இணைய இதழ்இணைய இதழ் 63சிறுகதைகள்

ப்ளைண்ட் ஸ்பாட் – இந்திரா ராஜமாணிக்கம்

சிறுகதை | வாசகசாலை

சாக்லேட்டை நீட்டியபடி இருக்கையை விட்டு எழுந்திரித்த கணேசமூர்த்திக்கு மிகச்சரியாக ஐம்பத்தி ஏழு வயது. நல்ல உயரம், தட்டினால் டிஜிட்டல் எண்களைக் காட்டும் கடிகாரத்தை மறைத்தவாறிருந்த முழுக்கை சட்டையும், டக் இன் செய்யப்பட்டதை மீறி கீழே விழுந்துவிடக்கூடிய தொப்பையையும் அணிந்திருந்தவன், மேலதிகாரிக்கான அத்தனை உடல்மொழியையும் கொண்டிருந்தான். 

காயத்திரிக்கு எரிச்சலாய் இருந்தது.

”சார் ப்ளீஸ், வேலையைத்தானே பார்த்தேன். அதுக்கெதுக்கு ஸ்வீட்?”

”கையெழுத்துப் போட்ட எனக்கே கைவலிக்குது, ரிப்போர்ட் ரெடி பண்ணின உனக்கு எவ்ளோ வலிக்கும், இந்தா வச்சுக்கோ”

நின்றிருந்தவனுக்கும் தனக்குமான இடைவெளி மெல்லிசாக குறைந்துவருவதை அனுமானித்தவள் ஓரடி பின்னுக்கு நகர்ந்தாள். நீட்டிய கையை இறக்காமலிருந்தவனின் பிடிவாதமும் அதிகாரமும் காயத்திரி அறிந்திருந்தாள்.

குளிரூட்டப்பட்ட அறை, யாரும் தன் அனுமதியின்றி உள்ளே நுழைந்திட முடியாது என்பது கணேசமூர்த்திக்கு நன்றாகத் தெரியும். தன்னைப் பார்க்க வருகிறவர்கள், அறைக்கு வெளியே வராண்டாவில் போடப்பட்டிருக்கும் விசிட்டர்ஸ் நாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதும், கேமராவில் பார்த்துவிட்டு அழைப்பானை அழுத்தினால் மட்டுமே ப்யூன் நெப்போலியன், அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பதும் கணேசமூர்த்தி பிரகடனப்படுத்தியிருந்த புதிய விதி.

கை நீட்டியிருந்தவிதமும், யாரும் வரமாட்டார்களென்கிற குருட்டு தைரியத்தில் எழுந்திரித்து முன்னேறிய விதமும் காயத்திரியை ஒருகணம் யோசிக்கச் செய்திருக்க வேண்டும். திட்டுவதற்கோ கோபப்படுவதற்கோ சாத்தியமில்லை என்பது புரிநதவளாய், சாக்லேட்டை வாங்கிக்கொண்டு புயல் வேகத்தில் அறையைவிட்டு வெளியேறினாள், கணேசமூர்த்தி முன்வரிசைப் பற்கள் தெரிய சிரித்துக்கொண்டான்.

விறுவிறுவென வராண்டாவைக் கடந்து தன் கேபினை அடைந்ததுதான் தாமதம், ஜன்னல் வழியே கையிலிருந்ததை விட்டெறிந்தாள். பிரிக்கப்படாத பொன்னிறமானது, வேண்டாத குப்பையாய் துள்ளிக்கொண்டு புல்லில் விழுந்தது.

காயத்திரி எரிச்சலாய் உள்ளே வந்ததையும், சாக்லேட்டை தூக்கிப் போட்டதையும், கோப்புகளிலிருந்து கண்ணெடுக்காமலேயே கவனித்துக் கொண்டிருந்த விஜி, தன் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை காயத்திரியை நோக்கி நகர்த்தினாள். எதுவும் பேசாமல் நின்றபடியே தண்ணீரை எடுத்து இரண்டு மடக்கு குடித்தவள், கொஞ்சம் நிதானத்திற்கு வந்தவளாய் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு தன் இடத்தில் அமர்ந்தாள்.

“பெரிய மன்மதன்னு நினைப்பு.. இவனையெல்லாம் செருப்பக் கழட்டி அடிக்கணும். ராஸ்ஸ்ஸ்கல்”

“உனக்கும் வேலையில்ல, அந்தாளுக்கும் வேலையில்ல”

காயத்திரி முறைத்தவுடன் சமாதானம் செய்கிற தொனியில் முகத்தை கோணலாக்கிக்கொண்டாள் விஜி.

விஜிக்கு இதுவொன்றும் புதிதல்ல, இந்த நான்கு மாத காலங்களில் ஒவ்வொரு முறையும் கணேசமூர்த்தியின் அறையிலிருந்து காயத்திரி இப்படியான ஆவேசத்துடன் வெளியேறுவது க்ளீஷேவாக நடந்துவருகிறது.

தவிர, கணேசமூர்த்தி பற்றி அலுவலகத்தின் அத்தனை பெண்களுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. மேலதிகாரத் தோரணையை பயன்படுத்தி அவர்கள் மத்தியில் தன்னை ஒரு ப்ளேபாயாக நிறுவ முயன்றுகொண்டிருக்கும் சுபாவம், இரட்டை அர்த்த உரையாடல், உடல்மொழி தொடர்பான கிண்டல்கள், அதிகாரி என்கிற திமிர் என அலுவலகம் மொத்தமும் கணேசமூர்த்தியிடம் செய்வதறியாது சிக்கியிருந்தது. மேலிடத்து செல்வாக்கைப் பெற்றிருந்ததாலோ என்னவோ, யாரும் அவனைப் பற்றி வாய்திறக்கவில்லை.

ஊழியர்களின், முதல் இரண்டு வருட ‘ப்ரொபேசன்’ என்னும் தகுதிகாண் காலத்தில்  எந்தப் பிரச்சனையிலும் பெயர் அடிபடக்கூடாது என்பது அரசாங்க விதி. வருடக்கணக்காய் காத்திருந்து கிடைத்த வேலையென்பதால், கூடுதல் கரிசனத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாலும், அலுவலகப் பெண்களுக்கேயுரிய ‘நாசூக்காகத் தவிர்த்தல்’ முறையைக் கையாளுவது பற்றிய வதை காயத்திரிக்கு இல்லாமலில்லை.

”தலை வலிக்குது, கேண்டீன் போவோமா?”

ஆமோதித்தவளாய் ஹேண்ட்பேக்கிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து மொபைல் கவருக்குள் திணித்தவாறு நாற்காலியிருந்து எழுந்திரித்த விஜி, பிறகு ஏதோ யோசனையாய் டேபிள் மீதிருந்த ஃபைல்களை பீரோவுக்குள் வைத்துப்பூட்டினாள்.

”வேணும்னே எடுத்து வச்சுகிட்டுத் தேடவிடுவான், எதுக்கு வம்பு?”

அதுவும் சரிதான் என்பதாய் கணினித்திரைக்குப் பாஸ்வேர்ட் போட்டுவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்கள். வராண்டா நெடுக தலைக்கு மேல் கேமராவானது கணேசமூர்த்தியின் கண்களுடன் அருவருப்பாய் சிணுங்கிக்கொண்டிருந்தது.

இத்தனை நாட்கள் ஆராய்ச்சி செய்ததன் பலனாக, கேமராவின் பார்வையில் விழமுடியாத ‘ப்ளைண்ட் ஸ்பாட்’ பாதையை கண்டுபிடித்திருந்தது காயத்திரியின் அலுவலகச் சாதனைகளில் முக்கியமானது. பொலீரோ நிறுத்திவைத்திருந்த சதுக்கத்திற்குப் பின்னாலான பாதை வழியாய் கேண்டீன் செல்வது, கழுகுப் பார்வையிலிருந்து தப்பித்த திருப்தியை ஒத்திருந்தது. அடுத்து, கேண்டீன் கேமராவிலிருந்து தப்பித்தாக வேண்டும்.

”நல்லவேள இதுல மைக் எதுவுமில்ல, எவ்ளோ திட்டினாலும் கேக்காது” – ஏதோ ஆகப்பெரிய நகைச்சுவையை சொல்லிவிட்டாற்போல விஜி தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். நெற்றிச் சுருக்கம், மேல் இமைகளுக்கு வேலிபோட்டிருக்க, காயத்திரி இன்னும் அறையில் நடந்ததையே நினைத்து இறுகியிருந்தாள். 

”அட விடுக்கா, டெய்லி நடக்குறதுதானே!”

இரண்டாய் கத்தரிக்கப்பட்டிருந்த முட்டை பப்ஸின் ஒரு பாதியை வாய்க்குள் திணித்துக்கொடிருந்த விஜி, காயத்திரியை விட ஏழு வருடங்கள் இளையவள், இளம் மனைவி, ஐந்து மாதக் கருவை சுமந்துகொண்டிருப்பவள். விஜியின் கணவன் ஏதோ மில்லில் சூப்பர்வைசராகப் பணியாற்றுவதாகச் சொல்லியிருக்கிறாள். அலுவலகப் பேருந்தினை தவறவிடும் பட்சத்தில் அவளை தன் டூவீலரில் இறக்கிவிட வரும்போது இரண்டொரு முறை பார்த்து சம்பிரதாயப் புன்னகையை உதிர்த்துச் சென்றவன், பிறகு எப்போதாவது விஜியுடன் தொலைபேசும்போது நலம் விசாரித்திருப்பதுண்டு.

மொத்த அலுவலகத்திலும் காயத்திரியுடன் விஜி மட்டுமே ஒட்டியிருந்தாள், மேடம் என்றதிலிருந்து ‘யெக்கா’ என்கிற அளவிற்கு அவள் நெருக்கமாகியது, ஊர்விட்டு ஊர்வந்து ஹாஸ்டல் எடுத்துத் தங்கி அலுவலகம் வந்துகொண்டிருக்கும் காயத்திரிக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

”கிளம்புவோமா? இந்நேரத்துக்கு தவளைக்கு மூக்கு வேர்த்திருக்கும்”

கணேசமூர்த்திக்கு ‘தவளை’ என்கிற பெயர்சூட்டு விழாவினை விஜியும் காயத்திரியும் சேர்ந்துதான் முன்னெப்போதோ நிகழ்த்தியிருந்தார்கள்.

”மொத்த மூஞ்சியும் மெழுகுவர்த்தியாட்டம் உருகி வாய்ல வந்து நிக்குறாப்ல நெனச்சுப் பாரேன், அவன் மூஞ்சியும் மொகரக்கட்டையும்”

பிடிக்காதவர்களை அப்படித்தான் கற்பனை செய்துகொள்ள முடிந்தது, காண்டாமிருகம் போல, கழுதை போல, தவளை போல.

ப்ளைண்ட் ஸ்பாட் வழியாக நடந்து கேபின் வந்து சேரவும் இன்டர்காமில் கணேசமூர்த்தி அவளை அழைக்கவும் சரியாக இருந்தது. ரிசீவரை எடுத்து காதில் வைத்தாள்.

”சொல்லுங்க சார்”

”கொஞ்சம் தமிழ் டைப் செய்யணும், கேபினுக்கு வா”

***

“யெக்கா.. போன் அடிக்குது பாரு”

விஜியின் குரலுக்கு கவனம் திரும்பியவளாய் மொபைலை எடுத்துப்பார்த்தபோது, பிரபாவதியின் புகைப்படத்தைக் காட்டிக்கொண்டிருந்தது திரை.

”நூறாயுசு உனக்கு”

”ஆணியே புடுங்க வேணாம், என்ன பண்ணிகிட்டு இருக்க?”

அத்தனை இறுக்கத்தையும் தளரச்செய்யும் குரல் பிரபாவதிக்கு. நேர்முகத் தேர்வின்போது பரஸ்பரம் அறிமுகமானதோடு, சொந்த ஊர்க்காரர்கள் என்கிற தகவலில் கூடுதலாய் நெருங்கிப்போயிருந்தவர்களை. அடுத்தடுத்து வேலைக்கான ட்ரெய்னிங், மீட்டிங் இத்தியாதிகள் தோழிகளாக்கிவிட்டிருந்தது.

“வழக்கமான வேலைங்கதான், வழக்கமான தலைவலிதான்”

”என்ன சொல்றான் உங்க அதிகாரிப்பய?”

அலுவலகம் தொடர்பாக எதுவானாலும் காயத்திரி முதலில் பிரபாவதியிடம்தான் பகிர்ந்துகொள்வாள். கணேசமூர்த்தியின் சீண்டல்கள் பற்றி பிரபாவதிக்கும், பிரபாவதியின் அலுவலகப் பிரச்சனைகள் பற்றி காயத்திரிக்கும் அத்துப்படி. அலுவலகத்தில் மேனேஜ்மெண்டை பிரபாவதி எதிர்த்துப் பேசியது, கமிட்டியிடம் அவள் புகார் அளித்தது, அதிகாரத்திலிருந்தவர்கள் அவளை வேறு ஊருக்கு மாற்றியது  என எல்லாமே வரிசை மாறாமல் காயத்திரிக்குத் தெரியும். இத்தனை நடந்தும் பிரபாவதியின் குரலில் அந்த மிடுக்குத்தனம் சற்றும் குறையாமலிருந்ததுதான் காயத்திரியின் ஆச்சர்யம்.

”அடுத்தவாரம் மீட் பண்ணுவோமா? ஒருமாதிரி டிஸ்டர்பாவே இருக்கு”

கிண்டலான சிரிப்பிற்குச் சொந்தக்காரப் பெண்கள், தங்கள் குரலில் ஆண் தன்மையின் கடினத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.

”நெக்ஸ்ட் வீக் முடியாது காயூ, ஆடிட்டிங் இன்னும் முடியல. முடிச்சுட்டு நானே சொல்றேன்”

”ம்ம்”

சோர்வை மறைக்க முயற்சித்தவளிடம் கிடுக்குப்பிடி கேள்வியொன்றை முன்வைத்தாள் பிரபாவதி.

”உங்க தவளை சமீபமா குவார்ட்டர்ஸ்ல  ஸ்டே பண்றாராமே”

தகவல்களுக்கு கை, கால் முளைப்பதற்கு முன்னமே சிறகுகள் முளைத்துவிடுகின்றன. ஒளியின் வேகத்தைவிட அபரிமிதமாகப் பயணித்து, இரைக்குக் காத்துக்கிடக்கும் மனிதர்களை அடைந்துவிடுகின்றது.

சமீபமாக என்றால், கடந்த மூன்று வாரங்களாக, வாரத்தில் இரண்டு நாட்கள் கணேசமூர்த்தி அலுவலக கெஸ்ட் ரூமில் தங்க ஆரம்பித்திருக்கிறான். ஏன், எதற்கு என்கிற கேள்விகளுக்கு, சௌகர்யமான பதில்களை அவரவர்கள் பொருத்திப் பார்த்துக்கொண்டனர். உள்ளூரில் வீடு வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் தவிர்க்க முடியாத மீட்டிங்குகள், அதிகாலைப் பயணங்கள் இருந்தால் மட்டுமே அலுவலகத்திற்குள் தங்குவது வழக்கம். கணேசமூர்த்தியிடம் வேறொரு முக்கிய காரணம் இருந்தது. 

அவன் தங்கும் நாட்களிலெல்லாம் வேண்டுமென்றே காயத்திரியை அலுவலகம் விட்டுக் கிளம்புவதிலிருந்து தாமதப்படுத்த ஆரம்பித்திருந்தான்.

”காலேல வந்ததும் கரெக்சன் முடிச்சிடுறேன் சார்”

”ல்லல்ல ஏழு மணிக்குள்ள மெயில் அனுப்பணும். முடிச்சுட்டு கிளம்பு, நானும் இன்னிக்கு ஃப்ரீ தான்”

நேரடியாக தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறவர்களை விட, மறைமுகமாக காய் நகர்த்துகிறவர்களிடம் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. ‘நான் அந்த அர்த்தத்துல சொல்லல” என்கிற ஆபத்பாந்த பதில்களை கையில் வைத்துக்கொண்டே இரட்டை அர்த்தத்தில் அழைப்பு விடுக்கிறவர்கள், எக்காரணம் கொண்டும் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடுவதில்லை.

தாமதப்படுத்திய அந்த இரண்டு முறையும் கந்தசாமியண்ணனை துணைக்கு இருக்கச்சொல்லியிருந்தாள் ஆறு மணிக்குத் தேவைப்படும் ரிப்போர்ட்களை 5:55க்கு கந்தசாமியிடம் கொடுத்துவிட்டு, அவசரகதியில் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்புவதை வாடிக்கையாக்கியிருந்தாள் காயத்திரி.

”சின்ன கரெக்சன் இருக்கு, கேபினுக்கு வா”

”சார், நான் வெளில வந்துட்டேன். காலேல பண்ணித்தர்றேன்”

பதிலுக்குக் காத்திராத துண்டிப்புகள் மிகச்சிறந்த தப்பித்தல்கள் என்பதை காயத்திரி அறிந்திருந்தாள்.

”என்ன பதிலையே காணோம், லைன்ல இருக்கியா இல்லியா?”

பிரபாவதியின் குரல் அதிகாரமாய் ஒலித்தது.

”அவன் எங்கயோ தங்கிட்டுப் போகட்டும். எனக்கென்ன!”

”இப்ப எதுக்கு கோவப்படுற? திரும்பவும் சொல்றேன், ஏதாவது தப்பா பேசினான்னா முகத்துல அடிச்சாப்ல சட்டுனு பதில் சொல்லிப் பழகு. சமாளிச்சுகிட்டே இருந்தா தலைல ஏறி உக்காந்துக்குவானுக”

இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள், எதுவுமே காயத்திரியின் தலைக்குள் ஏறாத அளவிற்கு சிந்தனைகளை நிரப்பியிருந்தாள். போனை கட் செய்தபிறகும் யோசித்தபடியிருந்தவளிடம், தான் கொண்டுவந்திருந்த மாதுளை டப்பாவை நீட்டினாள் விஜி.

”மாசமாயிருக்குறது நீயா நானா? மரியாதையா தின்னு உடம்பைத் தேத்து”

”சாப்பிட்டா டென்சன் குறையும், எடுத்துக்கக்கா”

சிரித்தபடி ஐந்து விரல்களையும் குவித்து கொஞ்சம் மாதுளைகளை எடுத்து காயத்திரி வாயில் போட்டுக்கொண்டாள்.

விஜியின் பக்கம் கணேசமூர்த்தியின் பார்வை திரும்பாததற்கு, நேரடியாகவும் வாட்சப் புகைப்படம் வழியாகவும், தனக்குப் பாதுகாப்பாக ஒரு ஆண் இருக்கிறான் என்பதை அடிக்கடி அவள் வெளிப்படுத்திக்கொண்டே இருந்ததும் ஒரு காரணம். 

”வாட்சப்ல உன் போட்டோ வைக்கமாட்டியா? உன் நம்பர் கிடைச்சதும் ரொம்ப ஆர்வமா போய் பார்த்தேன், வெறும் கடல் படம் தான் இருந்துச்சு”

முதன்முதலில் கணேசமூர்த்தி தன்னிடம் கேட்டது காயத்திரியின் நினைவுக்கு வந்தது.

சமூகத்தைப் பொருத்தவரை ‘திருமதி’ என்றால் கணவனையும், ‘செல்வி’ என்றால் தகப்பனையும் கண்ணில் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது நியதி. குறிப்பாக அலுவலகத்தில். 

தன்னை ப்ளேபாயாக சித்தரித்துக்கொள்ளும் மேலதிகாரிகளுக்கு, ஆண் துணையில்லாத பெண்கள் என்றால் கூடுதல் பிரியம். காயத்திரி மீது கணேசமூர்த்தியின் பார்வை விழுந்ததும் அப்படித்தான்.

பணியில் அமர்ந்த இந்த இரண்டு வருடங்களில் காயத்திரி ஒருநாளும் தன் வீட்டிலிருந்து யாரையும் கூட்டிக்கொண்டு வந்ததில்லை. ‘திருமணமாகிவிட்டது, கணவர் ட்ராவல்ஸில் வேலை செய்கிறார்” என்கிற இரண்டு தகவல்களோடு முடித்துக்கொள்கிறவள் மீது அலுவலகத்தில் நிறைய புதிரான கேள்விகள் படிந்தவண்ணமே இருந்தன.

”உங்க ஹஸ்பண்டை கண்லயே காட்ட மாட்டீங்குறீங்களே.. கொரோனா லாக்டவுன்ல கூட அவர் ட்ராப் பண்ணின மாதிரி தெரியல. ஒரு நாள் கூட்டிகிட்டு வாங்க மேடம்”

”போய் வேலையைப் பாருங்க ப்ளீஸ்”

தங்களுக்குத் திருப்தி தராத பதிலைக் கொடுப்பவர்கள் மீது மெதுமெதுவாய் வதந்திகளைக் கிளப்பிவிடுவது மனித வழக்கம். வேலை மாறுதலில் வந்த கணேசமூர்த்தி அந்த வதந்திகளை கெட்டியாகப் பற்றிக்கொண்டான்.

***

“ஆபீஸ்ல ஸ்டாஃப் எல்லாருக்கும் சேர்த்து ஒரு டூர் அரேஞ்ச் பண்ணலாம்னு யோசிக்கிறேன், எங்க போகலாம்னு சொல்லு”

ஆண்டறிக்கையின் பக்கத்தைத் திருப்பியபடி எதிரில் நின்றிருந்த காயத்திரியிடம், கையெழுத்துப்போட்டபடி கணேசமூர்த்தி கேட்டதும், முதலில் அவளுக்கு எதுவும் புரியவில்லை.

”என்னங் சார்?”

”உனக்குப் பிடிச்ச ஏதாவது இடம் சொல்லு, போய்ட்டு வருவோம்”

காயத்திரி எதுவும் பேசாமல் பற்களைக் கடித்தபடி பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தாள். 

”ஒருநாள் டின்னர் போகலாம் காயத்திரி, உன் ஹஸ்பண்டையும் கூட்டிகிட்டு வாயேன்”

”உங்க வொய்ஃப், குழந்தைகளெல்லாம் நல்லாயிருக்காங்களா சார்?”

ரொம்பவே பலவீனமான ஆயுதமொன்று அவனிடம் பிரயோகிக்கப்பட்டது கண்டு, கணேசமூர்த்தி நாராசமாய் சிரித்தான்.

“ஓ யெஸ்.. எல்லாரும் நல்லாயிருக்காங்க, நீ விசாரிச்சனு கண்டிப்பா சொல்லிடுறேன்”

கோப்புகளை எடுத்துக்கொண்டவள் கேபின் கதவை நோக்கி வெளியேற, கண்ணாடிக் கதவின் ஸ்டிக்கர் பிம்பத்தில், கணேசமூர்த்தி தன் பின்பக்கத்தை வெறித்துப்பார்ப்பதை உணர்ந்து, நடையின் வேகத்தைக் கூட்டினாள். பிறகு வழக்கம்போல, அவள் செல்கிற பாதையிலிருக்கும் கேமரா கோணங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

***

“யெக்கா.. இந்த மெயிலை வாசிச்சுப் பாரேன்”

கேபினில் நுழைந்ததுதான் தாமதம், இழுக்காத குறையாய் காயத்திரியை கணினியின் நாற்காலியில் அவசரமாய் உட்காரவைத்தாள் விஜி.

அதுவொரு ‘உயரதிகாரி அவர்களுக்கு’ என்று ஆரம்பித்திருந்த மொட்டைப் பெட்டிசனாகத்தான் இருக்கவேண்டும். இரண்டு பக்கங்களில் ஏதேதோ நிரப்பப்பட்டு, இறுதியாக ‘உங்கள் உண்மையுள்ள ஊழியர்கள்“ என்று பொத்தாம்பொதுவாக முடிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட தலைமை அலுவலகத்தில் ஆரம்பித்து கடைக்கோடி பணியாளரின் மின்னஞ்சல் வரைக்கும் அது அனுப்பப்பட்டிருந்திருப்பதை காயத்திரி கவனித்தாள்.

பெட்டிசனின் சாராம்சம் இதுதான்.

கணேசமூர்த்தியின் அலுவலகச் செயல்பாடுகள் பற்றி ஏதேதோ குறைகள் கூறப்பட்டிருந்தது. அதோடு, பணிசெய்யும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அலுவலக நேரம் கடந்து அவர்களை இருக்கச்சொல்லி வற்புறுத்துவதாகவும் எழுதப்பட்டிருந்தது. யாருடைய கையெழுத்துமின்றி, அனானிமஸ் மின்னஞ்சலிலிருந்து அனுப்பப்படும் மொட்டைப்பெட்டிசன்கள், பெரும்பாலும் நன்கு பரிட்சயமான யாரோவாலேயே அனுப்பப்படுகின்றன.

படித்துக்கொண்டிருக்கும்போதே இண்டர்காம் ஒலிக்க, கணேசமூர்த்தியின் அறைக்கு காயத்திரி அழைக்கப்பட்டிருந்தாள்.

”யார் செஞ்சிருப்பான்னு நினைக்கிற?”

”தெரில சார்”

”நீ சொல்லு.. நான் அப்படிப்பட்டவனா? ஏதோ ப்ரெண்ட்லியா பேசுறனே். அது யாருக்கோ பொறுக்கல”

வெறுப்பை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தவளிடம், ”திங்கட்கிழமை என்கொயரி வர்றாங்களாம், அன்அஃபீசியலா தகவல் வந்தது” என்றான்.

”ம்ம்”

”அநேகமா லேடீஸ் எல்லார்கிட்டயும் எழுதி வாங்குவாங்க, பிரச்சனை இருக்கா இல்லியானு”

கணேசமூர்த்தியின் குரலில் கிஞ்சித்தும் வருத்தமோ பயமோ தெரியவில்லை. அதிகாரிகளுக்கேயுரிய திமிர் அந்தக் கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது. வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு இருக்கைகுத் திரும்பியவளைக் காண்பதற்கெனவே, வேறு செக்சன் பெண்கள் காத்திருந்தனர்.

”இவன் செய்றதெல்லாம் எழுதிக்குடுக்கணும் காயூ, அப்பதான் செருப்பாலடிச்ச மாதிரி இருக்கும்”

”என்ன செஞ்சுடப்போறாளுகங்குற தைரியத்துலதானே இந்த நாயெல்லாம் வாலாட்டிகிட்டு இருக்கு. என்கொயரி மட்டும் வரட்டும், பக்கம் பக்கமா எழுதி இவனைக் காலி பண்ணனும்”

இரட்டையர்த்த குறுஞ்செய்திகள் தனக்கு அனுப்பப்படுவதாக ஒருத்தியும், தன் உடல் அசைவுகளை நேரடியாகவே கிண்டல் செய்கிறான் என இன்னொருத்தியும் அங்கலாயத்து தூபம் போட்டுக்கொண்டிருந்தார்கள். காயத்திரின் ‘ப்ரொபேசன்’ போலவே, இவர்களுக்கு குடும்பச்சூழல், வருமானம் என ஏதாவதொரு காரணம் இருந்தது.

விஜி, தலைவலியென அரைநாள் விடுப்பு எழுதிக்கொண்டிருந்த காயத்திரியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

***

“என்ன முடிவெடுத்திருக்க?”

ஞாயிறு மாலை, பிரபாவதியும் விஜியும் ஒன்றுபோல கேட்டிருந்தார்கள்.

”தெரில, பார்ப்போம்”

உடனடியாக பிரபாவதியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது, ”என்ன பார்ப்போம்? கிடைச்ச வாய்ப்பை நழுவவிட்றாத, நடந்தது என்னவோ அதை எழுதிக்கொடு, அப்பதான் அவனுக்கு புத்தி வரும்”

”எழுதணும்”

”ரொம்ப யோசிக்காத, இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் சரியான பாடம் கற்பிக்கணும். என்ன.. அதிகபட்சம் அவனை சஸ்பெண்ட் பண்ணிட்டு உன்னையும் ட்ரான்ஸ்பர் பண்ணுவாங்க, சிஸ்டம் அப்படி. அதுக்கெல்லாம் பயந்துடாத, எதுனாலும் பாத்துக்கலாம்”

”ம்ம்”

அலைபேசியை துண்டித்ததிலிருந்து, எழுதிக்கொடுக்கப்போகும் புகார் பற்றிய கற்பனைகள் ஓடியவண்ணம், பிரபாவதியின் வார்த்தைகளை திரும்பத்திரும்ப அசைபோட்டபடியே உறங்கிப்போனாள் காயத்திரி.

“அதுக்கெல்லாம் பயந்துடாத, எதுனாலும் பாத்துக்கலாம்”

***

“ஆபீஸ்ல உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனை இருக்கா?”

வரிசையாக எல்லா பெண்களிடமுமே ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன. ஜரிகை பளிச்சிட மெரூன் நிறப்புடவையில் உட்கார்ந்திருந்த பெண், மேலிடத்து விசாரணைக்குழுவிலிருந்து வந்திருப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

மூடியிருந்த கதவுகளுக்குப் பின் அலுவகத்திலிருந்து ஒவ்வொரு பெண்ணாய் தனித்தனியே விசாரிக்கப்பட்டு, வேறு வாசல் வழியாக வெளியே அனுப்பப்பட்டனர். அறைக்குள் என்ன கேட்கப்பட்டது என்பது குறித்து மற்றவருடன் உரையாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. 

காயத்திரி அழைக்கப்பட்டாள்.

”ஆபீஸ்ல உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனை இருக்கா?”

மிக நிதானமாக பதிலளித்தாள்.

”இல்ல மேடம்”

”உங்க மேனேஜர் உங்ககிட்ட எப்படி பழகுவார்? எப்பவாவது எல்லை மீறி பேசியிருக்காரா? தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எதுவும் தொந்தரவு குடுத்ததுண்டா?”

”அப்டியெல்லாம் இல்ல மேடம்”

”மற்ற பெண்கள்கிட்ட எப்டி பேசுவார்னு ஏதாவது தெரியுமா?”

”நான் கவனிச்சதில்ல மேடம்”

”சரி, எழுதிக்குடுத்துட்டுப் போங்க”

எழுந்தவள் டேபிளின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காகிதங்களில் ஒன்றையெடுத்து சரசரவென எழுதி கையெழுத்துப்போட்டுவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.

”என் பெயர் காய்த்திரி, நான் இந்த அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றுகிறேன். எனக்கு இந்த அலுவலகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், எனது மேனேஜர் திரு.கணேசமூர்த்தி குறித்து என்னிடம் எந்தப் புகாரும் இல்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி”

ஒருவழியாக எல்லா கடிதங்களையும் பெற்றுக்கொண்டு விசாரணைக்குழு கிளம்பிச்சென்றது. கணேசமூர்த்தி அப்பழுக்கற்றவர் என்கிற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல் வந்திருந்தது.

எல்லா கடிதங்களும் நகலெடுத்ததுபோன்று ஒரேமாதிரி இருந்தது பற்றி யாரும் யாரிடம் பேசிக்கொள்ளவில்லை.

”என்ன எழுதிக்குடுத்த?”

”நான் உண்மையைத்தான் எழுதிக்குடுத்தேன். ஆபீஸ்க்கு கெட்டபேர் வந்திடும்னு மறைச்சிட்டாங்களோ என்னவோ! போகட்டும், இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போகும்.. அந்த நாயை அப்ப பார்த்துப்போம்”

ப்ளைண்ட் ஸ்பாட் வழியாகப் பேசிக்கொண்டே நடந்த பெண்களை, புதிதாகப் பொறுத்தப்பட்ட கேமராவின் மூலம் கணேசமூர்த்தி பார்த்துக்கொண்டிருந்தான்.

*******

indhirarajamanickam@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. கணேசமூர்த்தி மாதிரி ஆளுங்க தனியார் அலுவலகத்தில் அதுவும் ஐ .டி நிறுவனங்களில் நேராகவே கேட்கின்றனர். கேட்டால் ஐ.டி நிறுவனங்களில் இதெல்லாம் சாதாரணம் உனக்கு சரின்னு ஓகே சொல்லு இல்லையா இது வேண்டாம்னு சொல்லிடு உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன்னு சொல்ற மேனேஜர் நேர்லயே பாத்துருக்கேன். நீ ஓகே சொன்னாதான் உன்ன ஆன்சைட் அனுப்புவேன்னு சொல்லி மிரட்டி சில நேரம் காரியத்தை சாதிச்சுக்கிறாங்க. அப்பறம் ஒரு நாள் யோசிச்சிட்டு இருக்கும் போது  இது இங்க மட்டும் தான் நடக்குதான்னு இல்ல பாக்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்குறது. கொத்தனார் வேலையில் ஆரம்பித்து உச்ச பட்ச பதவி வரைக்கும். ஆனாலும் எனக்கு இப்போவாரைக்கும் ஒன்னு தான் புரியவே இல்ல ஒரு பெண் இது வேண்டாம்னு கெஞ்சிய பிறகும் இவங்க தொடர்ச்சியாக அந்த பெண்ணை மிரட்டுவது என்ன மாதிரியான மனநிலை, இவிங்கல்லாம் காலைல என்ன சொல்லி சாமி கும்பிடுவாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button