கவிதைகள்-ரேவா

1. நீள்வரிசை படி
திறக்கக் காத்திருக்கும் சொல்லின்
தயவுவேண்டி நிற்கிறது
நிதானம்
அசைவுகளற்ற நகர்வை
ஈடுசெய்கிற
மனக் குதிரையின் வேகம்
சிந்தனையின் நாற்திசைக்கும் கட்டுப்பட
மறுக்கிறது
வலுசேர்க்கும் பிடி
இறுகிப் பின் தளர்த்தும் யோசனையின்
ஒற்றை மையம் குவிக்கிற
கேள்விகள்
நமக்குச் சொந்தமற்றவை
காரணங்கள் விளைவுகளாகி
விளைவுகள் காரணங்களாகும்
மாய வரிசைக்கு பின்
நீள்கிற வரி
அர்த்தங்களை மாற்றியடுக்கும்
காத்திருப்பின் முரணை
மெய்பிக்கத் தொடங்குகிறது
மறதி
ஆனாலும்
நிற்பதை
நிறுத்தாத முயற்சி
தட்டிக்கொண்டிருக்கிறது
சொல்லின் இன்னொரு முகமாகி
2. வசதியின் பரிந்துரை
பிரிவின் குற்றச்சாட்டுகளை பிறகு பார்த்துக்கொள்வோம்
தப்பிக்கத் தேடும் வழியை
முதலில் பரிந்துரைக்கிற தேர்வு
ஆளுக்கான வசதி
அந்நியப்படுதலின் காரணங்கள்
ஆளுயரங்களை காட்டிக்கொடுத்துவிடும் போது
மருகுதல் வீண்வேலை
பழகியதை பயன்படுத்தும்
யுக்தி
இச்சமய வேட்டை நெறி
கொல்லுதல் அல்ல அதன் அர்த்தம்
அர்த்தம் கொள்ளும்
அளவை
வந்த வழியின் தொலைவாக்கும்
தந்திரத்தை கைக்கொள்தல்
சொற்ப மீதங்களுக்கான ரகசியம்
பாதைகள் முடிவுக்கு வரும் போது
தீர்மானங்களை தரம் பிரிக்கத் தெரிந்த சந்தர்ப்பம்
இனம் காண்கிறது
திரும்பும் வழியறியும் தூரங்களை
தொலைவுகளில் நிகழ்கிறது
மறுப்பு
3. சொல்லின் பிடிமானம்
எப்படியும் அசைத்துப் பார்த்திடும்
நோக்கோடு வருகிறது
ஒரு கொடுஞ்ச்சொல்
கொடுத்தவைகளை மறக்கப் பழகா
வழி
ஒரு விஷக் கோப்பையாகி
நிரம்பிக் கொண்டிருக்கிறது
மனதின் அறைமுடுக்கில்
யாருக்கும் தெரியா அதன் நெடி
நொடிக்கொரு முறை பருகக் கேட்கும்
தாகத்தை
ஒரு நல்ல சொல்
ஆற்றுப்படுத்துகிறது
அவ்விதமே கடந்திடலாமென்ற
யோசனையை பரிசீலிப்பதற்கு முன்
தடங்களின் மேல்வரிசையை
நெட்டி இழுக்கிறது கோப்பை
இன்னும்
தாகம் தாகமென
தவிப்பதை இலக்காக்கி
கூர்ந்து பெருகும் வரிசையில்
இதழ் தொட்டுப் பிரிகிற
ஒரு துளி சொல்லில்
மிச்சமிருக்கிறது
யாரும் பருகா பிடியுடைய கோப்பையொன்று.