கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 71 வரை – தடங்கலுக்கு வருந்துகிறோம்!

மித்ரா

தடங்கலுக்கு வருந்துகிறோம். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் தொடர் வெளியாகவில்லை. கைபேசியில் ஹாட்ஸ்டார் மக்கர் பண்ணியதால் பார்க்க முடியாமல் போயிற்று. பார்க்காததால் எழுத முடியாமல் போயிற்று.(ஹாட்ஸ்டார் பரிதாபங்கள்.) இருந்தாலும், அதை நினைவில் வைத்து வந்து விசாரித்து, அதை சரி செய்யத் தங்களால் இயன்ற வழிமுறைகளைச் சொன்ன அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகளும். அன்புகளும். இனி தடங்கலின்றி அவ்வப்போது கட்டுரைகள் வெளியாகும்.

2 வாரங்களுக்கான நிகழ்வுகளை எழுத வேண்டும் எனும் போது எப்படி, எந்த அடிப்படையில் பிரித்து எழுதுவது எனக் குழப்பமாகவே இருந்தது. இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. மூன்றே வார இறுதிகள். நாட்கள் கடந்து விட்டன. செய்த சம்பவங்கள் அவர்களுக்கே மறந்து போயிருக்கும். எட்டு பேர் தானே இருக்கிறார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியே தோன்றுவதைப் பேசிவிடலாம்.

முகேன்

வெற்றி வாய்ப்பில் கடைசியில் இருப்பவர் முகேன் தான். வீட்டிற்குள்ளேயும் பெரிதாக ஆதரவு இல்லை. வெளியேயும் தர்ஷன் அளவிற்கு முகேனுக்கு ஆதரவு இல்லை என்பதே உண்மை. அதற்குக் காரணம் அவரின் குழந்தை மனது தான் எனத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரையில் முகேன் சமூகத்திற்கு ஒத்துவராத ரேர் வகையறா. நியாயம் தர்மம் எல்லாம் அருக்கு தெரியாது. சரி தவறெல்லாம் அவருக்குத் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை யாரும் காயப்பட்டுவிடக் கூடாது. முக்கியமாக அவர் மீது துளி அன்பையேனும் செலுத்தியவர்கள். அதற்காக நடுநிலைவாதி என்றில்லை. நிலைப்பாடுகளை எடுப்பார். ஆனால், அமைதியாக யாருக்கு ஆதரவளிக்கிறாரோ அவர் பக்கம் நிற்பாரே தவிர பேசமாட்டார். வீட்டிலேயே அவர் எதிர்த்துப் பேசிய ஒரே ஆள் அபி மட்டும் தான் என நினைக்கிறேன். உண்மையில் யாரையும் காயப்படுத்தாமல் யாரும் வாழவே முடியாது. அப்படி ஒரு வாழ்க்கையை நாம் வாழ விரும்பினால் இறுதியில் காயம்பட்ட மனது நமதாகத் தான் இருக்கும்.

ஆக, எந்தக் குரலும் கொடுக்காமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் முகேனுக்கு ஆதரவு குறைவாக இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

ஷெரின்

இத்தனை வருட பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் ஷெரின் போன்ற ஒரு பெர்சனாலிட்டியை வரலாறு கண்டதில்லை. அவரிடம் குறையென்று ஒன்றுமே கிடையாது. அவருக்கு அறிவுரை சொல்ல நினைத்தால் கமல் கூட என்ன சொல்வதென்று தடுமாறிப் போகிறார். இத்தனை முதிர்ச்சியுடனும், பக்குவத்துடனும் ஆச்சரியப்படுத்துகிறார் ஷெரின். நியாயமில்லாத விசயங்கள் நடக்கும் போது எழும் முதல் குரல் ஷெரினுடையதாகத் தான் இருக்கிறது. யாராவது அழும் போது துடைக்கும் முதல் விரல் ஷெரினுடையதாகத் தான் இருக்கிறது. அதற்காக அத்தனை சீரியஸான ஆளுமில்லை. கலாய்க்கிறார், விளையாடுகிறார் எல்லாமும் செய்கிறார். ஆனால் ஆச்சரியப்படுத்தும் புத்திசாலி. இந்த வீட்டில் முறைப்படி விளையாடும் ஒரே ஆள் ஷெரின்.

அவருடைய புத்திசாலித்தனத்திற்கு எடுத்துக்காட்டாக நேற்றைய நாமினேசனைச் சொல்லலாம். ஏறத்தாழ அனைருமே கவின், லாஸ்லியாவைத் தான் நாமினேட் செய்தனர். ஆனால், அதற்கு மற்றவர்கள் சொன்ன காரணத்திற்கும் ஷெரின் சொன்ன காரணத்திற்கும் வானத்தளவு வித்தியாசம். “கவினும் லாஸ்லியாவும் இப்போது தான் ஒரு அழகான உறவில் இறங்கியிருக்கிறார்கள். இந்த வீட்டில் அதற்கு நிறைய தடைகள் இருக்கின்றன. இது வேண்டாம். வெளியே போய் அன்பு வானில் சிறகு விரியுங்கள். அது தான் இப்போது முக்கியம்.” என வாழ்த்தி நாமினேட் செய்கிறார். இது தான் பக்குவம். ஆனால், சோகம் என்னவென்றால் இந்த வாரம் வெளியேறுவதற்கான வாய்ப்பு மிகுந்தவர் ஷெரின் தான்.

தர்ஷன்

தர்ஷன் வெற்றிக்கான அத்தனை வாய்ப்புகளும் பொருந்தியவர். சந்தேகத்திற்கிடமின்றி அதற்கான தகுதிகள் நிரம்பியவர். சிலநேரங்களில் தர்ஷனின் டெடிகேசன் வியக்க வைக்கிறது. சாதாரண உப்புச்சப்பில்லாத டாஸ்க்கிற்குக் கூட அவர் கொடுப்பது 100% உழைப்பு. வீட்டில் யாரிடமும் இல்லாத தகுதி அது.

அதுமட்டுமில்லாமல் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸாக, கடமை தவறாமல் இருப்பது, அநியாயத்தைக் கண்டால் பொங்குவது, நேர்மையாக இருப்பது, சோகத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்வது, வனிதாவை எதிர்ப்பது என ஓட்டுப் போடும் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் அத்தனை தகுதிகளையும் பிசிறடிக்காமல் பெற்றுள்ளார் தர்ஷன். இத்தனையில் பாதியாவது கவினிடம் இருந்தால் கோப்பையில் இந்நேரம் அவர் பெயர் எழுதப்பட்டிருக்கும். ஆனால், ஜாலியாக ஜாலி செய்து கொண்டு தர்ஷன் ஆதரவாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் கவின். எனக்கென்னவோ தர்ஷன் தான் வின்னர் என கனவில் கவுளி சொல்கிறது. பார்ப்போம்.

சாண்டி

தன் குடியைக் கெடுத்ததும் இல்லாமல் கவின் கெடுத்த குடிகளில் முக்கியமான குடி சாண்டியினுடையது. சாண்டியும் கடுமையான போட்டியாளர் தான். இப்போதைய சூழலில் வெற்றிக்கான போட்டி சாண்டிக்கும் தர்ஷனுக்கும் தான். சாண்டி யாருக்காகவும் விட்டுக் கொடுக்கும் தியாக மனப்பான்மையிலும் இல்லை. திறமைசாலி. தர்ஷனிடம் இல்லாத தகுதியான நகைச்சுவை இவரிடம் கொட்டிக் கிடக்கிறது. எந்த ஒரு சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்தவர். சுறுசுறுப்பானவர். தர்ஷனை விட மிக மிக கவனமாக விளையாட்டை அணுகி விளையாடி வருபவர். தனக்கென கூட்டம் சேர்த்தது, அதை வைத்து யார் நாமினேசனில் இருக்க வேண்டும், யார் சிறையில் இருக்க வேண்டும், யார் கேப்டனாக வேண்டும், யார் ஆகக் கூடாது என்றெல்லாம் சாண்டியின் தலைமையிலான குழு தான் முடிவு செய்தது. இதெல்லாம் விளையாட்டு வியூகங்கள் தான்.

ஆனால், சாண்டி சறுக்கிய ஒரே இடம் கவின் மட்டும் தான். அவர் மீது இருக்கும் ஒரே குற்றச்சாட்டு, “உங்கள் நண்பர்கள் தவறு செய்யும் போது ஏன் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்?” என்பது தான். உண்மையில் இந்த விஷயத்தில் எல்லாம் சாண்டி செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அடிப்படையாக கவினை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என நினைக்கிறார். அது நட்பின் குணம். நான் சாண்டி இடத்தில் இருந்தாலும் அதைத் தான் செய்வேன். மற்றபடி அவரால் முடிந்த அறிவுரைகளை கவின், லாஸ்லியா இருவருக்கும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். காதல் விவகாரத்தில் ஒரு நண்பனால் இதற்கு மேலெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. அதையும் தாண்டி அவர் அதே நட்புக்காக செய்த விஷயம் தான் நேற்றைய நாமினேசன். ஆனால், மாற்றிமாற்றி அழுத போது, “மத்தவங்களை பேசி வச்சு நாமினேட் பண்ணீங்களே அப்ப சொகம்மா இருந்துச்சா?” என்று தோன்றியது.

சேரன்

சேரன் மதிப்பிற்குரிய கலைஞர். ஆனால், கவின் லாஸ்லியாவைப் போலவே இவரும் உறவுச்சிக்கலுக்குள் சிக்கி அதை நினைத்து உணர்ச்சிவயப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. சில நேரங்களில் எரிச்சலூட்டுகிறது. இதை நான் இப்படித் தான் புரிந்து கொள்கிறேன். சேரன் ஒன்றும் பிள்ளைப் பாசத்திற்கு ஏங்குபவரல்ல. அவருக்கு குழந்தைகள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் கவின் லாஸ்லியாவிடம் நெருங்குவதற்கு இடைஞ்சலாக இருந்தவர் சேரன். அதனால் கூட சேரனை கவினுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். பிறகு, சாண்டி-கவின் கூட்டணியின் மட்டு மரியாதையற்ற கலாய்த்தல்களை, தான் டார்கெட் செய்யப்படுவதை சேரன் அறிந்தே இருக்கிறார். இதனால் லாஸ்லியா விஷயத்தில் சேரன் காட்டுவது வெற்றுப் பிடிவாதம் மட்டுமே.
பாசம் இருக்கும் தான். அதற்காக இத்தனை ஆழமான அன்பெல்லாம் குறுகிய காலத்தில் தோன்றி வேர்விட்டு விருட்சமாக வாய்ப்பேயில்லை. அவள் வந்தால் தான் நான் சாப்பிடுவேன், அவள் என்னுடனும் பேச வேண்டும் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதெல்லாம் பிடிவாதம் தான். தன் ஈகோவிற்கான வடிகாலாகத் தான் சேரன் லாஸ்லியாவைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ எனத் தோன்றுகிறது.

அந்த விதத்தில் வனிதாவும், கமலும் சேரனுக்கு அளித்தது நேர்த்தியான அறிவுரைகள். இவர்களின் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பாதிப்புக்குள்ளானது முழுக்க முழுக்க லாஸ்லியா மட்டும் தான். அதேசமயத்தில் சேரனின் வெற்றி வேட்கை கவனிக்கத்தக்கது. ஒரு கலைஞன் ஒருபோதும் எதற்காகவும் யாருக்காகவும் தன் வெற்றியை விட்டுத்தர மாட்டான். அது ஒரு போதை. அவன் ஆயிரம் வெற்றிகளை அதற்கு முன் பார்த்திருந்தாலும் கூட ஆயிரத்தியொன்றாவது வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணிப்பான். சேரன் இதுவரையில் ஒருபோதும் பின்வாங்க நினைத்ததேயில்லை.

கவின்லாஸ்லியா

இருவரைப் பற்றியும் தனித்தனியாகப் பேசுவதற்கு எதுவுமேயில்லை. முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். சாக்ஷி இருந்த போது கவின் தடுமாறியது தவறு. அப்போதே அந்த நிபந்தனையற்ற அன்பு விஷயத்தில் லாஸ்லியாவிடம் கவின் வீழ்ந்து விடுவார் என யூகித்தது தான். ஆனால், இப்போது இருவரும் தங்கள் உறவில் தெளிவாக இருக்கும் போது, அதைத் தொடர விரும்பும் போது அந்த உறவை நாம் ஷெரின் போலத் தான் கையாள வேண்டும். கலாய்த்தல் என்ற பெயரில் அதைக் கொச்சைப்படுத்துவது எல்லாம் அநாகரிகம். அது ஒன்றும் அத்தனை பெரிய கொலைக்குற்றமில்லை. நாளையே வெளியில் வந்து அவர்கள் பிரிந்து விட்டாலும் கூட அதைப் பற்றி நாம் பேச எதுவுமேயில்லை. அது மற்றவர்களை பாதிக்காத வரை.

சரி, இருவரும் சுய விருப்பத்துடன் நேசிக்கிறார்கள். பிறகு என்ன தான் பிரச்சனை? ஏன் இத்தனை மனவருத்தங்கள்? ஏன் இருவரும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்? முதல் பிரச்சனை சேரன். இங்கும் கவினின் ஈகோ விளையாடுகிறது. இரண்டாம் பிரச்சனை அவர்கள் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு விளையாட வந்திருக்கிறார்கள். இங்கு அவர்களின் செயல்களால் விமர்சிக்கப் படுகின்றனர். கேள்விக்குள்ளாக்கப் படுகின்றனர். தன்னால் தான் அடுத்தவர் பாதிக்கப்படுகிறார் என இருவரும் நினைக்கின்றனர். ஆனால், இருவராலும் விலகியிருக்க முடிவதில்லை. காதல் அதை அனுமதிப்பதில்லை. இது அத்தனைக்குமான ஒரே வழி ஷெரின் சொன்னது தான். வேறு வழியில்லை.

மற்றபடி ஆரம்பத்தில் இருந்தே லாஸ்லியாவிற்கு வெற்றி வேட்கை கிடையாது. கவினுக்கும் தான். இத்தனை நாள் தான் உள்ளே இருந்திருக்கிறோம் என்றால் நம் மேல் தவறில்லை என்று தான் அர்த்தம் என கவின் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் உள்ளே இருப்பதற்கு ஒரே காரணம் அவருக்கு இருக்கும் ஃபேன் பேஸ் தான். மற்றவர்களுக்கு அது இல்லை. அதை உணர்ந்தாலே இந்தப் பேச்சு எல்லாம் வராது. மற்றவர்கள் வெற்றி பெற வேண்டும் என தியாக மனப்பான்மையில் பேசி வருவதெல்லாம் சலிப்பூட்டுகிறது. போட்டிக்கு வந்து விட்டு தான் விட்டுக் கொடுப்பது மட்டுமில்லால் மற்றவர்களையும் அவர்களுக்காக வழி விடுங்கள் எனக் கேட்பதெல்லாம்… என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த விஷயத்தில் சேரன் சொன்னதைத் தான் வழிமொழிய வேண்டியிருக்கிறது. “வெற்றியோ தோல்வியோ அது அவனவன் சொந்த முயற்சியாக இருக்க வேண்டும். யாரும் அதற்காக விட்டுத்தரத் தேவையில்லை. பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. அன்னபோஸ்ட்டில் ஜெய்ப்பதெல்லாம் வெற்றியாகாது.”



வனிதா

அடுத்ததாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வனிதா. சொன்னால் நம்புவீர்களா எனத் தெரியவில்லை. வனிதாவைப் பற்றி நல்லபடியாக எழுத வேண்டும் என வனிதா ஆர்மியிடம் இருந்து மிரட்டலெல்லாம் வந்தது. வனிதாவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒன்றே ஒன்று தான் நினைவுக்கு வரும். “நான் எப்போதும் சரியான முடிவைத் தான் எடுப்பேன். அப்படி தவறான முடிவையெடுத்தால் அதை சரியாக்குவேன்” என்ற கூற்று தான் அது.

வனிதாவைப் போன்ற திறமையான, தைரியமான, ஆளுமை மிகுந்த பெண்களைக் காண்பது அரிது. வரலாறு இவர் போன்ற பெண்களை எல்லாம் வில்லிகளாகத் தான் சித்தரித்திருக்கிறது. தன்னைப் பேச விடாமல் கை தட்டுகிறார்கள் எனும் போதும் கமலைக் கலாய்த்தல் ஒரு ரகம் என்றால், நாமினேசன் செய்து விட்டு சாண்டி அழும் போது, “வெளிய போய் காணாமலா போகப் போறான். அவன் வீட்டுக்குத் தான போகப் போறான்.” என சீன் போடாதடா டேய் தொனியில் சொன்னது தனி ரகம். இதற்கெல்லாம் எவன் என்ன நினைத்தால் என்ன என்ற மனநிலையும், எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவும் வேண்டும்.

ஒன்று ஏற்றுக் கொள். இல்லையா பின் விளைவுகளை சகித்துக் கொள். இவ்வளவு தான் வனிதா. ஒருவன் நேர்மையாக இருக்க வேண்டும். ப்ராக்டிகலாக இருக்க வேண்டும். அவ்வளவு தான் அவரின் எதிர்பார்ப்பு. அதனால் தான் ஷெரின் வனிதாவின் அன்பிற்குரியவராக இருக்கிறார். ஆனால், அப்படி இருப்பது அத்துனை எளிதல்ல. எந்த பாரபட்சங்களையும் யாரும் வனிதா போன்ற ஆட்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. அவர் நீதிமன்றத்தில் அத்தனை வழக்குகளுக்கும் “பேசாதீங்க சொல்லுங்க” என்று தான் விமர்சனம் நடைபெறும். ஏன்னா நீ தப்பு செஞ்சுட்ட உன் விளக்கமெல்லாம் எங்களுக்கு தேவையில்லை.

வனிதா கண்டிப்பாக அடுத்த வாரம் வெளியேற்றப்படுவார். அதற்காக அவர் துளி கூட வருந்தப் போவதில்லை. வெளியில் இத்தனை நாள் தன்னைப் பேச விடாமல் செய்த மக்களுக்கு தரமான பதிலை வழங்கி விட்டு வெளியேறுவார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button