கட்டுரைகள்

பிரபஞ்சம் நேசி

அருந்தமிழ் யாழினி

     மாலைப்பொழுதுகள் இயல்பாகவே மனித மனங்களோடு உரையாடலை நிகழ்த்தி அவர்களை இலேசாக்கி விடுகின்றன. அப்படியான பொழுதுகளில் தான் பெரும்பாலும் அப்பாவின் கதை சொல்லல் நிகழும். அப்படியான ஒரு பொழுதொன்றில் தான் ‘பிரபஞ்சன்’ என்கிற பெயர் எனக்கு அறிமுகமாகியது. ‘பிரும்மம்’ கதையின் கடைசி வரியை அப்பா சொல்லி முடித்திருந்த நேரம் பிரபஞ்சன் என்கிற ஆளுமையின் எழுத்துக்கள் மீதான என்னுடைய ஈர்ப்பும் துளிர்த்திருந்தது.    

மனிதர்கள் எப்போதும் விடுவித்திரா புதிர்களால் கட்டமைக்கப்பட்டவர்கள். இதில் ஆண், பெண் என்கிற பேதங்கள் நிச்சயம் அடங்குவதில்லை. மனிதன் தன்னுள் கொண்டிருக்கும் பல்வேறு முகங்களை ஏதோ ஒரு சூழ்நிலையில் வெளிப்படுத்தி விடுகிறான். அந்த தருணம் சிலரை நேசிக்க வைக்கிறது சிலரை வெறுப்பதற்கான வாய்ப்பைத் தந்துவிடுகிறது பல நேரம் வாழ்க்கையின் அழகியலை அதன் முக்கியத்துவத்தை பிறரின் வலிகளைக் காண வைத்து நம்முள் புரிதலை ஏற்படுத்தி விடுகிறது. துரோகம், பொறாமை, வன்மம் என எல்லாமும் நிறைந்த மனிதர்களோடும் நாம் ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டியிருந்தாலும் ‘அன்பு’ என்கிற ஒற்றைச் சொல் வாழ்வில் நாம் காணத்தவறிய வசந்தத்தின் சில பக்கங்களை நம்மில் கடத்திவிடுகிறது. நமக்கு வாழ்க்கையின் கசப்பான நினைவுகளை பலர் தந்திருப்பார்கள்  ஆனாலும்  அதைத் தாண்டி அவர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள் , அவர்களைப் புரிந்தவர்களிடம்  என அன்பைக் காட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள் அதுவே இந்த வாழ்வியலின் இயக்கு நிலையாகிறது.  மனிதர்கள் எப்படியான குணங்களால் நிறைந்திருப்பவர்களானாலும் அவர்களுள் பொதிந்திருக்கும் அன்பை அடையாளம் காட்டுவதே பிரபஞ்சனின் எழுத்துக்கள்.     

தற்கொலைக்காக ஒருவருடைய மனது எத்தனிக்கும் போதோ, தன் இணையை பிரிவதற்கான சூழலை சந்திக்கும் போதோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாரா துரோகத்தை காண நேரிடும் போதோ அதிலிருந்து மீண்டு வாழ்க்கையை நேசிக்க தொடங்குவார்களானால் அதுவே என் படைப்பின் வெற்றி என்னும் அவரது நோக்கத்தை எல்லாக் கதைகளும் நிரூபித்துக்கொண்டு தான் இருக்கிறது.  எப்படி இவ்வளவு நுட்பமாக மனிதர்களின் ஒவ்வொரு அசைவையும், அவர்களின் எண்ண ஓட்டங்களையும் பேச முடியும் என்பது அவரின் கதைகளின் மீதெழும் பிரம்மிப்பு. எந்த மாதிரியான சூழல் மனிதர்களை மாற்றுகிறது, அந்த சூழலில் அவர்களின் மன ஒட்டம், சூழ்நிலைகளை பார்க்காமல் சிலரின் மீது புறக்கணிப்பை நிகழ்த்தும் இந்த சமூகத்தின் முகம் என அத்தனை விடயங்களையும் அவரின் கதைகள் கொண்டிருக்கும். பிரபஞ்சனின் எழுத்தை வாசிக்கும் எவரும் அவர்கள் எவ்வளவு புறக்கணிப்புகளை,வலிகளை சந்தித்தவராயினும் நிச்சயம் மனிதர்களை நேசிக்காமல் இருக்க முடியாது.

      பிரபஞ்சன் கதைகளில் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான கதைகள் என்று சில இருக்கும். எனக்கும் என்னுடைய வாழ்க்கையில் நான் கடந்து போகும் பல தருணங்களில் என்னோடு துணை வரும் சில கதைகளும் உண்டு.  எந்த அதிகாரத்திற்கு கட்டுப்பட்டிருந்தாலும், அல்லது நம்மைச் சுற்றியுள்ள சூழல் எவ்வளவு இறுக்கமான மனநிலைக்குள் தள்ளினாலும் எல்லார்க்குள்ளும் நிறைந்திருக்கும் மனித நேயம் அவற்றை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டு விடுகிறது என்பது ‘கருணையினால்தான்’ கதை பேசும் எதார்த்தம். கேசவன் என்கிற கதாப்பாத்திரம் தன் சிநேகிதியை தாழம்புதரில் ஆடை கலைந்து இரத்தக் காயங்களோடு பார்க்கும் தருணத்தில் அதற்குக் காரணமானவனை கொலை செய்துவிட்டு தலைமறைவாயிருக்கும் நேரத்தில் கைது செய்யப்படுகிறான். எதையும் நம்பக்கூடாது என்று கற்பிக்கப்பட்டிருக்கும் காவல்துறையில் கொஞ்சமும் சம்பந்தப்படாத நியாயம் அநியாயம் பற்றி சிந்திக்கும் ஒரு போலிஸ் அதிகாரி, குழந்தைத் தனம் போகாத அவனின் முகத்தை கண்டு கேசவனுக்காக காத்திருக்கும் சித்திரவதைகளிலிருந்து அவனை காப்பாற்ற , நிமிடத்தில் தோன்றிய முடிவால் அவனை சுடுகிறான். சுமதிக்கு பிடித்த தங்க அரளியை சேகரித்துக்கொண்டிருந்த அந்த புன்னகையோடு சரிந்த கேசவனை அந்த நரகத்திலிருந்து காப்பாற்றி விட்ட மன நிம்மதி அந்த அதிகாரிக்குள் தெரிய ஆனாலும் மனம் என்னவோ அழுதுக் கொண்டிருந்தது என்கிற காட்சி, தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கும் பல நிகழ்வுகளின் பின்புலத்தை அடையாளம் காணச் செய்யும் உந்துதல்.

‘ மிருகங்கள் இன்னொரு ஜீவனை சினேகித்து விட்ட பிறகு அந்த சினேகிதத்தை மனிதர்களைப் போல மறுபரிசீலனை பண்ணுவது இல்லை’ –  ‘மனுஷி’ கதையில் நான் அதிகம் ரசித்த வரிகள் இவை. தானும் ஒரு மருமகளாக வந்தவளெனினும் தன் மருமகளை நேசிக்க மறுக்கும் அவள் தன் வீட்டில் இணைந்த பசுவின் மீது காட்டுகிற அன்பு, அவள் இல்லாத நேரங்களில் அந்த பசுவின் தவிப்பு என ஒரு கட்டத்தில் பசுவும் தனக்கு ஒரு பெண் கன்றை தரவில்லை என்பதில் தொடங்கும் அவளின் நிராகரிப்பு, இறுதியில் பசுவை விற்றுவிடுவது என்கிற அவள் முடிவில் பிரிவின் இயலாமையால் தவிக்கும் இரு உணர்வுகளின் போராட்டம் என இந்த கதை உணர்த்திய புரிதல்கள் பல. பசுவை விடுத்து அதை மனிதரோடு பொருத்தும் போது தன் வசம் எதுவுமில்லை என்கிற சூழலில் ஒரு மனிதன் மீது சக மனிதன் காட்டும் வெறுப்பும் வெறுப்பைக் கடந்து வெளிக்காட்ட முடியாமல் விரவி நிற்கும் அன்பு என உறவு சிக்கல்களை பேசும் கதை அது.   

 பெண்களை ஆதரிக்கிறேன் ,  பெண்ணியத்திற்கு துணை நிற்கிறேன் என அதன் அடிப்படையைக் கூட தெரிந்துக் கொள்ளாத, பெண்கள் எது செய்தாலும் அது சரியே என அவர்கள் மீது புனித பிம்பத்தைக் கட்டமைக்கும் எவரையும் நான் நம்புவதில்லை. பெண்கள் எப்போதும்’’ சரிகளால்’ஆனவர்களும் அல்ல ‘தவறுகளால்’ ஆனவர்களும் அல்ல மனித இயல்பில் கலந்திருக்கும் இந்த இரண்டோடும் ஆனவர்கள் தான். அவர்களின் அந்த உள இயல்போடு படைக்கும் எழுத்துக்களை நேசிக்கவே செய்கிறேன் அதனாலே பிரபஞ்சனின் பெண் கதாபாத்திர வடிவமைப்பை எதாவது ஒரு சூழ்நிலையில் என்னால் பொருத்தி பார்க்க முடிகிறது. இந்த சமுதாயம் பெண்களின் மீது திணித்துக் கொண்டிருக்கிற,  கலாச்சாரம், பண்பாடு என்கிற பெயர்களால் அவர்களின் விருப்பங்களை குறைந்தபட்சம் அவளின் எண்ணங்களைக் கூட அறிந்துக்கொள்ள முற்படாத மனிதர்களின் பிற்போக்குத்தனங்களை சுட்டிக்காட்டும் நிறைய கதைகளை கூற முடியும். எப்போதும் சோக கீதம் இசைக்கும் பெண்களாக அல்லாமல் தனக்கு  இழைக்கப்படும் எல்லா எதிர்மறை செயல்களுக்கும் முடிகளை எடுப்பவர்களாக முக்கியமாக தைரியத்தோடு அதை அனுகுபவர்களாக படைக்கப்பட்டிருப்பார்கள்.    

 ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி ‘  கதையை எத்தனை முறை படித்தாலும் புதிதாக ஏதோ ஒன்றை உங்களால் கற்றுக்கொள்ள முடியும்.  காலம் தன் மேல் கட்டப்பட்டிருக்கும் கற்பிதங்களை ஒரு பெண் உடைக்கும் போது அவள் சந்திக்கும் நிராகரிப்பு அவள் இயல்பை எப்படியான மாற்றங்களுக்குள் தள்ளுகிறது  என  சிந்தனைகளில் வக்கிரத்தையும், கலாச்சார பாதுகாவலர்களாக.  திரியும் அதிமேதாவிகளை காத்திரமாக அறையும் எழுத்து அது. தான்தோன்றியாய் திரியும் எல்லார்க்குள்ளும் அன்பிற்காக, அரவணைப்பிற்காக ஏங்கும் ஏக்கத்தின் பரிதவிப்போடு முடிந்திருக்கும் அந்த கதை. ‘3 நாள்’ கதை மாதவிடாயின் மூன்று நாட்கள் தீட்டு என எல்லா மாதமும் தன் மாமியாரால் சொந்த வீட்டிற்கு அனுப்பப்படும் சுமதியின் அக உணர்வுகளை அத்தனை வலிகளோடு விளக்கிவிடுகிறது. காலையில் வேலைக்கு சென்றால் மாலை சாப்பிட்டு தூங்குவது என்றிருக்கும் கணவனிடம் அவனின் அம்மாவால் நிகழ்த்தப்படும் அந்த கொடுமையான செயலை இயற்கையான சில உணர்வுகளைக் கூட பகிர்ந்துக்கொள்ள முடியாத அவளின் சூழலை அத்தனை இயல்போடு பேசுகிறது. வேறு துணையை தேடிக்கொள்ளும் தன் மனைவியை நினைத்து தற்கொலைக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள முற்படும் கிருஷ்ணமூர்த்தி எதிர்பாராமல் சந்திக்க நேரிடும்  நீரஜா என்கிற பாலியல் தொழிலாளியின்  வார்த்தைகள் வாழ்க்கையில் அடுத்த நகர்விற்க்கான வழியை  உருவாக்குவதையும் , காலம் காலமாக மனிதனின் மான அவமானம் இதில் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு வந்த சமுதாயத்தின் பார்வையிலிருந்து தப்பிக்க ஓடும் மூர்த்தியின் வழியாக சமுதாயத்தின் மீதான கேள்வியை எழுப்புகிறது’ 4 வது வழி’.     

 ‘ எனக்கும் தெரியும் ‘ என்றொரு கதையில் வரும் வரிகள் இவை “ ஒவ்வொருத்தர் முன்னாடியும் கண் எச்சில் பட்டு, போரப்போ ஏதோ ஒரு கால் மோதிரம் மாதிரி,  ஒரு செருப்பு மாதிரி இது சரிபடாது வேறு பார்ப்போம்னு சொல்லிட்டுப் போறதைக் கேக்கும் போதெல்லாம் அவமானத்துல உடம்பு குன்றிப் போறது மிஸ்டர் மூர்த்தி ..”  வசதி இல்லாததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வருமாறு அம்மா கூறியதால் சுகுணாவின் வீட்டிற்கு வரும் மூர்த்தியின் மனவோட்டத்தை புரிந்துக்கொண்டு வெளிப்படும் சுகுணாவின் இந்த நிலைப்பாடும் கேள்வியும் இன்றும் அரங்கேறிக்கொண்டிருக்கும் சமூக அவலத்தின் பிரதிபலிப்பு.  வசதி இல்லையென்றாலும் குணமும், காட்டுகிற அன்பும் நிறைவாய் இருக்கும் மனங்களைப் பற்றி உரைக்கச் சொல்லும் கதை.    

 வாசிக்கும் போதே உச்சபட்சமான உணர்வுகளால் சிக்கி தவிக்க வைத்த கதை “மாமன் உறவு”. நன்றி கெட்ட மனிதர்களும் உலவும் இடத்தில் துரோகத்தையும் புறக்கணிப்பையும் அனுபவித்தாலும் அதே அன்பை கொஞ்சமும் குறையாமல்  தந்துக்கொண்டே இருக்கும் மனிதத்தின் அபூர்வத்தை பேசும் கதை இது .  அக்கதையில் வரும் அப்பா தூரத்தில் நெல்லும் தேங்காய்களும் நிறைந்திருக்கும் செல்வ சூழலில் திருமணம் செய்துக்கொண்டு வந்தவர். கூடவே அம்மாவின் தம்பியையும். பள்ளி முதல் தனிக்குடித்தனம் வரை பார்த்து பார்த்து  அப்பாவின் நன்மைகளை வாக்கிக் கொண்டு அப்பாவின் கிழிசல்களை அம்மா தினமும் தைத்துக் கொண்டிருந்த சூழலிலும் எதுவும் செய்ய மனம் இல்லாமல்  அப்போதும் தன் மகனையும் படிக்க வைத்து ஆளாக்கி விடுங்கள் என்று கொஞ்சமும் கூச்சமற்று  நிற்கும் போது அம்மாவின் பேச்சையும் மீறி படிக்க வைக்கும் அப்பாவின் செயல் மனிதத்திற்கு கற்றுத்தர ஏராளம் வைத்திருக்கிறது. “ பையன் கவிழ்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இலையில் பெரிய மீன் தலையும் இரண்டு துண்டங்களும் இருந்தன. அப்பா உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று எப்போதோ மீன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டிருந்தார். அப்பா வற்றலைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டார்”. என்று முடியும் இந்த இறுதி வரிகளை அத்தனை எளிதில் கடக்க முடியவில்லை .    

இன்னும் இன்னும் என மனிதத்தின் அத்தனை நுட்பமான அசைவுகளையும் யாரும் பார்த்திரா மறுபக்கங்களையும் எழுதி தீர்த்திருக்கிறது அவரின் எழுத்துக்கள். காதலை, பிரிவின் வலிகளை அந்த வலி நிகழ்த்தும் மாற்றங்களை, அதை தாண்டி ஒவ்வொரு உறவில் படர்ந்திருக்கும் அன்பின் வெளிப்பாட்டை, தந்தையின் ஏக்கங்களை , பழக்கமில்லாதவன் என்றாலும் அவன் ஏமாற்றுபவனாக இருந்தாலும் நாம் காட்டும் அன்பு அவனில் நிகழ்த்தும் மாற்றம் என ஒரு படைப்பாளி இந்த சமூகத்திற்கு எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்திருக்கிறது அவரின் கதைகள். எல்லா கதைகளும் பறவைகளோடு,  இயற்கையோடு பேசக் கற்றுக்கொடுக்கும், சிரிப்பின் மொழியை புரிந்துக்கொள்ள வைக்கும், மீன்களை அறிமுகப்படுத்தும். உன்னுள் உணராத தாய்மையை, தோழமையை, தந்தையை, குழந்தையை, காதலை, இரக்கத்தை என அத்தனையும் மீட்டுவிடும் பிரபஞ்சனின் கதைகள். நவீனம் என்றுச் சொல்லி என்னென்னவோ செய்துக்கொண்டிருக்கும் இந்த நவீன உலகம் அத்தனை எளிதில்  மனிதநேயத்தை  மறந்துவிடுகிறது. அதை நிச்சயம் இலக்கியம் மீட்டுத்தரும் அதில் இவரின் எழுத்துக்களும் நிச்சயம் அடங்கும். ஆகவே தான் பிரபஞ்சன் என்கிற பேராளுமை காலத்தால் கொண்டாடப்பட வேண்டியவர். அவர் எழுத்துக்கள் எல்லா நிலைகளிலும் பேசப்பட வேண்டியவை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button