
கடல்
i)
நிலத்தின் எல்லா ஒளியையும் நிறுத்தி விடும்போது
கடல்,
யாருமற்ற அறையில்
ஒரு பேரிளம்பெண்ணைப் போல
உடலைத் தளர்த்தி
மல்லாந்து படுத்திருக்கிறது…
சின்னஞ்சிறு ஒளிக்கீற்றைக்கண்டாலும்
மீண்டும் இறக்கைகளை
அசைத்து அசைத்து
பறக்கத் துவங்குகிறது.
**********
ii)
இரைந்திரைந்து அலையும் கடல்
அய்யோ பாவம்
நான் கண்ணிமைகளை மூடித் திறப்பதன் மூலம்
சின்னச்சிறு ஓய்வைக் கொடுக்கிறேன்.
**********
iii)
யாருமற்றதோர் அதிகாலையில்,
கடல்
ஓர் அனாதைச் சிறுவனைப் போல
தனியே விளையாடிக் கொண்டிருந்தது
நானன்று வெகுநேரம் அவனோடிருந்தேன்..
**********
iv)
முழுநிலவு நாளுக்கு முந்தைய இரவு
அடர் மஞ்சள் நிலவில் மிளிரும் கடல்
இணையோடு இருந்தால் மிகப்பரவசம்
தனியே அமர்ந்தால் கொடுந்துயரம்
**********
v)
நீலக்கடலின் மேல்
அடர்ந்த மழை
வானம் இறங்கி கடலைப் புணருகிறது
சில காட்சிப்பிழைகள்
அவ்வளவு கிளர்ச்சியானவை
**********
vi)
கடற்கரை சாலைகள்
கடலோர பாறைகள்
கடற்சாலை மரங்கள்
கடலில் முளைக்கும் கதிரும்
கடலேந்தும் நிலவும்
கடல் பிண்ணனியில்
எல்லாம் செவ்வியல் காட்சிகள்
**********
vii)
ஊரின் இரைச்சல் துரத்த
நான் கடலுக்கு வந்துசேர்ந்தேன்…
சீரான அலைச்சத்தம் பின்
பேசும் கனத்த மௌனம்
நான் இப்படித்தான்
நிலத்தில் தொலைத்ததையெல்லாம்
கடலில் கண்டெடுப்பேன்.
பின்னர்
கூழாங்கல்லைப்போல வழுவழுப்பாய் திரும்புவேன்..
**********
viii)
நான் ஒரு கடற்கரையில் துவங்கி
கடலைச்சுற்றி வந்து சேர்ந்தேன்..
கண்டுக்கொண்டேன்
கடல் ஒரு
அலையடிக்கும் பெருங்குளம்
**********
ix)
ஒருநாள் கரைமறையும் துரத்திற்கு
படகோடு சென்று விட்டேன்..
கடல் ஒரு மூதாயைப் போல
தோல்பரப்பு சுருக்கங்களுடன்
என்னை மடியிலிட்டு ஆட்டியது
**********
x)
வாழ்வு முடிந்ததென்று
நானிங்கே வந்திருந்தேன்
அங்கே ஊர் முடிந்து கடல் தொடங்கியிருந்தது
பின்னர் நானும் அங்கிருந்து தொடங்கினேன்…
**********
அற்புதமான கவி வரிகள் கனி.. நிலத்தை மட்டுமல்ல கடலையும் பாடுபொருளாக கொண்டுவரலாம் என கண்டுகொண்டேன்..சிறு சிறு உருவகம் தான் ஆனால் அழகாக உள்ளது