஊறுகாய்’ கதையில் பேசப்பட்டிருக்கும் அரசியல் அறம் குலைக்கப்பட்ட இடம் ‘சோமு கடைக்குச் செல்ல ஒரு ரூபாய் லஞ்சமாக கேட்டதும் அதை யசோதா கொடுத்ததும்’. கேட்காமல் இருந்தால் இப்படிதான் ஊறுகாய் நக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா? இல்லை ஊறுகாய் நக்கவும் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று எடுத்துக் கொள்வதா?

‘கூடுதலாக ஒரு தம்பியும்’  – தோழியின் திருமணத்திற்காக கல்லூரி பயின்ற சிவகாசிக்குச் சென்று திரும்பிய போது அந்த நகரத்தின் நினைவுகளுக்குள் மட்டுமல்ல தனித்து அலையும் மனதிற்குள்ளும் கூடுதலாக ஒரு தம்பி ஒட்டிக் கொண்ட கதை. செயாவின் திருமணத்தில் அவள் சாமி கும்பிடப் பிரிந்தபோது ஏற்படும் உணர்வுகளின் விவரணைகள் எனக்குள் நிகழ்வது போல இருந்தது. முன்னறையில் அமர்ந்திருந்தவர்களிடம் செயா பெயர் சொல்லி அறிமுகப்படுத்தியது போல் ஆசிரியர் அறிமுகப்படுத்தாமல் விட்டதில் எனக்குத் திருப்தி. அவர்களுக்கு முன் நின்று கொண்டிருந்தது நான் தான்.

மனிதன் தன்னில் உயர்ந்தவரை (குணத்தையும் பண்பையும் சேர்க்காமல்) தனது இயக்கத்திற்கு ஒரு உந்துதலாக அண்ணாந்து பார்க்கிறான். குறைந்தவரை (குணத்தையும் பண்பையும் சேர்க்காமல்) இவனெல்லாம் என் பக்கத்திலா?! என்று குனிந்து பார்க்கிறான். குறைந்தவரின் வளர்ச்சியின் மீது ஒரு கண் வைத்துக் கொள்வதில் மனிதனுக்கு எப்போதும் சோம்பேறித்தனம் இருந்ததில்லை. ‘எடை’ கதையில் வரும் கண்ணனும் அந்த வகை தான். வேணியைப் பார்க்கும் போது சமூகத்தின் வரப்பு கடலின் அக்கறை போல எட்டா தூரத்திற்கு விரிவதை கண் நோக்க முடிகிறது; நம்பிக்கையின் தேய்வுக்கு உயவெண்ணை கிடைத்தது போல. ‘பசுமரத்தாணி’ என்ற பதம் கதைக்குள் ஒரு ஊடல் செய்திருக்கிறது. ‘உன்னால தான் என்னை என் அப்பா அடிச்சாரு. போ. உன் பேச்சு கா.’ என்று கோபித்துக் கொண்டு போன ப்ரீத்தியின் நிகழ் மனநிலை வேணியின் மூலம் பிரதிபலித்திருப்பதாய் நான் உணர்கிறேன். மனம் பசுமையாய் இருக்கையில் அடித்த ஆணியையும் ஊருவி விட முடியும். ப்ரீத்தியின் பசுமனம் வேணியின் நினைவால் நம்பகம் பெறுகிறது.

‘அந்திக்குப் பின் மலர்தல்’ – வாழ்க்கையின் வெறுமையைக் காணப் பொறுக்காத எழுத்து. மனப்படிமத்தை விவரிக்கும் ஆவல் வேகத்தில். இதுவரை நான் வாசித்த கதைகளில் கவனித்தது கருவை வளைத்து முழுமையாக்குதலின் சாத்தியப்பாடு. கலா வேலையை விட்டுப் பின் வெறுமையை வெறுத்தலிலேயே ‘அந்திக்குப் பின் மலர்ந்த’ மலர்கள் எனக்கு வாசத்தைத் தந்துவிட்டது. முதல் நம்பிக்கை இழப்புக்குப் பின் தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல புடவையும் தேவையில்லாதது ஆகிவிடுகிறது. இருந்தாலும் ஏதோ ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது. கதையில் சொல்லப்பட்டிருக்கிற இயற்கை வர்ணனையும் பாட்டு வகுப்பும் மனநிலைக்குத் துணையாக நம்மைப் போன்ற இதுவும் இருக்கிறது, இருக்கும் என்ற பிடிப்பைக் கொடுக்கிறது. இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் இடையேயான போராட்டத்தில் சிவந்து கிடக்கும் வானம், கண்ணீரையும் பாட்டையும் கொண்டிருக்கும் தெய்வாவின் மனமாகப் படுகிறது.

கதைகளில் வரும் அம்மாக்களுக்கு இருக்கும் பயத்தை என்னவென்று சொல்லுவது; எல்லா தாய்க்கும் இருக்கும் படபடப்பு. சமுதாயம் கொடுத்த படபடப்பு. ‘வயசென்ன ஆவுது!’, ‘இன்னும் ஒரு வயசு முடிஞ்சுதுன்னா! இப்டி தான் அவ மவ…’, ‘எம் புள்ளையெல்லாம் படிச்சதுமே…’ இப்படி புளி பூசனம் பிடித்திடும் என்ற பயமுறுத்துதலில் விளைந்த படபடப்பு. இத்தனைக்கும் மத்தியில் நின்று பாடுவது எளிதல்ல. தனக்குள் பாடிப் பார்த்தவர்களுக்கு தன்னில் நம்பிக்கையும் நிறைவும் இருக்கிறது; தெய்வாவுக்கு அது சாத்தியம் தான். இருந்தாலும் இருக்கத்தான் செய்கிறன வாழ்க்கையில் இருட்டும் வெளிச்சமும்.

சிலர் வில்லை வளைத்தொடித்து வெற்றி பெற்றிருக்கலாம். சிலர் அம்பை சரியாக குறி பார்த்தெய்து வெற்றி பெற்றிருக்கலாம். இழுப்பிற்கும் ஒடியாது, குறி தப்பா விசைக்கு விரைப்பாக நாணைக் கோர்த்து, பத்மகுமாரி அவர்கள் தன்னை படைப்பாளி என்று நிறுவியிருக்கிறார். படைப்பாளிக்கு வெற்றி என்பது ஒரு முட்டுச் சந்து, குட்டிச் சுவர். படைப்பென்பது நிச்சயம் வெற்றி என்ற ஒரு குறுகிய இலக்கை அடைந்து தேங்கி நிற்பதல்ல. ஆவியாகி குளிர்ந்து நீராகி மீண்டும் கடலாகும் சுழற்சி போன்றது. கடலை அந்தரத்தில் மிதக்கவைக்கத் தேவையான வெக்கையும் நிமிர்ந்த வாக்கில் மிதக்கவைக்கத் தேவையான குளிர்ச்சியும் ஆசிரியரின் எழுத்தில் இருக்கிறது. ‘ஒரு ஊரில் ஒரு ராணி இருந்தார்களாம்’ என்று தொடங்கும் கதைகளைக் கேட்க ஆவல் கொண்டிருந்தவனின் இதயத்திற்குள் பிடி கொண்ட கதைகள் இவை. பல இரவுகளில் இந்தக் கதைகள் ‘துத்தாது’ கொணர்ந்தது போல் ஒரு துள்ளலை எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றன. எனதிந்த வாசிப்பனுபவம் வாசகனாக படைப்பாளிக்கு கொடுக்கும் கைத்தட்டலின் ஒலிப்புத் தொனியில் மனம் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது. நிறைவு.

நூல்: நட்சத்திரம்
வகைமை: சிறுகதைகள்
ஆசிரியர்: பத்மகுமாரி
வெளியீடு: வாசகசாலை
விலை: ₹170

*******

kumaranmannarmannan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button