சிறுகதைகள்
Trending

ஒரு பக்கக் கதை

கவிஜி

முகில் கடந்த மூன்று வாரங்களாக வீடு தேடிக் கொண்டிருக்கிறான். எதுவும் சரியாக அமையவில்லை. புலம்பியபடியே இன்றும் வீடு தேடும் படலம் முன்னிரவு தாண்டியும் தொடர்ந்து கொண்டிருந்தது.
“என்ன முகில்… இது வரை 30 வீடு பார்த்திருப்போம்…. ஒன்னு கூடவா பிடிக்கல?” விஜி அலுத்துக் கொண்டாள்.
காற்றற்ற நகரம் தன் கூரிய நகங்களை தானே முறைத்து பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு மேக கூட்டமாகி தங்களை வரைந்தபடியே நகர்ந்து கொண்டிருக்க …… கண்கள் முழுக்க ஆசையின் பிரவாகம் தெரிக்கும் முகிலின் வேட்டை தொடர்ந்து கொண்டேயிருந்தது.
அவன் கால்கள் தேடி தேடி அலைந்தன.
அடுத்து ஒரு வீடு……” ம்ஹும்…..” தலையாட்டி விட்டு நகர்ந்தான்.
சுடுகாடு பக்கம் ஓர் ஒற்றை வீடு….
“ஒரு வில்லங்கமும் இல்ல… வீட்டுக்கு சொந்தக்காரர் அமெரிக்கால செட்டில் ஆகிட்டார்… நீ ஓகே னா காலைல பேசிடலாம்…..”
விஜியின் பேச்சை காற்றில் கலக்க விட்டவன் மீண்டும் மீண்டும் நடந்தான். அவன் காற்றில் நடந்து கொண்டிருந்தது போல தெரிந்தது விஜிக்கு. அவன் மனதுக்குள் ஓடும் வாத்துக்களின் பக் பக்க பக்க அவளுள் கிறுகிறுப்பை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. முன்னிரவு பின்னிரவை தொடத் தொடங்கி இருந்தது. கண்கள் இன்னும் கூரானது முகிலுக்கு. அவன் முகம், எப்படியும் இன்று வீடு கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கையில் தேஜஸ் ஆல் நிரம்பி இருந்தது.
நிலவின் வெண்ணிறம் சாம்பல் பூத்து கொட்டிக் கொண்டிருந்தது.
நண்பர் ஒருவரின் மூலம் சற்று முன் வந்திருந்த அலைபேசி அழைப்பு….. “ஓநாய் பாளைய”த்தில் ஒரு வீடு இருப்பதாக தெரிய வந்தது. அடுத்த 20 வது நிமிடத்தில் முகிலும் விஜியும்… அந்த வீட்டின் முன் நின்றார்கள். சற்று தள்ளி இருந்த ஒரு டீக்கடையில் வீட்டு ஓனர் யார்.. எப்போது வந்தால் பார்க்கலாம் என்று விசாரணை தொடங்கி இருந்தாள் விஜி. டீக்கடைக்காரர் விஜியை உற்றுப் பார்த்தார். முகில் இன்னும் வைத்த கண் வாங்கலாம் அந்த ஒற்றை வீட்டையே ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
வேகமாய் வந்த விஜி முகிலின் கைகளை பற்றி “இந்த வீடு வேண்டாம்…. முகில்…. இதுல வேற இருக்காம்….” என்றாள் நா படபடக்க.
சட்டென திரும்பி அவளை பார்த்தவன்….” வேறன்னா….?” என்று கேள்வியை முடிக்காமல் மீண்டும் வீ ட்டை அகலப் பார்த்தான். வீடு நெளிவது போல தோன்றியது.
“வேறன்னா… வேற முகில்… காத்து …இன்னும் புரியலையா….. லூசு, பேய் இருக்காம்…..” என்று சொல்லி எச்சில் விழுங்கியபடியே “வந்ரு போய்டலாம்”  என்று திரும்பி  நடந்தாள்.
“தேடிட்டு இருந்த வீடு கிடைத்து விட்டது.” – அவள் பின்னால் வந்து கொண்டிருந்த முகிலின் மனதுக்குள் இரவாய் கொட்டின வார்த்தைகள்.
வாய்க்குள் இருந்து வெளியே நீண்ட இரு பல்லையும் கஷ்டப்பட்டு மீண்டும் வாய்க்குள் மடக்கியபடி….திரும்பி திரும்பி பார்த்தபடியே நடந்தான்…….இதோ சற்று நேரத்தில் வீட்டுக்குள் படபடத்து பறக்க இருக்கும் டிராகுலா முகில்.
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button