சிறுகதைகள்

ஹெ.எஸ் என்ற ஹரிஹர சுப்பிரமணியன்  

ரமேஷ் கண்ணன்

குமார் அந்தப் பள்ளியிலே பணிபுரிகிறவர்களில் வயதில் எல்லோருக்கும் இளையவன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் சீனியர்கள் கொஞ்சம் விறைப்பாய், பின்பு நக்கலடித்து, இப்போது அவர்கள் எல்லோருக்கும் செல்லமாய் மாறியிருந்தான். ஹெச் எஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும்  ஹரிஹர சுப்பிரமணியன் இந்தாண்டு அந்தப்  பள்ளிக்கு மாறுதல் பெற்று பணியில் சேர்ந்தார். ஒல்லியான நபர் வங்கியில்  பணி புரிகிறவர் போன்ற தோற்றம் அவரிடம் இருந்தது. இதற்கு அவர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்குமார் தன்னுடைய வாழ்க்கையில் ஒன்றிரண்டு முறை வங்கி சென்றுள்ள போது பார்த்த நினைவுகளே அவனை அப்படியாக எண்ணச் செய்தது. ஒருமுறை பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் டிடி எடுக்கச் சென்றது மற்றும் வேலைக்குச் சேர்ந்த புதிதில் வங்கி கணக்கு ஒன்றை துவக்கி வைத்துக் கொள் என சீனியர் ஆசிரியரொருவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் சென்று வந்ததும் தான். இப்படியாகத் தான் வங்கியென்பது அவனுக்கு பரிச்சயமானது. வங்கிக் கணக்கு ஆரம்பித்தவுடனேயே காசாளரோடு கொஞ்சம் பழக்கமானது. காசாளர் குமரேசன் பஸ் மேட் வேறாகிப் போனார். அன்றாடம் செய்திகளை அதன் பின்னணி அரசியலோடு பஸ் பயணத்தில் பேசி வருகையில் அருகருகே அமர்ந்து வருபவர்களும் சேர்ந்து கொள்வர். பேருந்து கிளம்பிய பத்து நிமிடங்களில் பேச்சு அனல் பறக்கும். நேரம் போவதே தெரியாது. ஊர் வந்தவுடன் ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டு விடைபெறுகையில் குமாருக்கு மனதிற்குள் தான் எனும் எண்ணம் பெரிதாகி நிலைகொள்ளும்.

ஹெச்.எஸ் ஸைப் பார்க்கையில் குமார் அவரை வங்கி கிளார்க்காக நினைத்துக் கொண்டதை விட இன்னொரு ஆச்சரியம் அவர் உடற்கல்வி ஆசிரியராக பணியேற்றது தான். அந்த துறைக்கென பிரத்யேகமாகவுள்ள ஆகிருதிகளை அவர் அடைந்தாரில்லை. முதல் நாள் பணியின் போது கழுத்தில் புத்தம் புதிய விசிலொன்றைத் தொங்க விட்டபடி கையில் சிறிய மரக்குச்சியை பிடித்தபடி மாணவர்களை ஒழுங்குபடுத்தியது மாணவர்களுக்கும் கூட வேடிக்கைப் பொருளானது. ஸ்டாஃப் ரூமிலிருந்தபடியே இதனைப் பார்த்தவர்கள் தங்களுக்குள்ளும், சிலர் பெரிதாகவும் சிரித்துக் கொண்டனர். குமாருக்கு என்னவோ போலிருந்தது அதனைப் பார்க்காதபடிக்கு வேறு திசையில் சென்று அசெம்பிளியில் நின்று கொண்டான்.

ஹெச்.எஸ் எல்லோருக்கும் இப்போது நொறுக்குத்தீனியாக மாறி விட்டார். ஆளாளுக்கு தங்கள் ஓய்வு நேரங்களில் ஹெச்.எஸ்ஸைப் பற்றிப் பேசுவது வாடிக்கையாகிப் போனது. குமாரால் இம்மியளவு கூட அவர்களோடு ஒட்ட முடியவில்லை. ஹெச்.எஸ் ஸும் சும்மா இல்லை. அவர் பசங்களோடு சேர்ந்து பேசிக்க தையடித்துக் கொண்டிருப்பது விவாதப் பொருளாகி, ஒன்றிரண்டு ஆசிரியர்கள் தலைமையாசிரியர் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஐந்து ஆண் ஆசிரியர்களை மட்டும் தலைமையாசிரியர் அழைத்திருந்தார். ஹெச்.எஸ் க்கு அழைப்பு  இல்லை. குமாருக்கு அழைப்பு இருந்தது. உண்மையில் அவர் அழைத்தது ஹெச்.எஸ் ஸை பற்றி பேசத்தான். தலைமையாசிரியர் பேச ஆரம்பித்தார்.

ஹெச்.எஸ் ஸுக்கு மனதளவில் பாதிப்பு இருக்கிறதெனவும் ஆனால் பயப்படும்படியாக ஏதுமில்லை. மாத்திரை மருந்துகளால் சரி செய்து விடக் கூடியது தான் எனவும்ஒருகாலத்தில் பேரெடுத்த கெடுபிடியான ஜி.கே என்று துறை வட்டாரத்தில் பிரபலமானவராக மதிக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு மே மாதம் வந்ததையும், அவருக்கு ஒருவகையில் ஹெச்.எஸ் உறவினர் என்றும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க என்றும் கூறியதாகச் சொன்னார். அவரின் மனைவி உடன் வந்திருந்ததையும் கவனப்படுத்தினார்அவர் ரயில்வேயில் உயர் பொறுப்பில் பணி செய்கிறார் என்று கூறும் போது பொறுக்கமாட்டாத மாணிக்கம்

 அதற்கு என்னையா செய்யுறது?

ஒரு சின்னப் பள்ளிக்கூடத்துக்கு மாறுதல் வாங்கியிருக்கலாம்ல.

பயக ஒருமாதிரி சிரிக்கிறாய்ங்க. நமக்கே பாக்க கஷ்டமாயிருக்கு  என்றார்.

 ராமையா

அவர் கூறியதும் உண்மை தான்.

வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாள் பெண் ஆசிரியர்கள் ஓய்வறைக்குச் சென்றிருக்கிறார். கொஞ்சம் பதட்டமாகி நல்லவேளை மீனாட்சி டீச்சர் சமாளிச்சு பேசி அனுப்பி வைச்சிருக்காங்க. இப்ப நாம என்ன செய்ய முடியும்.

குமார், ஐயா! கொஞ்ச நாள் மருத்துவ விடுப்பு எடுத்துக்கிட்டு நிலைமை சரியானவுடன் ஜாய்ன் பண்ணச் சொல்லுங்க என்றான்.

குமார் பேசியதை எல்லோருமே கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

உண்மையில் அது சரியான யோசனையாக தோணிய படியால் தலைமையாசிரியர் அன்றிரவு ஜி.கேவிடம் பேசுவதாகக் கூறினார்.

வாசலை மறித்து நின்ற ஹெச்.எஸ் என்ன மீட்டிங்கா என்னையை ஏன் கூப்பிடலை?  என்றார். பையனை அனுப்பி விட்டேனே வரலையா எனச் சுதாரித்தபடி சொன்னார் கணபதி.

இது சரியில்லை. வில் டாக் வித் தி ஹெச்.எம் அபௌட் திஸ் என்றார்

மாணிக்கம் அந்த ஃபிளோவில் மிரண்டு போனார். அவர் ஆங்கிலப்பாடம் எடுப்பவர் தான் ஆனால் தொடர்ந்து ஹெச்.எஸ் சரளமாகப் பேசிய விதம் அவரைப் பின்வாங்கச் செய்தது.

குமார் அவரது கரங்களைப் பற்றியபடி  உங்க பிளேஸ்ல ஒர்க் பண்ண டீச்சருக்கு பார்ட்டி கொடுக்கறத பற்றி பேசிக் கொண்டிருந்தோம் வேற ஒண்ணுமில்ல என்றான்.

ஓஹ்! தட் பிலோமினாள் புவர் லேடி ! என்றபடி ஹா ஹா வெனச் சிரித்தார் ஹெச்.எஸ்.

அடுத்த நாள் வங்கியிலிருந்து குமரேசன் சாரும் ஃபீல்டு ஆபிசர் சங்கரசுப்புவும் தலைமையாசிரியரைச் சந்திப்பதற்காக வந்திருந்தனர். குமார் அவர்களை தூரத்திலேயே பார்த்து விட்டான். சுற்றும் முற்றும் பார்த்தபடி அவர்களை நோக்கி ஹாய் சார் என்றபடி இரண்டு ஸ்டெப் நகன்று கொடுத்தான்.

குமரேசன் சார் , “நான் சொன்னேன்ல, குமார் தம்பி இவர் தான் என்றார். சங்கரசுப்பு ஒரு மெல்லிய கோடளவு சிரித்தார். கொஞ்சம் கறாரான மனுஷன் லோன் செக்ஷன் பாக்கிறவர். தலைமையாசிரியரிடம் குமார் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தான். வாங்கோ வாங்கோ என்றபடி சாரங்கனை அழைத்தார். உபசரிப்பதில் சாரங்கன் கெட்டி. தலைமையாசிரியருடைய அசைவுகளைக் கச்சிதமாய் புரிந்து கொள்வான்.

சார்! உங்க ஸ்கூல் ஸ்டாஃப்ஸுக்கு லோன் கொடுக்கலாம்னு இருக்கோம். நீங்கபே சர்டிபிகேட்கொடுத்தால் போதும்ஒருவருக்கொருவர் ஜாயிண்ட் ஷ்யூரிட்டி போட்டுக்குறதும் கூட வங்கி நடைமுறை. அதைப்பற்றி உங்களிடமும் ஸ்டாப்ஸிடமும் பேசி விளக்கம் சொல்லலாம்னு வந்திருக்கோம். இதற்கு முன்பு உங்க ஸ்டாஃப்ஸ் நிறைய பேர் அப்ரோச் பண்ணாங்க அப்ப கெடுபிடி இப்ப ரூல்ஸ்லாம் ரொம்ப பிளக்ஸிபிளாயிடுச்சி என்றார் குமரேசன்.

ஆமாம் , உற்பத்தியான பொருள்லாம் முடங்கி கிடக்குதுன்னு நா கூட ஹிண்டுல ஆர்ட்டிகல் படிச்சேன்” னு சொன்னார் ராமையா. இப்படி லோன் கொடுத்தாத் தான வியாபாரம் நடக்கும் என.

எல்லோரும் சிரித்தார்கள். சங்கரசுப்பு இம்மியளவு கூடச் சிரிக்கவில்லை.

சங்கரசுப்பு மீட்டிங் முடிந்து கிளம்புகையில் தனியாக தலைமையாசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தார். ஹெச்.எஸ் அவருக்கும் உறவு முறையாம். கொஞ்சம் பாத்துக்கங்க எனச் சொல்லிச் சென்றாராம்.

ஹெச்.எஸ் மருத்துவ விடுப்பு போட்டு மூணு வாரம் ஆயாச்சு. இன்றைக்கு சம்பள நாள். கிளார்க் ராஜநாயகி அம்மா வீட்டிலிருந்து பணத்தை எடுத்து தருவதைப் போல முகத்தை உம்மென்று வைத்துக் கொள்வார். அவரும் உதவியாளர் ஜேம்ஸும் டிரெஸரியிலிருந்து வரும் போது நடை பழகுவதைப் போலவே வருவார்கள்.

இதற்குள் ரெண்டு காப்பி முடிஞ்சிருக்கும். தலைமையாசிரியர் குமாரை அழைத்தார். குமார் ஒர் உதவி பண்ணுங்கோ! ஹெச்.எஸ் சம்பளத்தைக் கொஞ்சம் அவுங்க வீட்டில் கொடுத்துடுங்க  குமார் , சாரி உங்களைச் சிரமப்படுத்துறேன் என்றார்.

குமார் , சார்! என்ன சார் ?! பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க! நான் போய் கொடுக்கிறேன். அட்ரஸ் மட்டும் சொல்லுங்க என்றான். அவர் சொல்லச்சொல்ல குறித்துக் கொண்டான்.

எதுக்கும் போன் நெம்பர் வச்சிக்கோங்க அட்ரஸ் கண்டுபிடிக்கச் சிரமமா இருந்தா கால் பண்ணிக் கேட்டுக்கோங்கோ என்றார்.

மதுரையில ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமலா நானிருக்கேன் எனக் குமார் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

பொதுவா சம்பளப்பணத்தை டிபன்பாக்ஸுக்குள்ள வைச்சுகிட்டுக் கொண்டு போறது பாதுகாப்பானதுன்னு நம்பிக்கை இருந்த காலம். நல்லகாலம், குமார் வச்சிருந்தது அடுக்கு டிபன். ஒன்றை தனக்கும் மற்றொன்றை ஹெச்.எஸ்ஸுக்கும் என்றபடி வைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பத் தயாரானான்.

இருவரின் கணக்குகளையும் தாளில் எழுதி வைத்தான். குமார் ஸ்டாம்ப் ரெசிப்டு வாங்க மறந்திடாதீங்க என்றார் ஹெச்.எம். இப்போது அவர் பேசிய தொனி கொஞ்ச நேரத்திற்கு முன்பு பேசியது போலில்லை. எப்படி இப்படித் திடீரென எல்லாமே மாறிப் போகிறதெனத் தனக்குள் வியந்து கொண்டான்.

மாப்பாளையம் ,எல்லாப் பஸ்ஸும் இந்த நிறுத்தத்தைக் கடந்து தான் பெரியார் நிலையம் போகனும் .இதில் போகும் போதும் வரும் போதும் நிப்பாட்டனும்னா டிரைவருக்குக் கசக்கும். பத்தாததிற்கு வரும் பயணிகளும் கத்துவார்கள்ஏப்பா பஸ்ஸே இல்லையா உங்களுக்கென’. குமாருக்கு இது அறிந்த விஷயம் கண்டெக்டர் ஒரு முழி முழித்தபடி சீட்டைக் கிழித்துக் கொடுத்தார். மடியில் கனம் இல்லாதது மாதிரியும் மனதில் பயமில்லாதது போலவும் காட்டிக் கொண்டு இறங்கினான். உண்மையில் பஸ் நின்ற மாதிரி கூட இல்லை. வயசு அப்படி .சாலையைக் கடந்து ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டி நடந்தான். தர்ஹாவை ஒட்டிய பெட்டிக்கடையில் விசாரித்தான். ஸ்டிரைட்டா போயி லெப்ட்டில் முதல் கட் அப்புறம்  மூணாவது ரைட் கட் தம்பி என்றார் கடைக்காரர். கிட்டத்தட்ட எஸ்.எஸ்.காலனியும் எல்லீஸ் நகரும் தொட்டுக் கொள்கிற இடம். கிருதுமால் நதி போகுமிடமாக யாரோ சொன்ன ஞாபகம் . எல்லாக் குப்பைகளையும் வாங்கிக் கொண்டு துர்வாசனையோடு நிரம்பி வழிந்திருக்கிறது நதி.

காலிங் பெல்லை அடிக்கலாமா வேணாமா என்கையில் உள்ளேயிருந்து ஒருவர் திரும்பி பார்க்க ஹெச்.எஸ் சார் வீடுங்களா? என்றான். அந்த பெண்மணி வாங்க சார் இப்ப தான் ஹெச் எம் சார் பேசினாங்க உங்களுக்கு வேற வீண் சிரமம் என்றார். அவன் காலணிகளைக் கழற்றி ஓரமாக வைத்தான். வீட்டிலிருந்து நறுமணம் நாசியில் தொற்றிக் கொண்டது. ஒவ்வொரு வீட்டிற்குமொரு வாசனை. இப்படி. தான் ப்ளஸ் டூ படிக்கையில் கெமிஸ்ட்ரி டியூஷன் படிக்க எஸ்.எஸ்.காலனியிலுள்ள பேராசிரியர் வீட்டிற்குள் நுழைகையில் வந்த அதே நறுமணம் என நினைத்துக் கொண்டான்.

மேலும் ,வயலின் ஓசை வேறுஇரண்டு நாள்களுக்கு மேல் தாக்குப்பிடிக்காமல் நின்று கொண்டான் குமார். நல்லவேளை யூனிபார்ம்னு ஒன்றைக் கண்டுபிடித்தார்கள் என்றபடி பள்ளியே போதுமென வீட்டிலும் சொல்லி விட்டான்.

அதே மணம்.. ஆனால் நோய்நெடியொன்றும் சேர்ந்து நாசியில் அடித்தபடி இருந்தது. சார் எங்கே என்றதற்கு நல்லாத் தூங்குறாங்க எழுப்பவா ? என்றார்.

வேண்டாம் மேம் என்றபடியே சம்பளப்பணத்தைக் கையிலெடுத்துக் கொடுத்தான். அவர்கள் உக்காருங்க !

தோ! காப்பி கலந்துண்டு வாரேன் என்றார்.

பணத்தை எண்ணிப் பாருங்கள் மேம்

சரி பார்த்துச் சொல்லுங்க என்றான்.

அதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் தோ வந்துடுறேன்! என்றார்.

ப்ளீஸ்! என்றவுடன்

 சரிபார்த்தவர் எல்லாம் சரியாக இருக்கிறது என்றபடியே உள்ளே சென்றார் லக்ஷ்மி அம்மாள்.

வாசலில் நேம் போர்டு இருந்தது. குமாருக்கும் இப்படியொரு ஆசை இருந்தது. அப்புறம் எப்ப அந்த ஆசை மறந்து போச்சுன்னு நினைவில்லை.

ஹெச்.எஸ் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்கையில் ஒரு முறை தூக்குச்சட்டியில் ஹோட்டலில் நிறைக்க வாங்கிய ரசத்தை நினைத்துக் கொண்டான்.

ஒருநாள் காப்பி , ஒருநாள் சத்துணவு எனக் கொண்டு வந்தபடியே இருந்தார். ஒருவேளை நல்லபடியாக இருந்தால் இந்த பணத்தை அப்படி வைத்து கொண்டு வந்திருப்பார் தானே என்று எண்ணிக் கொண்டான். காப்பி எதிர்பார்த்ததை விடவும் சுவை அதிகமே.

அப்புறம் சார் உங்க கிட்ட …….

இதோ ஸ்டாம்ப் ரெஸிப்டு தானே எடுத்துக் கொடுத்தார் லக்ஷ்மி அம்மாள்.. வாங்கி வைத்துக் கொண்டான்

கூடிய சீக்கிரம் சரியாயிடும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க

நீங்களும் வேண்டிக்கோங்க 

அவசியம் மேடம் நான் வர்றேன் மேம் என்று சொல்லிய படியே குமார் வந்த வழியாகத் திரும்பினான்.

தொடர்ந்து மூன்று நான்கு பேருந்துகள் நிற்காமல் சென்றன. பெரியார் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பெரியார் பேருந்து நிலையம் அவன் அறிந்தளவில் மூன்று முறை அமைப்பில் மிகப்பெரும் மாற்றங்களை அடைந்தன.

முதன்முதலில் அவன் ஆறாவது படிக்கையில் பாலமும் , நிலையமும் மேடும் பள்ளமுமாய் இருக்கும். தமிழக எண்ணெய் பலகாரக்கடையை ஒட்டித் திரும்பும் பேருந்துகள் மேம்பாலத்தில் முக்கி முனகி ஏறும். பக்கவாட்டில் படிகள் இருக்கும். அந்த வழியாகச் சென்றால் தினத்தந்தி பத்திரிக்கை அலுவலகம் பாலத்தையும் மீறி பெரிதாகத் தெரியும்.கிளம்பிய பேருந்து வளைந்து திரும்புகையில் பேருந்து நிலைய பக்கவாட்டுப் படிவழியாக ஓடி வந்து தொற்றிக் கொள்வார்கள். குமாரும் செய்து பார்த்திருக்கிறான். அங்கிருந்த மரத்திலிருந்து விழுந்த மஞ்சள் நிற இலைகளை மிதித்தபடி சரக் சரக்கெனும் ஓசை ஒருவித அழகு.

இப்போது ,அவை தான் மஞ்சள் நிற ஸேர் ஆட்டோக்களாக மாறி விட்டதாகவும் , சதா ஓசையெழுப்புவதாகவும், தார் ரோட்டில் போக்குவரத்து போலீசாரை உன்னிப்பாகப் பார்த்தபடியே உறுமுகின்றன என்றும் எண்ணிக் கொள்வான்.

இடப்பக்கம் தேவாலயத்திற்கும் பாலத்திற்குமிடையே உள்ள பாதையில் மலிவான கூலியில் முடி திருத்துபவர்களும் முடியைத் திருத்திக் கொள்பவர்களும் குத்த வைத்து அமர்ந்திருப்பார்கள் அதிகாலையில் .

ஹெச்.எஸ் ஒருநாள் கணபதி சாரிடம் இப்படிக் கேட்டு விட்டார்.

என்னா கணபதி உங்களை சனிக்கிழமை அங்க பார்த்தேன் எவ்வளவு வாங்குறான் முடி வெட்ட என.

ஸ்டாப் ரூமிலிருந்த எல்லோரும் சிரிக்க கணபதி ஹெச்.எஸ்ஸைக் கடிந்து பேச கணபதியை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விடடது.

தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளிக்கு வரவில்லை ஹெச்.எஸ். என்ன ஏன் என விபரம் கேட்டால் கடைசியில் ஹெச்.எஸ் பள்ளிக்கு நான்காவது நாளில் வந்தார் புதிய தோற்றத்தில்.

கணபதி கோபமாய் பேசிய அன்று மாலையே பெரியார் நிலையத்தின் பாலத்திற்கு அருகே சென்று மொட்டையடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றிருக்கிறார். லக்ஷமி அம்மாள் தலையிலடித்தபடி குளிக்க வைத்து உடைகளை மாற்றி அமர வைத்திருக்கிறார்.

லக்ஷமி அம்மாளிடம் ஹெச்.எஸ் சொல்லியிருக்கிறார்

லக்ஷமி , பாலத்தின் மேலே நின்று கீழே இந்த நகரத்தைப் பார்த்தேன்.

அது நிர்வாணமாய் இருந்ததடி . அதனை நான் அப்படி மேலே நின்று பார்த்திருக்கக் கூடாது. எனக்கு வேற வழி தெரியலை. தலைச்சுமையை இறக்கி வச்சிடலாம்னு போனேன்.

நீ ஒண்ணும் கவலைப்படாதே! பாக்கிறவா கோவிலுக்கான்னு தான் கேட்பாள் நான் ஆமான்னுட்டுப் போறேன். நீயும் அப்படியே சொல்லிடு என்றிருக்கிறார் ஹெச்.எஸ் லக்ஷமி அம்மாளிடம்

 அன்று வீடு திரும்பும்போது மட்டுமல்ல , அந்த இடத்தைக் கடந்து போகும் போதெல்லாம் ஹெச்.எஸ் பார்த்த கூரையில்லாத இந்த நகரத்தின் நிர்வாணத்தை எப்போதாவது நின்று பார்த்து  ரசித்து விட வேண்டும் எனும் எண்ணம் குமாருக்குத் தோன்றி விடும் .

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button