பிக்பாஸ் 3 – நாள் 33,34 & 35 – கவினும் லாஸ்லியாவும் பின்னே அன்கண்டிசனல் லவ்வும்…
மித்ரா

அரசியல் ஆலோசகரைக் களமிறக்கியதில் இருந்து ஆண்டவரின் பேச்சு, பார்வை, நடை உடை பாவனைகள் என அனைத்தும் பிசிறு தட்டாமல் வெளிப்படுகின்றன. “எத்தினி சண்ட எத்தினி அசால்ட்டு…” வசனம் போல கிடப்பில் போட்ட திரைப்படங்கள், அரசியல் முன்னெடுப்பு, பிக்பாஸ் என இந்த வயதிலும் அயராமல் ஃப்ரெஷ்னெஸ் குறையாமல் சுழன்று ஆச்சரியப்படுத்துகிறார் கமல். சரி அவரைப் பற்றி ஆரம்பித்தால் முடிக்கவே மாட்டேன். நம்ம விசயத்துக்கு வருவோம்.
சேரன் – மீரா பஞ்சாயத்து லாஸ்லியா முகத்திரையைக் கிழித்தது போலவே, கவின் முகத்திரையை லாஸ்லியா சிறை செல்லும் பஞ்சாயத்து கிழித்துள்ளது. மூச்சுக்கு முன்னூறு முறை ‘சேரப்பா சேரப்பா’ எனக் கொஞ்சிக் கொண்டிருக்கும், தன் தந்தையை போன்றவர் என உறவு கொண்டாடும் ஒருவரின் மீது ஒரு பெண் அபாண்டமாகப் பழி போடுகிறார். அதற்கு லாஸ்லியா தரப்பில் இருந்து பெரிதாக எந்த அதிர்ச்சியும், எதிர்ப்பும் இல்லை. அடுத்த நாள் சிறந்த போட்டியாளர் தேர்வில் ஏற்பட்ட சண்டையில் மீராவுக்கு ஆதரவாக அனைவரிடமும் வாதிடுகிறார். இது எப்படிச் சாத்தியம் என்றே புரியவில்லை. உண்மையில் ஒருவரை உன்னத உறவாக நினைத்தால் இப்படி அமைதி காக்க முடியுமா இல்லை பழி சுமத்தியவருக்கு ஆதரவாகத் தான் இருக்க முடியுமா. அப்படியே அது லாஸ்லியாவின் இயல்பு. வானமே இடிந்தாலும் அமைதியாகத் தான் இருப்பார் என்றால், அடுத்த நாள் மீராவுக்கு ஆதரவாக வாதாடியிருக்க மாட்டாரே. இது ஒருவித பாதுகாப்பு மனநிலை. வீட்டில் இருப்பதையும், மக்களின் கைதட்டல்களையும் மட்டுமே விரும்பும் ஒருவரின் நிலைப்பாடு. ஒருவேளை உண்மையாகவே சேரன் அப்படிச் செய்திருந்தால் நமக்கு ஆபத்து எனும் ஐயத்தின் வெளிப்பாடு. இத்தகையவர்கள் பேசும் நியாயங்கள் கூட சுயநலத்தின் பிரதிபலிப்புகள் தான். எப்போதும் யாரையும் நம்பாமல், தன்னலனை மட்டும் பிரதானமாகக் கொண்டு அதற்காக எதையும் செய்யும் குணமிக்கவர்கள் இவர்கள். ஆனால், கமல் வந்து குறும்படம் போட்டுக்காட்டி மீராவைக் கிழித்த பிறகு, “அவரைப் போய் எப்டி…” எனக் கண் கலங்குகிறார். ப்ராவோ லாஸ்லியா. வேண்டுமென்றே சிறைக்குச் சென்ற லாஸ்லியா மற்றும் அபிராமியை பிக் பாஸ் வைத்து செய்த போது கூட, அபிராமி மன்னிப்பு கேட்டும் லாஸ்லியா கேட்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும் உள்ளே சாப்பிடாமல் வருந்தும் தன் மகளுக்காக உருகினார் சேரன். அன்கண்டிசனல் லவ்.
அடுத்த ஹைலைட் லாஸ்லியா சிறை செல்வதைத் தாங்கவே முடியாத கவினின் ஓவர் பெர்ஃபார்மன்ஸ் தான். முன்பே அவதானித்தபடி கவின் மனதில் விட்டுக் கொடுக்க முன் வந்ததன் மூலம் ஒரு சாஃப்ட் கார்னரை உருவாக்கியிருக்கிறார் லாஸ்லியா. அன்று 2 மணி வரை மொக்கை போட்டது மட்டும் தான் மிச்சம். மற்றபடி இருவரும் வழக்கம் போலத் தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பேச்சுக்காகவாவது, “நீ ஸ்ட்ரகிள் பண்ணிக்காத. நான் வேணா பேசாம இருந்துக்குறேன். நீ அவளைப் பாரு” எனச் சொன்ன லாஸ்லியாவின் மீது ஃபீலிங்ஸ் அதிகமாகி, “ஏன் என்னை விட அவளுக்கு ப்ரியாரிட்டி தர?” எனக் கேள்வி கேட்ட சாக்ஷி மீதான ஃபீலிங்ஸ் குறையத் தொடங்கியுள்ளது கவினுக்கு. இது தான் ஆண்கள் எதிர்பார்க்கும் So called unconditional love. அதாவது, “நான் யாருடன் வேண்டுமானாலும் சுற்றித் திரிவேன். திரும்பி வரும் போது நீ கேள்வி கேட்காமல் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் உன்னவன் என்ற உரிமையை அங்கீகாரத்தைக் கோரக் கூடாது. உன்னருகில் இருக்கும் போது அந்த நிமிடத்தை அனுபவித்துக் கொள். விலகிப் போனால் கேள்வி கேட்காதே..” உண்மையில் ஒரு உறவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இதெல்லாம் எதிர்பார்க்கத்தான் செய்வார்கள். சும்மா போகிற போக்கில் பழகுபவர்கள் வேண்டுமானால் அந்த லவ்வை உங்களுக்குத் தரலாம்.
உண்மையில் நிபந்தனையற்ற அன்பு என்பது முன்பின் தெரியாதவர்களிடம், எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தோன்றுவது மட்டும் தான். அது யாரென்றே தெரியாமல் நம்மைப் பார்த்துச் சிரித்து விட்டு நொடிப் பொழுதில் கடக்கும் குழந்தையைப் போன்றது. அதே குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்தால், அது அழக்கூடாது அடம்பிடிக்கக் கூடாது என்றெல்லாம் நாம் எதிர்பார்ப்போம். உங்களுக்கு நெருக்கமான உறவும் வேண்டும், நிபந்தனையற்ற அன்பாகவும் அது இருக்க வேண்டும் என்பதெல்லாம் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதை தான். உண்மையில் ஒரு உறவில் உண்மையாகத் தொடர நினைக்கும் யாரும் இதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்கு அன்பு என்பது அன்பு மட்டுமே. தன் துணை முன்னால் எப்படி இருந்தாரோ அப்படியே அள்ளி அணைத்துக் கொள்வது மட்டுமே. நிபந்தனை அன்பு, நிபந்தனையற்ற அன்பு என்பதெல்லாம் அங்கு கிடையாது. வெளிப்படையாக, தைரியமாக தன் விருப்பத்தின் படி வாழத் திராணியற்றவர்களுக்குத் தான் இந்த Unconditional love என்ற ஆடம்பரமெல்லாம் தேவைப்படுகிறது. என்ன இப்படி சொல்லிட்டீங்க? ஒருவர் ஒரு உறவில் மட்டும் தான் இருக்கனுமா பிற்போக்குத்தனமா இருக்கே என சிலர் கேட்கலாம். தாராளமாக யார் வேண்டுமானாலும் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உறவில் இருக்கலாம். ஆனால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும். உங்கள் காதலரை/மனைவியை/கணவரைப் பிடிக்கவில்லையா அவரிடம் நேரடியாகச் சொல்லிப் பிரிந்து, அதன் பிறகு வேறு உறவில் இணையுங்கள். இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும் ஆனால் நீ கேட்கக்கூடாது அதான் Unconditional love என்பதெல்லாம் சுயநலமன்றி வேறில்லை. கவினுக்கு இப்போது சாக்ஷியும் வேண்டும் லாஸ்லியாவும் வேண்டும். சாக்ஷி கேள்வி கேட்கிறார். லாஸ்லியா Unconditional love (!) தருகிறார். அதனால் அவர் பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறார்.
கடந்த வாரத்தின் மிக நிம்மதியான விசயம் மீரா வெளியேற்றப்பட்டது. யார் செய்த புண்ணியமோ மீராவைத் தேடியும் போலிஸ் உள்ளே வர எவிக்சனில் வெளியேற்றியுள்ளனர். இந்த சாண்டி, கவின் கூட்டணி எதற்கு மீராவுடன் சுற்றியது என்று இன்னமும் புரியவில்லை. இதில் பிரிவுபச்சாரம் வேறு. மற்ற ஹவுஸ்மேட்ஸ் இந்நேரம் வீட்டை டெட்டால் போட்டு கழுவியிருப்பார்கள்.
ஆனால், மதுமிதா விவகாரத்தில் கமல் நடந்து கொண்டது தான் சற்றே முகஞ்சுழிக்க வைத்தது. சாண்டியைப் பிடித்துப் போய்விட்ட காரணத்தாலே அந்த விஷயத்தை அப்படிக் கையாண்டது போலத் தெரிந்தது. இத்தகைய நடவடிக்கைகளைக் கமல் மாற்றிக் கொள்ள வேண்டும். பாரபட்சம் இல்லையென வாயில் சொன்னால் மட்டும் போதாது.
கடந்த இரண்டு சீசன்களை விட இந்த முறை கொஞ்சம் கடுமையான போட்டி தான். இனி இருப்பவர்கள் அனைவரும் ஓரளவு வொர்த்தான போட்டியாளர்கள். ஆனால் இந்த மீராவை ரகசிய அறையில் விட்டுவிடப் போகிறார்கள் என்று வேறு பயமாக இருக்கிறது. பார்ப்போம்.