நடைன் லபாக்கி. உங்களால், “இந்த பெயரைக் கடைசியாக எப்போது கேள்விப்பட்டோம்” என நினைவுப்படுத்தி பார்க்க முடிகிறதா? 8 வருடங்களுக்கு முன் Where Do We Go Now? என்ற படத்தினால் கேன்ஸ் திரைப்பட விழாவை கவனிக்க வைத்த பெண் இயக்குனர். இம்முறை, கேப்பர்னாம் படத்தின் வழியாக வறுமை, குழந்தைகள் மீதான பாலியல் வல்லுணர்வு, லெபனானில் உள்ள அகதிகளின் நிலை, அங்கே ஏழ்மையில் வாடும் மக்களின் உணவு, உடை, பழக்கவழக்கங்கள், அறியாமை என ஏகப்பட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். நடைன் லபாக்கியின் அடுத்த படம் எப்படியிருக்குமென்பது எனது எட்டு வருட எதிர்பார்ப்பு.
![Capernaum](https://vasagasalai.com/wp-content/uploads/2019/07/81rNHvK6B2L._RI_.jpg)
12 வயது சிறுவனான ஸெய்ன், ஒருவனைக் கத்தியால் குத்தி விட்டு சிறை செல்கிறான். எதற்காக ஒரு 12 வயது சிறுவன் இன்னொருவனை கத்தியால் குத்தினான்? அதுமட்டுமில்ல… அவனின் பெற்றோர் மீது ஒரு விசித்திரமான வழக்கை போடுகிறான். எதற்காக அப்படியொரு வழக்கைப் போடுகிறான்? வழக்குப் போடும் அளவுக்கு அப்படியென்ன குற்றத்தை அவனது பெற்றோர்கள் செய்தார்கள்? என்பதைத் தான் வழக்கை விசாரிப்பதன் மூலம் பார்வையாளனுக்கு காட்டுகிறார் லபாக்கி. விசாரணை… காட்சிகளாக பின்னோக்கி விரிகிறது. இதுவே கேப்பர்னாமின் திரைக்கதை. “12 வயதே ஆன உனக்கு… ஒருத்தனை கத்தியில் குத்தும் அளவிற்கு என்ன கோபம்?” என கேள்வி கேட்கப்பட்டபோது, “ஏற்கனவே ஐந்து சொச்ச குழந்தைகளை பெற்றிருக்கும் என் பெற்றோருக்கு, அவர்களை பார்த்துக் கொள்ளவே வக்கில்லை, மேலும் எங்கள் மீது அன்பு பாசத்தை காட்டி வளர்க்க வக்கில்லை, 11 வயது சிறுமியான தனது தங்கையை, வயதுக்கு வந்த ஓரிரு நாட்களிலேயே, நாலு கோழிகளுக்காக கல்யாணம் என்ற பேரில் வியாபாரம் செய்தது. எந்த குழந்தையையும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வக்கில்லாமல் இருப்பது. என் பெற்றோரின் உணவுக்காக அவர்கள் வேலைக்கு போகிறார்களோ இல்லை வீட்டில் படுத்து தூங்குகிறார்களோ? ஆனால் நாங்கள் தெருவில் இறங்கி, நாய் மாதிரி வெயிலில் அழைந்து திரிந்து, கூவி கூவி சர்பத் விற்றுப் பணம் சம்பாதித்து வீட்டுக்கு கொண்டு வரணும். இதெல்லாம் தாண்டி நாங்கள் பிறந்ததற்கு இந்த நாட்டில் ஒரு பிறப்பு சான்றிதழ் கூட வாங்காமல் எங்கள் இருப்பையே கேள்விக்குறியாக்கி வைத்துவிட்டு வாழும் அவர்களுக்கெல்லாம் என்ன மயிருக்கு குழந்தை? ஒரு குழந்தையை பெற்றே அதற்கு ஒரு நல்ல வாழ்வாதாரத்தை கொடுக்கத் தகுதியில்லாத போது இத்தனை குழந்தைகளை என்ன எழவுக்காக பெத்துப் போட்டார்கள்? அடிப்படை அறிவே இல்லாமல் எங்களை பெத்து கொடுமைப்படுத்தும் அவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நானல்ல!!” என்பது தான் தன்னைப் பெற்ற பெற்றோர் மீது வழக்குப் போடுவதற்கு ஸெய்ன் வைத்திருக்கும் காரணம். இந்த படத்தை எடுப்பதற்கு முன் ஆய்வுப் பணிக்காக, லெபனானில் வாழும் உண்மையான அகதிகள் ஒரு நூறு சிறுவர்களைப் பேட்டி எடுத்திருக்கிறார் லபாக்கி. அப்போது அவர்கள் சொன்ன ஆயிரக்கணக்கான தகவல்களில், ஒரே மாதிரியான சிந்தனையே அதிகபட்ச சிறுவர்களின் மனதில் உதித்திருக்கிறது. “எங்கள் பெற்றோர் எங்களைப் பெத்திருக்கக்கூடாது”. இதுதான் கேப்பர்னாமின் கதைக் கரு.
ஸெய்னின் கோபத்திற்கு ஆரம்பப்புள்ளியே இந்தக் கேள்வி தான். “எவ்வளவு தடுத்தும் கேட்காமல் நாலே 4 கோழிகளுக்காக தங்கையை எதற்காக விற்றீர்கள்? “நான் எவ்வளவு தடுத்திருப்பேன்?” என அன்பே காட்டத்தெரியாத பெற்றோரிடம் இருந்து கோபித்துச் செல்லும் சிறுவன் தான் ஸெய்ன். வேலை தேடுகிறான். அப்போது ஒரு எத்தியோப்பிய பெண்ணைப் பார்க்கிறான். அவள், லெபனான் நாட்டில் வாழ பெர்மிட் இல்லாமல், வாழும் அகதி. அவளின் ஒரு வயது குழந்தையின் இருப்புக்கு என்ன செய்கிறாள்? அந்த குழந்தைக்கு ஒரு அடையாளத்தை பெற எவ்வளவு கஷ்டப்படுகிறாள்? தன்னிடம் அடைக்கலம் கேட்கும் செய்னை எப்படி அன்போடு பார்த்துக் கொள்கிறாள்? பெற்றோரிடமிருந்து துளியளவும் அன்பை அனுபவிக்காத ஸெய்னின் மனதில் எப்படிப்பட்ட அன்பு நிறைந்திருக்கிறது? படத்தில் காட்டப்படும் ஒரு ஏழைப் பெற்றோரை விட பலமடங்கு கஷ்டப்படும் ஒரு அகதிக்கு, ஸெய்னிடம் காட்ட எவ்வளவு அன்பு நிறைந்திருக்கிறது என்பதெல்லாம் அருமையான திரைக்கதையின் மூலம் நீங்கள் கேப்பர்னாம் படத்தை பார்த்து அனுபவித்து உணர வேண்டியவை.
பல உலகப்படங்களிலும் சரி தேசிய படங்களிலும் சரி, சிறுவர்களின் நடிப்பைப் பார்த்து, “என்னடா இது? இன்னும் கொஞ்சம் யதார்த்த நடிப்பை வாங்கியிருக்கக் கூடாதா? இலக்கணத் தெளிவுடன் வாய் நீள வசனம் பேசிக் கொண்டிருக்கிறானே அந்த சிறுவன். எந்த உலகத்தில் இப்படியெல்லாம் அடுக்குமொழியில், வாழ்க்கை தத்துவம் பேசும் சிறுவனை நாம் காண முடியும்? இப்படியொரு சிறுவன் கிழக்கு இந்தியாவில் இருந்திருந்தால் அவனை டலாய்லாமாவைப் போலல்லவா ஆக்கியிருப்பார்கள்? தமிழ்நாட்டில் பட்டிமன்றங்களை அலங்கரித்துக் கொண்டிருக்க வேண்டிய சிறுவன் ஏன் இப்படி அன்னாடங்காச்சியா இருக்கப் போகிறான்?” என வாய் கிழிய பேசும் சிறுவனை பார்த்து நமக்கு கேள்வி கேட்கத் தோன்றும். இன்னும் ஒரு படி மேலேறி, மசாலா சினிமாக்களில் தடிமாடுகளை அடித்து வெளுக்கும் சிறுவர்களின் ஆக்ஷன் காட்சிகளையும் நீங்கள் பார்க்கலாம். சுத்தமாக ரியலிஸத்துக்கு சம்மந்தமே இல்லாத சிறுவர்களைத் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றன பெரும்பாலான சினிமாக்கள். காக்காமுட்டை, தாரே ஸமீன் பர் போன்ற சில படங்களைத் தவிர்த்து. ஆனால் கேப்பர்னாம் படத்தை பொருத்தவரை… ஸெய்ன் என்னும் 12 வயது சிறுவனின் நடிப்புதான் படமே! மார்க் ட்வைனின் ‘ஹக்கிள்பெரி ஃபின்”னை நினைவுப்படுத்தும் கதாபாத்திரம். கேப்பர்னாம் படத்தைப் பார்ப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஸெய்னின் நடிப்பிற்காகவே இந்த படத்தைப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கலாம். அப்படியொரு பெர்ஃபாமன்ஸ். தமிழில் மிஷ்கின் ‘நந்தலாலா’ படத்தைத் துவக்கி, ப்ரெஸ் ரிப்போட்டர்களுக்கு பேட்டி கொடுக்கும் சமயத்தில் ஒருவர் கேட்கிறார், “ஹிந்தில தாரே ஸமீன் பர்’ படத்துல நடிச்ச சிறுவனின் நடிப்பு மாதிரி இருக்குமா?”. அதற்கு மிஷ்கின் கொடுத்த பதில், “அதை விட நூறு மடங்கு சிறப்பா நடிப்பான் சார் இவன்!” என்றார். அந்த நொடியில் எனக்கு அது மிஷ்கினின் அதீத தன்னம்பிக்கை என்று நினைக்கத் தோன்றியது. படத்தை பார்த்ததற்கு அப்பறம், “சிறுவன் நன்றாகத் தான் நடித்திருப்பான், தலைவர் லோன்வுல்ஃப் தான் அதற்குத் தடையாக இருந்திருப்பார்” என நண்பர்களிடம் சொன்னேன். ஆனால், நான் இங்கே குறிப்பிட முனைவது என்னவென்றால், “தன்னுடைய படத்தில் நடிக்கத் தான் தேர்ந்தெடுத்த ஒரு சிறுவன், அவனுடைய ஒப்பீடு அளவை விட நூறு மடங்கு சிறப்பாக நடிக்க முடியும்” என்னும் தன்னம்பிக்கை தான். ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கு இதுபோன்ற நம்பிக்கைகள் தான் மகத்துவம் சேர்க்கின்றன. ஒரு இயக்குனருக்கு அப்படிப்பட்ட தன்னம்பிக்கை கட்டாயமாகத் தேவை. ஆனால் தன்னம்பிக்கை அளவுக்கு அதீதமாகி என்றைக்கும் ஒரு டாமினன்ஸ் மனோபாவத்தை இயக்குனர் ஊக்குவித்து விடக்கூடாது. அப்படியொரு, கலைஞனின் நடிப்பில் டாம்னினஸ் ஊடுறுவாத தன்னம்பிக்கையில் தான் நடைன் லபாக்கி, இந்த சிறுவனை வைத்து இயக்கியிருப்பார் என நம்புகிறேன். கதாபாத்திரத்தின் உடல்மொழியைத் தான் அந்த நடிகன் நடிப்பால் வெளிக்கொணர வேண்டுமே தவிர இயக்குனரின் உடல்மொழியை அல்ல. பேரழகி நடைன் லபாக்கியின் உடல்மொழியை எட்டு வருடங்களாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீவிரமாக கண்காணித்து வருவதால், ஸெய்னின் நடிப்பில் லபாக்கியின் உடல்மொழியின் ஆதிக்கம் அனுமதிக்கப்படவில்லை என்பதை என்னால் அடித்து சொல்லமுடியும். யாரை அடித்து சொல்லமுடியும்? மசாலா இயக்குனர்களின் நடிப்பு வாங்கும் முறையை அடித்து சொல்ல முடியும். “குறிப்பிட்ட அந்த இயக்குனரை நான் அப்படியே மிமிக்ரி செய்தேன்” என பல நடிகர்கள் பெருமையாக பேட்டி கொடுப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதைவிட ஒரு வெக்கக்கேடு நடிப்புத்துறைக்கு இருக்கா? ஒரு இயக்குனரையா ஒரு நடிகன் மிமிக்ரி செய்ய வேண்டும்? கதாபாத்திரம் எதற்காக படைக்கப்படுகிறது? கேரக்டரை உள்வாங்குதல் என்றால் என்ன? ‘நடிகன் செய்ய வேண்டிய ஆய்வுகள்’ என வரைவுகள் எதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன? அதெல்லாம் விட முக்கியமான கேள்வி… ஒரு நடிகனின் வேலை தான் என்ன? சிறுவன் ஸெய்னின் பாசாங்கு இல்லாத யதார்த்த நடிப்பு, கேப்பர்னாம் படத்தை ரசிக்க வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான கலைநுட்பம். ஸெய்னின் நடிப்பை நீங்கள் விடிய விடியப் புகழ்ந்து கொண்டு இருக்கலாம். அப்படியொரு கலப்படமில்லாத நடிப்பு. மெட்டிரியலிஸ்டிக் உலகில் மறைந்து போன மனிதர்களின் அன்பில் வெளிப்படும் உன்னதமான இயல்பான முகபாவனைகளை ஸெய்ன் நியாபகப்படுத்துவான்.
மேம்போக்காகப் பார்த்தால் அகதிகளைப் பற்றிய படம் போலக் காட்சியளித்தாலும், கடும் ஏழ்மையில் வாடும் அன்பிற்காக வாடுமொரு மனிதனுக்கு சர்வைவல் என்பது ஏன் மிக முக்கியமானது என்பதை பற்றி பேசும் படம். பொறுப்பில்லாத பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பின் மீது விழிப்புணர்வை வீசும் படம். நிலத்தைத் தொலைத்துவிட்டு வரும் அகதிகளுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் எந்தவித தாமதமும் காட்டக்கூடாது என்பதை உரக்கச் சொல்லும் படம். நான் லொக்கேஷன் தேடி சென்னை குப்பங்களில் அழையும் போது அவர்களின் வறுமை நம்மைப் பார்த்து பதிலில்லா ஆயிரம் கேள்விகளைக் கேட்கும். இத்தனைக்கும் நான் ஒரு மிடில் க்ளாஸ் ஆசாமி. என் மனசாட்சிக்கே அத்தனை கேள்விகள். அந்த கேள்விகளுக்கு மொழியும் கிடையாது என்னிடம் பதிலும் கிடையாது. இரக்கமற்ற சமுதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் வாழ்வை மேம்படுத்த என்னென்ன சட்டங்கள் செயல்படுத்த வேண்டும் போன்ற எண்ணங்களால் சூழப்பட்டிருக்கும் என் மனம்.
ரசனைக்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த படம் பார்த்து முடித்ததும் ஒவ்வொருவருக்கும், “இந்த உலகம் மேம்பட நம் பங்குக்கு நாம் உழைக்க வேண்டும்” என்ற எண்ணம் தலைதூக்கும். ஏன் அப்படியொரு எண்ணம் வரும் என்று நான் நினைக்கிறேன்? நடைன் லபாக்கி, யதார்த்ததிற்கு நெருக்கமாக காட்சிகளை பதிவு செய்தது மட்டுமில்லாமல், திரைக்கதையின் மூலம் வறுமையில் தவிக்கும் ஒரு சமுதாயத்தின் மீது ஏற்படக்கூடிய மனிதாபிமானத்தின் வலியை மனதிற்குள் ஊடுருவச் செய்திருப்பார். ஸெய்ன் கோபத்தில் தெரியும் வலி. எத்தியோப்பிய அகதியின் கண்களில் காணப்படும் வலி. இசையில் வெளிப்படும் வலி என லெபனான் நகரமான ‘பெய்ரூட்’ தெருக்களில் வழிந்தோடும் வலியை, பார்வையாளனுக்குக் கடத்தியிருக்கிறார் லபாக்கி. கடத்துவதற்கு ‘சினிமா வெரைட்’ என்னும் ஒளிப்பதிவு முறையைப் பயன்படுத்தியிருக்கிறார் க்ரிஸ்டஃபர். காட்சிகளுக்கு எந்தவித ப்ரத்யேக லைட்டிங்கும் கொடுக்காமல் இயற்கை ஒளியையே உபயோகித்துப் பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவின் தரம் மூன்றாவது காட்சியில் இருந்தே உங்களுக்குப் புரிந்துவிடும். டாக்குமென்ட்ரி பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தாலும், காட்சிகளை வலை போட்டிருக்கும் திரைக்கதையில் உணர்வை கொண்டு வந்தது தான் லபாக்கியின் திறமை. கேப்பர்னாம் படத்தின் இசையை நீங்கள் கேட்டாலே போதும் படம் எப்படியிருக்கும் என நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட முடியும் , படம் பேசிய உணர்வை இந்தப்படத்தின் இசை உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறது. (https://youtu.be/ecOK9K2m12g). இந்த இசையும் அதிலுள்ள வலியும், என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணிக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் அல்ஃபோன்சோ கொரானும் ஒருவர். அவரிடமிருக்கும் சினிமா மொழி திரைப்பட உலகில் தனித்துவமானது. நியோரியலிஸ்டிக் சினிமா பாணியை மிகவும் வலிமையான முறையில் பயன்படுத்தி ஃபிக்ஷனல் கதையை ரியலிஸ்டிக்காக எப்படி சினிமாவாக மாற்றுகிறார்? என்பதைத் தெரிந்து கொள்ள அவருடைய ‘சில்ரன் ஆஃப் மென்’ படத்தைப் பார்க்க வேண்டும். இந்தளவுக்கு எனக்கு பிடித்த இயக்குனராக கொரான் இருந்தாலுமே, அவர் இயக்கி சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கரை ‘ரோமா’ வாங்கியதற்குப் பதிலாக கேப்பர்னாம் தான் தட்டியிருக்க வேண்டுமென சொல்வேன். ஆஸ்கார் விருதுகளின் மேல் எனக்கு சிறிதளவு ஈடுபாடு இருந்தாலும் பெரிதளவு விமர்சனங்களும் இருக்கின்றன. அதைப் பற்றியும் உரையாட வேண்டும் என்பது எனது பலவருடக் கனவு. அந்த விமர்சனங்களை இன்னொரு சந்தர்பத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இருந்தாலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி பரிசை தட்டிச் சென்றது கேப்பர்னாம் என்பது எனக்கு ஆறுதல். இவ்வளவு உணர்வுப்பூர்வமான படத்திற்கு திரைக்கதையை நடைன் லபாக்கியுடன் சேர்ந்து எழுதிய ஹொஜைலி & கெசர்வனியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களின் திரைக்கதையை எழுதி முடித்து, அதன்பின் படம் எடுத்து முடித்து பார்த்தால், அவர்கள் எடுத்த மொத்த ஃபுட்டேஜ் 10 மணி நேரம். எப்படி திரைக்கதை எழுதப்பட்டது? எப்படி திரைக்கதையை சார்ந்தும், கள நிலவரத்தை சார்ந்தும் படம் எடுக்கப்பட்டது? பின்னர் மிகமுக்கியமாக எடிட் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட மிக முக்கியமான வெட்டுகள் என்னென்ன?, எடிட்டிங் final cutம் திரைக்கதை final draftம் எவ்வாறு வேறுபடுகின்றன? அத்தனையும் மொத்தமாக ஒரு காணொளி பதிவாகவோ புத்தமாகவோ வந்தால் உலகம் முழுக்க இருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு பயிற்சி வடிவமாக இருந்திருக்கும். மற்றொரு பிடித்தமான படமான 1950ல் வந்த 400 blows படத்தில் வரும் கடைசி ஷாட்டை, சிறுவனின் முகத்தோடு freeze செய்வார் ட்ரூஃபா. அதே போல, கேப்பர்னாம் படத்தின் கடைசி ஷாட்டும் சிறுவனின் முகத்தில் tight close shot வைத்து freeze செய்கிறார் நடைன் லபாக்கி.
ஒரு அகதியை எப்படிப்பட்ட மனிதாபிமானத்துடன் ஒரு குடிமகன் நடத்த வேண்டும் என்னும் தூண்டுதல் தான் கேப்பர்னாம். ஒரு குடிமகனுக்கு குடுக்கும் அதேயளவு வாழ்வாதார பாதுகாப்பை எப்படி அகதிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற கலை மனுவே இந்தப்படம். உலகப்படங்களின் மிக முக்கியமான படமாக லெபனீஸ் நாட்டு அரபி மொழிப் படமான கேப்பர்னாம் நிச்சயமாக இருக்கும்.