கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 53, 54 & 55 – சேரனை கௌரவமாக வெளியேற்றுங்கள் பிக் பாஸ்!

மித்ரா

“இது பிக் பாஸ் வீடா இல்ல சந்தைக்கடையா டா?” என நம்மைப் புலம்ப வைக்கும் அளவிற்கு கடந்த மூன்று நாட்களாக பிக் பாஸ் வீட்டில் ஒரே சண்டை சச்சரவு கூச்சல்கள் குழப்பங்கள். தயவுசெய்து இளகிய மனம் படைத்தவர்கள் பிக் பாஸ் பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள்.

பிரச்சனைகள் சுற்றிச் சுற்றி எங்கெங்கோ யார் யாரிடமோ சென்றாலும், அங்கிருக்கும் முக்கியப் பிரச்சனை சேரனுக்கு எதிராக ஒன்று கூடியிருக்கும் ஆண்கள் அணியும், பாய்ண்டாகப் பேசத் தெரியாமல், பாய்ண்டாகப் பேசுவதாக நம்பி சம்பந்தமில்லாமல் கத்திக் கொண்டிருக்கும் மதுமிதாவும் தான்.

“தயவுசெய்து வெளியே வந்து விடுங்கள் சேரன்” என வசந்தபாலன் எழுதியது தான் ஞாபகம் வருகிறது. சாண்டிக்கும், கவினுக்கும் அப்படி என்ன சேரன் மீது காழ்ப்புணர்ச்சி என இப்போது வரை புரியவில்லை. முன்னர் அரசல்புரசலாகக் காட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போது நேரடியாகவே சமரில் நிற்கிறார்கள். தன் நிலையை விட்டு இறங்கி வந்து அவர்களுடன் போராட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் சேரன். பொதுவாக சமூகம் அதீதமாகக் கொண்டாடும் ஆண்களை சில ஆண்களுக்குப் பிடிக்காமல் போகும். “அவனென்ன அவ்ளோ பெரிய ஆளா?” என சம்பந்தமில்லாமல் வெறுப்பைக் கொட்டுவார்கள். அப்படியான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் சாண்டி & கவின். சேரனுக்கு இருக்கும் புகழும், இமேஜும் தங்கள் விளையாட்டைப் பாதித்து விடும் என்ற பயத்தில் தான் ஆரம்பத்தில் இருந்து அவரை டார்கெட் செய்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

இதில் ஏற்றுக் கொள்ளவே முடியாத விசயம் தர்ஷனும், லாஸ்லியாவும் கூட அவர்கள் பக்கம் அணி சேர்ந்து இருப்பது தான். இங்கே உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் மதிப்பேயில்லை சேரன் சார். கூட்டம் குறையும் வரை அமைதி காத்த பிள்ளைப் பூச்சிகளுக்கு எல்லாம் இப்போது கொடுக்கு முளைத்திருக்கிறது. கவின்-சாண்டி கூட்டணியே இப்போது வீட்டின் ஆல் இன் ஆல் அதிகாரங்களைக் கைப்பற்றி சர்வ வல்லமை பொருந்திய அணியாக இருக்கிறது. மெஜாரிட்டியை வைத்து முடிவுகள் எடுக்கப்படும் இடத்தில், சேரன் வைக்கும் நியாயமான கருத்துகள் ஒன்றுமில்லாமல் போகின்றன. திட்டமிட்டு சேரன் டார்கெட் செய்யப்படுகிறார், புறக்கணிக்கப்படுகிறார். அதை உணர்ந்து அவர் செய்வதற்கு ஏதுமற்ற கையறு நிலையில் தவிப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் அனைவரும் ஒன்று தான். என்றாலும் கூட வயதிற்கென்று ஒரு மரியாதை கொடுக்க வேண்டியது அடிப்படை நாகரீகம். நியாயமான விமர்சனங்கள் செய்வது, தவறுகளைச் சுட்டிக் காட்டுவது வேறு. ஆனால், முகஞ்சுழிக்கும் விதத்தில், நோகடிக்கும் வகையில் கேலி செய்வது எல்லாம் கண்டிப்பட வேண்டியவை. எப்படி எதிர்ப்பைக் காட்டுவது எனத் தெரியாமல், கவின் சார், தர்ஷன் சார் எனக் கூப்பிட்டால் அதையும் கண்டுகொள்ளாமல் கேலி செய்கின்றனர். வேதனையில் ஏன்னு கூட கேக்க மாட்டீங்களா என அவர் கேட்ட போதும், லாஸ்லியா அலட்சியமாக பதில் சொல்வதெல்லாம்… லாஸ்லியாவைப் பற்றிய கணிப்பு பிழையாகவில்லை என்ற அளவில் மகிழ்ச்சி.

“நான் யாரைப் பற்றியும் பின்னால் கதைக்க மாட்டேன்.” , ” நான் சம்பந்தப்படாத பிரச்சனைகளில் கலந்து கொள்ள மாட்டேன். சண்டை போட மாட்டேன்.” , “நான் எல்லோரிடமும் அன்பாத் தான் இருப்பேன். சண்டை போட ஏலாது.” என கலர் கலராக லாஸ்லியா சுற்றிய ரீல் எல்லாம் சாயம் போய் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. சாக்ஷி வெளியேறிய பிறகு தைரியமாக ஆண்கள் அணியுடன் சேர்ந்து குரூப்பிஸம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இயல்புக்கு மாறாக நடந்து கொள்ளும் யாரையும் கொண்டாடாதீர்கள். மனிதன் என்றால் சொரணை எல்லாம் இருக்க வேண்டும். அதான் இயல்பு.

மதுமிதாவிற்கு அந்த காலர் கேள்வி கேட்டது மற்றும் வனிதா தூபம் போட்டது எல்லாம் சேர்ந்து கொம்பு முளைத்திருக்கிறது. உப்புச்சப்பில்லாத விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசி சண்டையிழுத்து, தான் நியாயவான் என்பதை நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். சேரனும் வேறு வழியே இல்லாமல் அவருடன் சேர்ந்து கொண்டிருக்கிறார் பாவம். இன்று மதுமிதா வேறு வெளியேறுகிறார் போலத் தெரிகிறது. மொத்த வீடும் சேரனுக்கு எதிராக நிற்கும். ஷெரின் அபியெல்லாம் கணக்கிலேயே இல்லை. அவர்கள் இந்த விஷயத்தில் சோ கால்ட் நடுநிலைவாதிகள். இந்த வீட்டில் இருந்து கௌரவமாக அவரை வெளியேற்றுவது மட்டுமே பிக்பாஸ் சேரனுக்கு செய்யும் நன்மையாக இருக்க முடியும்.

இதில் இன்னுமொன்றை சொல்லியே ஆக வேண்டும். எந்த சண்டையையும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாகக் கையாள்கிறார் கவின். ஒரே கேள்வியை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்கிறார். ஆனால், கவினை ஆஃப் செய்ய இவர்கள் வைக்கும் வாதம், “நீ 4 பேருடன் பழகின” என்பது தான். இது தவறு. அந்த நாலு பேரையும் ஒன்னும் அவர் ஏமாற்றிக் கையைப் பிடித்து இழுக்கவில்லை. எந்தப் பிரச்சனையையும் பேசித் தீர்த்த பின் மீண்டும் அதை அவர்கள் மீதே ஆயுதமாகப் பிரயோகிக்காதீர்கள் ப்ளீஸ்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button