கட்டுரைகள்
Trending

ஒரே நாளில் முடிந்த காதல் கதை… வீட்டிற்குள் வந்த பழைய பகை – இரண்டாம் நாளில் பிக் பாஸ்!

மித்ரா

அழகாக அரும்பத் தொடங்கிய ஒரு காதல் கதையோடு முந்தைய நாள் முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆர்ப்பாட்டமான ரவுடி பேபி பாடலோடு நேற்று தொடங்கியது. ஆனால், பாடல் போடுவதற்கு முன்பே வீடு கலகலவென தான் இருந்தது. சரவணன் சமைக்கத் தொடங்கியிருந்தார். இளசுகள் சாவகாசமாக பேசிக் கொண்டிருந்தனர். பாத்திமா பாபு வழக்கம் போல பளிச்சென்று தான் இருந்தார். இருந்தாலும் ஒரு மந்த கதியில் சென்று கொண்டிருந்த வீட்டில் பாடல் கேட்டதும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

இந்த முறை வீட்டில் புதிதாக ஒரு தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதற்கென தனியாக அலாரமும் வைத்துள்ளனர். அலாரம் அடித்ததும் சென்று பார்த்தால் பெட்டியினுள் ஒரு கடிதம் இருந்தது. அதைத் தன் அழகான குரலில் முகேன் வாசித்தால் அதனுள் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. “பிக் பாஸ் வீட்டின் உறுப்பினர்கள் அனைவருக்கும் சாண்டி பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். சாண்டி பாடும் அதே தொனியில் மற்றவர்கள் பாட வேண்டும்.” இது தான் அந்தக் கடிதம் தாங்கி வந்த செய்தி. பட்டையை போட்டுக் கொண்டு சோஃபாவில் அமர்ந்து பாடத் தொடங்கினார் சாண்டி. வெடிச்சிரிப்போடு போட்டியாளர்கள் அவரைப் பின்பற்ற நமக்கும் சிரிப்பு தொற்றிக் கொண்டது. ஆக பிக் பாஸ் தெரிந்து வைத்திருக்கிறார் வீட்டின் ஒரே என்டர்டைனர். சாண்டி தான் என. அது உண்மையும் கூட.

காலை உணவிற்குப் பின்னர், உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. உறுப்பினர்கள் அடிப்படையாக பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளைப் பற்றி குழுக்களின் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது, சமையல் குழுவில் இருந்து பாத்திமா பாபு “உணவை வீணாக்குவது எனக்கு பிடிக்காது. அதனால் சாப்பாடு வேண்டாமென்றால் முன் கூட்டியே சொல்லி விடுங்கள்.” என்று அறிவித்தார். இதற்கு ஒவ்வொருவரும் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்க, சாக்ஷி ” இப்போ பாத்தீங்கன்னா எனக்கு பொங்கல் பிடிக்காது….” என்று எதையோ சொல்லத் தொடங்க, வனிதா “தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் இங்கே இடமில்லை. சேராது என்றால் ஒப்புக்கொள்ளலாம். உனக்கு பொங்கல் சேராதா? பிடிக்காதா?” என கேப்டன் என்ற முறையில் கேட்க, சாக்ஷி, ” எனக்கு பொங்கல் புடிக்காது தான் ஆனா என்ன சொல்ல வரேன்னா…” எனத் தொடங்கினார். வனிதா, பேசாதீங்க சொல்லுங்க என்பது போல, சாக்ஷியை பேசவே விடாமல், ” சேராதா? பிடிக்காதா?” எனக் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக சாக்ஷி சொல்ல வந்ததை சொல்லி முடிக்க அதை ஒப்புக் கொண்டு கூட்டம் முடிந்தது. அப்டி என்ன தான் சாக்ஷி சொல்ல வந்தார்னு கேக்குறீங்களா?  ” எனக்கு பொங்கல் பிடிக்காது. ஆனாலும் சாப்டுட்டேன். ஆனா வீணா போயிரும்னு மறுபடி சாப்பிட சொன்னா என்னால முடியாது.” இது தான் அந்த அப்பாவி குழந்தை மிரட்டலுக்கு பயந்து கொண்டே சொல்ல வந்த நியாயமான கருத்து.

பிறகு, மோகன் வைத்யா, 37 வயதில் தன் மனைவியை இழந்ததையும் அந்த சமயத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவருக்கு ஆறுதலாக நடந்து கொண்டதையும் கண்ணீர் மல்க குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்டார். “எதையும் பகிர்ந்து கொண்டு அழக் கூட மனிதர்கள் இல்லாமல் சிரமப்பட்டேன் இப்போது இத்தனை பேர் கிடைத்திருக்கிறீர்கள்.” எனக் கலங்கிய மோகன் வைத்யாவை மொத்த குடும்பமும் அரவணைத்து தேற்றியது. பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே இந்த குடும்பம் இதே அந்நியோன்யத்தோடு கடைசி வரை இருக்க வேண்டும் என்று என்னை அறியாமல் வேண்டிக் கொண்டேன்.

இடையில் இந்த பிக் பாஸ் என்ன சொன்னாரோ தெரியவில்லை. திடீரென எல்லா ஆண்களும், சில பெண்களும், ” ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு…” பாடலில் வரும் இளைய தளபதியின் காஸ்ட்யூமில் லுங்கியோடு வலம் வந்து கொண்டிருந்தனர்.

கவின் மீதான தன் பிரியத்தை ஒரு நாளாக (!) எண்ணற்ற வழிகளில் வெளிப்படுத்திய , அபிராமி அவர் புரிந்து கொள்வது மாதிரி இல்லை என ஷெரினின்  பரிந்துரையுடன் நேரிலேயே தெரிவித்து விட்டார்.  சிக்குவாரா கவின்? ” எனக்கு உங்க 5 பேரையுமே (!) பிடிக்கும் மச்சான் வீணா மனசை போட்டு கொழப்பிக்காத” என கிரேட் எஸ்கேப் ஆகி விட்டார். பிறகு இந்த காதல் கதை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆளாளுக்கு அறிவுரை செய்யத் தொடங்க, வலுவான கன்டென்ட், எப்போவாவது உபயோகப்படும்  என இந்நேரம் பிக் பாஸ் குறித்து வைத்திருப்பார்.

பின்பு சாண்டி மெட்ராஸ் பாஷையில் பாடும் ‘தொகுறு’ என்றொரு சரக்கை இறக்க, மோகன் வைத்யா அதை சமர்த்தாக பின்பற்றிப் பாட போட்டியாளர்கள் சிரித்த சிரிப்பில் வீடு அதிர்ந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், கார்டன் ஏரியாவில் அனைவரும் பாடியபடி ஆடிக் கொண்டிருந்தனர். ச்ச… நூறு நாளும் பிக் பாஸ் வீடு இதே மாதிரி பாசமா ஜாலியா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்? என யோசித்து முடிக்கவில்லை, ஸ்டைலிஷ் தமிழச்சி பாடலை ஒலிக்க விட்டு புதிய போட்டியாளரை உள்ளே அனுப்பினார் பிக் பாஸ். பிக் பாஸ் வீட்டின் 16 – ஆவது போட்டியாளர் மீரா மிதுன்.

ஆண்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட, இரு பெண்கள் மட்டும் கடுப்போடு கூட்டத்தில் இருந்து ஒதுங்கினர். எப்போதும் வீட்டில் செட் தோசைகளைப் போல ஒட்டிக் கொண்டே வலம் வரும், சாக்ஷி மற்றும் அபிராமிக்கு மீராவோடு ஏதோ பழைய வாய்க்கால் தகராறு இருக்கும் போல. மீராவை எதிர்பார்க்காத இருவரும் உச்சகட்ட கடுப்பில் செய்வதறியாது திகைத்தனர். ஆனால், மீரா அவர்களை யாரென்றே தெரியாதது போல காட்டிக்கொண்டார். பிக் பாஸ் ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்களை இம்ப்ரெஸ் செய்து அவர்களுடன் இணைந்து கொள்ளுமாறு மீராவை அறிவுறுத்த, கவின் குழுவினர் சற்று அவரை சீண்டிப் பார்த்தனர். இதற்குள் புது வரவை சாக்ஷி அபிராமிக்கு பிடிக்கவில்லையென அனைவரும் கணித்து விட்டனர். காட்டிக் கொள்ள வேண்டாம். எப்போதும் போல இருக்கலாம் என தோழிகள் இருவரும் முடிவு செய்ய நிகழ்ச்சி விளக்கணைத்து முடிக்கப்பட்டது.

இனி தான் விளையாட்டே ஆரம்பம். பிக் பாஸ் பலே கில்லாடிய்யா நீரு. ஆனாலும் பரமபிதாவே நீங்கள் என்னை இப்படி கை விட்டிருக்க கூடாது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button