கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 30,31 & 32 –  Abuse எனும் கூரிய ஆயுதம்

மித்ரா

“ஒருத்தர் கூட பேசனும், 24 மணி நேரமும் பேசனும், ஆனா ஃப்ரீயா பேசனும்.” காமெடி போலத் தான் என் கதை போய்க் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் பத்தி எழுதனும், 500 வார்த்தைகளுக்கு குறையாம எழுதனும், சம்பவங்களை அப்படியே விவரிக்கக் கூடாது. ஆனா தினமும் எழுதனும். இது உண்மையாகவே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுவதை விடக் கடுமையான டாஸ்க். அதனால் தான் நிகழ்ச்சி சூரமொக்கையாகப் போகும் நாட்களில் சற்று ஓய்வெடுத்து விட்டு ஹெவி கன்டென்ட் கிடைக்கும் நாட்களில் தட்டி விடுகிறேன்.


டாஸ்க் அறிவித்த போதே நினைத்தேன். “எப்டியும் மொக்கைய போடுவாய்ங்க. ஒரு வாரம் லீவ் தான்” என்று. போலவே இந்த வார எபிசோட்கள் கடும் தலைவலியைப் பரிசளித்தது தான் மிச்சம். ஆனால், டாஸ்க் என்ற பெயரில் ஒன்றவும் முடியாமல், சுய குணத்தையும் காட்ட முடியாமல் பரிதவித்தனர் போட்டியாளர்கள். பிக் பாஸ், போட்டியாளர்களுக்குக் கொடுத்த பாத்திரங்கள் அத்தனை கச்சிதம். தர்ஷனை மீராவிடமும், முகேனை அபிராமியுடனும் கோர்த்து விட அவர்கள் பிக் பாஸ் நினைத்ததை அப்படியே செயல்படுத்தினர். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? கவின், சாக்ஷி, சாண்டியை வருத்தப்படாத வாலிபர்களாகப் பிரித்து விட்டதும், சரவணனை மல்லு வேட்டி மைனராக்கி உலவ விட்டதும் நைஸ் சுவாரஸ்யம். சீன் பை சீன் ஓக்கே தான். முழுசா பாக்குறப்போ தான் ஒரே நசநசா.

கடந்த மூன்று நாட்களில் சேரனை நாட்டாமையாகப் போட்டதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. வருத்தப்படாத வாலிபர்கள், திருட்டு தாய்க்கிழவி, எதிர் கிராமத்துக்காரர்கள் என யாரும் சேரன் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். அப்பாவி முகேனை மட்டும் போனால் போகிறதென்று சேரனுக்கு ஆதரவாகக் கொடுத்து விட்டு அங்கும் அபிராமியை அனுப்பி வைத்து கெடுத்து விட்டார் பிக்பாஸ். இது சேரனின் சோதனை காலம். எப்பவுமே நாட்டாமை மனநிலையில் இருக்கும் சேரனுக்கு பதவியையே கொடுத்து விட, அவர் அனைவரையும் கம்பீரமாக ஆள நினைக்க, ‘அவர் சொல்றதையெல்லாம் கேக்காதீங்க அதான் உங்களுக்கான டாஸ்க்’ என மற்றவர்களை பிக் பாஸ் தூண்டி விட, ஏற்கனவே சேரன் மீது கடுப்பில் இருந்தவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை வாரி விட, அதை அவர் தட்டிக் கேட்டால்….ஷ்ஷ்ஷ்ஷப்பா டாஸ்க்குப்பா.

இதில் மதுமிதா இடையில் சந்திரமுகியாக மாறியதையும் நாம் பார்த்தோம். “இந்தப் பொண்ணுகளே இப்டி தாங்க. எதுக்கு கோபப்படுவாங்க எதுக்கு சிரிப்பாங்க எப்போ கத்துவாங்கனு யாருக்குமே தெரியாது.” இது தான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கும். ஆனால், உண்மையில் அவர்களைப் புரிந்து கொண்டவர்களுக்கு இந்தக் குழப்பமே இருக்காது. “இப்போ என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துறாங்க” என சாண்டி குழம்பிப் போய் கேட்ட போது, “டேய் நேத்தே அடி வயிறு வலிக்குதுனு சொல்லிட்ருந்துச்சுடா இந்த நேரத்துல அப்டி தான் விடு பேசாத” எனச் சொன்னார் சரவணன். “அதெப்டி சித்தப்பு நம்ம பக்கம் இருக்க நியாயத்தை சொல்லனும்ல” என சாண்டி மறுபடி கேட்க, “அதெல்லாம் எதுவும் பேசாதடா அடிச்சா கூட வாங்கிக்க. இந்த நேரத்துல டாஸ்க் செய்யச் சொன்னதே தப்பு” என சரவணன் சொன்ன போது முதல்முறையாக அவர் மேல் கொஞ்சம் மரியாதை வந்தது. ஆனால், பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு “இதெல்லாம் திட்டம் போட்டு பண்ண மாதிரி தான் தெரிஞ்சது” எனப் பேசி எனக்கெல்லாம் எந்த மரியாதையும் வேணாம்ப்பா என அவரே சொல்லி விட்டார்.

ஆம், மாதவிடாய் சுழற்சி மனநிலை என்பதை ஆண்களால் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று. சம்பந்தப்பட்ட பெண்களுக்கே தெரியாது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாதவிடாய் என்பதெல்லாம் அருவருக்கத்தக்க விஷயமோ, தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய விஷயமோ இல்லை என்ற புரிதலுக்கு மிகச்சில ஆண்கள் வந்து கொண்டிருக்கின்றனர். “அந்த மூன்று நாட்களில் அவளை மார் சாய்த்து தலை கோதி கால் பிடித்து…” போன்ற கவிதைகளை ஆண் கவிஞர்கள் எழுதத் தொடங்கியுள்ளனர். ஆனால், எத்தனை ஆண்கள் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களை உணர்ந்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. உடல் வலி போல அதுவும் முற்றிலும் இயற்கையான பாதிப்பு தான். தேவையில்லாத கோபம், மன அழுத்தம், அழுகை என அல்லற்படுவார்கள். இத்தகைய நிலை எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் எனச் சொல்ல முடியாது. அதற்காக அப்படி பாதிக்கப்படுபவர்கள் நடிக்கிறார்கள் என்றும் முடிவு செய்து விட முடியாது. என்னைப் பொருத்தவரை மதுமிதா நடிக்கவில்லை. அப்றம் ஆண்களே, உங்கள் காதலி/மனைவியின் மாதவிடாய் தேதிகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு உஷாராக இருக்கவும். பெரும்பாலான சண்டைகளைத் தவிர்ப்பதற்கான ஃப்ரீ டிப்ஸ்.

அடுத்து வீட்டில் நடந்த மிக மிக முக்கியமான பிரச்சனை சேரன் மீது மீரா சுமத்திய குற்றச்சாட்டு. இதை எப்படிக் கையாள்வது என்றே எனக்கும் தெரியவில்லை. ஒரு பெண் ஆணைப் பழி வாங்க எடுக்கும் மிகக் கொடிய ஆயுதம் இந்த Abuse குற்றச்சாட்டு. அதற்காக எல்லாப் பெண்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளையும் பழிவாங்கும் நோக்கமுடையதாக எடுத்துக் கொள்ள முடியாது. இது தான் இங்கு சிக்கலே. “மொத்தமா லேடீஸ் நின்னுட்ருந்த இடத்துல என்னை மட்டும் பர்போஸா அப்டி இழுத்து தள்ளி விட்டாரு. தொடக்கூடாத இடத்துல தொட்டாரு. ஹார்ஸா ஹேண்டில் பண்ணாரு.” என சேரன் மீது மீரா வைக்கும் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போக வைப்பது அந்த “என்னை மட்டும் பர்போஸா” என்ற வார்த்தை தான். அந்தச் சூழலில் அப்படி ஆளை அடையாளம் பார்த்து அப்படிச் செய்திருக்க முடியாது. இத்தனைக்கும் இதை மீரா சொன்னவுடனேயே சேரன் “ஆமா தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சுருங்க. ஆனா சத்தியமா நான் வேணும்னே பண்ணல” என மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதற்குப் பிறகும் அதை விடாமல் மேலும் மேலும் பேசி, ” வந்தன்னைக்கே என்னையத் தொட மாட்டேன்னு சொன்னாரு. ஆனா மத்த எல்லார்ட்டையும் கேசுவலா பழகுறாரு. நான்ங்குறதால இப்டி பண்ணாரு. மத்தவங்கனா இப்டி பண்ணிருக்க மாட்டாரு. எனக்கு ஒன்னுனா யாருமே கேக்க மாட்டீங்க. அவர் கெட்ட நடத்தையுடையவர்” என்றெல்லாம் மீரா பேசியது ஏற்க முடியாதது. இத்தனை நாள் மனதில் தேக்கி வைத்த வெறுப்பைக் கொட்டித் தீர்க்க சரியான வாய்ப்பு கிடைத்ததும் கெட்டியாக பிடித்துக் கொண்டு அடித்து ஆடி விட்டார் மீரா.

அதற்காக ஒரு பெண் பாதிக்கப்பட்டால் சொல்லக் கூடாதா கேட்கக் கூடாதா என்றால் கண்டிப்பாக சொல்ல வேண்டும் தான். ஆனால், ஒன்று உனக்கு அத்தனை வலித்தால் அங்கேயே கத்து, சட்டையைப் பிடித்துக் கேள். மீரா அதைச் செய்யவில்லை ‘அது டாஸ்க். அங்கு நடந்தது விளையாட்டு. அதனால் அது முடியும் வரை காத்திருந்தேன்’ எனச் சொல்கிறார். அத்தனை புரிந்திருக்கும் பெண்ணுக்கு அது திட்டமிட்டு நடந்ததல்ல எதார்த்தமாக நடந்தது தான் என்பதும் கண்டிப்பாகப் புரியும். அவர் ஆயிரம் மறுத்தாலும் மீராவிடம் இருப்பது தாழ்வு மனப்பான்மை. அதைத் தான் வெவ்வேறு வடிவங்களில் அவர் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். அதைச் சரியாக இனம் கண்டு சொன்ன சேரன் பரம எதிரியாகியிருக்கிறார். இன்னொன்றை கவனித்தீர்களா எனத் தெரியவில்லை. “நான் இருக்கும் சொசைட்டி வேற. அங்க யாரும் என்னை திட்ட மாட்டாங்க. ஹர்ட் பண்ண மாட்டாங்க. அழ வைக்க மாட்டாங்க. என் சூழலே வேற” என மீரா அடிக்கடி சொல்லி வருகிறார். மாடலிங்/திரைத்துறையில் இப்படி எந்த வகையிலுமே யாரையுமே ஹர்ட் செய்யாத, அதுவும் மீரா போன்ற எந்த விஷயத்திலும் அடிப்படைப் புரிதலற்ற பெண்ணை எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கிற சொசைட்டி எங்கே இருக்கிறது எனத் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள். கட்டுரை எழுதுவதையெல்லாம் விட்டுட்டு அங்கே சேரலாமென்றிருக்கிறது. எனக்கு இதை எழுதுவதற்குள்ளேயே இங்கு தாவு தீர்கிறது.

உடனே, ‘ஏன் எப்பவுமே Victim blame பண்றீங்க?’ என ஒரு கூட்டம் கிளம்பும். இந்த மாதிரி சுத்துக்கு சுத்து கேமரா வைத்துக் கண்காணிக்கப்படும் ஒரு வீட்டில் தன்னை விக்டிமாக்கித் தனக்குப் பிடிக்காத ஒருவரைப் பழி வாங்க ஒருவர் முயல்வது அப்பட்டமாகத் தெரிந்துவிடும் ராஜாக்களே. மீராவே ஒப்புக் கொண்டிருக்கிறார் இதையே சரவணனோ சாண்டியோ செய்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டேன். வேண்டுமென்றே தான் சேரனுக்கு இப்படிச் செய்தேன் என. தோள்பட்டைகளை இறக்கவும். அதேநேரத்தில், ” மத்தவங்க கூட க்ளோசா பழகுற, டான்ஸ் ஆடுற, தர்ஷனை கட்டிப்பிடிக்கிற” அதெல்லாம் தப்பில்லையா என மதுமிதா, லாஸ்லியா, சரவணன் கோஷ்டி கேட்பதையும் ஆதரிக்க முடியாது. தன்னை யார் தொட வேண்டும் என்பதையெல்லாம் அந்தப் பெண் தான் தீர்மானிப்பாள். அவள் எத்தனை பேருடன் பழகினாலும் பிடிக்காத ஒருவன் தொட்டால் தப்புத் தான். ‘அவன் தொட்டா மட்டும் கம்முனு இருக்க நான் தொட்டா கத்துற’ என்றெல்லாம் கேட்பது உச்சகட்ட அநாகரிகம்(அதை நாகரிகமாக இப்படித் தான் எழுத முடிகிறது.) ஆனால், வேண்டுமென்றே தொட்டானா தெரியாமல் நடந்ததா என்பது ஒரு பெண்ணுக்கு கண்டிப்பாகத் தெரியும். இதை இப்படியே விட மாட்டார் மீரா. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கையிலெடுப்பார்.

“நான் என் பிள்ளைகளுக்காகத் தான் வந்தேன். இப்டிலாம் அசிங்கப்படனும்னு அவசியமில்லை” என சேரன் அழுதது பாவமாக இருந்தது. இத்தகைய சூழலைச் சந்திப்பதையே அவர் அவமானமாகக் கருதுவதை பாவனைகளிலேயே வெளிப்படுத்தினார். இது இந்த பிக் பாஸ் வீட்டில் அவருக்கு விழுந்த மிகப் பெரிய அடி. இனி கமல் முன்னிலையில் ஒருமுறை இந்தப் பஞ்சாயத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறாரோ தெரியவில்லை.

எழுதி முடித்த பிறகும் சரியாகத் தான் இதை அணுகியிருக்கிறேனா, சொல்ல வந்ததைச் சரியாகக் கடத்தி விட்டேனா என யோசனையாகவே இருக்கிறது. ஏனென்றால் இது அத்தனை Sensitive ஆன விஷயம். அதனால் தான் இதன் சாதகங்கள் அனைத்தும் பெண்ணின் பக்கம் இருக்கும் படி சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை எத்தனை பெண்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்விக்குறி.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. ரொம்ப நல்லாயிருக்கு உங்க ரிவ்யூ.. பிடிச்சவங்களோட நடத்திக்கிற உரையாடல் மாதிரி

    <3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button