தொடர்கள்

”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர் – 2

சுந்தர் காந்தி

அப்பால் ஒரு தனி மரம்

 மானுட சமுதாயம் தோன்றிய காலம் முதல் இன்று வரையிலான அந்நீண்ட நெடிய பயணத்தில் தனக்கான கட்டுமானம், வளர்ச்சி, நாகரீகம், கலாச்சாரச் சீராக்கம் என்கிற பெயரில் வெவ்வேறு காலங்களில் தன் அகவய மற்றும் புறவயமான அனைத்து செய்கைகளுக்கும் பற்பல விதிகளையும், வரையறைகளையும், எல்லைக் கோடுகளையும், பிரத்யேக மதிப்பீடுகளையும் அது வகுத்து தொகுத்தது. நாகரீகம், கலாச்சாரம் போன்றவை எப்போதும் ஒரே விதமான நேரிடையான அர்த்தத்தில் மாத்திரம் பொருள் கொள்ளத்தக்கவை அல்ல. அவை எம்மாதிரியான சூழலில் எவ்வகையான கருத்தியல் தரப்புகளின் சார்பாக வெளிப்படுகின்றன என்பதை பொருத்து அவற்றின் பொருளும், நோக்கமும் வேறுபடும். அத்தகைய தரப்புகளின் பல்வேறு விதிகளும், வரையறைகளும், கட்டுப்பாடுகளும் ஒரு நிழலுருவைப் போல நம் ஒவ்வொரு செயல்பாட்டிலும் பின் தொடர்ந்தபடியிருக்கின்றன.  நமது வாழ்வின் போக்குகளை அக்கட்டுப்பாடுகளின், வரையறைகளின் வழி நிர்ணயக்கப்பட்ட எல்லைகளுக்குள் சுருக்கிக்கொண்டு ஒடுங்கி கிடப்பதே நம் கடமையென அறியாமையுடன் வாழத் தலைப்படுகிறோம்.

மனித சமூகத்தின் நாகரீக எழுச்சியின் துவக்கக் காலத்தில் நம்மால் இயற்றப்பட்டு நம் ஆளுகையின் கீழ் சாதுவாய் கிடந்த அசட்டுத்தனமானக் கருத்துகள் மெல்ல மெல்ல சமூகத்தோடு இயைந்து உறவாடி வளர்ச்சியுற்று ஓர் அசுர உருவெடுத்து பேரதிகார மையங்களாக நிலைப்பெற்றிருக்கின்றன. மேலும், நம்மால் தோற்றுவிக்கப்பட்ட இவற்றின் கீழேயே இன்று நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் “நவீன சமூகம்” என்கிற அடைமொழியுடன்.  இது ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் வீழ்ச்சியாக அடிக்கோடிடப்படுகிறது.

நவீன சமூகம் தன் ஆன்மாவாக, தன் முகமாக ஓர் ஒற்றைச் சித்திரத்தை வரைய முனைந்தபடியிருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் கூடி இணைந்து கட்டியெழுப்பும் கூட்டமைப்பே ஒரு சமூகம் என்பதை அது உணர மறுக்கிறது. அப்படியான தனி மனிதனுக்கென்ற தனித்த இயல்புகளையும் பொருட்படுத்தி உள்ளடக்கி அதற்கான வெளியை உருவாக்கும் பன்மைத்துவப் போக்கை இயற்கைக்கு புறம்பானது என உதறி எறிந்துவிட்டு பலருக்கும் ஒவ்வாதவற்றை சமூகத்தின் இயல்புகளாக பொதுமைப்படுத்தும் போக்கை அது கடைப்பிடிக்கிறது. அத்தகைய ஒற்றைத்தன்மையிலான சமூகயியல்புகளை வடிக்கும் அச்சு வார்ப்புகளை நவீன சமூகம் தயாரித்து வெளித் தள்ளியபடியுமிருக்கிறது. இயந்திரத்தனமான அச்சு வார்ப்புகளுக்குள் மறுப்பேதுமின்றி தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்பவர்களை சமூகம் அரவணைத்து உச்சி முகரும் அதே வேளையில் இது போன்ற கட்டங்களுக்குள் தன்னை குறுக்கி கொள்ள இயலாதவனை உதாசீனப்படுத்தி முற்றாக புறக்கணித்து விலக்கியும் விடுகிறது. அவ்வகையான மனிதர்களை கேலிப்பொருளாக கண்டும், பிழைக்கத் தெரியாதவன் எனப் அனுதாபப்பட்டும், சமூகத்திற்கு ஒவ்வாதவன் எனப் புறந்தள்ளியும் அவர்கள் தாழ்வுறும் நிலைக்கு இட்டு செல்கிறது.

தன்னுடைய தனித்த இயல்புகளுக்கும் சமூகம் கட்டமைக்கும் இயல்புகளுக்கும் நடுவே அவன் சிக்குண்டு அல்லலுறும் வாழ்கையை வாழ நிர்பந்திக்கப்படுகிறான். ஒருகட்டத்தில் விம்பி மேலெழும் உளப்போராட்டங்களால் வேதனையுற்று சமூகம் வரைந்து வைத்திருக்கும் எல்லைக்கோடுகளிலிருந்து வெளியேறி தன் தனித்த இயல்புகளோடு ஒதுங்கி வாழ துவங்கி புன்னகைக்கிறான். அது தன்னளவில் ஒரு நிறைவை பெற்று தந்தாலும் புறரீதியாக சமூகம் அளித்துக் கொண்டிருக்கும் இக்கட்டுகளை (குறிப்பாக பொருளியல் ரீதியிலான சங்கடங்கள்) அவன் எதிர்நோக்க நேர்வது தொடர்ந்தபடி தானிருக்கின்றன. இப்படியான பெரும்பான்மைவாத சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தந்தையின் வாழ்கையை அடித்தளமாக கொண்டு சமூக அமைப்புகள் மீதும் அதன் நிலைப்பாடுகள் மீதும் ஆழமான உரையாடல்களை நிகழ்த்தி விசாரிக்கிறது துருக்கி இயக்குனர் நூரி பில்கே சைலானின்(Nuri Bilge Ceylan) சமீபத்திய திரைப்படைப்பான  “The Wild Pear Tree”.

சமகால உலகத் திரைப்படைப்பாளர்களில் துருக்கி நாட்டைச் சேர்ந்த நூரி பில்கே சைலான் மிக முக்கிய திரையாளுமையாக அறியப்படுகிறார். புகைப்படக்கலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றிக் கொண்டிருந்த சைலான் மெல்ல திரைக் கலைக்குள் நுழைந்து தன் திறன்மிக்க படைப்பாற்றலால் கலைச் செழுமை நிறைந்த திரையாக்கங்களைப் படைத்து இன்று உலகத் திரைக்கலைப் பரப்பில் தன்னுடைய இருப்பை ஆழமாகப் பதித்திருக்கிறார். சைலான் தன் படைப்புத்தளம் குறித்து பேசுகையில் “மனித மனங்களின் விசித்திரங்கள் என்னை ஆச்சிரியப்படுத்துக்கின்றன. என் படங்களின் ஊடாக அவற்றை தேடுகிறேன், கேள்விகள் எழுப்புகிறேன்” என்கிறார்.

சைலான் படங்களுக்கென்றே ஒரு பிரத்யேக பாணி இருக்கிறதென நாம் வரையறுத்து அவர் படைப்புகளுக்குள் நுழைகையில் தன் நுட்பமான அணுகுமுறையினால் ஒவ்வொரு திரைப்படத்தையும் அதற்கே உரிய தனித்துவத்துடன் சிருஷ்டித்து துவக்கத்தில் நாம் கொண்டிருந்த கருத்தை கலைத்துப் போட்டு பிரம்மிப்பை ஏற்படுத்துவார். அவருடைய படங்களை தொடர்ந்து கண்டு வருபவர்கள் இதை அவதானித்திருக்கலாம். அவரின் துவக்க, மத்திய காலப் படங்களுடன் ஒப்பிடுகையில் சமீபத்திய படைப்பான “The Wild Pear Tree” கதைக்கூறல் முறையிலும், உள்ளடக்க வடிவமைப்பிலும் முற்றிலும் வேறொரு பரிணாமத்தை எட்டியிருந்ததை உணர முடிந்தது. காட்சிமொழியைக் கொண்டும் இலக்கியத் தன்மையிலான படைப்புகளைக் காட்சி ஊடகத்தின் எந்தக் கூறுகளையும் சிதைக்காமல் உருவாக்க இயலுமென சைலான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இத்தன்மை இத்திரைப்படத்தில் உச்சம் கண்டிருக்கிறது.

இளைஞனான சினான் பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு எழுத்தாளனாக வேண்டுமென்கிற பெரும் கனவோடு தன் சொந்த கிராமத்திற்கு திரும்புகிறான். தன்னுள் அமிழ்ந்திருக்கும் கிராமத்தின் நினைவுகளோடு பிறர் காணத் தவறிய மனிதர்களைப் பற்றி தான் எழுதிய நாவலின் பிரதியை அச்சேற்றி புத்தகமாக வெளிக்கொண்டுவர அலைந்து திரிகிறான். அதற்கான உதவியை நாடி அவன் சந்திக்கும் மனிதர்கள் நாவலின் சாரத்தை உள்வாங்கி கொள்ள மறுத்து முரண்பட்டு அடுக்கடுக்கான காரணங்களைக் கூறி நிராகரிக்கிறார்கள். புத்தகமாக அதைப் பதிப்பிப்பதற்கு தேவையான பொருள் வாய்ப்பும் அமைய பெறாததால் மிகுந்த அயர்ச்சி அடைகிறான். உணர்வுகளுக்குள் பெரிதும் ஆட்படாமல் தன் போக்கில் பாதையமைத்து உலவும் சினானை அவன் தந்தை இட்ரிஸின் செய்கைகள் பெரும் தொந்தரவுக்குள்ளாக்குகின்றன. பொறுப்பற்றத்தனங்களின் மொத்த வடிவமாக தன் தந்தையை காண்கிறான். வீட்டின் பொருளாதாரத் தேவைகள் பிடரியில் ஓங்கி அறைந்து சிறுமைப்படுத்துகையிலும் தந்தை இட்ரிஸின் முகத்தில் விரியும் புன்னகை சினானை சீண்டுகிறது. சமயங்களில் தன் தந்தை ஒரு பொருட்படுத்தத்தக்க நபர் அல்ல எனக் கருதி அவர் மீது ஓர் உதாசீனப் பார்வை வீசிவிட்டு நகர்ந்து விடுகிறான்.

உலகம் கிழிக்கும் வரைகோடுகளுக்குள் சிக்காமல் விலகி நடக்கும் இட்ரிஸின் அடியாழத்தில் அவருக்கே உரிய எல்லையற்ற ஓர் உயிர்ப்பான உலகம் இயங்கியபடியிருக்கிறது. அங்கு தன்னை மொத்தமாக திறந்து வைக்கும் இட்ரிசை அவ்வுலகம் அவரின் இயல்புடனே ஏற்றுக் கொள்கிறது. பாசாங்குகள், பாவனைகள் அல்லாத அவ்வுலகம் இட்ரிஸின் குழந்தைமையை பாதுகாத்து துளிர்க்கச் செய்து கிளைப் பரப்ப அனுமதிக்கிறது. சினான் தன் தாயாருடன் உரையாடும் ஒரு பொழுதில் பேச்சினிடையே தன் தந்தை இட்ரிசை “தோல்வியுற்றவன்” என்ற சொல்லால் குறிக்கிறான். ஒரு கணம் திகைத்து துணுக்குற்ற சினானின் அம்மா “அப்படி சொல்லாதே” என மறுத்து “அவர் தொந்தரவுக்குரிய மனிதராக இருக்கலாம், ஆனால் எல்லோரும் பணத்தை பற்றி பேசியும், யார் என்னென்ன ஈட்டியிருக்கிறார்கள் என்பதை கணக்கிடுவதிலும் ஈடுபட்டு கொண்டிருக்கையில் உன் தந்தை உலகத்தின் வாசனையையும், செம்மறியாட்டுக் குட்டிகளின் மணத்தையும், நிலங்களின் நிறங்களை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்” எனத் தன் கணவனை நேசம் மிகுந்த இவ்வரிகளால் வர்ணிக்கிறாள். இட்ரிஸின் குணயியல்புகளை பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை இவ்வரிகள் அளிக்கின்றன.

சமூகத்தின் பற்பல கூறுகள், அவற்றின் நிலைப்பாடுகள், மதங்களின் கொள்கைகள், மனித உறவுநிலைகளில் புதைந்திருக்கும் அவிழ்க்கமுடியாத சிடுக்குகள் ஆகிய இவற்றின் அனைத்தின் மீதும் ஆழமான உரையாடல்களை கதாபாத்திரங்களின் வழியாக நிகழ்த்தி விசாரணைக்கு உட்படுத்துகிறார் சைலான். படம் நெடுக இத்தகைய செறிவான உரையாடல்களும், விமர்சனங்களும் விரவிக் கிடக்கின்றன. குறிப்பாக, சினானும் அவனது இரு நண்பர்களும் கடவுளை, மதத்தை,  அதன் கொள்கைகளை, அவற்றின் மீதான மனிதனின் நம்பிக்கைகளை, வாழ்நிலை யதார்த்தங்களை குறித்து தத்தமது கருத்துகளின் வழி தங்களுக்குள் உடன்பட்டும், முரண்பட்டும் துவக்கும் விவாதம் மிகக் காத்திரமான உரையாடல்களாக நீண்டு விரிந்து இறுதியில் ஓர் ஆழ்ந்த அமைதிக்குள் உறைந்து நிறைவுறும் காட்சியைச் சொல்லலாம்.

இப்படியாக சினான் தொடர்ந்து பல மனிதர்களை சந்திப்பதும் உரையாடுவதுமாயிருக்கிறான். அவ்வகையில் அவன் ஒரு மூத்த எழுத்தாளரை நேரில் கண்டு உரையாடும் காட்சி மிகச் சுவாரசியமானது. தன் எழுத்துலக லட்சியத்தையும், எழுத்துகளை அச்சாக்கும் முயற்சியில் இருப்பதையும் எடுத்துரைத்து அறிமுகமாகும் சினானின் அடுத்தடுத்த கேள்விகளால் அந்த மூத்த எழுத்தாளர் சீண்டப்படுகிறார். ஒரு கட்டத்தில் சினானின் அணுகுமுறை பரிகசிக்கும் தொனியில் இருப்பதாக கூறி கொந்தளித்து ஆக்ரோஷமாக அரற்ற துவங்குகையில் சினான் ஒரு  நமட்டு சிரிப்பை உதிர்க்கிறான். சில மூத்த எழுத்தாளர்களின் வாழ்கையில் நிகழும் இத்துன்பவியல் சம்பவம் படத்தில் கச்சிதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் ஹாதிஸ். வெகு சில நிமிடங்களே வருகிற ஹாத்திஸ் என்கிற பெண் கதாபாத்திரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு அகலும். சினானுக்கும் ஹாத்திசுக்குமான உரையாடலில் இழையோடும் மர்மமான கிளர்ச்சியை பார்வையாளனிடம் கடத்தும் விதத்தில் அக்காட்சி அபாரமாகப் படமாக்கப்பட்டிருந்தது. அக்காட்சியமைப்பும் வசீகரித்து உள்ளிழுக்கும் வகையிலானது. அதில் காற்றில் அசையும் பழுத்து மென்மஞ்சள் நிறமேறிய இலைகளின் ஓரங்களை பொன்னிற கிரணங்கள் தொட்டுரசி நழுவி கீழிறங்கும். ஹாதிச்சும் அவ்வாறான ஒரு தொடுகைக்கான தருணத்தை நோக்கி தான் ஏக்கத்துடன் காத்திருப்பாள். கதைமாந்தர்களின் மனவோட்டங்களையும், காட்சியின் தன்மையையும் பிரதிபலிக்கும் வகையில் புறச்சூழலை இயற்கையின் காலநிலை மாற்றங்களோடு துல்லியமாக வடிவமைத்து இரண்டிற்கும் ஓர் ஒத்திசைவை ஏற்படுத்தி காட்சிக்கு வலுவூட்டுவது சைலானின் திரைப்படங்களுக்கே உரிய சில தனித்துவக் கூறுகளில் ஒன்று. இது போல சைலானுடைய படைப்பாற்றலின் செழுமையை வெளிப்படுத்தும் பல காட்சிகளிருக்கின்றன.

சைலானின் திரைப்படங்களில் இயற்கையும் ஒரு பிரதான கதைமாந்தர் தான். சினானும் அவன் தந்தை இட்ரிசும் அருகருகே அமர்ந்து உரையாடும் இறுதிக்காட்சியில் வெண்பனி சீரான விசையில் மென்தூறலாய் பொழிந்து நிலத்தை குளிரேற்றி கொண்டிருக்கும். நெகிழ்வூட்டும் உணர்ச்சித் தருணங்களால் பின்னப்பட்டிருக்கும் அக்காட்சியின் ஏதோவொரு கணத்தில் சினானிற்குள்ளும் ஒளிந்திருக்கும் இட்ரிசை அவன் தந்தை தொட்டுக் காட்டுகிறார். அதை சினான் உணரத் துவங்கும் புள்ளியில் படம் நிறைவடைகிறது.

The Wild Pear Tree  திரைப்படத்தின் மொத்த கால அளவு மூன்று மணி நேரம் ஒன்பது நிமிடங்கள். சைலானின் முந்தைய படமான விண்டர் ஸ்லீப்பும் (Winter Sleep) இதே கால அளவை ஒத்திருந்ததது. கான்ஸ் திரைப்படத் திருவிழாவில் சைலானின் விண்டர் ஸ்லீப் திரைப்படம் தேர்வாகிய போது அவ்வருடத்தின் ஜூரி தலைவராக பொறுப்பேற்றிருந்த பிரபல நியுசிலாந்து இயக்குனர் ஜேன் காம்பியன் (Jane Campion) அத்திரைப்படத்தை குறித்து “ விண்டர் ஸ்லீப் திரைப்படத்தின் கால அளவு மூன்று மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் எனக் கண்ட போது நான் சற்று திகைப்புற்றேன். பிறகு அமர்ந்து படத்தை பார்க்க துவங்கியதும் அதில் மிதந்த அழகிய லயம் என்னை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. மேலும் சில மணி நேரங்கள் நீண்டிருந்தாலும் அங்கிருக்க நான் தயாராகயிருந்தேன். உண்மையில் இது ஒரு மேதமைக்கூடிய திரைப்படம்” என்றார். அவ்வருடம் கான்ஸ் திரைப்பட திருவிழாவில் அதன் உயரிய “தங்கபனை” விருதை விண்டர் ஸ்லீப் பெற்றது. ஒரு திரைப்படம் தனக்கு வேண்டிய கால அளவை அதுவே தீர்மானித்து தேர்ந்தெடுத்து கொள்ளும் என்பதில் தீர்க்கமான உறுதி கொண்டவர் சைலான். அதனால் நேர வரையறையை குறித்தெல்லாம் அவர் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.

கேரள திரைப்படத் திருவிழாவில் The Wild Pear Tree திரைப்படத்தை நிஷா காந்தி திறந்தவெளி திரையரங்கில் இரவு பத்து முப்பதிற்கு அந்நாளின் இறுதிக் காட்சியாக பார்த்தேன். படம் துவங்கி நகர்ந்து செல்ல செல்ல அந்த இரவு கனமேறிய ஒன்றாக உருக்கொண்டதைக் கண்டேன். படத்தை மீண்டும் தற்போது பார்க்கையில் அதே கனத்தை உணர்கிறேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button