இணைய இதழ்இணைய இதழ் 91மொழிபெயர்ப்பு சிறுகதைமொழிபெயர்ப்புகள்

ஞாபகத்தின் இடுக்குகளில் – அரபியில்; ஃபௌஸியா ரஷீத் – தமிழில்; எம். ரிஷான் ஷெரீப்

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

வனது பூரித்த முகம் அவளை அச்சுறுத்தியது. அவனது பார்வை தனது உடலில் எங்கெல்லாம் அலைபாய்கிறது என்பதை அவள் கவனிக்கவில்லை. காற்றில் எறியப்பட்ட சருகைப் போல ஓடத் தயாரானாள் அவள். 

‘இவனும் என்னை அடிப்பான். இவன் ஒன்றும் மற்ற ஆண்களிடமிருந்து வேறுபட்டவன் அல்ல!’ என்றே அவளுக்குத் தோன்றியது. 

ஆரம்பத்தில் அவன் தன்னைக் கூப்பிடுவதைக் கேட்டதும், அவள் அவனை எச்சரிக்கையுடன்தான் அணுகினாள். இப்போது அவள் அவனை நன்கு அறிந்திருந்தாள். போன தடவை அவன் கொடுத்த காசில்தான் அவள் சுவையான மிட்டாயொன்றை வாங்கிச் சாப்பிட்டிருந்தாள். 

“பக்கத்தில் வா!” என்று கூறியவனிடம் அவள் தனது கையை நீட்டினாள்.

அவன் அவளது விரலைத் தொட்டவாறே இட்ட நாணயம் அவளது உள்ளங்கையில் தரித்து நின்றது. 

அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவாறே தனது வீட்டுக்கு ஓடினாள். இந்த நாணயத்தை என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியும். இதைப் பற்றி அவள் தனது சித்தியிடம் கூட சொல்லவே மாட்டாள். இதை ஒளித்து வைத்திருந்து தனக்கு வேண்டியதையெல்லாம் அவள் வாங்கிக் கொள்வாள். ஒளித்து வைப்பதால் யாரும் இதைப் பற்றி அறிந்து கொள்ளவும் மாட்டார்கள். 

அவள் தனது வீட்டை நெருங்கும்போது காலடிகளை இன்னும் வேகமாக எடுத்து வைத்தாள். வீட்டை அடைந்ததும் அவளது பிஞ்சுக் கண்கள் எதையோ கண்டு பயந்துபோயின. அவளுக்குக் குழப்பமாகவும் இருந்தது. 

அவளது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண் அவளை பலமாக அறைந்தாள். வெறிநாயின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட பூனைக் குட்டியொன்றைப் போல அவள் அந்தப் பெண்ணின் கரங்களில் சிக்கிக் கொண்டு துடித்தாள். 

“நீயொரு பைத்தியக்காரச் சிறுக்கி” என்று அந்தப் பெண் அவளது காதிற்குள் உருமினாள்.

அவளது சித்தியான அந்தப் பெண் என்னவென்று வெளியே எட்டிப் பார்த்த  தனது கணவனிடம் செல்லம் கொஞ்சிப் பேசியும், அவரை நயமாகப் பார்த்தும் அனைத்தையும் சீர் செய்தாள். 

“இவள் நமக்கு அவமானத்தைத்தான் தேடித் தருவாள்” என்று அவளது சித்தி கூறியது அவளது காதில் விழுந்தது. 

அவள் தலை குனிந்தாள். ஏதோவொரு இனம்புரியாத பயம் அவளை ஆட்கொண்டது.

வள் தனது பொம்மையைக் கண்டுபிடித்தாள். அது அவளுடைய ஒரே பொம்மையாக இருந்தது. யாரோ – யார் என்று அவளுக்கு நினைவில்லை – அதை அவளுக்குக் கொடுத்திருந்தார்கள். 

கதவுக்கும், அழுக்கான தளபாடங்களுக்கும் இடையில் இருந்த சிறிய இடைவெளியில் அவள் படுத்துக் கொண்டிருந்தாள். பொதுவாகவே அவள் எவரது பேச்சையும் குறிப்பாக அவளது சித்தியின் பேச்சைக் கவனிப்பதில்லை. ஆனால், இந்தத் தடவை அவள் இதுவரை கேள்விப்படாத ஒரு விடயம் அவளுக்குத் தெரிய வந்தது. அவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவளுக்கு விளங்கியது.

வேர்களோ, இலைகளோ இல்லாத ஒரு காய்ந்த பேரீச்சம்பழ மரம் போல நின்று கொண்டிருந்த தனது தந்தையை நோக்கித் தனது சித்தி கோபமாகக் கத்திக் கொண்டிருப்பதை அவள் அவதானித்தாள். 

“அவளது மார்புகள் வளரத் தொடங்கியிருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? எங்களுக்கு வேறு வழியில்லை. இது மிகவும் நல்ல வாய்ப்பு. இதைத் தவறவிடக் கூடாது” என்றாள் சித்தி. 

அவளது தந்தையோ எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். 

“ஏன் பாறையைப் போல மௌனமாக இருக்கிறீர்கள்? உங்கள் சொந்தப் பணத்தில் நீங்கள் ஒரு சதம் கூட செலவழிக்க வேண்டியதில்லை. அந்த ஆள் அதையெல்லாம் பார்த்துக் கொள்வான்” என்று சித்தி கூறுவது கேட்டது.

அமைதியாக பொம்மையைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த  அவளுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஏன் இந்த பொம்மை பேசுவதேயில்லை? தன்னுடைய சித்தி அமைதியாக இருந்தால்தான் இந்தச் சிறிய பொம்மை மெதுவாகப் பேசுவது கேட்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

திடீரென்று எழும்பி சூறாவளியைப் போல அவள் வீட்டை விட்டு வெளியே ஓடினாள் திரும்பிக் கூடப் பாராமல். 

“இங்கே வாடி பைத்தியக்காரச் சிறுக்கி…..” என்று அவளது  சித்தி கத்துவது கேட்டது.

வன் தனது விரல்களுக்கு இடையில் வைத்திருந்த மற்றொரு நாணயத்தை அவளிடம் காட்டிய வேளையில் அவள் ஆச்சரியத்துடன் அவனது முகத்தை உற்றுப் பார்த்தாள். 

“எனக்குப் பக்கத்தில் வா. பயப்படாதே.”

அவனிடமிருந்து தப்பி வந்தவள் ஒரு சுவரின் மறைவில் ஓசையெழாமல் ஒளிந்து கொண்டிருந்தாள். அவளுக்கு திடீரென்று அழ வேண்டும் போல இருந்தது. 

“ஆண்களிடம் ஜாக்கிரதையாக ஒதுங்கியே இருக்க வேண்டும். அவர்கள் அனைவருமே காட்டு மிருகங்கள்” என்றுதான் அவளது சித்தி அவளை எச்சரித்திருந்தாள்.

அவளைத் தேடிக் கொண்டு வந்திருந்தவனைக் கண்டு எழுந்து நின்றவள் அவனை அச்சத்தோடு பார்த்தாள். 

“எனக்கு எனது வீட்டுக்குப் போக வேண்டும்” என்றாள். 

அவன் அவளது தோளைப் பிடித்துத் தன்னருகே இழுத்தெடுத்தான். அவளது மார்புகளைப் பற்றிப் பிடித்தான். அவை மழைக்காலத்திற்குப் பிறகு அப்போதுதான் பூத்திருக்கும்  காட்டுக் காளான்களைப் போல சிறியவையாக இருந்தன. அவன் அவளைக் கட்டிப் பிடிக்க முயன்றான். 

ஓர் எச்சரிக்கை உணர்வு அவளுக்குள் ஊடுருவியது. திடீரென்று அவள் அவனது பிடியிலிருந்து தப்பி விலகியோடினாள். ஒரு கணம் திகைத்து நின்ற அவன் பின்னர் அவளைத் துரத்தத் தொடங்கினான். 

“பைத்தியக்காரச் சிறுக்கி. எவ்வளவு அழகான உடல் அவளுக்கு” என்று அவன் தனக்குள் முனகினான். 

அவள் ஓடி வந்து தனது அறைக்குள் புகுந்துகொண்டாள். அவளுடைய தந்தையும், சித்தியும் அப்போதும் பேசிக் கொண்டிருப்பதை அவளால் கேட்க முடிந்தது. 

அவள் அழுதாள். பின்னர் தனது சித்தியிடம் மிட்டாய் ஒரு துண்டு கேட்டாள். அவளது சித்தியோ கோபத்துடன் அவளைச் சபித்தவாறே அதை அவளிடம் கொடுத்தாள்.

வளை முற்றுகையிட்டு, அவளது கழுத்தை நெருக்கியவாறு விசித்திரமான உருவங்கள் அவளைச் சூழ்ந்து கொண்டிருந்தன.  அவர்களில் ஒருவன் அவளது வயிற்றில் உதைத்தான். அவள் வலியால் அலறினாள்.

கனவு கண்டு பயந்து விழித்துக் கொண்டவள் தனது பெற்றோரின் அறைக்குள் நுழைந்தவேளையில் அப்போதும்  அவளது தந்தையும், சித்தியும் வாதிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவளைக் கண்டதும் அவர்கள் திடுக்கிட்டு எழுந்து நின்றார்கள். 

“இங்கே பக்கத்தில் வா, பைத்தியக்காரச் சிறுக்கியே. உனக்கு என்ன நடந்தது?” 

சட்டென்று அவள் குழப்பத்தோடு தனது கால்களைப் பார்த்தாள். அவளது சித்தியும் அவளைத் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது தொடைகளின் இடையேயிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 

“யோவ் மனுஷா! இந்த விஷயத்தைத் துரிதப்படுத்த வேண்டும். நீங்களே பார்த்தீர்கள்தானே?” 

அவளுடைய தந்தை அவளை நெருங்கிப் பலமாக அவளைப் பிடித்துக் குலுக்கியபோது அவளது பயம் மேலும் அதிகரித்தது.

“இனிமேல் வீட்டை விட்டு வெளியே செல்ல உனக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புரிகிறதா?” என்று கேட்டவாறு பளாரென்று அவளது கன்னத்தில் பலமாக அறைந்தார். 

வளுக்கு எதுவுமே விளங்கவில்லை. 

ஒர் அகலமான முகம் அவளது உடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் அவளை நெருங்கியது. அவளைத் தீண்டியது. 

அவளுக்குக் கத்த வேண்டும் போல இருந்தது.

அவளது அருகில் இப்படிப்பட்ட ஒருவன் நின்றுகொண்டிருப்பதை அவளது சித்தி ஏன் கண்டிக்காமல் இருக்கிறாள்? அவனைக் கண்டிப்பதற்குப் பதிலாக,

“இவரிடம் நெருக்கமாக இரு, செல்லம். இவருக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறதாம். இவர் உனக்கு மிட்டாய், காசு  எல்லாம் கொடுப்பார். உனக்கு உயிருள்ளது போலவே ஒரு பொம்மையையும் வாங்கிக் கொடுப்பார்” என்றாள்.  

அவளது மருண்ட பார்வை மீண்டும் அவனது முகத்தில் பதிந்தது. 

தொடர்ந்து அவள் கதறியழும் சத்தம் சித்தியின் காதுகளையும் எட்டியது.

தெரு வெறிச்சோடிக் கிடந்தது. எங்கேயென்று தெரியாமல் வெகு தொலைவுக்கு அவள் ஓடிக் கொண்டிருந்தாள். 

“நான் உனக்குப் பணமும் மிட்டாயும் தருகிறேன். இனிமேல் யாரும் உன்னை அடிக்க மாட்டார்கள்” என்கிறான் அவன்.

இப்போது அவள் அவனை நன்றாக அறிந்திருந்தாள். போன தடவை அவன் கொடுத்த நாணயத்தில்தான் அவள்…..

இவன் ஒன்றும் மற்ற ஆண்களிடமிருந்து வேறுபட்டவன் அல்ல. இவனும் என்னை அடிப்பான். 

அவளுடைய கனமான பாதச் சுவடுகளின் கீழே தெரு வேகமாக பின்னகர்ந்தது. எல்லா ஆண்களையும் போலத்தான் இவனும் இருப்பான். சித்தி அப்படித்தானே சொல்லிக் கொடுத்திருக்கிறாள். 

யாரோ தன்னைப் பின்தொடர்ந்து துரத்தி வருவதை உணர்ந்த அவள் கண்களால் தெருவைக் கூர்ந்து கவனித்தாள். பின்னர்  மூச்சுத் திணறியது என்றாலும், வெகுவாகக் களைத்துப் போயிருந்த போதிலும் எங்கேயென்று தெரியாமல் வெகு தொலைவுக்கு அவள் ஓடிக் கொண்டிருந்தாள். 

அவளது உருவம் மெல்ல மெல்ல அந்தத் தெருவிலிருந்து மறைந்தது.

*******

மொழிபெயர்ப்பு – எழுத்தாளர் எம். ரிஷான் ஷெரீப்

*******

எழுத்தாளர் பற்றிய குறிப்பு:

ஃபௌஸியா ரஷீத்

எழுத்தாளரும், நாவலாசிரியையுமான ஃபௌஸியா ராஷித் பஹ்ரைனில் 1954ஆம் ஆண்டு பிறந்தவர். பஹ்ரைன் பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர் பின்னர் துபாயில் ஐநா அலுவலகத்தில் பணி புரிந்திருக்கிறார். 

அரேபிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பல ஆக்கங்களை எழுதியிருக்கும் இவர் தொடர்ச்சியாக பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.  இவரது படைப்புகள் பலவும் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

*******

mrishansh@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மிகவும் அருமையான உள்ளுணர்வு சார்ந்த வலி மிக்க கதை.
    சிறப்பான மொழியாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button