
வீடு எனப் பெயரிட்ட கட்டிடம்
மஞ்சள் உடலில்
சிவப்பு செவ்வகங்களும்
ஒடிந்துபோய் ஒரு நூலில்
தொங்கும் கொம்பும் கொண்டு
கதவிடுக்கில் படுத்திருக்கிறது
ஒட்டகச்சிவிங்கி எனப்
பெயரிடப்பட்ட பப்பு.
கைகளில் நடனமும்
கால்களில் உதை அசைவுகளும்
கண்களில் சிரிப்பும் காட்டி
ஒரு கண்ணை இழந்து
குடல் பஞ்சை வெளித்தள்ளி
விட்டத்தை வெறிக்கிறது
பாண்டா கரடியாகிய
குங்ஃபூ பாண்டா.
துரத்துவதற்கு எலி எனப் பெயரிட்ட
ஜெர்ரி இல்லாததால்
பூனை என்றழைக்கப்படும் டாம்
சுவரையே பார்த்து நிற்கிறது.
உதவி கேட்கும்
நோபிட்டோ இல்லாததால்
எல்கேஜி புத்தகப்பையில்
கையசைக்கிறது
மியாவ் பூனை என்ற டோரேமான்.
வேட்டைக்காரன் என்ற லாகர்ஹெட்டும்
ஆமைக் குஞ்சான்கள்
ம்யூட்டட் நிஞ்சா டர்டில்சும்
சுகர் லெவலை சரியாக
வைத்திருக்கப் பாடுபடும்
பராக்கிரமசாலி சோட்டா பீமும்
இன்ஸ்பெக்டர் வேலை பார்க்கும்
சிங்கம் சாரும்
ஆபத்தில் உதவும்
சின்னப் பையன் என
சொல்லக் கூடாத ராஜுவும்
எங்கென்றாலும் வழிகாட்டும்
குட்டிப் பிள்ளை டோராவும்
குரங்குப் பிள்ளை புஜ்ஜியும்
வீடு என்றழைக்கும்
வெறிச்சோடிய கட்டடத்திற்குள்
தனியே அமர்ந்திருக்கும் எனைக்
கேள்விகளோடு பார்க்கிறார்கள்.
பாட்டி வீடு
எனப் பெயரிட்ட கிராமத்தில்
நேற்று ஈன்ற வெள்ளாட்டுக் குட்டிகளை
கையிலேந்தி முத்தமிட்டுக் கொஞ்சும்
குட்டிப் பையனை
வீடியோ அழைப்பில் பார்த்து
புன்னகையோடு அருள்கிறார்கள்
மோட்டு என்கிற பிள்ளையாரும்
பட்லு என்கிற முருகனும்.
*********
அர்னால்டு ஈஸ் பேக்
தூசடைந்த அட்டைப் பெட்டிக்குள்
கிழிந்துபோன புத்தகத்தில்
பக்கத்திற்கு ஒன்றாய்
எதிரெதிராக சமமற்றுப்
பிரிந்து கிடந்தது
22 அங்குல புஜமும்
57 அங்குல பரந்த மார்பும்
கொண்டவனின் உடல்
டாவின்சி ஃபிபொனாச்சி
கணக்கீடுகளுக்கு
சவால் விட்டபடி.
யாருங்கப்பா இது என்று கேட்ட
ஐந்து வயது மகனுக்கு
முஷ்டி மடக்கி புஜபலம் காட்டி
நின்றவாறே சொல்கிறான்
அர்னால்ட் ஸ்வார்சுநேகர்.
குட்டி பனியனைக் கழட்டிவிட்டு
குட்டிக் கைகளை மடக்கி
குட்டிக் குட்டியான
புஜங்களைக் காட்டி
நானும் தான்
அர்னால்டு சூப்
அர்னால்டு சாக்லேட்
அர்னால்டு பன்
அர்னால்டு கேக்
என முழுப் பெயரை
வகை வகையாக
மழலைக்குள் இழுத்துச் சென்ற
பாலகனைப் பார்த்து
அர்னால்டு சூப் என்ற
அர்னால்டு சாக்லேட் என்ற
அர்னால்டு ஸ்வார்சுநேகர்
புஜங்கள் தளர்ந்து
முகம் மலரச் சொன்னார்
I am Back.
*********