தன் முகத்தின் மேற்புறத்தை மூடிக்கொண்டு அந்த கன்னிமை அடைந்த பெண் தன் சால்வை போல் போர்த்தப்பட்ட ஆடையினை இறக்கையென மாற்றி பறவைபோல் நிலத்தில் வட்டமிட வேண்டும். அவளுக்கு முன் அவளது அனுமதியுடன் ஒரு ஆண் தான் கிழே விழும்வரை பின்னோக்கி வட்டமிடவேண்டும். சுற்றி நின்று ஆர்ப்பரிக்கும் குழுவினரது இசையுடன் நிகழும் இந்த மணநடனம்! இதில் ஆண் வென்று பின்னர் திருமணம் நோக்கிச் சென்றால், அப்பெண்ணின் தாய்க்குக் கால்நடைகளை தட்சணையாக அவன் அளிக்க வேண்டும். இது கொலும்பிய நாட்டின் வாயு பூர்வகுடிகளின் அழகிய வைபவம். படத்தின் மகிழ்வான தருணங்களில் இது முக்கியமானது.
1960 களில் தொடங்கி இரு தசாப்தங்களில் அந்த வாயு இனத்திலிருந்து போதை பொருள் மாஃபியாவாக மாறும் ஒருவனது நிலை. அது புலிவாலாகிப் போவது, தான், தன் குடி, தன் மக்கள் கடந்து தன் கலாச்சாரத்தையும் புலிக்கு இரையாக்கி விடுவது என இரண்டையும் நிதானமான மொழியில் சொல்லிப் போகிறது. கம்யூனிச எதிர்ப்பு வசனங்களை பதிப்பிட்ட துண்டுப் பிரசூரங்களை விநியோகிப்பதாக வரும் மேற்குலக ஹிப்பிகளுக்கு நிஜத் தேவையாக மனமருட்சி போதை வஸ்துக்களைத் தேடிக் கண்டடைவதே நோக்கமாக இருக்கிறது. அதை வாய்ப்பாகப் பார்க்கும் சொந்த நிலக்காரர்களுக்கு அது வலை என்பது தாமதமாகவே புரிகிறது. அதற்குள் வலையிலிருந்து துண்டுதுண்டாக வெட்டி வீசப்பட்டுவிடுகிறது அவர்களது சிறுவாழ்க்கையின் வரலாறுகள்.
இரவின் இடுக்குகளில் கொல்லப்பட வேண்டிய நண்பனை திடமாய் கொன்று இழப்பதையும், தன்னைக் கொல்லவந்த எதிரியைக் கண்டு நாமனைவரும் ஏற்கனவே இறந்தவர்கள் என்று சொல்லிச் சாவதையும், தன் இறுதி முச்சுவரை யுத்தத்தைத் தடுக்க முனைவதையும் ரபாயத் பாத்திரம் மூலம் விரிவாகவும் ஆழமாகவும் வளர்த்தெடுக்கிறார்கள். எத்தகைய மன்னனுக்கும் தன் மக்களின் எதிர்காலம் ஒரு தடையெழுப்புகிறது. இத்தகைய தடைகளால்தான் உலகத் தொடர்ச்சி நிகழ்கிறது. இத்தகைய தடைகளைத்தான் மூட நம்பிக்கைகள் என்று அறியப்படுபவற்றின் மூலம் நெடுநாள் பயன்படுத்தி இந்நீண்ட வரலாற்றைக் கடந்து வந்து கொண்டிருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ் புகழ் நார்கோஸ் தொடரில் இருப்பதைப் போன்று பழிவாங்குதலையும் வஞ்சத்தையும் வீரம் என்ற தொனியில் ஹீரோயிச பாணியில் சொல்லாமல், விழி மங்கிய கிழவனின் இசைக்குள் இருக்கும் மெல்லிய ஓலம் போல சொல்லப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பார்த்த You Were Never Really Here திரைப்படத்தின் காட்சிகளில் உள்ள வன்முறைக் காட்சிகளைப் போலவே இதிலும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நேரடியாக எந்த வன்முறைக் காட்சியையும் காண்பிக்காமல் அதன் பின்னர் காட்சிபடுத்தியது இன்னும் ஆழமான உணர்வுகளையே தந்தது. கதைக் காலக்கோட்டில் வைத்துப் பார்க்கையில் இது நார்கோஸிற்கு முந்தைய கதையாக எடுத்துக் கொள்ளவும் முடிகிறது.
குறிகளையும் கனவுகளையுமே தங்கள் வாழ்வின் திசைகாட்டிகளாக அறிந்து வைத்திருக்கும் உர்சுலா, தன் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள் குறிப்பாக தன் பேத்தி என ஒருவரையேனும் காத்துவிடவேண்டும் எனத் தவிக்கிறார். தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் வரும் உர்சுலாவின் சாயலிலான தாய்மை நிறைய இருக்கிறது. தன் இனத்தின் கெளரவத்தையும் விட முடியாமல் போகும் போது இழக்க எல்லாமே இருக்கிறது. அதில் குறைந்தபட்சம் இந்திராவையேனும் காக்க நினைத்து கையறுநிலையில் டஜன் துப்பாக்கி முனைகளுக்கு முன்னே மண்டியிடும் நிலை எந்த கனவுகளிலும் முன்னறிவிக்கப்படாதது.
பூர்வகுடிகளைப் பற்றிய கலாச்சார பாதுகாப்புகளையும் அதன் மீதான மேற்கத்திய நுழைவின் விளைவையும் ஏற்கனவே நாகத்தின் தழுவல் (Embrace of the Serpent) திரைப்படத்தில் பேசிய சிரோ குவேராவின் அடுத்த படைப்பு. இதுவே தவிர்க்க முடியாமல் 91ஆம் ஆஸ்கருக்கான கொலும்பிய பரிந்துரையும் கூட. இந்த திரைப்படத்தில் போதைமருந்துகள் விற்பனை கருக்கொள்ளும் காலத்தின் இரக்கமற்ற பொழுதுகளையும், அதன் ஒரு பகுதியென மானுடர்கள் உதிர்ந்து விழுந்து மட்குவதையும், அதனிடையே நிகழும் மானுட அறம், துரோகம், சினம், தவிப்பு பற்றிய நுண்ணிய அவதானிப்புகளையும் நிதானமாகப் பேசியிருக்கின்றனர்.
சட்டகங்களும் நிலக்காட்சிகளும் அழகாய் முன்னிறுத்தப்பட்டிருக்கின்றன. அமைதியின் தூதனாகச் செல்லும் அந்த முதியவர் தான் கொல்லப்படப் போகிறோம் என்று அறிந்ததும் தன் தொப்பியை நீக்கிவிட்டு, தூதனைக் கொல்வது கடும் அறப்பிழை என்று தன் எளிய சொற்களால் சொல்லிவிட்டு நிறைந்து நிற்கும் காட்சி, ஆரம்பத்தில் வரும் மணநடனக்காட்சி, கனவுக் காட்சித் தொடர்கள் என வியப்பதற்கும் அசைபோடுவதற்கும் பல இருக்கின்றன. ஒரு ரத்தக் களறியான மாஃபியா திரைப்படம் என்பதே அடையாளம் கொள்ளப்பட்டு சுருக்கப்பட்டிருக்கப்பட வேண்டிய கதைதான். ஆனாலும் மொத்தமாகப் பார்க்கையில் நிதானமாக இழைத்து ஏற்றப்பட்டிருக்கும் நிறங்களின் தொகுப்பும், ஐந்து பகுதிகளாகச் சொல்லப்பட்டிருக்கும் காலக்கோட்டின் நேர்மையும், நினைவுகள், நியாபகங்களாகிப் பாடல்களில் ஒலித்து சாசுவதம் அடைவதைச் சொல்ல நினைத்த பூர்வகுடிகளின் மொழியைத் திரைமொழியில் அடைந்ததும் சற்றே வியப்பைத்தான் தந்தன.