
‘ஆஹாங்’ என்றொரு மகா தத்துவம்
இதுதான் வாழ்க்கை என்றேன்
அருகில் அமர்ந்தபடி வடிவேலு ‘ஆஹாங்’ என்றார்
இல்லை அதுதான் வாழ்க்கை என்றேன்
அருகில் அமர்ந்திருந்த வடிவேலு
‘ஆஹாங்’ என்றார்
அதுவும் இல்லாத இதுவும் இல்லாததே வாழ்க்கை என்றேன்
‘ஆஹாங்’ என்றார் வடிவேலு
நான் அதுவும் இதுவுமானதே வாழ்க்கை என்ற சமரசத்திற்கு வந்தேன்
அதற்கும் ‘ஆஹாங்’ என்றே பதிலுரைத்தார்
வேறெந்த யோசனையும் இல்லாத வடிவேலு;
எதுதான் வாழ்க்கை என்று நீங்களாவது சொல்லுங்களேன் என்றேன்
அதற்கும் ‘ஆஹாங்’ என்ற பதில்தான் கிடைத்தது.
எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது,
என் இயலாமையை வெளிக்காட்டாதவாறு
பகடி தொனிக்க ‘அஹாங்’ என்றேன் அவரைப் பார்த்து;
உடனே எதுவும் பேசாமல் அவ் வடிவேலு வெளியேற,
மகிழ்ச்சியின் தவளைகள் என் வெளியெங்கும் ஆனந்தக் கூத்தாடுகின்றன;
நானோ யுரேகா யுரேகா என்று குதியிடத் தொடங்குகிறேன்…
மீண்டும் அதே ‘ஆஹாங்’
அசரீரியாக…
ஹைய்யோ ஹைய்யோ…
***
என் காதற் கைப்பாவாய்!
நான் உன் திரையினில் மட்டுமே வாழத்தகுந்த
உயிரியாகிவிட்டேன்
எப்போதும் என் கரங்கள் அனிச்சயாய்
பற்றிக் கொண்டே இருக்கின்றன
உன்னை
நீ மிச்சம் வைக்கும் காலம்தான்
எனது இதர லௌகீக வாழ்க்கைக்கானது
நீதான் அவளைக் கண்டறிந்தாய்
எனக்கு அவள் என்பது நீதான்
அவளுக்கு நான் என்பதும் நீயேதான்
அவளும் நானும் இன்னும் ஒருமுறைகூட நேரில் சந்தித்துக்கொண்டதில்லை
என்று சிலர் புகார்கூறுகின்றனர்
அவர்களுக்கு இன்னுமா தெரியவில்லை
என் கண்களின் விழித்திரைகளே நீதான் என்று.
**
உன் திரையில் ஆழ்ந்துபோன என் பார்வையின் மீதியை
அவ்வப்போது மீட்டு இந்த ஊரையும் பார்க்கிறேன்
உன் ஊடாய் கண்டதை விடவும்
அத்தனை வனப்பானது ஒன்றுமில்லை
**
கண்ணே மணியே ஃபோனே
**