
இரண்டு கொக்குகளும் ஒரு ஆமையும்
ஏரி ஒன்றை நம்பி
இரண்டு கொக்குகள் உடனே
எழில் ஆமை ஒன்றும்
இயல்பாய் வாழ்ந்து வந்தன.
ஏரி வற்றிப் போனதும்
எல்லா மீன்களும் காய்ந்து
எலும்பு தெரியும் கருவாடாக
இவைகள் உண்டு உயிர்த்தன.
மீனும் நண்டும் தீர்ந்த பின்னே
மிகவும் பசியால் வாடின
மற்றொரு நீர்நிலை தேடிப்
போவதற்கு முடிவு செய்தன.
நானும் வருகிறேன் உங்களோடு
நவின்றது ஆமை கொக்கிடம்
நண்பனை விட்டிட மனமின்றி
அன்புடன் ஒப்பின இரண்டுமே!
உனக்கோ சிறகுகள் இல்லை
உன்னைத் தனித்திடவும் முடியவில்லை
தடித்த குச்சி ஒன்றினை
வாயில் இருவரும் கவ்விக் கொள்கிறோம்
குச்சியின் நடுவில் நீயும்
உந்தன் வாயால் பற்றிக்கொள்
வாயைத் திறந்திட விழுவாய்
வந்து எம்முடன் சேர்ந்திடு
என்றன கொக்குகள் இரண்டும்
ஏற்ற ஆமை உடன் பறந்தது.
அடுத்த ஊரை நோக்கியே
அவை விரைந்து சென்றன.
கீழே இருந்து குழந்தைகள்
கைதட்டி சிரிக்கக் கண்டது ஆமை.
வேறு குளம் தேடியே
வெளியேறுவதாய் சொல்லிடவே
வாயைத் திறந்தது ஆமையே!
பிடி தளர்ந்ததால் விழுந்தது
பறவை இரண்டும் பறந்தது.
பிழைக்க வழியின்றி மடிந்தது
தன் வாயால் தானே அழிந்தது..
நீதி : தேவையில்லாத இடத்தில் வாயைத் திறக்காமல் இருப்பது நலம்.
குறள் : யாகாவாராயினும் நா காக்க.
*****
நீலநரி
அழகிய வனம் அது
அத்தனை விலங்கும் வசித்தன
அப்படி இருக்கையில் ஒருநாள்
அங்கு வசித்த நரியொன்று
ஆகாரம் தேடி அலைந்தது.
அங்கும் இங்கும் இரைதேடி
அலைந்து திரிந்து போகையிலே
அதன் பின்னொரு புலியும்
அடி தொடர்ந்து வந்திற்று
பயந்து போன நரியாரும்
பாய்ந்து ஓடிச் செல்கையில்
பட்டென்று விழுந்தது தொட்டியில்
சட்டென்று நிறம் மாறியது
எழுந்து தன்னைப் பார்க்கையில்
எழில் நீலமாய் கண்டது
எல்லார் முன்னும் வந்தது
என்னைத் தெரியுமா என்றது
அனைத்து விலங்கும் கூடியே
அதிசய நரியைக் கண்டது
அச்சம் கொண்டு பின்னேகி
தாங்கள் யாரெனக் கேட்டன
காட்டில் உள்ள மூடர்களே!
கடவுளின் மகன் நான்
கண்டதும் வணங்க வேண்டும்
காலையில் உணவிட வேண்டும்.
இல்லை யென்றால் ஒழிந்தீர்
தொல்லை நீளும் உமக்கு
இப்படிச் சொன்னது நரி
இடத்தை அடைந்தன யாவும்
காட்டின் அரசன் ஆனது
கண்டபடி தின்று கொழுத்தது
காலைவேளை ஒருநாள்
காட்டில் விலங்குகள் சேர்ந்தன
கனிமரம் ஒன்றின் அருகில்
அணியாய் இணைந்த நரிகள்
ஊளை யிட்டு மகிழ்ந்தன
காதால் கேட்ட நரியும்
கண்கள் மூடி லயித்தபடி
கனத்த குரலில் சத்தமிட
கண்டு கொண்ட விலங்குகள்
குளத்தில் பிடித்துத் தள்ளின
சாயம் வெளுத்த நரியுமே
சத்தம் இன்றி நகர்ந்தது
வேடம் கலைந்த பின்னே
வேறிடம் தேடிச் சென்றது..
நீதி: எதிர்பாராமல் கிடைக்கும் மாற்றத்தைத் தன் இயல்பென்று சொல்லக்கூடாது. தெரியும்போது உலகே நம்மை இழிக்கும்.
Nice