
உலகம் முழுமைக்கும் இதுவரை நிகழ்ந்த பெண்ணிய செயல்பாடுகளை வரலாற்று ஆய்வாளர்கள் நான்கு அலைகளாகப் பிரிக்கின்றனர். பண்டைய தமிழ், கிரேக்க, ரோமானிய மற்றும் ஜெர்மானியப் பெண் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளில் சமகாலப் பெண்ணியக் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தாலும், பெண்ணியம் என்பது கருத்துருவாக்கம் பெற்று உலகம் முழுவதுமுள்ள பெண்களின் அமைப்பாக மாறியது மிகச் சமீபத்தில்தான். பெண்ணியத்தின் முதல் அலை பத்தொபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல போராட்டங்களாக வெடித்தது.
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டனில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை முற்றிலும் நசுக்கியிருந்த நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, பிரிட்டன், ஜப்பான், வடக்கு அமெரிக்க மாகாணங்கள் மற்றும் ஐரோப்பியக் கண்டத்தின் பெரும்பான்மை நாடுகளில் ஏற்பட்ட இரண்டாம் தொழிற்புரட்சியானது, பெண்களின் கல்வி, வாழ்க்கைத் தரம், குடும்ப ஒற்றுமை என அனைத்தையும் உருக்குலைத்துவிட்டது. விவாகரத்துகள் மலிந்து, குழந்தைகளின் கல்வி மற்றும் அன்றாடச் செலவுகளை பெண்கள் மட்டுமே ஏற்று நடத்தும்படியானதும், பெண்ணியத்தின் முதல் அலை உருவாக முக்கிய காரணங்களாக இருந்தன.
பெண்ணியத்தின் இரண்டாம் அலை 60களில் துவங்கி 90களின் முற்பகுதி வரை நீடித்திருந்தது. இது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை எதிர்த்து எழுந்த அலையானாலும், பெண்களுகான சமூக உரிமைகளைக் கோரும் ஒரு அமைப்பாக உருப்பெற்றது. 90களின் மத்தியில் துவங்கிய பெண்ணியத்தின் மூன்றாம் அலை பின்காலனியத்துவ மற்றும் பின்நவீனத்துவ பெண்களின் பிரச்சினைகளை முன்னிருத்திய போராட்டங்களை எடுத்தாண்டது. பெண்ணியத்தின் நான்காம் அலையாகச் சொல்லப்படுவது நிகழ்காலப் பெண்ணியச் செயல்பாடுகளாகும். இது பெண்கள் நிகழ்காலத்தில் சந்திக்கும் பிரச்சினைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அவர்களுக்கு நிகழவிருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆய்ந்து வெளிக்கொணரும் நோக்குடன் கூடிய செயல்பாடுகளை உள்ளடக்கியது.
சிமமண்டா என்கோசி அடிச்சியின் பெண்ணியமும் நான்காம் அலையின் கருத்துருவாக்கத்துடன் ஒன்றிய கருத்துகளைக் கொண்டதுதான். அடிச்சி ஒரு எழுத்தாளராக மட்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் ஒரு பெண்ணியவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு, அவரது தாய்நாடான நைஜீரியாவில் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளும், அவர்களின் வாழ்க்கை நிலையும், அவர் மேற்படிப்பிற்காகச் சென்ற நாடான அமெரிக்காவில் ஒரு கருப்பினப் பெண்ணாக அவர் எதிர்கொண்ட பிரச்சினைகளும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அடிச்சி முற்கால மற்றும் இடைக்காலப் பெண்ணியத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறார். பெண்ணியம் என்றவுடன் ஒரு பெண்ணாகவோ அல்லது பெண்ணியவாதியாகவோ, அதன் குறைகளோடு, எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாமல், உள்ளபடி அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
மேலைநாட்டுப் பெண்ணியம், ஆசிய மற்றும் ஆப்பிரிக்கப் பெண்களின் பிரச்சினைகளை எவ்வளவு தூரம் கருத்தில் கொள்கிறது என ஆய்வு செய்தால் அடிச்சியின் கூற்றிலிருக்கும் உண்மை புலப்படும். மேலைநாட்டுப் பெண்ணியம் ஆண்களை முற்றிலும் ஒதுக்கிப் புறந்தள்ளுகிறது. மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மையான பெண்கள் முற்றிலுமாக ஆண்களைச் சார்ந்திருப்பதில்லை. குடும்பம் மற்றும் பிள்ளைகள் என அனைத்து முடிவுகளையும், வருவாய் ஈட்டும் பெரும்பான்மையான பெண்கள் அவரவர்களே எடுக்கும் சூழழும் அவர்களுக்கு அமைகிறது. ஆனால், ஆப்பிரிக்க மற்றும் ஆசியக் கண்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் வாழ்க்கை நிலை கூட பெரும்பாலும் ஆண்களையே சார்ந்திருக்கிறது. குடும்பச் சூழல் முற்றிலும் வேறுபடுகிறது. எனவே அடிச்சி, பெண்கள் மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் என்கிறார். ‘We Should All Be Feminists’ என தனது நூலுக்குத் தலைப்பிட்டு ஒரு வரியில் தனது பெண்ணியத்தின் சாராம்சத்தை விளக்குகிறார்.
முற்கால மற்றும் இடைக்காலப் பெண்ணியத்தின் முக்கிய குறைபாடாக அடிச்சி சுட்டிக்காட்டுவது அவை பெண்களுக்கு எதிராக ஆண்கள் செய்யும் குற்றங்களை மட்டுமே வெளிக்கொணர முயல்கின்றன என்பதாகும். ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்புகள் பெண்களை அடக்குமுறைக்கு உட்படுத்தினாலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பெரும்பான்மையான குற்றங்கள் அத்தகைய ஆணாதிக்கச் சமுதாய கட்டமைப்புகளின் அடியொற்றி நடக்கும் பெண்களைக் கொண்டுதான் நிகழ்த்தப்படுகிறது. ஆகவே, முதலில் பெண்களுக்கு எதிராக அவர்கள் அறியாமலே பெண்கள் நிகழ்த்திவரும் குற்றங்களை அவர்களுக்குச் சுட்டிகாட்டி சரிசெய்து, பின்னர் ஆண்களின் குற்றங்களைப் பேசுவதே சரியானதொரு அணுகுமுறையாக இருக்கும்.
அடிச்சி இதனை விளக்க தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். பள்ளிப்பருவத்தில் ஒருமுறை வகுப்பில் தலைமை மாணவரைத் தேர்ந்தெடுக்க ஒரு தேர்வு நடத்தப்பட்ட போது அடிச்சி முதல் மதிப்பெண்ணும், மற்றுமொரு மாணவன் இரண்டாம் மதிப்பெண்ணும் எடுத்த நிலையில், அடிச்சியின் பெண் ஆசிரியை இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு வகுப்புத் தலைமை மாணவர் பதவியை வழங்குகிறார். இதற்கான காரணத்தை ஆசிரியையிடம் அடிச்சி கேட்ட போது, “தலைமை மாணவராக ஒரு ஆண் மாணவன் இருப்பதுதான் நல்லது. ஒரு பெண்ணை நம்பி இப்படிப்பட்ட பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது” என்று கூறி அடிச்சிக்கு அந்தப் பதவியைத் தர மறுத்துவிட்டார். இன்றளவும் சிறியது முதல் பெரியது வரையிலான அனேக காரியங்களில் பெண்களைப் பெண்களே நம்ப மறுக்கின்றனர். பெண்களும் உடல்நிலை முதலான பல சாக்குகளைச் சொல்லி தனது கடமைகளைத் தட்டிக்கழிக்கின்றனர். இது அவர்கள் மீதான நம்பிக்கையை மேலும் குலைக்கிறது. பெண்கள் தன்னைத்தானே நிறுவவும், பெண்ணுக்குப் பெண் மீது நம்பிக்கை ஏற்படவும், முன்னெடுக்கவேண்டிய செயல்பாடுகளை பெண்ணியம் முதலில் உற்று நோக்கினால் மட்டுமே, பெண்ணியம் தனது இலக்குகளை அடையும் சாத்தியங்கள் சமீபமாகும்.
பெண்கள் மட்டுமே ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்புக்குள் சிக்குண்டு பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. ஆண்களும் அதன் பொருட்டு பல உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள் என்கிறார் அடிச்சி. பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்புகள் ஆண்கள் மீது குடும்பத்தை முழுப்பொறுப்பேற்று நடத்தவும், குடும்பத்தின் அனைத்துப் பொருளாதாரச் சிக்கல்களையும் அவர்கள் தலைமீதேற்றி திணறடிக்கவும் செய்கிறது. பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பேணி, அன்றாடக் குடும்ப அலுவல்களை கவனித்துவருவதை சரியென வலியுறுத்த, ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்புகள் ஆண்களை வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுவதே ஆண்மை என்று கூறி அவர்களை வற்புறுத்துகிறது. இதனால் ஆண்களும் உளவியல் ரீதியாக பல சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். பெண்களை மட்டுப்படுத்தவும் அடிமைப்படுத்தவும் நினைக்காத ஒரு சமூகச் சூழலில், ஆண்கள் தங்களை நிறுவவேண்டிய தேவையும் இருக்காது.
மேலும், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை உலகம் பெரும்பாலும் மனிதனின் உடல்வலிமையைச் சார்ந்திருந்தது. போர்களில் வீரதீரம் காட்டும் ஆண்களை நாடுகள் முற்றிலும் நம்பியிருக்க வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், இன்று அணு ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன போர்க் கருவிகள் களத்தில் பயன்பாட்டுக்கு வந்த பின், இந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. இப்போது மனிதகுலமும் இந்தப் பிரபஞ்சமும் மனவலிமை சார்ந்தவொன்றாக மாறி வருகிறது. அத்தகைய சூழலில், உலகின் ஏறத்தாள பாதி மக்கள்தொகையில் பங்களிக்கும் பெண்களின் திறமைகளையும், மனவலிமையையும் பயன்படுத்தாமல் புழக்கடையில் போடுவது தனிமனித முன்னேற்றத்தில் துவங்கி, ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் சர்வதேசப் பங்களிப்பு வரை பாதிப்பை ஏற்படுத்தும் என அடிச்சி வலியுறுத்துகிறார். இது உண்மையில் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டிய கட்டாயத்தினை எடுத்துரைக்கும் உண்மை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
(தொடரும்…)