
இளைப்பாறிய கூட்டை விட்டு
பறந்தோடியது அப்பறவை
பசித்திருக்கும் புழுவிற்கு
உணவு தயாராகி விட்டது…
முகூர்த்தமில்லா நாளொன்றில்
அவன் மாலைகள் தொடுக்கிறான்
வார செலவிற்கான வரவின்
களிப்பில்..
தீபாவளியில் தீண்டப்படாத
பட்டாசொன்று மோட்சம் அடைய
தயாராக,
மளிகைக் கடைக்காரன்
பழைய ஊதுபத்திகளைப்
பாதிவிலைக்கு
விற்றுத் தீர்க்கிறான்…
இரண்டு வாரம் முறை வாசல்
செய்ய வேண்டாம்
குளிர்கால அதிகாலையின்
மூச்சிரைத்தலிலிருந்து
விடுதலையென கொஞ்சம்
சுவாசித்துக் கொண்டாள்
வேலைக்காரி..
மனிதர்களின் வியாபாரத்தில்
மரணங்கள் மட்டும் விதிவிலக்கா?
விறகோ குழியோ
வசதிற்கு ஏற்ப விலை..
எந்த குழந்தையும் அறிவதில்லை
அதன் கடைசித்தாலாட்டு
காசிற்காகவென..
அனைத்தையும் வெறித்துப்
பார்த்துக்கொண்டு
செருப்பை ஒளித்துவிட்டு
அவ்வீட்டின் உள்நுழைகிறான்
ஒருவன்…
அமைதியும் இரைச்சலுமாய்
அடிக்கடி மாறுவேடமிட்டு
மனித மனம் போல
இறுக்கமாய் இருக்கிறது
அந்த எழவு வீடு…
விருந்தாளிகளுக்கென அந்த வீடு சரிசெய்யப்படவில்லை…
கண் காதுகளை மூடிய சிலர்..
மூர்ச்சையாகி கிடக்கும் சிலர்..
அனிச்சையாய் அழுபவர்கள்..
ஆளில்லா இடத்தில்
மட்டும் அழுபவர்கள்…..
அழத்தகுதியற்றவர்களாக்கி
ஆண்களுக்கென மட்டும்
வாசலில் போடப்பட்ட
நாற்காலிகளுமாய்
இறைந்து கிடக்கிறது
அந்த எழவு வீடு….
குப்பையாய் காலாவதியான
பெயர் பலகை ஒன்று!
அங்கு,ஒப்பாரிகளின் இடைவேளையில்
நலம் விசாரித்தல் நடந்து கொண்டிருக்க,
வருவோர் போவோர் எல்லாம்
தன் மரணத்திற்கு ஒத்திகை பார்க்க..
தனியே விசும்பலுடன் வேடிக்கை
பார்க்கிறது பிணம்…
00 00
முன் போல் சதுரமாய்
இல்லை உலகம்.
இந்த வீட்டில் சாளரம்
இல்லை.
உலகத்தைக் காண
விழைகையில் எல்லாம்
கண்களை மூடிக்
கொள்கிறேன்.
உருவங்கள் துறந்து
உணர்வுகள் நிறைந்து
இருக்கிறது உலகம்.
கால்கள் முளைத்த மரம்,
கோடுகள் கிழிக்கா நிலம்,
சாயம் பூசாத மனிதன்,
ஒரே நேர்கோட்டில் உயிர்கள்.
பயமின்றி பட்டாம்பூச்சிகள்
உலவும், உலகம் மிகவும்
அழகாய் இருக்கிறது சகியே.
இப்போது அனைத்தும்
வெறும் கற்பனையாய்
இருக்கிறது.
என் காடுகள் தீக்குளிக்க,
குட்டையைக் கண்ட மீனொன்று
கடல் என்று துள்ளிக் குதித்துக்
கொண்டிருக்கிறது
நிஜத்தில்.
00 00
சிற்பியின் பெருங்கனவு
கல்லின் நெடுந்தவம்
உளியின் தீராச்சாபம்
இந்தச் சிலைகள்..
மனிதன் செதுக்கிய மரம்
நிஜங்களை நிறுத்தி வைக்கும்
முப்பரிமாண மாயம்
இருக்கும் இடத்திற்கு முகவரிதரும்
அடையாளம் இந்தச் சிலைகள்…
வானமே கூரையாய் வாழும்
இடம்பெயரா நாடோடி
கால்கள் இருந்தும் இன்னும்
நடைபழகாதவை
இந்த சிலைகள்….
கண்கள் இருந்து மட்டும் என்ன?
குற்றங்களை நேரில் காணினும்
சாட்சி சொல்லத் தகுதியற்ற ஊமை…
இந்த சிலைகள்.
சிலையின் தலையோ பாவம்
கலவரங்களிலும்
கட்சிமோதல்களிலும்
உடைப்படுவதற்கே…
அதன் உடல்,
மழை வரும் நாட்கள் வரை
பறவையின் எச்சத்தில் குளித்து
பல விதைகளை தாங்கும்
தானியக்கிடங்கு…
ஆடை அலங்காரம், அவை ஆலயத்தில்
இருப்பவைகளுக்கு மட்டும்…
தியாகிகள் தெருக்கோடியிலும்
அதிர்ஷ்டம் உள்ளவை கடற்கரையிலும்,
அரசியல்வாதிகள் சாலை ஓரத்திலும்,
கற்பனை கடவுள் மட்டும் கருவறையிலும்
இன்னும் கழுகுகள் தின்னாமல்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன…
இப்படித்தான் இறந்தும்
வாழ்கின்றன சிலைகள்..
அதோ உச்சி வெயிலில் கட்டிடத்தின்
வெளியே நிற்கும் காவலாளிக்கு
அய்யனார் சிலையின் சாயல்…
தட்டித் தடுமாறி நடக்கும்
கிழவிக்கோ ஔவையார்
சிலையின் சாயல்…
ஆறு மணியானதும்
அலுவலகத்தில் இருந்து காணாமல்
போகும் தோழிக்கு கண்ணகி
சிலையின் சாயல்…
தாடி வைத்த கிழவனுக்கெல்லாம்
பெரியார் சிலையின் சாயல்…
மரத்தடியில் வெறித்து உட்கார்ந்திருக்கும்
அவனுக்கு புத்தன் சிலையின் சாயல்…
இப்படித்தான்,சிலை மனிதனாகிறது…
அடுத்தவன் பசியைத் தின்று
உயரமாய் வளர்ந்து நிற்கிறான்..
சிதறும் உயிர்களை சலனமின்றி
பார்த்து சிரிக்கிறான்…
குற்றத்திற்கு சாட்சியாகினும்
ஊமையாகி,
கண்களை கட்டிக் கொள்கிறான்…
இப்படித்தான், மனிதன் சிலையாகிறான்..
சரி சொல்லுங்கள்,
நீங்கள் உயிரற்ற மனிதனா?
இல்லை உயிருள்ள சிலையா?