கட்டுரைகள்
Trending

கபில்தேவும் சில மில்லியன் கனவுகளும்!

சேவியர் ராஜதுரை

ஜூன் 25

இந்தியாவின் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான நாள்.

1932 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியைப் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக லார்ட்ஸ் மைதானத்தில் இறங்கிய போது இந்திய அணியினருக்கு ஒரு எண்ணம் இருந்திருக்கும். இந்திய அணியும் ஒருநாள் டெஸ்டில் முதலிடத்தைப் பெற வேண்டும். கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத அணியாக இருக்க வேண்டும் . ‘கிரிக்கெட்டின் மெக்கா’ என அழைக்கப்படும் லார்ட்ஸ் கிரவுண்டில் இந்திய அணி வெல்ல வேண்டும் என கனவு கண்டிருப்பார்கள். கனவுகள் நிஜமாக காலம் மட்டுமல்ல ஒரு வீரனும் தேவை தானே. அந்த வீரன் கபில்தேவ்.

இதே ஜூன் 25, 1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதன்முதலாக உலகக்கோப்பையை வென்றது. லார்ட்ஸில் அந்த உலகக்கோப்பையை இந்திய அணி கேப்டன் கபில்தேவ் பெற்றுக்கொண்டார்.

இந்தியா கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்த பிள்ளையார் சுழி போட்டது இந்த வெற்றி தான்.

இந்த ஜூன் 25 உடன் இந்திய அணி முதல் கோப்பையை வென்று 36 ஆண்டுகள் ஆகிறது. அது ஒரு மகத்தான வெற்றி.

83 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. 75, 79 களில் குரூப் போட்டியிலேயே வெளியேறிய இந்திய அணியை பெரியதாக யாரும் நினைக்கவில்லை.

அன்றைய கிரிக்கெட் உலகில் சிம்மசொப்பனமாக இருந்த வெஸ்ட் இண்டிஸ் எனும் கோலியாத்தை தாவீதைப் போல இருந்த சின்னஞ்சிறு இந்திய அணி கபில்தேவ் எனும் ஆயுதம் கொண்டு வென்றது.

குரூப் ஏ வில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் இருந்தன.

குரூப் பி பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டிஸ், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா அணிகள் இருந்தன .

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு தலா இரண்டு முறை விளையாடும். முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த குரூப்பில் முதலிரண்டு இடங்கள் பிடித்த அணியோடு விளையாடும். வெற்றி பெறும் அணி பைனலுக்கு முன்னேறும். அப்பொழுது 60 ஓவர்களாக போட்டி நடைபெறும்.

மேற்கிந்திய தீவுகள் அணி அப்பொழுது மிக வலுவான அணி. 75, 79 என இரண்டு உலகக்கோப்பைகளையும் வென்றுவிட்டு மூன்றாம் முறை வெல்ல வீறுநடை போட்டு வந்தது. அதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் தோல்வி என்ற ஒன்றை அறியாமலே வெற்றிநடை போட்டு சென்று கொண்டிருந்தது. இந்தியாவோ அதற்கு தலைகீழ் இரண்டு உலகக்கோப்பைகளிலுமே சேர்த்து ஒரே ஒரு போட்டியில் தான் வென்றிருந்தது. அதுவும் மேற்கு ஆப்பிரிக்கா அணியுடன் தான்.

இப்படி வேறுபட்ட இரு அணிகள் தங்களது முதல் போட்டியை சந்தித்தன. கோப்பையை அல்ல இந்தப் போட்டியை கூட வெல்லமாட்டோம்  என்று ரசிகர்கள் மட்டுமல்ல இந்திய அணி வீரர்களே நம்பினர். அணியின் துவக்க ஆட்டக்காரரான ஸ்ரீகாந்த் எப்படியும் குரூப் ஸ்டேஜை தாண்டமாட்டோம் என்ற நம்பிக்கையில் தன்னுடைய தேனிலவு பயணத்திற்கு முன்பதிவு செய்து வைத்திருந்தார்.  இங்கிலாந்து செல்வது அழகான பெண்களை பார்ப்பதற்கு என சொல்லும்பொழுதே ஒரு வெட்கத்துடன் சிரிப்பை உதிர்க்கிறார் மொஹிந்தர் அமர்நாத்.

இப்படியான சூழலில் போட்டிக்கு முன்பு கபில்தேவ் மற்ற அணி வீரர்களிடம், “நாம் கண்டிப்பாக இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும்”  என கூறுகிறார்.

“ஆசப்படலாம்.. ஆனா பேராசபடக்கூடாது.! அவன் ஒரு மேட்ச் கூட தோத்ததில்ல. நம்மளோ ஒரு மேட்ச் தான் ஜெயிச்சுருக்கோம்”. இப்படியான மனநிலையில் தான் அணி வீரர்கள் இருந்தனர். பயிற்சி ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவியிருந்த இந்திய அணிக்கு அன்றைய தினம் சிறப்பாக அமைந்தது.

யாஷ்பல் ஷர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால் (89 ரன்கள்) இந்திய அணி 60 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்தது  . இதை வெஸ்ட்இண்டீஸ் அணி எளிதாக சேஸ் செய்துவிடும் என்றே எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சினால் வெஸ்ட் இண்டீஸ் அணி 228 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ரோஜர் பின்னி மற்றும் ரவி சாஸ்திரி மூன்று விக்கெட்டுக்களை எடுத்தனர். ஆட்டநாயகனாக யாஷ்பல் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே வெஸ்ட்இண்டீஸ் அணி சந்தித்த முதல் உலகக்கோப்பை தோல்வியாகும்.

இந்தப் போட்டியின் வெற்றி அனைத்தும் அணித்தலைவர் கபில்தேவையே சேரும். அணியின் மீது அவர் வைத்த அபாரமான நம்பிக்கையே வெற்றிக்கு காரணம் என வீரர்கள் தெரிவித்தனர். இதற்குப் பிறகு அணியின் மீதும், அணித்தலைவர் கபில்தேவ் மீதும் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை வந்தது .

முதல் சம்பவமே தரமான சம்பவமாக செய்த இந்திய அணியை அனைவரும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். சூட்டோடு சூடாக அடுத்த போட்டியிலும் ஜிம்பாப்வே அணியை வெல்ல இந்திய அணியின் மீது அதற்கு முன் வைத்திருந்த பார்வை மாறத் தொடங்கியது.

ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீசோடு தோற்க அரையிறுதி வாய்ப்பு சிக்கலானது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய நிலை. ஜிம்பாப்வே உடனான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அந்த போட்டியை ரேடியோவின் கரகர சத்தத்தோடு கேட்டவர்கள் அனைவரும் அவ்வளவுதான் ஏதோ அதிர்ஷ்டத்துல ரெண்டு மேட்ச் ஜெயிச்சுட்டாங்க என வெறுத்து புலம்பியிருப்பர். இந்தியா இனி ஜெயிக்க வாய்ப்பேயில்லை என ரேடியோவை நிறுத்தியிருந்தால் ஒரு ஆகச்சிறந்த, அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஆட்டத்தை மிஸ் செய்திருப்பார்கள்.

கேப்டனாக மேற்கந்தியத்தீவுகள் அணியோடு  நம்பிக்கையளித்த கபில்தேவ், தனியொருவனாக.. ஆம், தனியொருவனாக  ஆடினார். 17/5 என இருந்த ஸ்கோரை 175 ரன்கள் அடித்து 266 ரன்களுக்கு கொண்டு போய் நிறுத்தினார். ஆகச்சிறந்த கேப்டன் நாக் என்று கூறினாலும் அது மிகையாகாது. 138 பந்துகளில் 16 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 175 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வாயைப் பிளந்து “யார் சாமி இவன்” எனப் பார்த்தது. அன்று 60 ஓவர்கள் நின்று ஆடிய கபில்தேவை இந்திய ரசிகர்கள் தங்கள்  மனதில்  சிம்மாசனமிட்டு அமர்த்தினர். 17 க்கு 5 என திணறிக்கொண்டிருக்கும் சூழலில் 175 அடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. பின்பு களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 232 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. மதன்லால் 3 விக்கெட்டுகளையும் ரோஜர் பின்னி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கபில் தேவ் 11 ஓவர்கள் வீசி வெறும் 31 ரன்களே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது கபில்தேவிற்கு வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 247 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. யாஷ்பல் ஷர்மா 40 ரன்கள் அதிகபட்சமாக அடித்தார். பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரோஜர் பின்னி மற்றும் மதன்லால் தலா நான்கு வி்க்கெட்டுக்களை கைப்பற்றினர். 21 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த ரோஜர் பின்னிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் இந்திய அணி முதன்முதலாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கபில்தேவ் 3 விக்கெட்டுகளையும் மொஹிந்தர் அமர்நாத் மற்றும் ரோஜர் பின்னி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின் பேட்டிங் செய்த இந்திய அணி யாஷ்பல் ஷர்மா மற்றும் சந்தீப் பாட்டிலின் அரைசதத்தால் 54.4 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 2 விக்கெட் மற்றும் 46 ரன்கள் எடுத்த மொஹிந்தர் அமர்நாத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி முதன் முதலாக பைனலுக்குள் நுழைகிறது . எதிரணி வெஸ்ட் இண்டீஸ். உலகின் மிகச்சிறந்த அணியுடன் மோத வேண்டும். ஒரே ஒரு முறை மட்டுமே தோற்ற அணி. அதுவும் நம்மோடு தான் என்கிற ஒரு சிறுநம்பிக்கை. தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் நோக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணிகளும் எப்படியாவது முதல் உலகக்கோப்பை வென்று விட வேண்டும் என இந்திய அணியும் களமிறங்கின. பைனல் வரமாட்டோம் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு தேனிலவு பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்ததை கேன்சல் செய்துவிட்டு ஆடினார் ஸ்ரீகாந்த்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் நிச்சயம் வெல்ல முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த ரன்கள் எவ்வளவு ஓவர்கள் தாக்குப்பிடிக்கும் என நினைத்தனர். உலகின் அப்போதைய தலைசிறந்த பேட்ஸ்மேனான விவியன் ரிச்சர்ட்ஸ் 33 ரன்கள் 28 பந்துகளில் அடிப்பதை பார்த்துவிட்டு ஆட்டம் சீக்கிரம் முடிந்துவிடும் என நினைத்த கவாஸ்கரின் மனைவி எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்த சந்தீப் பாட்டிலிடம் அரைமணி நேரத்தில் அவரை ஸ்டேசனுக்கே வரச் செல்லுங்கள் . நான் ஷாப்பிங் செல்ல வேண்டும் என கூறினாராம். அப்போதுதான் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை கிட்டத்தட்ட 20 யார்ட்ஸ் தூரம் ஓடி  வந்து பிடித்தார். அந்த கேட்ச் உலகக்கோப்பை போட்டிகளின் சிறப்பான கேட்ச்களில் ஒன்று. “கேட்சஸ் வின் மேட்சஸ்” என்கிற பழமொழி கிரிக்கெட்டில் உண்டு . விவியன் ரிச்சர்ட்ஸின் அந்த கேட்ச் இந்தியாவின் பக்கம் ஆட்டத்தைக் கொண்டு வந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருதை மூன்று விக்கெட்டுகள் மற்றும் 26 ரன்கள் எடுத்த மொஹிந்தர் அமர்நாத் பெற்றுக்கொண்டார். அந்த சீசனில் ரோஜர் பின்னி அதிகபட்சமாக மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் கோவர் அதிகபட்சமாக 386 ரன்கள் குவித்தார். இந்தியாவில் கபில்தேவ் 303 ரன்கள் குவித்தார்.

மூன்றாவது உலகக்கோப்பையை முதல் முறையாக இந்திய அணி வாங்கியது. கேப்டன் கபில்தேவ் லார்ட்ஸ் மைதானத்தில் கோப்பையை பெற்றுக் கொண்டார்.

இந்திய ரசிகர்கள் நகரெங்கும், வீதியெங்கும், தெருவெங்கும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அன்றிலிருந்து கிரிக்கெட்டின் மோகம் இந்தியாவில் அதிகமானது. கிரிக்கெட் இன்னும் பிரபலமானது. கபில்தேவ் ஒவ்வொரு இந்தியனின் தாரகமந்திரமானார். இப்படி பட்டிதொட்டியெங்கும் வெடி வைத்து இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மும்பையை சேர்ந்த பத்து வயது சிறுவன் தன் கையிலும் ஒரு உலகக்கோப்பையை வாங்கவேண்டும் என ஆசையோடு அன்றிரவு தூங்கினான்.

கனவுகள் நிஜமாக காலம் மட்டுமல்ல வீரனும் தேவைதானே..! அவன்தான் ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என இந்நாள் வரையிலும் உலக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறான்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button