ப்ளிமத் (Plymouth) நான் வசிக்கும் இடத்துக்கு அருகில் இருக்கிறது. அருகில் என்றால் காரில் சென்றால் அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். இங்கிருந்துதான் அமெரிக்காவின் வரலாறு தொடங்கியது. மேஃப்ளார் (Mayflower) என்னும் கப்பலில் ஐரோப்பியர்கள் 1620 ஆம் ஆண்டு ப்ளிமத்தில் தரையிறங்கினார்கள். இதைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே என்னுடைய ‘ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்’ கட்டுரைத் தொகுப்பில் விரிவாக எழுதியிருக்கிறேன். ப்ளிமத்தில் ஒரு அருங்காட்சியம் இருக்கிறது. பெரும்பலான மக்களால் ‘ப்ளிமத் ப்ளான்டேஷன்’ என அறியப்பட்ட இவ்வருங்காட்சியம் இப்போது ‘ப்ளிமத் பட்டாக்சட் ம்யூசியம்’ என்று அழைக்கப்படுகிறது. பட்டாக்சட் (Patuxet) என்பது வாம்பனாக் (Wampanoag) இனக்குழுவின் ஒரு பிரிவு. 1620ல் ஐரோப்பியர்கள் வந்த போது ப்ளிமத் பகுதியில் இவர்களே வசித்து வந்தார்கள்.
நம் மக்கள் அருங்காட்சியகத்துக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் உங்களுக்குத் தெரியும் தானே? ‘செத்த காலேஜ்’. அதாவாது அருங்காட்சியகம் இறந்தவற்றை பதப்படுத்தி அதன் மூலமாக மக்களுக்கு கடந்த காலம் குறித்து தெரியப்படுத்துவதால் ‘செத்த காலேஜ்’. அதே போல உயிரியல் பூங்கா ‘உயிர் காலேஜ்’ என அழைக்கப்படுகிறது (உயியோடு இருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து அறிந்துக்கொள்ள முடிவதால் இந்தப் பெயர்). ஆனால் ப்ளிமத் அருங்காட்சியம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. 1620ஆம் ஆண்டு ஐரோப்பியர்கள் வாழ சிறு இடத்தை பழங்குடிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவ்விடத்தில் ஒரு கிராமத்தை உருவாக்கி வாழத் தொடங்கியிருக்கிறார்கள் அவர்கள். அந்த முழு கிராமத்தையும் பழமை மாறாமல் மீளுருவாக்கம் செய்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு பார்வையாளாரக ஐரோப்பியர்கள் அமைத்த கிராமத்துக்குள்ளும் பழங்குடியினப் பகுதிக்குள்ளும் சென்று வரலாம். அவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து அதன் அமைப்புகளை பார்வையிடலாம். அங்கு வசிப்பவர்களிடம் உரையாடலாம். இதற்காக தேர்ந்த நடிகர்கள் இந்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகிறார்கள். பதினேழாம் நூற்றாண்டின் ஆங்கிலம் இப்போதைய ஆங்கிலத்தைப் போல் இருக்காது. எனவே இருபத்தியோறாம் நூற்றாண்டின் நாம், பதினேழாம் நூற்றாண்டு வாசிகளுடன் உரையாடும் போது அதேற்கேயுரிய ஆர்வமும் வேடிக்கையும் தொற்றிக் கொள்கிறது.
சிலர் அவர்களை நிகழ்காலத்துக்கு அழைத்து வருவதில் பெருமுனைப்போடு இருந்தார்கள். பழைய ஐரோப்பிய கலாசார ஆடைகளுடன் மரம் வெட்டிக்கொண்டிருந்தவரிடம் பார்வையாளர்கள் தற்காலத்து மின்விசையால் இயங்கிம் ரம்பங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் சொன்ன எதையும் அவர் நம்பத் தயாராக இல்லை என்பது போல அவர் நடித்துக் கொண்டிருந்தார். பார்வையாளர்கள் இந்த நடிகர்கள் ஒருவரையாவது நிகழ்காலம் குறித்து ஏதாவது சொல்லிவிட மாட்டார்களா எனபது மாதிரியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் பாத்திரங்களை உடைப்பது மிக மிகச் சிரமமானது, நம்மூர் கோல்டன் பீச் சிலை மனிதனை சிரிக்க வைப்பது போல. ஆனால் எனக்கு அவர்களை நிகழ்காலத்துக்கு கொண்டு வர எந்த விருப்பமுமில்லை. என் ஆசையெல்லாம் அவர்களுடன் பயணித்து பதினேழாம் நூற்றாண்டைத் தொட்டுவிட வேண்டும் என்பதே.
இப்போது இருக்கும் எந்த சௌகரியங்களும் அவர்களிடம் இல்லை. நாம் சந்தித்த எத்தனையோ மாற்றங்களில் மிக முக்கியமானது, சகமனிதர்களின் மீதான நம்பிக்கை. எத்தனையோ குற்றங்கள் மனிதனுக்கு மனிதன் எதிராக நிகழ்த்திக் கொண்டிக்கும் போதும் எளிமையாக இன்று நாம் எங்கும் சென்று வந்துவிட முடியும். உங்கள் ஸ்மார்ட் ஃபோன் உதவியுடன் ஜப்பானில் ஒரு வாரம் உல்லாசமாக இருந்துவிட்டு வரமுடியும். ஆனால் 1620ஆம் ஆண்டு அப்படியில்லை. ஐரோப்பியர்கள் அமைத்திருந்த கிராமத்தின் மையத்தில் பாதுகாப்பு கோட்டை இருந்தது. அயலவர்கள் படையெடுத்து வரும் போது ஒட்டு மொத்த கிராமமும் பதுங்கிக்கொள்வதற்கான ஏற்பாடுகள் அதிலிருந்தன. எதிரிகளைத் தாக்க பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கோட்டையின் உச்சியில் வைக்கப்பட்டிருந்தன. கோட்டை என்றால் நம்முடைய கோட்டைகளைப் போல கற்களை கொண்டு அமைத்ததல்ல, மரத்தால் செய்யப்பட்டவை. அருகில் வசித்த பழங்குடிகள் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. இவர்களைக் குறித்து பழங்குடிகளுக்குத் தெரியாது. இந்த வாழ்க்கையைப் பற்றி தெரிந்துக் கொள்ளவதை விட்டு எப்படி அவர்களை நம் வாழ்வுக்கு கொண்டு வர நினைப்பது?
நான் நுழைந்த வீட்டில் ஒரு பேரழகி உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் கைகளை பக்கவாட்டில் நீட்டி முழங்கால் சற்றே வளைத்து தலையை மட்டும் தாழ்த்தி வணக்கம் சொன்னாள்.
“ஆடு மேய்க்கச் சென்ற கணவர் வர நேரமாயிற்று. அவருக்கு உணவுத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.”
“என்ன உணவு?”
“பெரும்பாலும் எங்கள் உணவு வேகவைத்ததாகவே இருக்கும்”
அவள் காண்பித்த பாத்திரத்தில் வேகவைக்கப்பட்ட பீன்ஸும் உருளைக்கிழங்கும் இருந்தது. வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். என்ன பேசினோம் என்பது சுத்தமாக நினைவில் இல்லை. அவ்வளவு பேரழகியாக இருந்தாள்.
கணவன் வீட்டுக்கு வந்ததும் அவருடனும் பேசிக்கொண்டிருந்தேன். பில்கிரிம்ஸ் என்றறியப்பட்ட அவர்களிடம் சில வித்தியாசமான பழக்கவழக்கங்கள் இருந்தது. உதாரணமாக அவர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தங்களுக்குத் தேவையானவைகளை தாங்களே உழைத்து தயாரித்துக் கொண்டார்கள். ஒரு குறிப்பிட்ட உணவு சாப்பிட வேண்டும் என்றால், கேரட் என்று வைத்துக்கொள்வோமே. கேரட் பயிர் செய்து தான் சாப்பிட வேண்டும் அல்லது பக்கத்து வீட்டில் கேரட் இருந்தால் அவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். கைமாற்றாக எந்தப் பொருளும் தரக் கூடாது. மற்றவர்கள் கேட்கும் போது தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துக் கொடுக்கலாம்.
இதைப் பற்றி அந்தத் தம்பதியர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ஆச்சரியமாக “ஏன் நீங்கள் வியாபாரம் செய்யக் கூடாது?” என்று கேட்டேன்.
“வியாபாரம் குற்றம்” என்றார்கள்
“அது தான் ஏன் குற்றம்? எப்படிக் குற்றம்?”
“ஏனென்றால் அது அப்படித்தான்” என்றார்கள்
அந்த நடிகர்களின் மேதமையை எனக்குள்ளாகவே வியந்துக் கொண்டேன். மதம் என்ற நிறுவனம் ஒடுக்கிய 1620ஆம் ஆண்டு மனிதர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.
அடுத்ததாக பழங்குடி மக்கள் வசித்த பகுதியில் இருந்த ஒரு குடிசையின் மையத்தில் நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. நான் சென்றிருந்த நாள் உறைகுளிர் என்பதால் வசதியாக நெருப்பின் அருகில் அமர்ந்து எதிரில் இருந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் அமர்ந்திருந்த இடம் ஊர் மக்கள் ஒன்றாக கூடும் இடமாம். சுவரெங்கும் விலங்குகளின் தோல்கள் தொங்கிக் கொண்டிருந்தது. அவர்களின் உணவில் அதிகம் மீனும் கிளிஞ்சல்களும் இருந்ததாக அறிந்தேன். அதைத் தவிர்த்து காட்டுக் கீரைகளும் வேட்டையாடப்பட்ட விலங்குகளும் பறவைகளும் அடங்கும். எங்கள் பேச்சு ஆங்கில ஆதிக்கம் குறித்து நகர்ந்தது.
பில்கிரிம்ஸ் குடியேறியப் பகுதியை நோக்கி கை நீட்டிப் பேச ஆரம்பித்தார் அந்தப் பெரியவர், “அவர்களிடம் நல்ல இரும்பால் செய்த ஆயுதங்கள் இருக்கின்றன. எங்களிடம் விலங்கு மற்றும் மீன்களின் எலும்பில் செய்த ஆயுதங்கள் மட்டுமேயிருக்கிறது.”
அவர் என்னை அழைத்துக் கொண்டு வெளியில் இருந்த வெட்டப்பட்ட பதினாறு அடிக்கு குறையாத ஒரு மாபெரும் மரத்தைக் காட்டினார்.
“இந்த மரத்தை நாங்கள் படகாக மாற்ற மாதக் கணக்கில் முயற்சித்துக் கொண்டிருந்தோம்.”
மரத்தை கொஞ்சம் கொஞ்சமாக எரித்து கிளிஞ்சல்களில் செய்த கோடாரிக் கொண்டு கருகிய பகுதியை செதுக்கிச் செதுக்கிச் செய்ய முயன்றிருந்தார்கள்.
“ஆனால் அவர்களின் (ஐரோப்பியர்கள்) இரும்புக் கோடாரிக் கொண்டு சில நாள்களில் படகுகள் செய்துவிடலாம். அந்த ஆயுதங்களுக்குப் பதிலாக நாங்கள் எங்கள் நிலத்தைக் கொடுத்தோம். எங்கள் வழக்கப்படி நிலத்தை ஒருவருக்குக் கொடுப்பது என்பது, அந்த நிலத்தின் விளைச்சல்களை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதாகும். ஆனால் நிலத்தை எங்களிடமிருந்து பெற்றவர்கள் முட்கள் கொண்டு வேலியமைத்து எங்களை அதற்குள் வரக் கூடாது என்றார்கள். திரும்பி எங்கள் நிலங்களை எங்களுக்குக் கொடுங்கள் என்றால் ஏதேதோ காகிதங்களைக் காட்டி நிலம் அவர்களுக்குச் சொந்தம் என்கிறார்கள். எதிர்த்துப் போராடினால் ஆயுதங்களை கொண்டு எங்களை வென்றுவிடுகிறார்கள்.”
அந்தப் பெரியவர் பேசப் பேச இனம் புரியாதக் கலக்கம் எழுந்தது. இரண்டு மாறுபட்ட கலாசாரங்கள் ஒன்றோடு ஒன்று இணையும் போது ஒரு பாவமும் அறியாதவர்கள் இப்படி ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கவே முடியாதா என்ற கேள்வியுடன் நகர்ந்தேன்.
(தொடரும்…)