
வாசகசாலை வாசகர்களுக்கு,
உங்களையெல்லாம் சந்திக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக நான் இதைக் கருதிக் கொள்கிறேன். அறிவியல் என்பது எப்போதும் உவப்பானது இல்லை. சில சமயங்களில் அது போரடிக்கும். ஆனாலும், இந்த இடத்தில் வித்தியாசமான ஒன்றைத் தருவதானால், அது அறிவியலாகத்தான் இருக்க முடியும். படித்துப் பாருங்கள். உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள். பிடித்தால் மேலும் தொடர்கிறேன். வாராவாரம் சிறியளவிலான பத்தியையே எழுத இருக்கிறேன். ஆனால், இது முதலாவது என்பதால், சற்றே அதிகமாகிப் போய்விட்டது. சிரமப்பட்டாவது முடியும்வரை படியுங்கள். இனி இவ்வளவு அதிகமாக இருக்காது.
அன்புடன்
ராஜ் சிவா
நீரின்றி அமையாது உலகு
நீரின்றி அமையாது எதுவுமே! பூமியில் 72 விழுக்காடு நீரே இருக்கிறது. மனிதனின் உடலிலும் 60 விழுக்காடு நீர்தான். இரத்தத்தின் பெரும்பகுதியும் நீர்தான். இரத்த அணுக்களைவிட, அதிகளவில் நீர் இருந்தாலும், உடலில் ஓடுவதை ‘இரத்தம்’ என்கிறோம். நீர் என்று சொல்வதில்லை. இது நீருக்குச் செய்யும் அநீதி. ஆல்கஹாலைப் போலத்தான் இரத்தமும். நீங்கள் மதுப்பிரியராக இருந்தால், நீங்கள் அருந்தும் மதுவில் 60 விழுக்காடு நீர்தான் இருக்கிறது என்பதை அறிவீர்களா? விலையுயர்ந்த விஸ்கி ஒன்றை 3000 ரூபாய் கொடுத்து வாங்குவீர்களெனில், அதில் 1950 ரூபாயை வெறும் தண்ணீருக்காகவே கொடுக்கிறீர்கள் என்பது தெரியுமா?
நீங்கள் அறிந்து வைத்திருக்கும் பதார்த்தங்களில், நீர் அதிசயத்தன்மை கொண்டது. ஆச்சரியமானது. எதைச் சுத்தம் செய்ய வேண்டுமென்றாலும் நீர் அவசியமாகிறது. தாகத்துக்குக்கூட நீரைத்தவிர எதையும் உங்களால் பருக முடியாது. ‘இல்லையே! நான் பழரசம்தானே குடிப்பேன்’, ‘நான் கோக்தானே குடிப்பேன்’ என்று நீங்கள் சொன்னால், அவற்றிலும் பெரும்பாலும் இருப்பது நீர்தான். அமிலமும் இல்லாமல், காரமும் இல்லாமல் நடுநிலைத் திரவமாக இருப்பதும் நீர்தான். வாயு நிலையில் வானத்தில் முகிலாகவும், திண்ம நிலையில் துருவங்களில் பனிக்கட்டியாகவும், திரவ நிலையில் பூமியெங்கும் நீராகவும், ஒரே சமயத்தில் இயற்கையில் இருக்கும் ஒரே பதார்த்தம் நீர் மட்டுமே!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா….! இதுக்கு மேலயும் நீர்பற்றி நான் எழுதினால், எழுந்து ஓடிவிடுவீர்கள். “இவையெல்லாம் எங்களுக்கு எட்டாம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்திட்டாங்க” என்னும் கேலிப் பார்வையும் உங்களிடம் இருக்கிறது. உண்மைதான். இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவைதான். ஆனால், நீங்கள் நினைத்தே பார்க்காத ஒரு அற்புதத் தன்மையை நீருக்கு இயற்கை வரமாக அளித்திருக்கிறது. அதன்மூலம் தன்னை எப்படி இயற்கை தக்க வைத்திருக்கிறது என்பதைச் சொல்லவே இவையெல்லாம்.
பூமியிலுள்ள பொருட்களுக்கு, ஐந்து விதமான நிலைகள் இருக்கின்றன. அவற்றில் மூன்று நிலைகள்தான் திண்மம், திரவம், வாயு என்பவை. இவை தவிர்ந்து, மேலும் இரண்டு நிலைகளும் பொருட்களுக்கு உண்டு. அவை பற்றிப் பின்னர் எழுதுகிறேன். இப்போது நமக்குத் தேவையானவை இந்த மூன்றுமே! பொருட்கள் அணுக்களாலும், மூலக்கூறுகளாலும் உருவாக்கப்பட்டவை. ஒரு பொருளின் மூலக்கூறுகளின் கட்டமைப்பு, செறிவாக அசைய முடியாதபடி நெருக்கமாக இருந்தால், அந்தப் பொருள் திண்ம நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே, மூலக்கூறுகள் சற்றுச் செறிவு குறைந்து அசையும் நிலைக்கு வந்தால், திரவமாகிவிடுகிறது. அந்தச் செறிவு மேலும் குறைந்து மூலக்கூறுகளுக்கிடையே பெரும் இடைவெளி தோன்றினால், அது வாயுவாகிவிடும். இதனாலேயே, திண்மம் எடை கூடியதாகவும், திரவம் அதைவிடச் சற்றுக் குறைந்த எடையாகவும், வாயு மிகமிகக் குறைந்த எடையுடனும் காணப்படுகின்றன. மூலக்கூறுகளின் செறிவு அதிகரிக்க அதிகரிக்க எடையும் அதிகமாகும். ஒரு பதார்த்தத்திலான திரவத்தில், அதே பதார்த்தத்திலான திண்மத்தைப் போட்டால், அது அந்தத் திரவத்தில் அமிழ்ந்துபோகும். எடை குறைந்த திரவத்தில், எடை அதிகமான திண்மம் அமிழ்வது இயல்புதானே! ஆனால், நீருக்கு மட்டும் இது தலைகீழ். பனிக்கட்டிகளை (Ice cubes) நீரினில் போட்டால், அவை சாதாரணமாக அமிழ்ந்துதான் போகவேண்டும். ஆனால், அமிழ்வதற்குப் பதிலாக அவை மிதக்கின்றன.
நீரின் இந்தத் தன்மை இயற்கையின் விதிகளுக்கு முரணானது. பனிக்கட்டிகள் மட்டும் எப்படி நீரில் மிதக்க முடியும்? அதுவேதான், இயற்கையே நீருக்குக் கொடுத்திருக்கும் அற்புத வரம். கோடான கோடி உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்றும் அதிசயம். நான் இயற்கை என்று சொல்வதை, இறை நம்பிக்கை உள்ளவர்கள், ‘கடவுள் வழங்கிய அற்புதத் தன்மை’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். திரவ நீர் குளிர்வடைந்து திண்மமாக மாறும்போது, நீரின் மூலக்கூறுகள் (H2O) நெருக்கமாகி, இறுக்கமாகின்றன. நீரிலிருக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை ஒன்றுசேர அடுக்கப்படும்போது, அவை உருவாக்கும் வித்தியாசமான வடிவம், நீர் மூலக்கூறுகளை நெருங்க விடாமல் தள்ளிவைத்து விடுகின்றன. மூலக்கூறுகள் இடைவெளியுடன் தள்ளியிருக்கும் நிலையிலேயே இறுக்கமாகின்றன. அதனால், பனிக்கட்டியில் இருக்கும் மூலக்கூறுகள் குறைந்துவிடுகின்றன. எனவே, செறிவற்ற பனிக்கட்டி, நீரில் மிதக்கின்றது. இது நீருக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சம். “அட! இது ஒரு விதிவிலக்கு. இப்படி இயற்கையில் எத்தனையோ விதிவிலக்குகள் உள்ளன. அவைபோல இதுவும் ஒன்று. அவ்வளவுதானே! இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்பு?” என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், உண்மையான காரணம் தெரிந்தால், “கடவுள் இருக்கிறான் கொமாரு” என்பீர்கள்.
குளிர் நாடுகளில் இருக்கும் பெரும் ஏரிகளெல்லாம், கடுங்குளிரின்போது பனிக்கட்டியாக உறைந்து போகின்றன. ஏரியின் மேற்புறம் திடமான பனிக்கட்டியாகிவிடும். அதன்மேல் மனிதர்கள் நடந்து செல்லும் அளவுக்குப் பனிக்கட்டி உறைந்திருக்கும். உறைந்த படலத்தின் கீழே, நீர் அப்படியே இருக்கும். குளிர் காலங்களில் மீன் பிடிக்கச் செல்பவர்கள், பனிக்கட்டியில் துளையிட்டு அதனூடாகத் தூண்டிலிட்டு நீரிலுள்ள மீன்களைப் பிடிப்பார்கள். ஜெர்மனி போன்ற நாடுகளில் இது சாதாரணமாக நடக்கும் செயல். ஏரிகளின் மேற்பரப்பில் பனிக்கட்டி உறைந்திருந்தாலும், கீழ்ப்பகுதியிலிருக்கும் நீரில் மீன்கள் வாழ்கின்றன. ஒரு மிகப்பெரிய ஏரியில் எத்தனையோ மீன் வகைகள் கோடிக்கணக்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும். ஏனைய பொருட்களைப் போலவே நீரும் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்று இப்போது சிந்தித்துப் பாருங்கள். அதாவது, பனிக்கட்டி உறைந்த பின்னர் நீரினுள் அமிழ்ந்து விடுகிறது என்று வைத்துக் கொண்டு சிந்தியுங்கள்.
ஏரியின் மேற்பரப்பில் உறைந்த பனிக்கட்டி எடை அதிகரிக்க நீரில் அமிழ்ந்து அடிப்பாகம் நோக்கிச் சென்றுவிடும். உறையாத நீர் மேல்நோக்கி வந்துவிடும். மீண்டும் மேற்பகுதி உறைய ஆரம்பிக்கும். இப்போதும் உறைந்த பனிக்கட்டிகள் அடிப்பாகம் போய்விடும். இப்படியே நீரின் முழுப் பகுதியும் உறைந்து பனிக்கட்டியாகிவிடும். அப்போது, ஏரி முழுவதும் பனிக்கட்டி மட்டுமே நிறைந்திருக்கும். அங்கு வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து மீன்களும், பிற உயிரினங்களும் உறை பனிக்கட்டியில் அகப்பட்டு இறந்துவிடும். அந்த நீர்நிலையில் உயிரினங்களே இல்லாமல் போய்விடும். கோடான கோடி உயிரினங்கள் ஒரு வருடத்தின் குளிர் காலத்திலேயே இல்லாமல் அழிக்கப்பட்டுவிடும். இயற்கை அந்தத் தவறைச் செய்வதில்லை. இதை அனுமதிப்பதும் இல்லை. உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களைக் காப்பதற்காகவே, நீருக்குத் தலைகீழான சிறப்புத் தன்மையைக் கொடுத்திருக்கிறது இயற்கை. உங்கள் வார்த்தையில் கடவுள். மேற்பரப்பு நீர் உறைந்து போனாலும், கீழே அமிழ்ந்து போகாமல் மிதந்து, ஏனைய நீரை உறைய விடாமல் தடுக்கின்றன. இப்போது புரிகிறதா, நீர் எவ்வளவு விசேசமானது என்று?
ஆனால் ஒன்று….!
நீருக்கு மட்டும் இந்தச் சிறப்புத் தன்மை இல்லாமல் இருந்திருந்தால், டைட்டானிக் கப்பல் பனிக்கட்டி மலையில் மோதி உடைந்திருக்காது. நம்ம ஜாக்கும் இறந்திருக்க மாட்டான்.
தொடரும்….
Raj siva
Good translation on water.
மூலத்தினை சில வரிகளில் சொல்வது நேர்மை ஆகும். முயற்சிக்க