யாரும் எதிர்பாராத விதத்தில் தற்கொலை முயற்சி செய்த காரணத்திற்காக மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கிறார். அது வெறும் அறிவிப்பாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைய அறமற்ற செயல்களைச் செய்து ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறது. முதலில் சரவணன் வெளியேற்றப்பட்டார். அதற்கான காரணம் நமக்குத் தெரிவிக்கப்பட்டாலும், அது பற்றிய பலதரப்பட்ட புரளிகள் வெளியே உலாவின. சனிக்கிழமை கமல் வந்து அதைப் பற்றிப் பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அல்லது பேசியது ஒளிபரப்பப் படவில்லை. ஒருவேளை பேசியிருந்தால் கூட அங்கு நேரில் பங்கேற்ற பார்வையாளர்கள் அந்தத் தகவலைக் கண்டிப்பாக வெளியே கசிய விட்டிருப்பார்கள். எனவே, அங்கு அவர்கள் அதைப் பற்றிப் பேசவில்லை.
அடுத்து எவிக்ட் ஆகி வெளியே சென்ற வனிதா கெஸ்டாக உள்ளே வருகிறார். அதுவரையில் சரி. ஆனால், இரண்டு நாட்களில் டாஸ்க் முடிந்த பின்னும் வனிதா இப்போது வரைக்கும் வெளியேற்றப் படவில்லை. அடுத்த வாரமே வந்து விட்டது.
இப்போது வெற்றியாளர் போட்டியில் இருந்த மதுமிதா கையில் கட்டோடு வெளியேற்றப்பட்டிருக்கிறார். சாண்டி கையில் ட்ரிப்ஸ் ஏறியிருக்கிறது. என்ன சண்டை நடந்து? தற்கொலை முயற்சி எடுக்கும் அளவிற்கு என்ன பாதிக்கப்பட்டார்? யார் காரணம்? என எதுவுமே காண்பிக்கப்படவில்லை. சரி அதைத் தான் காட்டவில்லை, போட்டியாளர்கள் முகத்தில் கூட அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான தடயமே இல்லை. அது எப்படி 50 நாட்களாக பழகிய ஒருவரைப் பற்றிய எந்த சலனமும் இல்லாமல் இருக்க முடிகிறதென்று தெரியவில்லை. எந்த உறவின் மேலும் எத்தகைய மதிப்பும் வைக்காத இந்தத் தலைமுறையைக் கண்டால் வருத்தமாகவும் அச்சமாகவும் இருக்கிறது.
அரசியல் பேசினார், கர்நாடகாவைப் பபற்றிப் பேசினார் எனக் காரணங்கள் சமூகவலைதளங்களில் வலம் வருகின்றன. ஆனால், நமக்கு விஷயம் தெரியாத வரைக்கும் சரி, கை மீறிப் போன பிறகு காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பது தான் அறம். அரைகுறையாக இருந்த நம்பகத்தன்மையையும் இந்த சீசனில் மொத்தமாக இழந்துள்ளது பிக் பாஸ்.
இதைத் தவிர, சேரன் விவகாரத்தில் பெரும்பாலான இளைஞர்கள் சாண்டி & கவின் அணியினர் பக்கம் நிற்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் அனைவரும் ஒன்று தான் என்பது அவர்கள் வைக்கும் வாதம். பிக்பாஸ் வீட்டில் அனைவரும் சமம் தான். அது வேலை செய்யும் போதும், டாஸ்க்கில் ஈடுபடும் போதும் தான். நான் ஒரு பெரிய இயக்குனர் வேலையெல்லாம் செய்ய மாட்டேன் என சேரன் மற்றவர்களை அதிகாரம் செய்தால் அப்போது அதை நாம் ஆதரிக்க முடியாது. ஆனால், வயது வித்தியாசமில்லாமல் மட்டு மரியாதையில்லாமல் பேசுவது, மட்டமாகக் கலாய்ப்பதெல்லாம் சமத்துவத்தில் வராது. இன்றைய நவீன யுக இளைஞர்கள் மத்தியில் இவையெல்லாம் ட்ரெண்டாகி வருகின்றன என்பது வேதனைக்குரிய விஷயம்.
கமல் கூட சம்பந்தமில்லாமல் சாண்டி அணியினருக்கு ஆதரவாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரை இப்படி யாராவது நடத்தினால் இதே மனநிலையோடு ஏற்றுக்கொள்வாரா எனத் தெரியவில்லை. ஒருவேளை தன்னை விட சேரன் ஒன்றும் உயர்ந்தவரில்லை என கமல் நினைக்கலாம். அப்படி நினைக்கக் கூடியவர் தான்.
லாஸ்லியாவைப் பற்றியெல்லாம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. லாஸ்லியா செய்யும் இதே காரியங்களை அவரளவுக்கு அழகில்லாத ஒரு பெண் செய்தால், இந்த தமிழ் கூறும் நல்லுலகம் இப்படித் தலையில் வைத்துக் கொண்டு ஆடுமா எனத் தெரியவில்லை. இவர் தப்பு செய்வாராமா… ஆனால், சேரன் அவரை சிறைக்கு அனுப்பக் கூடாதாமா. அப்படி செய்தால் நாலு பேருடன் சேர்ந்து மட்டமாகக் கேலி செய்து சிரிப்பாராமா. இதில் கவின் வேறு சேரன் நாடகம் நடத்துவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். தான் லாஸ்லியாவிடம் குலாவுவதற்கு சேரன் தடையாக இருப்பார் என எண்ணுகிறார் போலும்.
மேலும், இத்தனை நாள் அழுமூஞ்சியாக இருந்த அபி, சும்மா கெத்தாக துளி கூட கண்ணீர் சிந்தாமல் வீட்டை விட்டு எவிக்ட் ஆகி வெளியேறியிருக்கிறார். அதன் பின்பு அவர் உடைத்து விட்டுச் சென்ற பதக்கத்தை ஏக்கத்துடன் ஒட்ட வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த முகேன் தான் நம் அனுதாபத்தை அள்ளியிருக்கிறார். இது தான் பெண்ணின் பேரன்பிற்கு இருக்கும் பலம். இனிப் பேசக்கூடாது என முடிவெடுத்த பின்பு தான், பேசச் சொல்லிப் பிராண்டும் அன்பு கொண்ட மனம். முகேனிற்கும் அப்படிப் பிராண்டியிருக்கும். எந்த போதைக்கு அடிமையானவர்களையும் மீட்டு விடலாம். அன்பு தரும் போதைக்கு அடிமையானவர்களை மீட்கவே முடியாது. முகேன் அதற்கு அடிமையானவர். மீட்கவே முடியாது.