தொடர்கள்
Trending

“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 11

பறவை பாலா

11. களை மேலாண்மை

விதைகளை வாங்கியவுடன் உடனே விதைத்து விடாமல் முதலில் உங்களது நிலத்தின் களைகளை ஆய்வு செய்யவேண்டும்.

நீங்கள் நிலத்தினை வாங்கியது முதல் விதைப்பதற்கான கால இடைவெளியில் நிச்சயம் ஒரு மழைப்பொழிவு நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மனிதர்களின் தயவில்லாமல் ஊர்வன, பறப்பன மற்றும் பூச்சியினங்களின் உதவியோடு நிலம் ஒரு சில செடி, கொடியினங்களை உருவாக்கியிருக்கும்.

விதைகள் நீண்ட காலத்திற்கு உறக்கத்திலிருந்தாலும் அவை முளைவிட்டு வெளியேறி வரும் காலம் வரைக்கும் தேவையான புரதத்தை தனக்குள் சேமித்து வைத்திருக்கும். அப்படிப்பட்ட விதைகளில் மனிதர்கள் தனக்குத்தேவையானதை உணவுப்பயிர் என்றும், உண்ணத்தகாததை களை என்றும் வரையறை செய்து வைத்திருக்கிறார்கள்.

இதில் கிழங்குவகை தாவரமான சின்ன வெங்காயம் மண்ணில் ஊன்றிய எழுபது நாட்களில் குறைந்தது பத்து வெங்காயமாக தன் இனத்தை விருத்தி செய்து பலன் தரும். எனவே நாம் அதுபோன்ற தாவரங்களான பூண்டு, வேர்க்கடலை, உள்ளிட்ட பயிர்களை லாபக்கணக்கில் வைத்துக்கொள்வோம்.

ஆனால் அதே கிழங்கு குடும்பத்தைச் சார்ந்த ‘கோரை’ அப்படியல்ல. நிலவேம்பு கசாயம் தயாரிப்பின் போது பயன்படுவதைத்தவிர யாதொரு பயனும் நமக்கு நேரடியாக கிடையாது.

இந்தக்கோரைக்கிழங்கை பயிர் செய்யும் முன்பே உங்களது நிலத்திலிருந்து ‘களை மேலாண்மை’ செய்து அகற்றாவிட்டால் உங்களை வருங்காலத்தில் கண்ணீர் சிந்த வைத்துவிடும் அளவுக்கு மிகக்கொடூரமாக விரைந்து வளரும்.

ஒரு கோரைக்கிழங்கு ஏழு கிழங்குகளை உற்பத்தி செய்யும். பின்பு அந்த ஒவ்வொன்றும் தன்பங்குக்கு ஏழேழு கிழங்குகளை உற்பத்தி செய்யும். இப்படியாக ஒரே வருடத்தில் உங்களது விளைநிலம் மொத்தமும் கோரைக்கிழங்குகளால் நிரம்பி வழியும்.

அந்தக்கோரையை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் இருங்குச்சோளம் அல்லது காக்கா சோளம் என்றழைக்கப்படுகிற மாட்டுத்தீவன பயிருக்கு உண்டு. எனவே அவற்றை ஒரு சென்ட்டுக்கு ஒரு கிலோ வீதம் நெருக்கமாக விதைத்து தண்ணீர் விடவேண்டும்.

இருங்குச்சோளத்தின் வேர்கள் உருளை வடிவில் நரம்பு போல் நிலத்தில் ஊடுருவுவதால் அவற்றிக்கிடையில் போட்டி போட்டுக்கொண்டு வளர முடியாமால் கோரைக்கிழங்கு தன் உற்பத்தியை குறைக்கத்துவங்கும்.

இருங்குச்சோளம் விதைத்ததிலிருந்து அறுபதாவது நாளில் மூன்றரை அடியை எட்டியிருக்கும் நேரத்தில் அவற்றை அறுவடை செய்து, போர் கட்டி மாட்டுத்தீவனத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்போது உங்களது நிலத்தில் கோரைக்கிழங்கு பாதியாக குறைந்திருக்கும். மீண்டும் நிலத்தை உழவேண்டும். உழுது ரெண்டு நாளில் மீண்டும் அதே அளவீடுகளில் இருங்குச்சோளத்தின் விதைகளைத்தூவி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அதே போல் அறபது நாளில் அறுவடை. இப்போது கோரை என்பது சதவிகிதம் காணாமல் போயிருக்கும்.

மீண்டும் உழுது விதைத்து அறுவடை செய்து முடிக்கும் போது நூறு சதவிகிதம் உங்களது விளை நிலத்திலிருந்து கோரை அகற்றப்பட்டிருக்கும்.

இதைச்செய்து முடிக்கவே முழுதாக ஒரு வருடம் கடந்திருக்கும்.

நெல், சிறுதானியங்கள், பயறு, மற்றும், எண்ணெய் வித்துக்கள்  விளையவேண்டிய நிலங்களுக்கு இது போன்று முன்னெச்சரிக்கையாக களை மேலாண்மை செய்யும்போது பின்னாட்களில் களை எடுக்கும் கூலியை மிச்சப்படுத்தி தேவையில்லாத மன உளைச்சலிலிருந்து விடுபடலாம்.

ஒவ்வொரு முறை அது போன்ற பயிர் செய்யும்போது நமது நிலத்திற்கு உழவு செய்ய வரும் ‘டிராக்டரின்’ கொழுவில் கோரைக்கிழங்குள் ஒட்டி வந்திருக்கின்றனவா? என்பதை பரிசோதித்துக்கொள்வது மேலும் சிறப்பு.

மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்தியில் காய்கறிகள் பயிர் செய்யும்போது இது போல் அடிக்கடி உழவு ஓட்ட முடியாததால் பாத்தியின் அமைப்புக்கேற்றவாறு சணல் சாக்கு கொண்டு மூடி, களை மேலாண்மை செய்ய வேண்டும்.

நடை பாதையில் முளைக்கின்ற களைச்செடிகளை அகற்றி மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்திகளின் மேல் கொட்டி வருவதன் மூலம் ஊர்வனற்றின் உறைவிடமாக மாறி காய்கறி செடிகளில் காய்ப்புத்திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.

மொத்தத்தில் நமது நிலத்தில் உற்பத்தியாகிற உணவுத்தானியமாகட்டும் அல்லது களைச்செடிகளாகட்டும் நாம் நுகர்ந்தது போக மீதியை தேவையில்லாமல் தீவைக்கவோ தோட்டத்திற்கு வெளியே அப்புறப்படுத்தவோ கூடாது. எவ்வளவு களைகள் முளைத்தாலும் அதனை மட்கச்செய்து அவற்றை மீண்டும் நமது விளைநிலங்களுக்கே கொடுக்க வேண்டும். காரணம் ஒவ்வொரு நிலப்பரப்பும் தனக்கு எது தேவையோ அதைத்தான் உற்பத்தி செய்கிறது என்கிற அடிப்படைப்புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.

களை முளைக்கும் அளவுகளைப்புரிந்துகொண்டு தோட்டத்தின் ஒருசில பகுதிகளில் குழி தோண்டி அதில் களைகளைப்போட்டு ‘திறன்மிகு நுண்ணுயிரி’ போன்ற திரவ உரங்களின் துணையோடு எளிதில் மட்கச்செய்யலாம். இந்தக்குழிகளும் மாட்டுக்கொட்டகையைப்போல இன்னொரு உரத்தொழிற்சாலையாக விளங்கும்.

இது தவிர களைச்செடிகளைப்பிடுங்கி திரவ உரங்கள் அடங்கிய கொள்கலனில் போட்டு நொதிக்கச்செய்து அந்த திரவத்தை நிலத்திற்கு திருப்புவதின் மூலமும் உயர் விளைச்சலைப்பெறமுடியும். இது போன்ற களை மேலாண்மை ஐரோப்பிய நாடுகளில் தற்போது பிரபலமாகி வருகிறது.

இவை போன்ற களை மேலாண்மைகளை கவனத்தில் கொள்ளாமல் நீங்கள் வாங்கி வந்த விதைகளை வேக வேகமாக மண்ணில் இறக்கினால் தேவையில்லாத மன உளைச்சலையும், பணவிரயத்தையும் வருங்காலத்தில் சந்திக்க நேரிடும்.

பாதை விரியும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button