
குறைவான இருளும், அதிகமான வெளிச்சமும் கலந்த இந்தப் பின்னிரவோடு மாரியாத்தா கோவிலின் வைகாசித் திருவிழா சிறப்பாக முடிந்தது. பால்குடம், தீச்சட்டி, பூக்குழி பக்தர்களின் எண்ணிக்கைப் போன வருடத்தை விட இந்த வருடம் அதிகம் தான். வீசியெறியப்பட்ட ரோசாப் பூ, சம்பங்கி மாலைகளால் மறைந்து நின்றது கோவிலின் கோபுரம். எடுத்து முடித்த தீச்சட்டிகளும், ஆயிரங்கண் பானைகளும் பனை மர மூலையில் கிடந்தன. மனிதவுயிரின் கண்கள், கால்கள், கைகள், பாதங்கள் மற்றும் ஆண்கள், பெண்கள் எல்லாம் கோபுரத்தின் பக்கத்தில் குவிந்து கிடந்தனர். கொத்துக் கொத்தாகக் கொன்று ஜே.சி.பி யின் கையால் வாரி ஏற்றியது போல் இருந்தது அக்குவியல்.
அனைத்தும் மண் பொம்மைகள்.
மாரியாத்தாளிடம் வேண்டியது பலித்ததற்கு மக்கள் நேர்த்திக்கடனாக பொம்மைகளைக் காணிக்கையாக்கி உள்ளனர். வருடா வருடம் அந்த இடத்தில்தான் குவிக்கப்படும். கடந்த வருடம் குவிக்கப்பட்ட பொம்மைகளின் மீதே இந்த வருடத்துப் பொம்மைகளும் கொட்டப்பட்டதால், கோபுரத்தின் உயரத்தைத் தொடும் அளவிற்கு குவியல் இருந்தது. சரியான மழை இல்லாததாலும், பொம்மைக் குவியலின் அடிப்பகுதிக்கு மட்டுமே மண் தரை விடப்பட்டு, மீதி சிமெண்ட் தரையாகப் பூசப்பட்டதாலும் பொம்மைகள் மட்கி கரைய காலம் எடுத்தது. உடலின் காயங்கள் ஆறவும், தீவிர நோய்கள் குணமாகவும், குழந்தைப் பாக்கியம் பெறவும் மருத்துவம் பார்த்தாலும், கூடவே பொம்மை வாங்கி வைக்கும் இறைவேண்டலும் நடக்கும். மக்களின் இந்த வேண்டல் கால நம்பிக்கையின் வழமை. மனிதயினம் உருவாக்கி வைத்திருக்கும் பல தீட்டுகளை உடைத்து வகை வகையான வர்ணங்களில் ஒன்றோடு ஒன்றாய் ஒட்டிக் கிடக்கின்றன அந்த மனித பொம்மைகள்.
மலர்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம், சாம்பிராணிகள், கருங்கல் எண்ணெய் விளக்குகள், சூடங்கள் என்று அனைத்தும் ஒருசேர கலந்து வாச நெடியடிக்கும் கோவிலுக்குள் அந்த விடியல் நேரத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. கம்பியில் கொசகொசவென்று கட்டியிருந்த மணிகளின் வெண்கல நாவுகள் ஓய்ந்து கிடந்தன. திருவிழா கொண்டாடிய கலைப்பில் முக்கால்வாசி பேர் வீட்டிற்குப் போயிருந்தனர். சிலர் கோவில் திடலிலேயே உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
பொம்மைக் கோபுரத்தின் கீழே நின்று ஒவ்வொரு பொம்மையினையும் பார்த்தபடி நிற்கிறார் பாலு.
*****
பொம்மைகள் அனைத்தையும் செய்தது பாலுவும் அவரது மனைவி பிச்சையம்மாவும் தான். பாலுவிற்கு எண்பது வயது நெருங்கப் போகிறது. பாலுவை விட பிச்சையம்மா இரண்டு வயது மூப்பு. அப்பா காலத்திலிருந்தே பாலுவின் குடும்பம் பொம்மைகள் செய்து வருகின்றனர். ஆறாவதோடு பையைத் தூக்கிப் போட்டுவிட்டு களிமண்ணை எடுத்தார் பாலு. பிச்சையம்மாவிற்கு பொம்மைகள் எல்லாம் செய்யத் தெரியாது. கல்யாணம் ஆனப் பிறகுதான் அவரிடம் இருந்து இது தொற்றிக்கொண்டது. எல்லா திருவிழாவுக்கும் இருவருந்தான் பொம்மைகள் செய்வார்கள்.
திருவிழாவுக்கு இரண்டு மாதங்கள் முன்பே வேலையைத் தொடங்கி விடுவார்கள். மலை நாகங்கள் போன்ற விழுதுகள் தொங்கும் ஆத்தங்கரை அரசமரத்தடிதான் வேலைப் பார்க்கும் இடம். டீயைக் குடித்துவிட்டு காலை ஆறு மணி வாக்கில் வேலையை ஆரம்பிப்பார்கள். முதல் நாளே தேவையான அளவு கரம்பை மண்ணை எடுத்து, சுவரில் பதித்த வட்டக் கண்ணாடிப் போன்று நடுவில் நீர் ஊற்றி ஊற வைப்பார்கள். அடுத்த நாள் அதோடு சவுடு மணலைச் சேர்த்து பக்குவமாக மிதித்து குழைப்பார்கள். மரப்பலகைகள், இருபுறமும் கூரான மூங்கில் பட்டைகள், பழைய டூத் பிரஷ்கள், பஞ்சர் பவுடர் மற்றும் உருவத்தைப் பதிக்கும் அச்சுகள் இவைதான் இருவரது வேலைக் கருவிகள். காகிதத்தில் வரைந்து, அதைப் பார்த்து கையாலேயேதான் ஆரம்பத்தில் பொம்மைகளை வார்த்து வந்தார் பாலு. வயது ஏற ஏற அதைக் குறைத்துக் கொண்டு அச்சில் இறங்கி விட்டார். பிச்சையம்மாவிற்கு தொடக்கம் முதலே அச்சு தான்.
எதிரெதிரே அமர்ந்து வேலைப் பார்க்கும் இருவரும் வேலை முடியும் வரை எதுவுமே பேச மாட்டார்கள். ஒருவித தியான நிலைதான். தேவையென்றால் சைகை. ஒரே இடத்தில் சாய்வற்று உட்கார்ந்திருப்பதால் முதுகுத்தண்டிலும், மணிக்கட்டுகளிலும், பொடணியிலும் அவ்வப்போது வலி முறிப்பார்கள். சாயந்தரம் ஆறு மணி வரை நடக்கும். வேலையின் நடுவே சாப்பாட்டுக்கும், ஒன்னுக்குக்கும் மட்டுமே எந்திரிப்பார்கள்.
அச்சுக்குள் பவுடரைத் தூவி மண்ணை எடுத்து அமுக்கி வைப்பார்கள். பவுடர் தூவலுக்கு கட்டையில் மண் ஒட்டாது. பிறகு, மூடிய அச்சைத் திறந்தால் உரு வடிவுத் தெரியும். அப்படியே வைத்தாலும் ஓரளவு நன்றாகவே உருவம் தெரியும். ஆனால், திருப்தி அடையாத இருவரும் ஈர்ப்பான கண்களின் கருமணிகள், புருவங்கள், இமைகள், சூம்பல் இல்லாத கை, கால் விரல்கள், வடிவான பாதங்கள், திடகாத்திரமான உடல் அமைப்புகள், சிரித்த முகங்கள் என்று பொம்மைகளை மேலும் நுணுக்கமாக செதுக்கி உயிர்ப்பாக்குவார்கள். பாலுவும், பிச்சையம்மாவும் படைக்கும் உறுப்புகளில் எந்த ஒச்சங்களும் இருப்பதில்லை. பொம்மைகளை வெயிலில் வைத்தால் வெடித்து விரிசல் விடும் என்பதால் நிழல் வரும் இடத்திற்கு மாற்றி மாற்றி வைக்க வேண்டும். வேலையில் மும்முரமாக இருந்தாலும் அவர்களுக்கு வெயில் இறங்கும் நேரம் தெரியும். சடாரென எழும்பி வெயில் படரப் போகும் கணத்திற்கு முன்பே பொம்மைகளைத் தூக்கி, விரித்த நைலான் சாக்கில் காய வைப்பார்கள்.
பொம்மைகள் சேரச் சேர சூளை மூட்டத் தொடங்குவார் பிச்சையம்மா. எல்லா பொம்மைகளையும் குவித்து அதன் மேல் விறகுகள், தேங்காய் மட்டைகள் வைக்கோலைப் போட்டு சகதியால் பூசி, புகை வெளியேற துளைகளிடுவார். சாமியைக் கும்பிட்டுவிட்டு நெருப்பை ஏற்றி பச்சைப் பொம்மைகளைச் சுடுவார்கள். பொம்மைகள் ஒரு நாள் முழுக்க எரிந்தும், வெந்தும் கிடக்கும். கங்குகள் தணிந்த மறுநாளில் அவற்றைக் கலைப்பார்கள். தீக்கிரையாகி முழுவுயிர் பெற்ற மகிழ்வில் பொம்மைகளெல்லாம் சாம்பலில் புதைந்து கிடக்கும். ஒவ்வொன்றையும் சூதானமாக வெளியே எடுப்பார்கள். சில பொம்மைகள் மட்டுமே சிறியளவில் சேதாரமாகி இருக்கும். மீதி இருப்பவை நல்ல பதத்தில் சுட்டிருக்கும். பொம்மைகளுக்கு சுண்ணாம்பு வெள்ளை அடித்தவுடன் ரோஸ், சிவப்பு, அடர் சிவப்பு, மஞ்சள், கனகாம்பரக் கலர், நீலம் என்று பிச்சையம்மா தனக்குப் பிடித்த நிறத்தைச் சொல்ல சொல்ல பாலு வண்ணம் தீட்டுவார். வண்ண வண்ணப் பொம்மைகளுக்கு நடுவே இருவரும் சுருக்கத் தோல் பொம்மைகளாக அசைந்திருப்பார்கள்.
மற்ற பொம்மைகளை விட மழலைப் பொம்மைகளை செய்யும் போது இருவருக்கும் கூடுதல் சந்தோசம் ஊற்றெடுக்கும். போன வருடம் வரை தொட்டில் மழலை செய்து வந்தனர். திடீரென அரச மரக் குச்சியால், தலையைத் தூக்கி தவழும் குழந்தையைக் குறுமணலில் கோடுகளாக வரைந்தார் பாலு. பிச்சையம்மாவின் முகம் அதை உடனே ரசித்தது. அச்சை ஓரமாக வைத்துவிட்டு, கையாலேயே குழந்தைகளை வடிக்க முயன்றார். நீண்டகாலம் கழித்து கையில் வார்ப்பதால் சற்று மெதுவாகவும், நடுக்கத்துடனும் தொடங்கினார். ஆர்வம் தாங்காது கவனித்தார் பிச்சையம்மா.
கன்னங்களில் குழி விழும் புன்னகையோடும், சுருள் முடியோடும், கொழு கொழுவென்று தவழும் மழலைகளை உடைத்து உடைத்து செய்து பின்பு, முழுதாக வார்த்தார். குழந்தைகளுக்குக் கழுத்து மணிகளைக் கட்டி, பஞ்சர் பவுடரை அலங்காரப் பவுடராக அடித்து சிங்காரிக்கத் தொடங்கினார் பிச்சையம்மா. ஆணா? பெண்ணா? என்பதையெல்லாம் மறந்து இருவரும் குழந்தைகளை சிருஷ்டிக்கத் தொடங்கினார்கள். மழலைகளை ஒவ்வொன்றாகத் தூக்கி பாலுவை நோக்கித் தவழ விட்டார் பிச்சையம்மா. பிச்சையம்மாவை நோக்கி தவழ விட்டார் பாலு. எழுந்து போய் கறுத்தக் குழந்தைகளைத் தூக்கி இருவரும் மாறி மாறிக் கொஞ்சி, நெற்றிப் பொட்டுகளில் சொடக்கிட்டு திருஷ்டிக் கழித்து காலி ஈறுகளால் சத்தமாக சிரித்தார்கள்.
பாலுவுக்கும், பிச்சையம்மாவுக்கும் குழந்தை இல்லை.
எல்லா வைத்தியமும், சோதிடமும் பார்த்தும் பயனில்லை. ‘நடந்தே போய் ஒவ்வொரு ஊரிலும் மண்ணெடுத்து மழலைப் பொம்மைகள் செய்து காணிக்கையாக்குகிறேன்’ என்ற வேண்டுதல்கள் எதுவும் பலித்தபாடில்லை. ஆரம்பத்தில் பெரிய துன்பமாக இருந்தாலும், விர்ரென ஓடும் காலத்தில் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதும், கவலைப்பட்டதும் குறைந்தது. குழந்தைப் பொம்மைகள் செய்யும் போது மட்டும் அவர்களை அறியாத ஒரு மகிழ்வான உலகுக்குள் சென்று வருவார்கள்.
ஒரு பொம்மைக்கு நூறு ரூபாய் கிடைக்கும். சுடாத செங்கற்களில் அவர்களே சுவர்கள் எழுப்பி, கோரைப் புற்களால் கூரை வேய்ந்து கட்டிய அந்தச் சின்ன வீட்டில் விற்காதப் பொம்மைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். தலைமுறை தலைமுறையாக யாருமே மரிக்காமல் ஒரே வீட்டில் எல்லோரும் சேர்ந்து வாழ்வது போல அந்த வீடு காட்சியளிக்கும். சித்திரை, வைகாசியில் தான் வேலையும், ஓரளவு வருமானமும் இருக்கும். மாசி, ஆடி, புரட்டாசியில் வெளியூர் பக்கம் குதிரைகள் செய்யப் போனால் ரெண்டாயிரம் வரைக் கிடைக்கும். முன்பு போல மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள உடலும் ஒத்துழைக்காததால், பிச்சையம்மாவைத் தனியாக விட்டு பாலு எங்குமே போவதில்லை. இருவரிடமும் போன் கிடையாது.
கடைசி நாள் திருவிழாவுக்கும் இருவரும் போகவில்லை. எப்போதும் ஈரமண் மணக்கும் வீட்டில் உட்கார்ந்து, திருவிழா பாடல்களைக் கேட்டுக்கொண்டே பேசியபடி இருந்தார்கள்.
‘நமக்கு வெவரமறிய எத்தனையோ வேண்டுதலுக, நேர்த்திக்கடனுக. அதுக எல்லாத்துக்கும் இந்த மண்ணுலேயே உருவத்தக் கொடுத்துட்டோம்ல பிச்ச. முன்னெல்லாம் கருப்பட்டி கணக்கா மண்ணு இருக்கும். இப்போலாம் நீர்ச்சத்தே இல்லாம உதுருதுல’
‘ஆமா… ஆமா மேமண்ணு கீழப் போயி, கீமண்ணு மேல வந்துருச்சு. பெரிய பெரிய வண்டிகள விட்டு காடு கரைகள கொடையிராய்ங்கள’
‘ம். அதச் சொல்லு’
.
.
.
.
.
.
‘ஏன் பிச்ச…’
‘ம்’
.
.
‘ஒன்னுமில்ல…வுடு’
‘சும்மாச் சொல்லு, என்ன?’
‘இல்ல, இந்த வருசத்து திருவிழாக்கு செஞ்சப் பொம்மைகதான்
எனக்கு கட்டக் கடைசியாக இருந்துடுமோ…?
இப்போலாம் அடிக்கடி அப்படித்தான் தோணுது’
கறுவெள்ளை மங்கி, மர ப்ரேம் போட்டு சுவரில் தொங்கும் வாடிப்பட்டி தியாகு ஸ்டூடியோவில் எடுத்த தங்களது கல்யாணப் போட்டோவையே இமைக்காது பார்த்தார் பாலு..
.
.
.
.
பிச்சையம்மா அவரையே பார்த்தார்.
அவரை இயல்புக்குக் கொண்டுவர சற்றுக் கோபமாக குரலை உயர்த்தினார்.
‘சுடுகாட்டுக்குப் போற பாதையெல்லாம் சரியா இருக்குமான்னு, இப்ப எதுக்கு கவலையில நொந்துட்டு கெடக்க நீயி? டக்குன்னு டீயைக் குடிச்சுட்டுப் போய் தூங்கு’ எனச் சொல்லிவிட்டு துணி பொட்டணத்தைத் தலைக்கு வைத்து தூங்க முயன்றார் பிச்சையம்மா.
தூக்குவாளி டீயைக் குடிக்காமல் தலைமாட்டில் உட்கார்ந்து ரொம்ப நேரமாக பிச்சையம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
‘திடீரென தனக்கு ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வா பிச்ச?’ என்ற பயம் விழித்திருக்கையில் வரும் கெட்ட சொப்பனம் போல பாலுவிற்கு வந்தது. ‘தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அந்தாளு என்ன செய்யும்?’ என்ற அதே பயம் வெறுமனே கண்களை மூடிக் கொண்டிருக்கும் பிச்சையம்மாவின் நினைவுக்குள்ளும் படபடத்தது.
மெதுவாக எழுந்து கோவிலைக் நோக்கி நடந்தார்.
ஏறிட்டுப் பார்த்த பிச்சையம்மா அவரைக் கூப்பிடவில்லை.
இதுநாள் வரையிலான காலத்தில், மக்கள் காணிக்கையாக செலுத்திய பொம்மைகளைப் போய் இருவரும் பார்த்ததே கிடையாது. உருக்குலைந்து மீண்டும் மண்ணோடு மண்ணாகும் வரை போய் பார்க்க மாட்டார்கள்.
*****
முதன்முதலாகப் போய் பார்க்கிறார் பாலு.
இருவரும் ஒட்டுமொத்த சீவனைச் சேர்த்து செய்த அந்தப் பொம்மைக் கோபுரத்தை உயரப் பார்த்தார். அடியில் சிதைந்து கிடக்கும் பழையப் பொம்மைகளுக்கு மேல கதம்பங்களோடு புது பொம்மைகள் கிடந்தன. அந்த பொம்மைக் குவியலில் எந்தெந்தப் பொம்மைகள் பிச்சையம்மா செய்தது என்று எளிதாகக் கணித்தார். பிச்சையம்மா செய்த ஆண் உருவங்கள், பாலு செய்த பெண் உருவங்கள் ஒன்றோடு ஒன்றாய் ஆரத்தழுவி கிடந்தன.
அந்த ஆண், பெண் பொம்மைகள் யாவும் பாலுவாகவும், பிச்சையம்மாவுமாகவே அவருக்குத் தெரிந்தன. கூடவே மழலைக் கூட்டமும். இருவரும் ஆரத்தழுவிய அந்தச் சித்திரம் மிக நெருக்கமாக மீண்டும் மீண்டும் அவரது கண் முன்னே வந்தது.
‘தள்ளாடிட்டோம். ரெண்டுப் பேருல யாரு எப்போ முந்துவான்னு தெரியல. அவ முன்னாடி போயிட்டானா நான் ஒரு நிமிசங்கூட இருக்க மாட்டேன். நான் மண்டையப் போடுறதுக்குத் தைரியமாத்தான் இருக்கேன். நான் போயிட்டா அவளுக்கு சுடுதண்ணி வச்சுக் குடுக்க கூட ஆளுப் பேரு இல்லையே. வாழ்நாள்ல எத்தனப் பிள்ளைப் பொம்மைகள வனஞ்சிருப்போம். ஒரு பொம்மைக்காவது இப்போ உசுரு வரக்கூடாதா’ என்று உள்ளுக்குள்ளேயே மண்டியிட்டுக் கதறுகிறார்.