இணைய இதழ்இணைய இதழ் 66கட்டுரைகள்

வாசிப்பு அனுபவம்: இதங்களால் நிரம்பியவளின் முத்தச்சர்க்கரை – மீ. யூசுப் ஜாகிர்

கட்டுரை | வாசகசாலை

சிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. ஒரு கவிஞனின் படைப்பு ஒவ்வொரு கவிதைக்கும் மெருகேறிக்கொண்டே இருக்கும் என்பதற்கு ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு சாலச்சிறந்த சாட்சி. ஹைக்கூ கடலில் முத்தெடுத்த கவிஞர் புதுக்கவிதையில் தனித்த அடையாளம் பதித்திருக்கிறார். 

முன்னுரையில் கவிஞர் மானா பாஸ்கரன் அவர்கள் ஆசிரியரின் கவிதைகளில் தான் சிலாகித்து மகிழ்ந்த கவிதைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். முத்த இனிப்பில் ஒரு துளியாக ஆசிரியர் தான் சுவைத்த கவிதை இனிப்பை நமக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்.

முதல் கவிதையே மனம் நிறைக்கிறது…

பெருத்து விளைந்த
காய்களைச் சுமந்த
கிளையொன்று
எடை தாங்காமல்
வளைந்து தாழ்ந்திருக்கிறது
ஞாபகம் வருகிறது
வெட்கம் மிகுந்து
பாதம் நோக்கும்
நிறைமாதக்காரியின்
முகம்..!!!

’தர்ணாக்களின் சுவடு’ கவிதையில் எத்தனையோ போராட்டங்களுக்கு

பிறகுதான் விமோசனம் கிடைக்கிறது. ஆனால் அது அடுத்த தலைமுறைக்குதான் பயன்படும் என்பதை நாசூக்காக சொல்லியிருக்கிறார்.

கசப்பாய் இருக்கிறதென
ஒவ்வொரு மிடறுக்கும்
ஒவ்வொரு பிடி சர்க்கரையை
வாயிலிட்டு விஷமருந்திச் செத்தவள்
உங்களுக்கு யுவதியாகவா தெரிகிறாள்
நான் குழந்தை என்கிறேன்.

ஆம். சிறு கசப்பைச் சகிக்காத ஒருத்தி வாழ்வின் பெருந்துயரால் மரணத்தின் கசப்பை சர்க்கரையோடு எடுத்துக்கொள்ளும்போது அவள் குழந்தையாகித்தான் போகிறாள்.

பேருந்திலிருந்து இறங்கிப் போய்விட்டாள்
இரு மழைத்துளிகளை காதில்
அணிந்த யுவதி
சன்னலோரக் கம்பியில்
ஆடுகின்றன
ஒரு நூறு ஜிமிக்கிகள்.

ஒரு மழைப் பயணத்தை அழகியல் காட்சியாக்கி விடுகிறார் இக்கவிதையில்.

’தேடல்’ கவிதையில் மரத்திலான ஒரு யானை

பொம்மையின் வழி, மரத்தின் வேர்களின் தவிப்பைப் பதிவு செய்திருக்கிறார் இப்படியாக,

செதுக்கியவன் வைக்காமல் இருந்திருக்கலாம்
தத்ரூபமாய் பிரிந்து தொங்கும்
வால்நுனி மயிரிழைகளில்
மண்ணைத்தேடும் வேர்களின்
தவிப்பை.

’இரகசியக் குறிப்புகளின் கனவு’ கவிதை ஒரு இல்லத்தரசியின் மனக்குமுறல்கள் பற்றி குறிப்பு வரைகிறது.

நாள் முழுவதும் சொற்களைப் பேசி
சொற்களை எழுதி
சொற்களைக் கொஞ்சி,
சொற்களைக் கோபித்துக் கடப்பவளுக்கு
எல்லாச்சொற்களையும்
பிடிக்கும் தான்.

***

ஒரு நீர்க்குமிழியின்
மரணத்தில் ஜீவிக்கிறது
ஒரு மெல்லிய
காற்றின் வாழ்வு..!!!

***

என் நதியில் எத்தனை மீன்கள் பார் என்றான்
என் மீன்களில் எத்தனை நதி பார் என்றாள்
நீர் ததும்பும் கண்களோடு..!!!

***

அறைக்கு வெளியே காத்திருக்கும்
ஐந்து நிமிடங்களில்
சதிராட்டம் ஆடிவிடுகிறது காலம்..!!!

***

சூரியனுமில்லா நிலவுமில்லா
அந்திவானம் மலர்கிறது
பூவாய்..!!!

***

இவை சில கவிதைகளின் கடைசி வரிகள்தான். இவையே தனிக் கவிதைகளாக மிளிர்கிறது. நெஞ்சம் தொடுகிறது.

’யுத்தப் பின்னணியில்’ கவிதை காலம் காலமாக மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசியலுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி.Am so wasted’ கவிதையை வாசித்தால் நிச்சயம் அந்த நிமிடம் வீணாகாது. குழந்தைகளோடு கொண்டாடும் நேரங்கள் நமக்கும் வாய்க்கும்.

காற்றின் திசையில் பறந்து திரிந்து
கொண்டாடிட
யாரும் பார்க்கும் வரை
யாரும் இரசிக்கும் வரை
யாரும் ஆராதிக்கும் வரை
காத்திருக்காத
கிழிந்த காகிதத்தைப்போல
மிதக்கின்றன
எனது wasted தினங்கள்.

இப்படியாக ஆசிரியரின் அனுபவங்களும், வாசிப்பின் அவதானிப்பும் அவரை அவரே செதுக்கி கொண்ட சிற்பமாக ரசிக்க வைத்தது,இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை’.

ஆசிரியருக்கு வாழ்த்துகளும், பேரன்புகளும் எப்போதும் எழுத்துகள் வழியே தொடரட்டும்.

ஆசிரியர்:ந. சிவநேசன்
வெளியீடு: வாசகசாலை பதிப்பகம்
வகைமை: கவிதைகள்
பதிப்பு:முதற் பதிப்பு டிசம்பர் 2022
பக்கங்கள்:132 பக்கங்கள்
விலை: ரூ.160 
நூல் வாங்க: 9962814443 (பாலு)

****

yusufjakir1712@gmail.com

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button