
இரயில்
இப்படியொரு இரயில் வரும் என அதுவரை யாருமே கற்பனை செய்ததில்லை. ஒரு வருடத்திற்கு முன்பே இன்றைய திகதியில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தேன். ஒரு போர்சனில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். ஒவ்வொரு பயணத்திலும் இருபது பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள்.
மனைவி வழியனுப்பும் பிளார்ட்ஃபார்ம் வரை வர முடியும். நேற்றெல்லாம் அழுது ஆர்ப்பரித்து அவள் ஓய்ந்து போயிருந்தாள். அவளும் பயணிதான். ஆனால், இன்னும் மூன்றாண்டுகள் அவள் காத்திருக்க வேண்டியுள்ளது. எழுபது வயதைத் தொட்டுவிட்டால் பயணித்தே ஆக வேண்டும்.
“நாளைக்கு என் பையன் என்னப் பார்த்தானா என்ன நெனைப்பான்? ரொம்ப ஆச்சர்யமா இருக்கு…”
பயணிப்பதில் இருந்த ஒரு குதூகலம் மனைவியின் வேதனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவ்வப்போது என்னை மீறி வெளிப்பட்டிருந்தது. சிவந்த அவளுடைய கண்களைப் பார்க்க எனக்குத் திராணியில்லை. உள்ளுக்குள் இருக்கும் பரவசம் என் கண்களில் துள்ளிக் கொண்டிருந்தது. அது அவளுக்கு அசூயையாகக்கூடத் தோன்றலாம்.
‘எப்ப வருவீங்க?’ எனக் கேட்கத் தேவையில்லாத ஒரு பயணம் அது. அதனால், அவள் அமைதியுடன் ஒரு துயருக்குத் தயாராகி கொண்டிருந்தாள்.
“மேகலா… இதுதான் இப்ப ட்ரெண்டுன்னு நமக்குத் தெரியும்… இன்னிக்கு நான்; அடுத்து நீ… எல்லோரும் இப்படித்தான் இந்த ரயில்ல ஏறித்தான் ஆகணும்…”
நான் சொன்னதால் அவள் சமாதானமடைவால் எனத் தோன்றவில்லை. எப்படியும் இன்னும் ஒரு ஐந்து மணி நேரத்தில் அடுத்த பிளார்ட்ஃபார்மில் இறங்கும்போது இவளை நான் மறந்திருப்பேன். சொல்லப் போனால் நான் என்னையே மறந்திருப்பேன். இந்த உலகை மறந்திருப்பேன்.
இரயில் புறப்படும் நேரம் வந்தது. ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் நுழைந்து கொண்டேன். இனி என்னால் அவளிடம் பேச முடியாது. கடைசியாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு வந்திருக்கலாம். இந்த உலகில் அவளுக்கும் எனக்குமான ஒரு கடைசி வார்த்தை மௌனம் மட்டுமே. கண்ணாடிக்குள்ளிருந்து அவளைப் பார்த்தேன். அழுதபடி அங்கிருந்து சென்று கொண்டிருந்தாள்.
உள்ளிருந்து என் பெயர் உச்சரிக்கப்பட்டதும் கண்ணாடிப் பெட்டியின் இன்னொரு பக்கம் திறந்து நேராக இரயிலில் ஏற வழிவிட்டது. வெண்புகை என் உடலைச் சுத்தப்படுத்தி இரயிலுக்குள் அனுமதித்தது. உள்சென்ற சிறிது நேரத்தில் நான் பயணிக்க வேண்டிய போர்ஷனிலிருந்த மின்சாரப் படுக்கையில் படுத்துக் கொண்டேன். அது என்னை உள்ளிழுத்து மூடிக் கொண்டது. சுற்றிலும் பளிச்சென்ற வெளிச்சம் மட்டுமே தெரிந்தது. நான் வாழ்ந்த உலகை, அதன் காட்சிகளை மனத்தில் ஓடவிட்டேன்.
இன்னும் ஐந்து மணி நேரத்தில் எந்த இடமென்று தெரியாத உலகின் இன்னோர் இடத்திற்குக் குழந்தையாகக் கொண்டுபோய் சேர்க்கப்படுவேன். உடல் சிறுத்து, நினைவுகள் அழிந்து, குழந்தையாகப் போகும் படபடப்புடன் பெட்டிக்குள் இருந்தேன். இல்லை; ஓர் இயந்திரக் கருவறைக்குள் இருந்தேன்.
*****
வாசகன்
புதிதாக வாங்கி வந்த நாவல் நீலநிற அட்டையுடன் வெகுநேரம் மேசையின் மீதிருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தது. புத்தகங்கள் என்னைப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. இனி நான் செய்ய வேண்டியதை நினைத்துதான் பயம் கூடி நின்றது.
“எப்பலேந்து இந்த உணர்வு?”
“சார், உணர்வில்ல… உண்மையா நடக்குது… நான் என்ன பொய்யா சொல்றன்?”
“இல்ல… இந்த மாதிரி அதிகம் புக்ஸ் படிக்கறவங்க இப்படில்லாம் நெனைச்சுவாங்குவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கன்…”
ஜுப்லி பொது நூலகத்தில் அறிமுகமாகி பிறகு நட்பாகிவிட்ட பீட்டரின் முன் ஒரு குற்றவாளியைப் போன்று அமர்ந்திருந்த அந்த நாள் இன்னும் மனத்திற்குள் பிசுபிசுத்துக் கொண்டிருக்கிறது.
ஐந்து நாள்களுக்கு ஒரு முறை ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு, அடுத்த புத்தகத்தை வாங்கியோ அல்லது பொது நூலகம் சென்று இரவல் பெற்றோ வந்தாக வேண்டும். தவிர்க்க முடியாத ஒரு வெளியில் இருந்தேன். வார்த்தைகள் சுவர்கள் போல் எழும்பி என்னைச் சுற்றி வளைத்திருந்தன. அன்று நேரம் போனதே தெரியவில்லை. மேசையில் வைத்திருந்த நாவலை நான் படிக்கத் துவங்கியிருக்க வேண்டும். எப்படி மறந்தேன் எனத் தெரியவில்லை.
இரவு உறங்கத் தோன்றவில்லை. சன்னலைத் திறந்து வைத்திருந்தேன். நாளை என்ன சமைப்பது என்பது பற்றிய சிந்தனை. சட்டென ஓர் உருவம் என் பின்னால் வந்து நிற்பதை உணர முடிந்தது. அறையின் சூடு அதிகரிப்பதைக் கொண்டு அறிய முடிந்தது. திரும்பிப் பார்க்க மனமில்லை. ஓரளவில் இது வழக்கமாகி விட்டதால் மேற்கொண்டு பதறுவதற்கு ஒன்றுமில்லை எனப்பட்டது.
“யாரு மாணிக்கமா?”
“ம்ம்ம்ம்…”
சுருக்கமான பதில் அச்சத்தை உண்டாக்கியது.
“என்ன பழக்கம் இது…? அடிக்கடி தொல்லையா இருக்கு…”
“நீ ஏன் எடுத்து வந்த புத்தகத்தப் படிக்கல?”
“அதுக்குன்னு நீ உடனே வந்துருவியா?”
மாணிக்கம் பதில் ஏதும் சொல்லவில்லை. என்னை எழுதியவன் அவன். மாணிக்கம் எழுதிய ஒரு நாவலின் கதாபாத்திரம் நான். ‘வாசகன்’ என்கிற நாவலின் மையப்பாத்திரம் நான். அப்படைப்பில் நான் நாவல்களை வாசிப்பவன்.
“எழுதியவன் கதைக்குள்ள வந்து கதாபாத்திரத்த மிரட்டுவது சரியில்ல, மாணிக்கம்…”
அவன் அமைதியாக அமர்ந்திருந்தான். எப்பொழுதும் மாணிக்கம் வந்துவிட்டால் நான் வழக்கம்போல் நாவலை வாசிக்கத் துவங்கிவிடுவேன். இம்முறை எதிர்க்கத் தோன்றியது. வெகுநேரம் பெயர் தெரியாத அந்த நாவலை நான் கையில் எடுக்கவில்லை.
மாணிக்கம் என்னைத் தொட முடியாது என்கிற துணிவில் அப்படியே அமர்ந்திருந்தேன்.
“சரி, இனி நீ வேணாம்… நான் உன்ன எடுத்துட்டு வேற ஆள வச்சுக்கிறேன்…”
எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவன் என் சிரிப்பை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“என்ன? பயம் இல்லயா?”
“படைக்கறது மட்டும்தான் உன் வேல… என் மேல அதிகாரம் செலுத்தற உரிமை உனக்கில்ல…” – மாணிக்கம், நான் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இருவரும் மாணிக்கத்தின் ‘வாசகன்’ நாவலுக்குள் மௌனமாக அமர்ந்திருந்தோம்.
*****
வருகை
எல்லோரும் திக் பிரமை பிடித்துதான் உட்கார்ந்திருந்தார்கள். அம்மாவுக்குச் சலனமெல்லாம் பொங்கி வழிந்து இப்பொழுது அழுதோய்ந்து அதிர்ச்சியுடன் தெரிந்தார். வீட்டுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருந்த அழகுமணிகள் ஒன்றொன்று மோதி ஓர் இசையை உருவாக்க முயன்று கொண்டிருந்தது. அப்பா உடலில் ஒட்டியிருந்த மண் துகள்களைத் தொடர்ந்து உதறிவிட்டபடி இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார். கணேசனுக்குக் கனவில் இருப்பது போலவும் இன்னும் சிறிது நேரத்தில் விழிப்பு வந்துவிடலாமெனக் கூடத் தோன்றியது. அப்பா தண்ணீர் வேண்டுமெனக் கட்டை விரலை உதட்டில் வைத்துக் காட்டினார். கணேசனின் தங்கை பதற்றத்துடன் எழுந்து நீர் எடுக்கச் சென்றுவிட்டாள்.
“என்னடா இப்படிப் பாக்கறீங்க?”
அப்பா முகத்தைத் துடைத்துக் கொண்டார். குளிரூட்டி இருந்தும் அப்பாவிற்கு வியர்த்துக் கொண்டிருந்தது. நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டு உடலை முறுக்கினார்.
“என்ன நடக்குது? ஒன்னுமே புரியல…”
மாமா ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு கணேசனைப் பார்த்தார். அவனுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. திடீரென மாலை 4.00 மணிக்கு அப்பா கதவைத் தட்டுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கதவைத் திறந்தது கணேசன்தான். பார்த்ததும் தலை சுற்றல் உண்டாகி பத்து நிமிடத்திற்கு அப்படியே உட்கார்ந்துவிட்டான்.
“மாமா, எப்படி..? சொல்லிடலாமா? இல்ல.. இது எதாவது…”
“டேய், எந்தக் காலத்துல இருந்துகிட்டு என்ன பேசற? இரு கொஞ்ச நேரம்… என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்…”
மாமாவின் பேச்சு கணேசனைச் சற்று நிதானப்படுத்தியது. அப்பா புருவங்களைத் தேய்த்தார். அது அவருடைய பழக்கம். அவர் அசௌகரிகமாக உணரவில்லை. வழக்கம் போல கால்களை ஆட்டிக் கொண்டே அமர்ந்திருந்தார். அம்மா, அப்பாவைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணீரெல்லாம் தீர்ந்து இப்பொழுது வெறுமையுடன் இருந்தார். அவ்வப்போது கணேசன் என்ன சொல்வான் என்றும் அவருடைய கண்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. முதலில் பார்த்ததும் அம்மாவும் கத்தி கூச்சலிட்டு அரைமயக்கத்திற்கு வந்துவிட்டார். கணேசன் அம்மாவைப் பிடித்து ஓரிடத்தில் அமர வைக்கும்வரை அவர் நிதானத்தில் இல்லை. வெளியில் ஓடுவதற்குத் தயாராகிவிட்ட தங்கையைக்கூட கணேசன்தான் தடுத்து நிறுத்தி வைத்தான்.
மாமா வந்த பின்னர்தான் வீட்டில் ஓர் அமைதி மெல்ல பின்னப்பட்டுக் கொண்டிருந்தது. அப்பா மௌனமாக எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்னடா ஏதோ மாதிரி பாக்குறீங்க? அன்னிக்கு என்னதான் நடந்துச்சி? ஒன்னுமே ஞாபகமில்ல…” – அப்பாதான் மௌனத்தைக் கலைத்தார். அப்பொழுதும் கணேசன் ஒன்றும் பேசவில்லை. இதை எப்படி எடுத்துக் கொள்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. முன்னே அமர்ந்திருப்பது அப்பா என்பதை மீண்டும் சிரமப்பட்டு நினைவுபடுத்தியபடியே நின்றிருந்தான் கணேசன்.
ஒரு மணி நேரம் அப்படியே மௌனத்திலேயே கடந்து சென்றது. கணேசன் எழுந்து அறைக்குள் சென்று மாமாவை அழைத்தான்.
“மாமா, போலிஸ்க்கு அழைச்சிச் சொல்லிட்டேன்… இத ரிப்போட் செஞ்சித்தான் ஆகணும்… வேற வழி இல்ல…”
மாமாவும் கணேசனின் முடிவுக்கு ஒத்துப் போனார்.
“பா, நீங்க கீழ உள்ள ரூம்ல கொஞ்ச நேரம் படுங்க… அப்புறம் எழுப்புறோம்,”
கணேசன் அப்படிக் கூறியதும் அப்பா சந்தேகத்துடனே எழுந்தார்.
“தூக்கம் வரலடா… அம்மா கூட கொஞ்சம் பேசிக்கலாமா?”
அம்மா அதை எதிர்பார்க்கவில்லை. விருப்பமில்லாதது போல் சடக்கென்று எழுந்து குளிக்கப் போவதாக நழுவினார்.
“நீங்க வாங்கப்பா, கொஞ்சம் ஓய்வு எடுங்க… அப்புறம் பேசலாம்…”
கணேசன் அப்பாவைத் தொட முயன்று பிறகு பின்வாங்கிக் கொண்டான். வேறுவழியில்லாமல் அப்பா எழுந்து கீழேயுள்ள அறையில் நுழைந்தார். மீண்டும் திரும்பி கணேசனின் கண்களைப் பார்த்தார். அதில் தெரிந்த ஒரு பதற்றம் அவருக்குப் பயத்தை உண்டாக்கியது. அப்பா உள்ளே சென்றதும் கணேசன் கதவைச் சாத்தினான்.
மாமா அவனைப் பார்த்துக் கொண்டிருந்த விதம் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்.
“என்ன மாமா செய்றது? இவரு செத்துப் போய் பதிமூணு வருசம் ஆச்சு…திடீர்னு வந்துருக்காரு… என்ன இது? வருசா வருசம் திதி கொடுத்துக்கிட்டு இருக்கோம்… அவரப் பொதைச்சது இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கு…”
அதற்குள் மாமாவின் கைப்பேசி அலறியது. அத்தையின் அழைப்பு. எடுத்துப் பேசிவிட்டு அப்படியே திகைத்து நின்றார்.
“என்ன மாமா சொன்னாங்க?”
“அங்க பக்கத்து வீட்டுல போன வருசம் செத்துப்போன அவுங்க மூத்த பையன் வீட்டுக்கு வந்துருக்கானாம்…”
அப்பா அறைக்கதவைத் திறந்து ஏக்கமிகுந்த கண்களுடன் இருவரையும் பார்த்தார்.
********